சூன் 15, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

நுழைவுத் தேர்வு – நுழைய முடியுமா?

தீபக் தமிழ்மணி

May 28, 2016

Entrance-Examination3நடுவண் அரசு (Union Government) மருத்துவப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வை நடத்த முடிவு செய்தது, பின்பு ஓராண்டு தள்ளி வைத்துவிட்டது. நுழைவுத் தேர்வு குறித்த விவாதங்களும் அவ்வப்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமா? என்று கேட்டால், கல்வியாளர்களின் பதில் “உறுதியாக ஆம்”.

சில நாட்களுக்கு முன்புதான் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும், 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியாகின. தனியார் பள்ளி மாணவர்கள் மிக அதிகமான மதிப்பெண்களைப் பெற்றிருப்பது தொலைக்காட்சி வழியாகவும், செய்தித்தாள், ப்ளக்ஸ் வழியாகவும் தெரிகிறது.

entrance-exam5பத்து ஆண்டுகளுக்கு முன், நான் படித்த காலங்களில் அப்போதைய மாணவர்களைக் காட்டிலும், இப்பொழுது பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்கள். அதிலும் மாநில அளவில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை மாணவர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனால் கல்வியாளர்கள் இது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறார்கள். ஏன்?

பொதுவாக தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்புகளும், பதினொன்றாம் வகுப்பிலேயே பனிரெண்டாம் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

entrance exam3பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இரண்டு வருடமும், பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கென இரண்டு வருடமும் நடத்தப்பட்டுத்தான் மாணவர்களின் மதிப்பெண்கள் உயர்த்தப்படுகின்றன. அதிலும் அந்த இரண்டு வருடங்களிலும் பாடத்திற்கு ஒரு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் (Special Classing), அது தவிர காலையில் உணவுக்கு முன் ஒரு தனிப்பயிற்சி (Tuition), உணவுக்குப்பின் ஒரு தனிப்பயிற்சி வகுப்பு. அதேபோல் மாலையிலும் உணவுக்கு முன்னும் பின்னும் வகுப்புகள் உள்ளன. அது மட்டும் இல்லாமல் பல தனியார் பள்ளிகளில் தேர்வு காலங்களில் அவசியம் விடுதியில் தங்க வேண்டும். இப்படி அடிப்படை வகுப்புகளான ஒன்பதாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பைப் புறக்கணித்து விட்டு மாணவர்களின் அறிவை வளர்க்காமல், மதிப்பெண்களை மட்டுமே வளர்க்கும் மதிப்பெண் உற்பத்தி மையங்களாகவே தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன(Mark Manufacturing Centre).

entrance exam1எனவே இப்படி மதிப்பெண்கள் என்கின்ற அரிதாரத்தை முகத்தில் பூசிக் கொண்டிருக்கிற மாணவர்களை வடிகட்ட நுழைவுத் தேர்வு மிக அவசியம். நுழைவுத் தேர்வின் மூலம் கல்வியின் தரத்தையும் உயர்த்த முடியும் அல்லது தக்க வைக்க முடியும்.

ஆனால் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதற்கு முன் பல விடங்கள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

பொதுவாக நுழைவுத் தேர்வுகள் மையப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களிலிருந்தே கேட்கப்படுகின்றன(Centralized Syllabus). ஆனால் முறையான வகுப்பறைகள் இல்லாத, கழிப்பறைகள் இல்லாத, ஆசிரியர்கள் இல்லாத, முறையான சாலை வசதிகள் இல்லாத எத்தனையோ லட்சம் அல்லது கோடி மாணவர்களால் பொது நுழைவுத் தேர்வை எதிர்கொள்வது இயலாதது.

முதலில் கல்வி சார்ந்த விடயங்களில் நமக்கு இன்னும் ஆழமான புரிதல்கள் மிக அவசியம். ஒரு மாணவனை திறமையாக வளர்த்தெடுக்க மூன்று நிலைகள் உள்ளன. முதலில் பள்ளிக் கல்வி, இரண்டாவது நுழைவுத் தேர்வு, மூன்றாவது பல்கலைக்கழக அல்லது கல்லூரிக் கல்வி.

நுழைவுத் தேர்வு மட்டும் சிறந்த மாணவர்களை அடையாளம் காட்டிவிடாது. அது இடைநிலை மட்டுமே வருவது.

1. பள்ளிக் கல்வி

கோத்தாரி கல்வி குழு, இதுவே விடுதலை இந்தியாவில் ஆறாவது கல்வியில் முதல் பரிந்துரைக் குழு. கிட்டத்தட்ட 20 சர்வதேசிய கல்வியியல் நிபுணர்கள், 9000 நேர்காணல்கள், ஆசிரியர்களிடமிருந்தும் ஆராய்ச்சியாளர்களிடமிருந்தும் 2400 அறிக்கைகள் என கோத்தாரி பரிந்துரைக் கல்வியை மிகப்பெரிய அளவில், ஆழமாக வளர்த்தெடுக்க பரிந்துரைத்தது. நாட்டின் ஒட்டுமொத்த தேசிய வருவாயில் 6% கல்விக்கு ஒதுக்க பரிந்துரைத்தது. இதை 1992ல் ஏற்ற அரசு இதுவரை 2.8% மேல் செலவளிக்கவில்லை. பிறகு 1986 மற்றும் 1992 கல்வி கொள்கைகளில் அடிப்படை கல்வியை இலவசமாக்க பரிந்துரைத்தது. இது பின்னர் 2009இல் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் மூலம் நிறைவேறியது.

Entrance-Examination7ஒரு குறிப்பிட்டத் துறையை வளர்க்க வசூலிக்கப்படுவது செஸ் வரி (Cess). இதுவரை கல்வி கட்டமைப்பு, நலத்திட்டம் என அரசு வசூலித்த தொகை இதுவரை ரூ1.41 ஆயிரம் கோடி. இந்தத் தொகை கடந்த பத்தாண்டுகளில் இடைநிலை மற்றும் மேல்நிலை கல்விக்கும் அரசுப் பள்ளிகளுக்கும் செலவிடப்படாமலேயே உள்ளது. இதனால் பல்வேறு அரசுப் பள்ளிகள் மூடப்படுகிறது, பல பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளது. இதுவே அரசுப் பள்ளியை மற்ற தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுபவர்கள் கவனிக்க வேண்டிய விடயம். பிறகு எப்படி அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை பொது நுழைவுத் தேர்வில் பங்கெடுக்க வைக்க முடியும். இவர்களுடன் மதிப்பிடப்பட்டு மதிப்பெண் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட மாணவர்கள், மேன்மையானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். இவர்களை வடிகட்ட முதலில் கல்வித்துறை பல உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பின்னர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைத்தபின், அவர்களை பொதுநுழைவுத் தேர்வுக்குக் கொண்டு வரலாம். மாறாக தனியார் பள்ளி மாணவர்கள் மனப்பாடம் செய்ய வைக்கப்பட்டு மதிப்பெண் எடுக்கிறார்கள் என்ற ஒற்றை அளவுகோளை வைத்து நுழைவுத் தேர்வை கொண்டு வந்துவிட முடியாது.

2. நுழைவுத் தேர்வு

Entrance-Examination1நுழைவுத் தேர்வை முன்வைத்து பல தனியார் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கின்றன. இதனை அரசாங்கம் தடுக்கவில்லை, எனவே ஏழை மாணவர்களால் சேர முடிவது இல்லை. அது மட்டும் அல்லாமல் சமச்சீர் பாடத்திட்டம் தேவை. ஆனால் சமச்சீர் பாடத்திட்டமும் கொண்டுவரப்படவில்லை. தமிழ்நாட்டில் இருப்பது பொது பாடத்திட்டம் (Common Syllabus) அவ்வளவே. சமச்சீர் கல்வி என்பது மாணவர்களுக்கு சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியிலிருந்து பாடத்திட்டம், உள் கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு மைதானங்கள், தொழில்நுட்ப சாதனங்களில் என எல்லா கல்வி நிறுவனங்களுக்கு பொதுவாக இருக்க வேண்டும் என்பதே.

மேலும் ஒரு நுழைவுத் தேர்வு என்று வரும்போது அதற்கு பயிற்சி அளிக்க எந்த அரசு நிறுவனமும் இல்லை.

ஒரு பொதுநுழைவுத் தேர்வு என்று வரும்போது, கேள்விகள் ஆங்கிலத்திலும் மற்றொன்று அம்மாநில மொழியிலும் கேட்கப்பட வேண்டும்.

3. பல்கலைக்கழக அல்லது கல்லூரிப் படிப்புகள்

Senior University Photographerஇந்தியாவின் மிகச்சிறந்த கல்வியை அளிக்கும் நிறுவனங்களான IIT, IIM, AIIMS போன்ற மத்திய கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவு. குறைந்த இடங்களுக்கு பல மாணவர்கள் போட்டி போட வேண்டும். இதில் 2013க்கான தேசிய குற்ற ஆவண மையம்(National Crime Records Bureau) நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் தற்கொலைகளின் எண்ணிக்கை இந்தியா முழுவதிலும் 2471 என்கிறது. எனவே நல்ல உயர்நிலைக் கல்வி நிறுவனங்களை IIT, IIM, AIIMS-க்கு வெளியில் விரிவுபடுத்த வேண்டும். IIT, IIM, AIIMS போன்றவைகளையும் அதிகப்படுத்த வேண்டும். மேலும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கைப்படி, பொறியியல் மற்றும் மருத்துவ மத்திய பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் பற்றாக்குறை 40%.

எனவே மாணவர்களின் திறமையை வளர்க்க பல விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அது நுழைவுத் தேர்வுடன் நின்றுவிடவில்லை. பள்ளிகளில் ஆரம்பித்து, கல்லூரியில் முடிவடைகிறது. நல்ல பள்ளிக் கல்வியின் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்களைக் கண்டறிதல் வேண்டும். அவர்களின் தகுதிக்கான வாய்ப்பு முழுமையாய் கிடைக்க வேண்டும். எனவே இப்பொழுதுள்ள நுழைவுத் தேர்வு திட்டத்தால் எல்லா மாணவர்களாலும் நுழைய முடியுமா? என்பதே நம் கவலையாக இருக்கிறது.


தீபக் தமிழ்மணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நுழைவுத் தேர்வு – நுழைய முடியுமா?”

அதிகம் படித்தது