ஏப்ரல் 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Jan 28, 2017

siragu-panjathandhira-kadhaigal

அரிமர்த்தனனிடம் பிரகாரநாசன் என்னும் மந்திரி சொல்கிறது:

“ஒரு வனத்தில் ஒரு வேடன், கையில் புறாக்கூடும், கண்ணியும், தடி முதலிய வேட்டைக் கருவிகளும் எடுத்துக்கொண்டு அலைந்தான். அப்போது பெருமழையும் காற்றும் வந்து பிரளயம் போல வீசலாயின. வேடன் பயந்துபோய் ஒரு மரத்தடியில் நின்றான். “கடவுளே, இந்த வேளையில் என்னைக் காப்பாற்றக்கூடியவர் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று வேண்டினான். அந்தச் சமயத்தில், அந்த மரத்தின் மேல் வசிக்கும் ஒரு ஆண்புறா, தனது பெட்டை வரவில்லை என்று மிகவும் துக்கமாக இருந்தது. “இன்றைக்கு என் மனைவி வரவில்லையே, அவளை யாரேனும் பிடித்துக் கொண்டார்களோ தெரியவில்லையே. அவள் இல்லாத இந்த வீடு எனக்குச் சுடுகாட்டைப் போலத் தோன்றுகிறது. அவள் கற்பும் கணவன் இன்புறக்கூடிய செயலும் உள்ளவள். அப்படிப்பட்டவளை அடைந்த நான் பாக்கியவான்” என்று புலம்பிக்கொண்டிருந்தது.

அப்போது அந்த வேடனின் புறாக்கூண்டிலிருந்த பெண் புறா, மிகவும் துக்கத்துடன்: “முன்பிறப்பில் தீவினை செய்தவர்களுக்குப் பலவகைப்பட்ட துன்பங்களும் சிறையும் நோயும் வந்து நேர்கின்றன. அது ஒருபுறம் இருக்க, எந்தச் சமயத்தில் எது நேருமோ அதை யாராலும் தடுக்க ஆவதில்லை” என்றது. பிறகு, மரத்தின் மேலிருந்த தன் கணவனை நோக்கி, “அன்புள்ளவரே, நமது வீட்டுக்கு வந்த விருந்தாளியாகிய இந்த வேடனுக்கு உதவி செய்வது நமது கடமை. குளிர் முதலியவற்றை நீக்கி விருந்தோம்ப வேண்டும். இவன் நம் மனைவியைப்பிடித்துவிட்டானே என்று துக்கம் கொள்ளாமல் இவனுக்கு உதவுங்கள்” என்றது. பெண்புறா கூறியதைக் கேட்ட

ஆண்புறா: வேடனே, உன் வரவு நல்வரவு ஆகுக. இந்த மரத்தடியை உன் வீடாக நினைத்துக் கொண்டு உனக்கு வேண்டியதைக் கேள்.

வேடன்: புறாவே, எனக்கு மிகவும் குளிர்கிறது. குளிரைப் போக்க உதவு.

இதைக் கேட்ட புறா, சருகுகளைத் திரட்டியது. ஏதோ ஒரு பறவையின் கூட்டிலிருந்து ஒரு சிறு நெருப்பைக் கொண்டுவந்தது. பிறகு சருகுகளின்மீது தீவைத்து,

“இந்த நெருப்பில் நீ குளிர் காய்வாயாக. நானோ ஒரு பறவை. அதனால் உன் பசியைத் தீர்ப்பதற்கேற்ற உணவு என்னிடம் இல்லை. என் மனைவியோ உன் கூட்டில் இருக்கிறாள். அநேக துன்பங்களுக்கு இடமான இந்த உடலை வைத்திருந்து பயன் என்ன? அதனால் என் இறைச்சியைத் தின்று மகிழ்ச்சி அடை”

என்று சொல்லியவாறே எரியும் தீயில் விழுந்துவிட்டது. இதைக் கண்ட வேடன் மிகவும் துயரமடைந்தான்.

pancha-thandhira-kadhai10-4

வேடன் (தனக்குள்): ஆ! ஆ! என் பொருட்டு இந்தப் புறா தன் உயிரை விட்டுவிட்டது. நானோ தீயவன். இம்மாதிரிப் பல பறவைகளைப் பிடித்துக் கொன்று அவற்றின் சதையினால் ஜீவிக்கிறேன். பரோபகாரம் இன்னதென்று தெரியாததனால், ஊனைத் தின்று ஊனைப் பெருக்குகின்ற பாவியானேன். எனக்கு நரகம்தான் காத்திருக்கிறது. இது முதலாக நான் நன்னடத்தை உடையவனாகப் பசி, தாகம், குளிர், வெயில் முதலானவற்றைப் பொறுத்துக் கொண்டு தவம் செய்வேன்.

என்று சொல்லி மிகுந்த பச்சாத்தாபத்துடன் தன் கூடு, தடி முதலிய பொருள்களை எல்லாம் எறிந்துவிட்டு, அந்தப் பெண் புறாவையும் விட்டுவிட்டான். தன் நாயகன் இறந்த பிறகு தனக்கு வாழ்வு இல்லை என்று அந்தப் பெண் புறாவும் தீயில் விழுந்து இறந்தது. அதைக் கண்ட வேடனும், “எனக்கு இந்த உடல் வேண்டாம்” என்று தீயில் விழுந்து இறந்தான்.

ஆகவே அபயம் அடைந்தவர்களைக் காப்பது நம் கடமை” என்றது.

அரிமர்த்தனன்: என் அபிப்பிராயமும் அதுவே. இவன் உண்மை பேசுவதாகவே தோன்றுகிறது. புத்திமானாகவும் இருக்கிறான். இதை அறியாமல் மேகவர்ணன் இவனை மானபங்கம் செய்தான். இவனைக் கொல்வது தவறு. நம்பிக்கை வைத்தவரைக் கொல்வதற்குப் பிராயச்சித்தமே கிடையாது. ஆகவே இவனை நம் துர்க்கத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

என்று உறுதி செய்துகொண்டு, சிரஞ்சீவியிடம் சொல்கிறது:

நீ என் கோட்டையில் வந்து இரு. நான் உன்னைப் பாதுகாப்பேன்.

சிரஞ்சீவி: நான் விஸ்தாரமாகச் சொல்ல விரும்பவில்லை. எப்படி நடந்துகொள்கிறேன் என்பதைத் தாங்கள் காணலாம்.

குரூரநாசன்: இந்த அரசனின் குற்றத்தினால் கோட்டான் குலம் முழுதும் அழியப் போகிறது. பிறர் செய்யக்கூடிய தீங்குகளை அரசனுக்கு அறிவிக்கவேண்டும். இதமாகச் சொல்லியும் அரசன் கேட்காவிட்டால் என்ன செய்வது?

கோட்டான்களின் அரசன் அதைக் கேட்காமல், சிரஞ்சீவியைத் தனது அரணுக்கு அழைத்துச் சென்றது.

சிரஞ்சீவி (தனக்குள்) நம்மைக் கொல்லவேண்டும் என்று ஆலோசனை சொன்னவன் மிகவும் கெட்டிக்காரன். மற்றவர்கள் எல்லாம் அரசனைப் போலவே மூடர்கள். இவன் ஒருவன் இல்லாவிட்டால் எல்லாரையும் கொல்லுவது நமக்கு அரியதல்ல.

என்று ஆலோசித்துக் கொண்டிருந்தது.

அரிமர்த்தனன்: இந்த சிரஞ்சீவிக்கு நமதுதுர்க்கத்தின் பகுதிகளை எல்லாம் காட்டு.

அப்போது, சிரஞ்சீவி (தனக்குள்): நாம் இந்த அரணுக்குள் இருந்தால், நமது எண்ணம் கைகூடி வராது. நம் வஞ்சனையையும் தெரிந்துகொள்வார்கள். ஆதலால் இந்தக் கோட்டையின் தலைவாசலில் தங்கியிருந்தே நமது எண்ணத்தை முடிக்க வேண்டும்.

இவ்வாறுநினைத்து, அரிமர்த்தனனிடம் சொல்கிறது:

சிரஞ்சீவி: மகாராஜா நான் காக்கை ஆதலினால் உங்களுடன் உள்ளே இருக்கத்தக்கவன் அல்ல. உங்கள் கடைவாயிலில் காத்திருந்து கபடமில்லாமல் உங்களைச் சேவித்துக் காலம் தள்ளுவேன். அன்புள்ள சேவகன் எங்கிருந்தாலும் கவலையில்லை.

என்று கூறி அரணுக்குள் வராமல் வாயிலில் இருந்தது.

குரூரநாசன்: அரசன், மந்திரிகள் ஆகிய நீங்கள் எல்லாரும் மூர்க்கர்களாக இருக்கிறீர்கள் என்று நான் எண்ணுகிறேன். முற்காலத்தில் நடந்த ஒரு கதையும் இருக்கிறது. “முதல் மூடன் நான், இரண்டாவது வேடன், மூன்றாவது அரசன், நான்காவது அமைச்சன்” என்று சொல்லிவிட்டு ஒரு பறவை பறந்து போயிற்று.

அமைச்சர்கள்: அது எப்படி?

குரூரநாசன்: ஒரு மலையின்மீது ஒரு பறவை இருந்தது. அது எச்சமிட்டால் பொன்னாக மாறிவிடும். ஒரு வேடன் இதைக் கண்டான். “நான் இளமையிலிருந்து பல காடுகளிலும் திரிந்துவருகிறேன். இப்படிப்பட்ட ஆச்சரியம் ஒன்றைக் கண்டதே இல்லை. எனவே இதை உயிருடன் பிடித்துச் செல்வோம்” என்று நினைத்தான். தன் வலையில் அதைப் பிடித்துக் கொண்டான். “இது நம்மிடத்தில் இருந்தால் பலரும் சந்தேகப்படுவார்கள் ஆதலால் அரசனுக்கே இந்தப் பறவையைக் கொடுத்து விடுவோம்” என்று அரசனிடம் கொண்டு சென்று அந்தப் பறவையின் விருத்தாந்தத்தைக் கூறினான். அதைக்கேட்ட அரசன், அதை ஒரு இரத்தினங்கள் இழைத்த கூட்டில் சிறை வைத்தான். அதைக் கண்ட ஓர் அமைச்சன், “இந்த வேடன் கூறுவதெல்லாம் உண்மையாக இருக்குமா? இதை ஏன் வாங்கினீர்கள்? விட்டுவிடுங்கள்” என்றான். அதைக் கேட்டு அரசன் பறவையை விடுதலை செய்தான். அப்போது பறவை, “முதலில் நான் மூடன், இரண்டாவது வேடன், மூன்றாவது அரசன், நான்காவது அமைச்சன்” என்று சொல்லியவாறு பறந்துபோய்விட்டது.

இதைக் கேட்டும் மற்றக் கோட்டான்கள் கேட்கவில்லை. ஆகவே குரூரநாசன், தன் உறவினர்களைப் பார்த்து, “நான் இனி வேறொரு மலைக்குச் செல்கிறேன். இனி இங்கிருந்தால் ஆபத்து. நரி, குகையைக் கூப்பிட்டு சுகம் அடைந்தாற் போல, வருவதற்குமுன் ஆலோசிப்பவன் இன்பம் அடைவான்” என்றது.

உறவினர்கள்: அது எப்படி?

pancha thandhira kadhai10-1குரூரநாசன்: ஒரு வனத்தில் கிரகிரன் என்ற சிங்கம் இருந்தது. ஒருநாள் நெடுநேரம் இரைதேடியும் அதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே பொழுது சாய்ந்த சமயத்தில், ஒரு பெரிய குகையைக் கண்டு, இதில் இரவு அடைவதற்கு ஏதேனும் ஒரு பிராணி வரும், அப்போது அதைப் பிடித்துத் தின்னலாம் என்று யோசித்து அதற்குள் சென்றது.

அக்குகையில் அவிபுச்சன் என்னும் நரி வசித்துவந்தது. அது திரும்பிய போது, குகைவாயில் அருகில் சிங்கத்தின் கால்சுவடுகளைக் கண்டது. சிங்கம் குகையில் இருக்கிறதா, இல்லையா என்பதைச் சோதித்துக் கொண்டு நாம் உள்ளே செல்லவேண்டும் என்று அது தீர்மானம் செய்தது. பிறகு சற்றுத் தொலைவிலேயே நின்றுகொண்டு, “குகையே, குகையே”, என்று பலமுறை கூவியது. பிறகு

அவிபுச்சன்: குகையே, ஏன் என்னோடு பேசாமல் இருக்கிறாய்? நாம்தான் தினந்தோறும் பேசி மகிழ்வது வழக்கமாயிற்றே. இன்றைக்கு ஏன் நீ பேசவில்லை? சீக்கிரம் சொல். இல்லாவிட்டால் நான் வேறொரு இடத்திற்குச் செல்கிறேன்.

இவ்வாறு சொல்லிவிட்டு மறுபடியும் குகையைக் கூப்பிட்டது.

சிங்கம் (தனக்குள்): இந்தக் குகை தினந்தோறும் நரியுடன் பேசிக் கொண்டிருக்கும் போலும். இன்று நம்மைப் பார்த்த பயத்தினால் பேசவில்லை. நாமே அதற்கு பதிலாகப் பேசலாம்.

இவ்வாறு நினைத்து, தான் இருப்பதை வெளிக்காட்டும் விதமான கர்ஜனைத் தொனியில், “யாரும் இல்லை, உள்ளே வா” என்றது.

நரி: அப்பா, நான் தப்பிப் பிழைத்தேன்

இவ்வாறு கூறி ஓட்டம்பிடித்தது. எனவே முன்னே யோசித்து எதையும் செய்வதே சிறந்தது என்று கூறி, குரூரநாசனும் அதன் உறவினர்களும் வேறிடத்திற்குச் சென்றுவிட்டன. இதைக் கண்ட

சிரஞ்சீவி: இப்போது இந்தக் கோட்டான் கூட்டத்தை எளிதில் கொன்று விடலாம். விவேகமில்லாத அமைச்சனை உடைய அரசன் விரைவில் அழிவான். விவேகமுள்ள அமைச்சனோ இங்கு ஒருவனும் இல்லை.

என்று நினைத்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பகலில் சுள்ளிகளைக் கொண்டு வந்து தினந்தோறும் போட்டுக்கொண்டே வந்தது. அவ்வாறு காகங்கள் இருக்கும் இடம் வரை போட்டுவிட்டு மேகவர்ணனிடம் வந்தது. அது “என்ன செய்தி?” என்று வினவிற்று.

சிரஞ்சீவி: நம் குலப் பகைவர்களை அடியோடு நாசம் செய்யத்தக்க உபாயம் செய்திருக்கிறேன். நான் போட்ட சுள்ளிகளை வைத்து வழியை எளிதில் கண்டுபிடிக்கலாம். மேலும் நீங்கள் அனைத்து காகங்களும் பகலில் கோட்டான்கள் பார்வையின்றி இருக்கும்போது அவற்றைக் கொல்லலாம்.

இதைக் கேட்ட காக அரசன், மிகுதியாகக் கொள்ளிகளைச் சேகரித்துக் கொண்டுவந்து பகல்நேரத்தில் கோட்டான்களின் துர்க்க வாசலில் போட்டது. அதில் எழுந்த புகையினால் மூச்சுத்திணறி, கோட்டான்கள் இரைச்சல் இட்டுக் கொண்டு வெளியே வந்தன. வாயில் சிறிதாகையால் அனைத்தும் போவதற்கு வழியும் இல்லை. அப்போது குரூரநாசனை நினைத்து, அவன் சொன்னதைக் கேட்டிருந்தால் நலமாக இருந்திருக்கலாம் என்று அழுதன. அதற்குள் நெருப்புச் சுவாலை அதிகரித்து, கோட்டான்கள் அனைத்தும் இறந்தன. மேகவர்ணன் தன் கூட்டத்தோடு மிகவும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வரலாயிற்று.

மேகவர்ணன் (சிரஞ்சீவியைப் பார்த்து):  நீ எப்படி இதைச் சாதித்தாய்?

சிரஞ்சீவி: குரூரநாசன் என்றொரு அமைச்சனைத் தவிர மற்ற எவருக்கும் அங்கு புத்தியில்லை. அதனால் இது முடிந்தது. இப்படித்தான் பழைய காலத்தில் பகைவர்களை நாசம் செய்வதன்பொருட்டு, ஒரு பெரிய பாம்பு தவளைகளைத் தோளில் சுமந்து அவற்றைக் கொன்றது.

காக அரசன்: பாம்பு தவளைகளைச் சுமந்ததா? அது என்ன கதை?

pancha thandhira kadhai10-3

சிரஞ்சீவி: ஒரு நாட்டில் மந்தவிஷன் என்னும் பாம்பு இருந்தது. ஒரு நாள் அதற்கு இரை கிடைக்காமல் மிகவும் பசித்தபடி ஓர் ஏரிக்கரை அருகில் வந்தது. அங்குத் தவளைகள் மிகுதியாக இருந்தன. ஏதேனும் கபடம் செய்து இவற்றைப் பிடித்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்து, கண்ணை விழித்தவாறு கரையிலேயே படுத்துக் கிடந்தது.

ஒரு தவளை: இரை தேடும் முயற்சியை விட்டு நீ ஏன் சும்மா உட்கார்ந்திருக்கிறாய்?

பாம்பு: நான் அபாக்கியவான். எனக்கு எப்படி இரை கிடைக்கும்? இன்றைக்குப் பிரதோஷ காலத்தில் இரைதேடி அலைந்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு தவளையைப் பிடித்தேன். அது அங்கிருந்த பிராமணன் ஒருவன் காலருகில் ஓடிப்போயிற்று. அது தெரியாமல் நான் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்த பிராமணனின் பிள்ளை நீந்திவர, அவன் காலைத் தவளை என்று நினைத்துப் பிடித்தேன். அவன் உடனே இறந்துபோனான். அவன் தகப்பன், மிகவும் துக்கத்துடன் என்னைப் பார்த்து,

“துஷ்டப் பாம்பே எந்தக் குற்றமும் செய்யாத என் பிள்ளையைக் கடித்துவிட்டாய். ஆகவே நீ தவளைகளுக்கு வாகனமாகத் திரிவாயாக”.

இப்படி அவன் சபித்ததனால், நான் உங்களுக்கெல்லாம் ஊழியம் செய்ய வந்தேன்.

இதைக் கேட்ட மண்டூகங்கள் (தவளைகள்) ஓடிப்போய்த் தங்கள் அரசனிடம் செய்தியைக் கூறின. பிறகு தவளை அரசன் உள்பட எல்லாத் தவளைகளும் பாம்பின்மீது வந்து அமர்ந்தன. பாம்பும் பலவிதமாக நகர்ந்து அவற்றிற்குத் தன் ஆட்டங்களைக் காட்டியது.

தவளைகள்: யானை குதிரை தேர்கள் போன்ற வாகனங்களைவிட இந்தப் பாம்பு வாகனம் மிக நன்றாக இருக்கிறது.

பிறகு அந்தப் பாம்பு இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே இருந்தது. நான்காம் நாள் பழைய உற்சாகமின்றி மிகவும் மெதுவாக நகரத் தொடங்கியது.

தவளைகள்: ஏன் இன்றைக்கு மிகவும் மெதுவாக நடக்கிறாய்?

பாம்பு: நான் சாப்பிட்டுச் சில நாட்கள் ஆயிற்று. பசியினால் நடக்க இயலவில்லை.

தவளை அரசன்: அப்படியானால், மிகவும் சிறிய குட்டித் தவளைகளாகப் பிடித்து ஒவ்வொன்றாகதினந்தோறும் சாப்பிடு.

பாம்பு: எனக்கும் அந்த பிராமணன் அப்படித்தான் சாபம் கொடுத்தான்.

என்று கூறி, தினந்தோறும் ஒரு தவளை எனச் சாப்பிட்டுச் சில நாட்களில் எல்லாத் தவளைகளையும் தின்றதோடு தவளை அரசனையும் தின்றுவிட்டது. எந்தச் சமயத்தில் எது செய்ய வேண்டுமோ அப்படிச் செய்து பகைவர்களை வேரோடும் நாசம் செய்யவேண்டும்.

மேகவர்ணன்: தாமச குணம் உள்ளவர்கள், இடையூறு வரும் என்ற காரணத்தினால் எந்தவித முயற்சியிலும் ஈடுபடுவதில்லை. நடுத்தர குணமுடையவர்கள், முயற்சியில் ஈடுபட்டாலும், இடையில் கஷ்டங்கள் வரும்போது அதைக் கைவிட்டுவிடுகிறார்கள். ஆயிரம் இடையூறுகள் வந்தாலும் எடுத்த வேலையை முடிப்பவர்களே தலையானவர்கள் ஆவர். நீயும் அநேகவிதமாகக் கஷ்டப்பட்டு நல்ல சாதுரியத்தினால் அதிக எண்ணிக்கை உள்ள பகைவர்களைக் கொன்றாய். பகைவரிடையிலும் நெருப்பிலும் மிச்சம் வைத்தால் பின்னால் அழிவுநேரிடும். இதையறிந்து சிறப்பாகக் காரியத்தைச் செய்து முடித்தவன் நீ.

சிரஞ்சீவி: எல்லாம் உன் உதவியினாலும் ஆயிற்று. என் பேச்சை ஏற்றுக் கொண்டு நீ நடந்ததால் எல்லாம் நல்லபடி முடிந்தன.

இவ்வாறு காகக்கூட்டம் மேகவர்ணன் தலைமையில் சுகமாக வாழ்ந்தது. இவ்வாறு சோமசர்மா, காகங்கள்-கோட்டான்கள் கதையான சந்திவிக்கிரகம் என்பதை அரசகுமாரர்களுக்குச் சொல்லிமுடித்தான்.

(தொடரும்)


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10”

அதிகம் படித்தது