மே 18, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

நேர்காணல் – திரு. சீதையின் மைந்தன் – மீள்பதிவு

ஆச்சாரி

Jul 5, 2014

சிறகு இதழுக்காக கச்சத்தீவு மீட்பு இயக்கத்தின் தலைமை ஒருகினைப்பாளர்  திரு.சீதையின் மைந்தன் அவர்கள் அளித்த நேர்காணல். (சூலை 1- 2011 அன்று வெளியிட்ட இப்பதிவு, மீள்பதிவு செய்யப்படுகிறது)

நேர்காணல் நடத்தியவர் திரு வெங்கட்.

நேர்காணல் தயாரிப்பு  திரு. செந்தில்குமார்.

எழுத்து வடிவத்தில் படிக்க பக்கத்தின் கீழே செல்லுங்கள்.

பாகம் 1

பாகம் 2

பாகம் 3

பாகம் 4

kachchatheevu2கச்சத்தீவு மீட்பு இயக்கத்தின் பின்னணி பற்றி கூறுங்கள்
நாம் அனைவரும் இன்னும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் சோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறோம். தமிழத்தில் இருக்கும் ஏழு கோடி தமிழர்களும் ஈழத்து இனப்படுகொலையை தடுத்து நிறுத்த தவறிவிட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த குற்ற உணர்வு நம் அனைவருக்குமே இருக்கிறது. சிங்களன் நடத்திய அந்த இனப்படுகொலையைத் தான் தடுத்து நிறுத்த முடியவில்லை, அதே சிங்கள கடற்படை நம் மீனவர்களையும் சுட்டு கொல்கிறதே, அதையாவது தடுத்து நிறுத்த வேண்டாமா என்ற கேள்வி நெஞ்சில் எழுகிறது. நம் மீனவர்கள் பெரும்பாலும் கச்சதீவின் அருகிலே சுட்டு கொல்லப்படுகிரார்களே ஏன், இப்பிரட்சினைக்கான தீர்வு என்ன என்று ஆராய்ந்து தொடங்கியது தான் இந்த கச்சத்தீவு மீட்பு இயக்கம். நாம் கச்சத்தீவை இழந்தது தான் நமது இன்றைய மீனவர் படுகொலைகளுக்கு அடிப்படை காரணம். கச்சத்தீவை மீட்பது தான் நம் மீனவர்களின் துயரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும். மீனவர்களின் துயரங்களுக்கு நாம் வைக்கிற முற்றுபுள்ளி நம் ஈழத் தமிழர்களின் விடயலுக்கான வெளிச்சப் புள்ளியாக இருக்கும்.

கச்சத்தீவு 1974 ஆம் ஆண்டில் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. இந்த முப்பத்தாறு ஆண்டுகளுக்கு பின்னர் அதை மீட்டுவிட முடியும் என்றும் நம்புகிறீர்களா?
முப்பத்தாறு வருடங்கள் இல்லை முன்னூறு வருடங்கள் ஆனாலும் எனக்கு சொந்தமான ஒன்று எனக்கு வந்து தான் தீரவேண்டும். இரு நூற்றாண்டுகளுக்கு முன் இலங்கைக்கு சென்று பாடுபட்டு இலங்கையை செல்வம் கொழிக்க வைத்த மலையக தமிழர்களை அவர்களால் விரட்ட முடியும் என்றால், முப்பத்தாறு வருடங்களுக்கு முன்னால் எங்களை நயவஞ்சகமாக ஏமாற்றி பறித்த கச்சத்தீவை எங்களால் நிச்சயாமாக மீட்க முடியும் என்றே நம்புகிறோம்.

இந்தியாவிற்கு சொந்தமான கச்சத்தீவை எதற்காக இந்தியா இலங்கைக்கு விட்டு கொடுத்தது என்ற பின்னணியை விளக்க முடியுமா?
சுதந்திரத்திற்கு பின் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ்காரர்களின் முட்டாள்தனமான வெளியுறவுக் கொள்கைகளால் தான் கச்சத்தீவு நம் கையைவிட்டு சென்றது. ஈழப் படுகொலைகளுக்கும் காரணம் இந்த மோசமான வெளியுறவுக் கொள்கைகளே.

இலங்கை அரசு எப்பொழுதுமே இந்தியாவிற்கான ஆதரவு நிலையை எடுத்ததில்லை. உதாராணமாக இந்திய பாகிஸ்தானுடன் போரிட்ட போது கூட இலங்கையில் பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் தளம் அமைத்து கொடுத்தனர். ஆனால் நமது ஈழத்தமிழர்களோ அந்த விமானதளங்களின் ஓடுபாதைகளில் படுத்து இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுக்கு இலங்கை உதவக் கூடாது என்று மறியல் செய்தனர். இவ்வாறு ஈழத்தமிழர்கள் ஆதரவாக இருந்தும், இந்தியா தவறான வெளியுறவு கொள்கைகளால் ஈழத்தமிழர்களை ஆதரிக்காமல் இலங்கை அரசை ஆதரித்தது.

நேரு குடும்பத்திற்கும் பண்டாரா நாயகா குடும்பத்திற்கும் இருந்து வந்த கால் நூற்றாண்டு நட்பை பயன்படுத்தி திருமதி.பண்டாரா நாயாகா கச்சத்தீவை இந்திரா காந்தியிடம் இருந்து பரிசாக பெற்றார்.

இலங்கையில் இருந்து தமிழினத்தை அழிப்பதின் ஒரு பகுதியாகத்தான் கச்சத்தீவை அவர்கள் பெற்றார்கள். அவர்களின் தமிழன எதிர் நடவடிக்கையில் முக்கியமானது 1964 ஆம் ஆண்டில் திருமதி பண்டாரா நாயாகவும் நம் இந்திய பிரதமராக இருந்த திரு.சாஸ்திரி அவர்களும் செய்துகொண்ட ஒப்பந்தம். இருநூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து இலங்கை சென்று குடியமர்ந்த மலையக தமிழர்களை இலங்கை சுதந்திரத்திற்கு பின் நாடற்றவர்கள் என்று அறிவித்தது. பிரிட்டிசாரின் ஆட்சியில் அவர்கள் அனைவரும் இலங்கை அரசின் குடிமக்களாகவே அங்கிகரிக்கப் பட்டிருந்தவர்கள். மலையக தமிழர்களை நாடற்றவர்கள் என்று அறிவித்ததை இந்தியா கண்டித்து இலங்கையை நிர்பந்த்திக்காமல் விட்டது மிகப் பெரிய தவறு. மேலும் அவர்களில் ஐந்து இலட்சம் மக்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதென் இந்த 1964 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் இருநாட்டு தலைவர்களும் ஒப்புகொள்கிறார்கள். இது மிகவும் மனிதாபிமானமற்ற ஒப்பந்தம். தமிழர்கள் மீது விழுந்த மிகப் பெரிய அடி இந்த ஒப்பந்தம். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட திரு.சாஸ்திரி அவர்களை பிரதமராக்கியவர் நம் திரு காமராஜர். மேலும் காமராஜர் அப்போது அகில இந்திய காங்கிரசின் தலைமை பொறுப்பில் வேறு இருந்தார். ஆயினும் இந்த ஒப்பந்தத்தை அவர் தட்டிக் கேட்கவில்லை.

இதே போன்று தமிழினத்தின் மீது விழுந்த இரண்டாவது அடி தான் கச்சத்தீவு பறிபோன ஒப்பந்தம். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலாமாக கச்சத்தீவு நமக்கு சொந்தமானது. நம்மிடம் இதற்கு நூற்று கணக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து விக்டோரியா மகாராணியின் ஆட்சிக்கு மாற்றப்பட்ட உடன் வெளியிடப்பட்ட ஆவணங்களில் கச்சத்தீவை ராமனாதபுரத்திற்கு உட்பட்ட பகுதியாக விக்டோரியா மகாராணியின் பட்டயத்திலே கூட தெரிவித்திருக்கின்றனர்.

கச்சத்தீவை விட்டு கொடுத்ததை நியாயப்படுத்த பல காரணங்களை அரசின் சார்பாக கசியவிட்டனர். அதில் ஒன்று இந்தியா பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் இலங்கை விமான தளங்களை பயன்படுத்தியதை அடுத்து பாகிஸ்தான் நிரந்தரமாக ஒரு விமானப்படைத் தளத்தை இலங்கையில் நிறுவ முயன்றது. இலங்கை அதற்கு உடன்படக் கூடாது என்பதற்காக இலங்கைக்கு கச்சத்தீவு விட்டுகொடுக்கப்பட்டதென்பது ஒன்று.

ஆனால் உண்மையில் சரியும் தமது செல்வாக்கை இலங்கையில் நிலைநிறுத்த திருமதி.பண்டாரா நாயகா தனது குடும்ப நட்பை பயன்படுத்தி கச்சத்தீவை திருமதி. இந்திராவிடமிருந்து பரிசாக பெற்றார்.

1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரைவார்த்த போது நமது மீனவர்களுக்கு அதில் கொடுக்கப்பட்ட உரிமைகளை பற்றி கூறுங்கள்.
கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டாலும் கூட அது அமைந்திருக்கும் பாக் நீரிணைப்பு பகுதி முழுவதிலும் நமது மீனவர்களுக்கான உரிமை நிலை நாட்டப் பட்டிருக்கிறது.

ஒப்பந்தத்தின் விதி ஐந்தின் படி கச்சத்தீவின் சுற்று வட்டார பகுதிகளில் நம் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், கச்சத்தீவில் வலைகளை உலர்த்துவதற்கும் உரிமைகள் நிலைநாட்டப் பட்டிருகின்றன. மேலும் விதி ஆறில் நமது படகுகள் அவர்கள் எல்லைக்குள் செல்லலாம் என்றும் அவர்களது படகுகள் நமது எல்லைக்குள் வரலாம் என்றும் தெளிவாக காட்டப்பட்டிருக்கிறது. கச்சத்தீவில் இருக்கும் ஆலயத்திற்கு செல்வதற்கும் நம் தமிழர்களுக்கு விசா போன்ற ஆவணங்கள் தேவையில்லை என்று தெளிவாக காட்டப்பட்டிருக்கிறது.

இது போன்று நமது மீன்வர்களின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டிருந்ததனால் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்த வில்லை.

1983ல் ஈழக் கலவரங்கள் தொடங்கிய நேரத்தில் பாதுகாப்பை கருதி நமது மீனவர்கள் அந்த பகுதிக்குள் செல்லவேண்டாம் என்று இந்தியா ஒரு தடை ஆணையை பிறப்பித்தது.

நமது முன்னாள் மற்றும் இந்நாள் முதலமைச்சர்கள் மற்றும் பலரும் 1974 ஆம் ஆண்டு மற்றும் 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தங்களைப் பற்றி தவறான புரிதலை கொண்டிருக்கின்றனர். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட கடற்பகுதிகளை மூன்றாக பிரித்திருக்கிறார்கள். முதலாவது நமது கச்சத்தீவை உள்ளடக்கிய பாக் நீரிணைப்பு, இரண்டாவது அதற்கு தெற்கே இருக்கும் மன்னார் வளைகுடா, மூன்றாவது வடக்கே இருக்கின்ற வங்காள விரிகுடா பகுதி என பிரித்திருக்கின்றனர். 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கச்சத்தீவை உள்ளடிக்கிய பாக் நீரினைப்பிற்கு மட்டுமே உரித்தானது. 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தம் பாக் நீரிணைப்பு பகுதி நீங்கலாக மற்ற இரு பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளுக்கானது. இந்த 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் தான் இந்த இரு கடல் பகுதிகளுக்கும் இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்ட கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த நிபந்தனை 1974 ஆம் ஆண்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட பாக் நீரிணைப்பு பகுதிக்கு பொருந்தாது. ஆனால் பலரும் 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் நமது மீனவர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமைகள் 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் பறிக்கப்பட்டு விட்டன என்று தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர்.

நமது மீனவர்களுக்கான உரிமைகளை பாதுகாப்பு காரணங்களை கூறி 1983 ஆம் ஆண்டு தடையாணை மூலம் நிறுத்தி வைத்திருக்கின்றனர். இதை 2002 ஆம் ஆண்டில் பழனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு.குமாரவேல் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை துணை அமைச்சர் அளித்த பதிலில் கூட இதை தெளிவாக உறுதி செய்திருக்கின்றனர். தற்போது விடுதலை புலிகள் இல்லை என்று இலங்கை அரசு அறிவித்து விட்ட நிலையில் நமது தமிழகத்திலும் விடுதலை புலிகளின் நடமாட்டங்கள் இல்லை என்று தமிழக அரசு அறிவித்து விட்ட நிலையில் இந்த 1983 ஆம் ஆண்டு தடையானையை நீக்கி விட்டாலே நம் மீனவர்களுக்கு 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்ட உரிமைகள் அனைத்தும் வந்துவிடும். இது ஒரு இடைக்கால தீர்விற்கான வழி, கச்சத்தீவை மீட்பது தான் முழுமையான தீர்வு.

கச்சத்தீவை மீட்பதன் மூலமாக தமிழக மீனவர்கள் படுகொலையை தடுக்க முடியுமா?
நிச்சயமாக. பெரும்பாலான தாக்குதல்கள் கச்சத்தீவு பகுதியிலும் கச்சத்தீவு அமைந்திருக்கும் பாக் நீரிணைப்பு பகுதியிலும் தான் நடக்கின்றன. நமது கோரிக்கை கச்சத்தீவை மீட்பது மட்டுமல்லாமல் பாக் நிரினைப்ப்பு பகுதியை இரு நாட்டு மீனவர்களுக்கும் பொதுவானதாக அறிவிக்கவேண்டும் என்பதே. 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டு புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும். இந்த ஒப்பந்தங்கள் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை ஈழத் தமிழ் மீனவர்கள் சம்பந்தமானவை. ஆனால் 1974, 1976 ஒப்பந்தங்கள் தமிழக மீனவர்களுக்கு தொடர்பில்லாத திருமதி இந்திரா காந்தியும், ஈழத் தமிழர்களுக்கு தொடர்பில்லாத சிங்கள பிரதமர் திருமதி. பண்டார நாயகாவும் போட்டுகொண்டனர்.

எனவே இந்த புதிய ஒப்பந்தம் இரு நாடு தமிழர் பிரதிநிதிகளை வைத்து போடப்படவேண்டும். ராஜீவ் காந்தி – ஜெயரத்னே ஒப்பந்தத்தின் படி இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளை ஒன்றிணைத்து அப்பகுதியின் முதலமைச்சரும் நம் தமிழக முதலைச்சரும் தான் இந்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

கச்சத்தீவு மீட்கப்பட்டு புதிய ஒப்பந்தம் போடப்பட்டால் தான் இந்த படுகொலைகளை எல்லாம் தடுக்கமுடியும்.

சமீபத்தில் செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக பொருப்பேற்றிருக்கிறார்கள். அவர்கள் சட்டமன்றத்திலும் கச்சத்தீவை மீட்போம் என்று தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதைப்பற்றி உங்கள் கருத்தை கூறுங்கள்.
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று உண்மையிலே எல்லோரும் பாராட்டுகிறோம். இது நமது கோரிக்கைக்கு வலு சேர்க்கும் தீர்மானம்.

2008 ஆம் ஆண்டில் செல்வி ஜெயலலிதா அவர்கள் டில்லி உச்ச நீதிமன்றத்தில் கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். சமீபத்தில் இந்த வழக்கில் தமிழக வருவாய்த்துறையையும் வாதியாக சேர்த்திருக்கின்றனர். மத்திய அரசு கச்சத்தீவு சர்ச்சைக்குரிய பகுதி என்று வாதிடுவதை முறியடுத்து கச்சத்தீவு முழுமையாக தமிழ் நாட்டிற்கு சொந்தமான பகுதி என்று வருவாய்த்துறையால் நிருபிக்கமுடியும். கச்சத்தீவு ராமானாதபுர மாவட்டத்திற்கு உட்பட்ட ராமேஷ்வர தாலுகாவைச் சேர்ந்தது. அதன் சர்வே எண் 1250. அதனுடைய பரப்பளவு 282 ஏக்கர்.

இந்த வழக்கு நீதியை பெற்று தரும் என்றாலும் அது விரைவாக பெற்று தரும் என்று எதிர்பார்க்க முடியாது. ராமர் கோவில் வழக்கு தீர்ப்பை 60 ஆண்டுகளாக இழுத்தனர். அதைபோன்று இவ்வழக்கை இழுத்து விட்டால் நாம் என்ன செய்வது. ஆகவே நாங்கள் தமிழக அரசிற்கு வைக்கும் கோரிக்கை என்னவென்றால் உச்ச நீதிமன்றத்தை முழுமையாக சார்ந்திருக்காமல், இப்பிரட்சினையை பாராளுமன்றத்தில் தீர்க்க முயல வேண்டும். பாராளுமன்றத்தில் 1974, 1976 ஒப்பந்தங்களை ரத்து செய்யக்கோரி தனி நபர் மசோதா கொண்டுவரவேண்டும். தமிழத்தின் நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்தால் பாராளுமன்றத்தில் கச்சத்தீவு ஒப்பந்தங்களை எளிதாக ரத்து செய்துவிடலாம். திமுக தலைவரும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்கிறார், அதிமுக தலைவரும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்கிறார், தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் இதில் மாற்று கருத்து இல்லை, மத்தியில் பாரதிய ஜனதா கட்சியினரும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்கிறனர், ஆனால் இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பாராளுமன்றத்தில் இதை பேசுவதற்கு எது தடையாக இருக்கிறது? வரும் மழைகால கூட்டத்தொடரில் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் இதை வலிறுத்தி தீர்மானம் கொண்டுவந்தால் கச்சத்தீவு பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படும்.

கடந்த முப்பந்தைந்து ஆண்டுகளாக இப்பிரச்சனை இருக்கின்ற போது ஏன் மீனவர்கள் பெரும் போராட்டங்களை நடத்துவதில்லை?
ஒரு மிகப்பெரிய ஆய்விற்குரிய கேளிவியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். கச்சத்தீவு மீட்பு இயக்க பணியில் பழவேற்காடு முதல் கன்னியாகுமரிவரை மூன்று மாதம் பயணம் மேற்கொண்டோம். அப்போது நாம் பல உண்மைகளை தெரிந்துகொண்டோம்.

நமது மீனவ சமுதாயத்தினர் அனைவரும் ஒரே பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள், ஒரே மொழி பேசுகிறவர்கள், ஒரே தொழில் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இது போன்ற பல காரணங்களால் அவர்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு சாத்தியங்கள் மிக அதிகம். ஆனால் அவர்கள் மத்தியில் பிரிவினைகள் இருப்பது தான் வியப்புக்குரிய விஷயம். இந்த பிரிவினையின் காரணமாகத்தான் அவர்களால் இவ்வளவு அக்கிரமங்கள் நடந்தும் ஒன்று பட்டு நிற்க முடியவில்லை.

மீனவர்களிடம் தொழிற்ச் சங்கங்கள் போன்ற வலுவான அமைப்புகள் இல்லை. மீனவர்கள் மத்தியில் அரசியல் கட்சிகாரர்கள் இருக்கின்றனர். ஆனால் கட்சிகாரர்கள் தனது கட்சியின் நிலையை மீனவர்கள் மீது திணிக்கிறார்களே ஒழிய தனது கட்சி தலைமையிடம் தம் மீனவர்கள் நிலையை கொண்டு செல்வதில்லை. இது அனைத்து கட்சிக்காரர்களுக்கும் பொருந்தும்.

மீனவர்கள் மத்தியில் நிறைய சிறிய சிறிய அமைப்புகள் இருக்கின்றன. லைட் ஹவுசை சுற்றியே நாற்பது, ஐம்பது அமைப்புகள் இருக்கின்றன. எனக்கு தெரிந்து மட்டுமே நூற்றி நாற்பது அமைப்புகள் இருக்கின்றன. சிங்காரவேலர் பெயரிலே எத்தனையோ அமைப்புகளை உருவாக்கி இருக்கின்றனர். ஆனால் அவர்கள் ஒரு சிங்காரவேலரை உருவாக்க இல்லை. தங்களது பிரச்சனைகளை ஆராய்ந்து சரியான தீர்வை கண்டறிந்து அதை நோக்கி சமுதாயத்தை வழி நடத்தக் கூடிய சரியான தலைவர்கள் இல்லாததாலே அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாமல் பெரிதாக போராடாமல் இருக்கிறார்கள்.

கச்சத்தீவு மீட்பு இயக்கத்தில் நாங்கள் மீனவர்களை ஒருங்கிணைத்து ஆயிரம் மீனவர் இளைஞர்களை திரட்டி டில்லியில் போராட்டம் நடத்துவதற்கு தயாராகி வருகிறோம்.

நிச்சயமாக வரும் 2011 ஆகஸ்ட் 15 ஆம் தேதி மத்திய அரசோ மாநில அரசோ நமது கச்சத்தீவில் இந்திய தேசிய கொடியை பறக்கவிடும் என்று நம்புகிறோம். தவறினால் இந்திய முழுவதிலுமிருந்து தேச பக்தர்களை திரட்டி கச்சத்தீவு மீட்பு இயக்கத்தினர் நாங்கள் கச்சத்தீவில் இந்திய தேசிய கொடியை ஏற்றியே தீருவோம்.

கச்சத்தீவை பற்றி மேலும் விவரமாக அறிய திரு.சீதையின் மைந்தன் அவர்களின் “கச்சத்தீவும் நமதே! கீழைக் கடல் முழுதும் நமதே!” என்ற புத்தகத்தை வாசியுங்கள். இணையத்தில் இப்புத்தகம் கீழ்கண்ட இணைப்பில் கிடைக்கும்.

http://www.ilantamilar.org/katchatheevu.pdf

Often, this is done quickly on the do my essay computer by searching, using key words that describe your dissertation

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “நேர்காணல் – திரு. சீதையின் மைந்தன் – மீள்பதிவு”
  1. kasi visvanathan says:

    The very first complete informative interview of our Island “Katchatheevu”. Right from the beginning the Indian politicians and also including TN selfish politicians are not aware of their geographical limits and history of their own land.Still our Tamil MP are not united and divided as rivals which cost the lives of Fishermen and their family. Every citizen should realize this to retrieve our Kachatheevu the land Raja of Ramnad Sethupathi as per records.

  2. இர.இலாபம்சிவசாமி says:

    வரகவி பாரதி வாக்கு பலித்து தீர்க்கதரிசனமாக கீழைக் கடல் முழுதும் கப்பல் ஓட வேண்டும்.சிங்களத் தீவினுக்கு பாலம் அமைத்து சேதுவை மேடாக்கி வீதி சமைக்க வேண்டும்.அந்நாள் பொன்நாள்.மாற்றங்கள் இயற்கையானதே.நடந்தே தீரும்.

  3. Thiags says:

    Very informative and we need to get katachatheev island at any cost

அதிகம் படித்தது