மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -4

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Dec 10, 2016

பஞ்சதந்திரக் கதைகள் (தொடர்ச்சி)

இங்கும் அப்படித்தான் நடக்கிறது. கெட்டவர்கள் கையில் அகப்பட்டு இறப்பதைக் காட்டிலும் சண்டை செய்து இறப்பதே மேலானது. போர் முனையில் இறப்பவன் சொர்க்கம் அடைகிறான். பகைவர்களை வென்றால், அவனுக்கு ராஜ்யம் கிடைக்கிறது. ஆகவே வீரர்களுக்குச் சாவும் பிழைப்பும் சமம்தான் என்று சஞ்சீவகன் கூறியது.

தமனகன்:பகைவர்களுடைய பலத்தை அறியாமல் எவன் பகை கொள்கிறானோ, அவன் ஒரு சிட்டுக்குருவியினால் பெருங்கடல் அவமானம் அடைந்ததைப் போல அவமானம் அடைவான்.

சஞ்சீவகன்: அது எப்படி?

தமனகன், கதை சொல்லலாயிற்று.

siragu-panjathandhira-story3

ஒரு கடற்கரையில் உள்ள மரத்தில் இரண்டு சிட்டுக்குருவிகள் கூடுகட்டிக் கொண்டிருந்தன.

பெட்டை (ஆண்பறவையைப் பார்த்து): நான் எங்கே முட்டை இடுவேன்? ஆண்பறவை: இது நல்ல இடம்தான். இங்கேயே இடு.

பெட்டை: இந்தக் கடலினால் ஒருவேளை அபாயம் நேரிடலாம்

ஆண்குருவி: இந்தக் கடல் என்னுடன் பகைத்துக் கொள்ள முடியாது.

பெட்டை: உன் பலம் என்ன, கடலின் பலம் என்ன? யார் தன் பலத்தையும் பிறர் பலத்தையும் பார்ப்பதில்லையோ அவன் விபத்தை அடைகிறான். எவன் சீர்தூக்கிப் பார்க்கிறானோ அவன் சுகம் அடைகிறான். மேலும்தனக்கு நன்மை செய்கின்றவர்களின் பேச்சைக் கேட்காதவன், ஆமை கழியைவிட்டு இறந்ததைப் போலத் தானும் கெடுவான்.

ஆண்குருவி: அதெப்படிப் பெண்ணே? சொல்.

பெண்குருவி சொல்லலாயிற்று.

ஒரு குளத்தில் விகடன், சங்கடன் என்ற இரண்டு அன்னங்கள் இருந்தன. கம்புக்ரீவன் என்னும் ஆமை அவற்றுடன் நட்பாய் இருந்தது. மழை பெய்யவில்லை. அதனால் குளம் வற்றிவிடும்போல் இருந்தது.

விகடன் சங்கடனிடம் “நாம் வேறொரு குளத்திற்குப் பறந்துபோய்விடுவது நல்லது. இதை நம் ஆமை நண்பனிடம் சொல்லி விடை பெறலாம்” என்றது. அவ்விதமே இரண்டும் ஆமையிடம் கூறின.

கம்புக்ரீவன்: உங்களுக்குச் சிறகிருக்கிறது. பறந்து போய் விடுவீர்கள். நான் என்ன செய்வது?

அன்னங்கள் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தன.

அன்னங்கள்: எங்கள் சொற்களில் நம்பிக்கை வைத்து நீ வருவதானால் உன்னையும் நாங்கள் வேறிடத்திற்குக் கொண்டு செல்கிறோம். ஆனால் வழியில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வாயைத் திறக்கக்கூடாது.

இருபறவைகளும் ஒரு சிறு கழியைக் கொண்டுவந்தன.

siragu-panjathandhira-story1

அன்னங்கள்: இந்தக் கழியைப் பல்லினால் பலமாகப் பிடித்துக்கொள். விட்டுவிடாதே. நாங்கள் இருவரும் எங்கள் அலகினால் இதைக் கவ்விக்கொண்டு ஆகாயத்தில் பறந்துசெல்லப் போகிறோம்.

இவ்விதமே அவை ஆமையைத் தூக்கியவாறு பறந்தன. வழியில் ஒரு கிராமம் வந்தது. அந்த கிராம மக்கள் வானில் தெரிந்த இந்த நிகழ்ச்சியைப் பார்த்து அதிசயத்துடன் இரைச்சல் இட்டுப் பேசிக் கொண்டார்கள். இரைச்சலைக் கேட்ட ஆமை, “எங்கிருந்து இந்த இரைச்சல் உண்டாகிறது?” என்று நண்பர்களைக் கேட்பதற்காக வாயைத் திறந்தது. உடனே கழியிலிருந்து விடுபட்டுக் கீழே விழுந்தது. கிராமத்தினர் ஆமைக்கறி நன்றாக இருக்கும் என்று அதை உடனே கொன்று தின்றார்கள்.

ஆகையால் நமக்கு நன்மை செய்பவர்களின் பேச்சை அசட்டைசெய்யலாகாது. மேலும், எந்தக் காரியமாக இருந்தாலும் வருமுன் யோசிப்பவர்களும், வருகின்றபோது ஆராய்பவனும் நலம் அடைவார்கள். மாறாக, எது வருமோ அது வரட்டும் என்று நினைப்பவன், அவன், ‘வந்தபின் காப்போன்’ என்னும் மீன் போல நாசம் அடைவான்.

இப்படிப் பெண்குருவி கூறியது.

ஆண்குருவி: அது எப்படி?

பெட்டை மற்றொரு கதையைச் சொல்லத் தொடங்கியது.

ஒரு பெரியகுளத்தில், வருமுன்-காப்போன், வரும்போது-காப்போன், வந்தபின்- காப்போன் என்று மூன்று மீன்கள் இருந்தன. வெப்பத்தினால் குளத்தில் நீர் குறைந்து வரலாயிற்று. அதைப் பார்த்த மீனவர்கள் இருவரில் ஒருவன், “தண்ணீர் கொஞ்சமாக இருக்கிறது. நாம் நாளைக்கு வந்து எல்லா மீன்களையும் பிடித்துக் கொள்ளலாம்” என்றான்.

இதை வருமுன்-காப்போன் கேட்டது. தன் நண்பர்களிடத்தில் சென்று, “நாம் இந்த இடத்தைவிட்டு விரைவில் புறப்பட வேண்டும். இங்கே கொஞ்சநேரமும் இருக்கலாகாது” என்றது.

வரும்போது-காப்போன்: நமக்கு விபத்து வந்தால் பார்த்துக் கொள்ளலாம். அப்போது அதற்குத் தகுந்தவாறு புத்தி நமக்குத் துணை செய்யும்.

வந்தபின்-காப்போன்: தன் இடத்தைவிட்டு ஒருவன் செல்லுவது முட்டாள் தனம். எது நடக்குமோ அது நடந்தே தீரும். எது வராதோ அதை வருந்தி அழைத்தாலும் வராது. ஆகவே நான் வருவதற்கில்லை.

வருமுன்-காப்போன், வேறு இடத்திற்குப் போய்விட்டது.

siragu-panjathandhira-story2

மறுநாள் உதயநேரத்தில் மீனவர்கள் வந்தார்கள். வலைவீசி மீன்களைப் பிடிக்கலானார்கள். வரும்போது-காப்போன், தான் இறந்துவிட்டதைப் போல மிதந்தவாறு இருந்தது. அதை ஒரு வலைஞன் பிடித்துத், தரையில் போட்டான். உடனே அது துள்ளிக்குதித்து, மீண்டும் நீருக்குள் போய் ஒளிந்து கொண்டது. வந்தபின்-காப்போன், என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடியவாறு இருந்தது. அதை ஒரு மீனவன் பார்த்துத், தன் தடியால் அடித்துக் கொன்றான்.

இவ்வாறு பெட்டை கூறியது. இருப்பினும் கணவன் சொல்லைக் கேட்டு நடப்பதே நன்மை என்று கருதி, அந்த மரத்திலேயே முட்டை இட்டது.

அப்போது கடல் பொங்கி, மரத்தின் உயரத்திற்கு எழுந்து, முட்டைகளைக் கொண்டுபோயிற்று. பெட்டை, மிகுந்த துக்கத்துடன் ஆண் குருவியிடம் “நான் சொன்னவாறே ஆயிற்று. இப்போது என்ன செய்யலாம்” என்றது. ஆண்குருவி, “ஒன்றும் பயப்படாதே. நான் முட்டைகளைக் கொண்டு வருவேன். என் வலிமையைப் பார்” என்றது. பிறகு அது பறந்து சென்று கருடனிடம் சரணடைந்தது.

அதன் கதையைக் கேட்ட கருடன், தன் எஜமானாகிய விஷ்ணு பகவானிடம் சென்று, அந்தக் குருவியின் முட்டைகளை மீட்டுத் தர வேண்டும் என்று முறையிட்டது. உடனே விஷ்ணுவின் அருளால், கடல் அந்த முட்டைகளைத் திரும்பக் கொண்டுவந்து வைத்துச் சென்றது.

ஆகவே பகைவர்களுடைய வலிமை அறியாமல் பகைத்துக் கொள்ளலாகாது. அந்தச் சிங்கம் அகங்காரத்தினால் இவ்வாறுசெய்கிறது என்று தமனகன் கூறியது.

சஞ்சீவகன்: அப்படியானால், அந்தச் சிங்கம் சண்டைக்கு வருமானால், அதன் குறிப்பை எப்படி அறியலாம்?

தமனகன்: எப்போது அவன் காதுகளை நெறித்துக் கொண்டு, வாலைத் தூக்குகிறானோ, அப்போது அவன் கொல்ல வருகிறான் என்று புரிந்துகொள். நீயும் அப்போது அப்படியே செய்ய வேண்டும். சுத்தவீரனாகிய உனக்கு நான் சொல்லியா தரவேண்டும்?

இவ்வாறு சொல்லிவிட்டு, தமனகன், தன் நண்பன் கரடகனிடம் சென்றது.

கரடகன்: என்ன ஆயிற்று? சொல்.

தமனகன்: காரியம் நிறைவேறியது. இருவருடைய நட்பிலும் மண் விழுந்தது. சிங்கத்தின் கோபக்குறி எப்படி இருக்கும் என்று சஞ்சீவகனிடம் சொன்னேன். அப்படியே சிங்கத்தைச் செய்ய வைக்க வேண்டும்.

இப்படிச் சொல்லிவிட்டு, பிங்கலன் என்னும் அந்தச் சிங்கத்திடம் சென்று எருதின் முன்னர் தான் கூறியவாறே இருக்கச் செய்தது. அதைச் சஞ்சீவகன் கண்டு, மிகவும் துக்கம் கொண்டது. “சரி, போரிட்டே உயிரை விடலாம்” என்று மனத்தில் நிச்சயித்துக் கொண்டு, போரிட ஆரம்பித்தது. இரண்டிற்கும் பெரிய சண்டை விளைந்தது.

இதைக் கரடகன் கண்டது. தமனகனைப் பார்த்துப் பேசலாயிற்று.

கரடகன்: தமனகா! துஷ்டா! உன் சேர்க்கையால், நம் சிங்க அரசனுக்கும் அவன் நண்பனுக்கும் சண்டை உண்டாயிற்று.

ஆட்சிநீதியில் சாம தான பேத தண்டம் என்னும் நான்கு உபாயங்கள் இருக்கின்றன. அவற்றில் சாமம் என்னும் உபாயம் மிக முக்கியமானது. அதில் காரியசித்தி ஏற்படுவது போல மற்றவற்றினால் உண்டாவதில்லை. பகைமை இருந்தாலும், சாம உபாயத்தைக் கையாண்டால் அது நீங்கிவிடும்.

இப்படியிருக்க, நீ அரசனைப் பெரிய தீமையில் மாட்டிவிட்டாய். சில ஆட்சி யாளர்கள், ஈனர்களுடைய புத்தியைக் கேட்டுக் கடைசியில் தீமையே அடைகிறார்கள். ஆகவே ஆட்சியாளர்கள், நல்லவர்களை நண்பர்களாகக் கொள்ள வேண்டும். கபடம் நிறைந்தவர்கள் அருகில் இருந்தாலும் அவர்களின் சொல்லைக் கேட்கலாகாது.

தானே பதவியை, செல்வத்தை அடையவேண்டும் என்று நினைத்து, ஆட்சியாளரின் அருகில் வேறொருவரும் வரக்கூடாது என்று தடுப்பவர்கள், அவர்களுக்கு உபயோகப் படமாட்டார்கள். நல்லவர்கள் அருகில் இருந்தால், அரசன் பிரகாசம் அடைவான். கெட்டவர்களுடைய அண்மை இருந்தால் அவன் பிரகாசிக்க மாட்டான். தன்னைத்தவிர ஆட்சியாளன் அருகில் வேறு ஒருவரும் இருக்கலாகாது என்று நினைப்பவன் அவனுக்குப் பகைவனே ஆவான். அவ்வாறே நீயும் இந்தத் தீங்கினை ஏற்படுத்திவிட்டாய்.

தலைவனுடைய அன்பு கிடைக்கும்போது அருகில் இருப்பவர்கள் மிகவும் அடக்கமாக இருக்கவேண்டும். நீ அதைவிட்டு விபரீதமாக நடந்துகொண்டாய். தந்தையைப் போல் மகன் இருப்பான் என்ற சொல்லையும் நீ பொய்யாக்கி விட்டாய்.

கொக்கு குரங்குக்கு உபதேசம் செய்து எப்படி இறந்து போயிற்றோ, அதுபோல உன்னால் நானும் மரணம் அடைவேன் என்று தோன்றுகிறது.

தமனகன்: அது எப்படி நடந்தது, சொல்வாயாக.

கரடகன்: ஒரு நாள் இரவு கடுங்குளிர். அப்போது மின்மினிப் பூச்சிகளுடைய கூட்டத்தைப் பார்த்துச் சில குரங்குகள், இவை நெருப்புத் துண்டுகள், குளிர் காயலாம் என்றுநினைத்து அருகே சென்றன. அருகில் மரத்தின்மீது சுமுகன் என்னும் கொக்கு இருந்தது. இவை மின்மினிப் பூச்சிகள், நெருப்பு அல்ல என்று அது கூறியது. அதைக் கேட்ட குரங்கு ஒன்று, நீதானா எனக்கு புத்தி சொல்லத் தகுந்தவன் என்று கூறி அப்பறவையைக் கல்லில் அறைந்து கொன்றது.

ஆகையால் கெட்டவர்களுக்கு உபதேசம் செய்யலாகாது.

ஆனாலும், நீ இப்படி நடந்ததால் துஷ்டபுத்தி நாசம் அடைந்ததைப் போல நீயும் நாசம் அடைவாய்.

இப்படிக் கரடகன் சொல்ல, தமனகன் அமைதியாக இருந்தது.

தமனகன்: துஷ்டபுத்தி எவ்வாறு கெட்டுப்போனான், சொல்.

கரடகன்: பழங்காலத்தில் ஒரு செட்டியாருக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் சுபுத்தி, மற்றவன் துஷ்டபுத்தி. இருவரும் பணம் சம்பாதிப்பதற்காக வெகுதூரம் சென்றார்கள். ஓர் இடத்தில் சுபுத்திக்கு ஒரு புதையல் அகப்பட்டது. தன் சகோதரன்தானே என்று நினைத்து அந்தச் செய்தியை அவன் துஷ்டபுத்திக்குச் சொன்னான்.

துஷ்டபுத்தி: அந்தப் பணத்தை நாம் இங்கேயே வேறொரு இடத்தில் புதைத்து அடையாளம் வைத்துவிட்டு, இப்போது செலவுக்குக் கொஞ்சம் பணம் மட்டும் எடுத்துக்கொண்டு போவோம்.

சுபுத்தி: அவ்வாறே செய்யலாம்.

இவ்விதம் செய்தபிறகு, அவர்கள் வீட்டுக்குத் திரும்பினார்கள். ஒருநாள், துஷ்டபுத்தி, அந்த இடத்திற்குச் சென்று இருக்கும் பணத்தை எல்லாம் தானே கொண்டுவந்து வைத்துக் கொண்டான். பிறகு, சுபுத்தியிடம், “நாம் இப்போது ஒளித்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு வரலாம், வா” என்று அழைத்தான். புதைத்து வைத்த இடத்திற்குச் சென்றார்கள். அங்கே பணம் ஏது? சுபுத்தி அதைப் பார்த்து மிகவும் மனம் வருந்தினான்.

துஷ்டபுத்தி: இங்கிருந்த பணத்தை நீதான் திருடியிருக்க வேண்டும். திருடிவிட்டு இப்போது வருத்தப்படுவதுபோல நடிக்கிறாய்.

சுபுத்தி, இதைக் கேட்டு, அரசனின் நியாய சபைக்குச் சென்றான். அரசன், நியாய அதிபதியைப் பார்த்து, “இந்த வழக்கைப் பஞ்சாயத்தில் தீர்ப்பாயாக” என்றான். நீதிபதியும், “நான் ஐந்து நாளுக்குள் தீர்க்கிறேன்” என்றான். ஐந்தாம் நாள் நியாய சபை கூடியது.

துஷ்டபுத்தி: எனக்குச் சாட்சி இருக்கிறது. அந்தச் சாட்சியை நீங்கள் கேட்டு முடிவு செய்யவேண்டும்.

பஞ்சாயத்தார்: உன் சாட்சியைக் கொண்டுவா.

துஷ்டபுத்தி, வீட்டுக்குச் சென்று, தன் தந்தையிடம் கூறலானான்.

“அப்பா, உங்களுடைய ஒரு சொல்லினால் எனக்குப் பத்தாயிரம் பொற்காசுகிடைக்கும்”.

தந்தை: எப்படிக் கிடைக்கும்? சொல்.

துஷ்டபுத்தி: நீங்கள் இன்று இரவே சென்று, காட்டில் ஒரு மரப்பொந்தில் மறைந்து உட்கார்ந்திருக்க வேண்டும். அங்கே பஞ்சாயத்தார் வருவார்கள். “அங்கிருந்த பணத்தை யார் கொண்டுசென்றார்கள்” என்று அவர்கள் கேட்கும்போது நீங்கள் “சுபுத்தி கொண்டுசென்றான்” என்று அசரீரி போலச் சொன்னால் போதும். எனக்குக் காரியம் ஜெயிக்கும்.

இதைக் கேட்ட தகப்பனார், “தீமை நேரிடுகின்ற காரியத்தைச் செய்துவிட்டு, சுகம் அடையவேண்டும் என்று ஆசைப்படுவது, கொக்கைப் போல மூடத்தனமாக இருக்கிறது” என்றார்.

துஷ்டபுத்தி: அது என்ன கதை?

தந்தை: இரு கொக்குகள் வாழ்ந்துவந்தன. தான் பொரிக்கும் குஞ்சுகளை எல்லாம் ஒரு பாம்பு தின்னக் கொடுத்துவந்த மூட ஆண் கொக்கு, அவற்றைக் காப்பாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்று பெண்கொக்குடன் சேர்ந்து ஏரிக்கரையில் உட்கார்ந்து ஆலோசித்தவாறு இருந்தது. அப்போது கொக்கின் நண்பனாகிய குளிரன் என்னும் நண்டு, “ஏன் நீங்கள் துக்கமாக இருக்கிறீர்கள்?” என்று விசாரித்தது. கொக்குகள் தங்கள் கதையைச் சொல்லின.

குளிரன்: நல்லது. உனக்கு பாம்பைக் கொல்கின்ற உபாயம் ஒன்றைச் சொல்கிறேன். இங்கே பக்கத்தில் ஒரு கீரியின் பொந்து இருக்கிறது அல்லவா? அங்கிருந்து, பாம்பு இருக்கும் இடம்வரையில் மீன்களை ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டுசெல். உன் காரியம் நடக்கும்.

கொக்கு அப்படியே செய்தது. கீரி, தன் வளையிலிருந்து புறப்பட்டு மீன்களைத் தின்றவாறே சென்றது. கடைசியில் பாம்பு இருக்கும் இடத்தை அடைந்து, அதைக் கொன்றுவிட்டு, அதோடு நில்லாமல், கொக்கின் குஞ்சுகளையும் தின்றுவிட்டது. ஆகையால் தீய சிந்தனை கூடாது.

என்று தந்தை கூறினார்.

(தொடரும்)                


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -4”

அதிகம் படித்தது