ஏப்ரல் 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Feb 4, 2017

siragu-panjathandhira-kadhaigal

நான்காவது யுக்தி
அர்த்தநாசம் அல்லது லப்தஹானி (அதாவது, பொருளின் அழிவு, பெற்ற பேறின் அழிவு)

சோமசர்மா, அரசகுமாரர்களுக்கு, நான்காவது தந்திர உபாயத்தைக் கற்பிக்க முனைந்தான். “துன்பம் வந்தபோது, அறிவு குறையாமல் இருப்பவன், குரங்கு முதலையிடமிருந்து விடுபட்டது போலப் பெரிய துன்பத்திலிருந்தும் மீளுவான்” என்று ஒரு கதையைச் சொல்லலானான்.
அரசகுமாரர்கள்: அது எப்படி ஐயா, சொல்லுங்கள்.

(குரங்கும் முதலையும் கதை)

pancha thandhira kadhaigal2

ஆசிரியன்: ஓர் ஆற்றங்கரையில் நாவல் மரத்தின்மேல் சுமுகன் என்னும் ஒரு குரங்கு வசித்து வந்தது. அப்போது ஒரு முதலை பசியோடு மரத்தின் அடிப்பகுதிக்கு வந்தது. “நீ என் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருக்கிறாய். ஆகவே உன் பசியைப் போக்கச் சில கனிகளைத் தருகிறேன்” என்று நாவற் பழங்களைக் கொய்துபோட்டது குரங்கு. அது முதலாக தினந்தோறும் முதலை அந்த இடத்திற்கு வந்து சில கனிகளைச் சாப்பிடுவது வழக்கமாயிற்று. இரண்டும் பேசிக்கொண்டு அந்நியோன்யமாக இருந்தன. ஒருநாள், முதலை, சில நாவற் பழங்களைக் கொண்டு சென்று தன் மனையாளாகிய முதலையிடம் கொடுத்தது. அது மிக இனிப்பாக இருப்பதைக் கண்ட பெண்முதலை, தன் கணவனிடம், “இதனை நீ எங்கிருந்து கொண்டு வந்தாய்?” என்று கேட்டது. “சுமுகன் என்ற குரங்கு என் நண்பன். அவன் தினந்தோறும் எனக்குச் சில கனிகள் அளிப்பது வழக்கம், இன்று தின்றதுபோக மிகுந்ததை உனக்குக் கொண்டுவந்தேன்” என்றது முதலை.

பெண்முதலை: இந்த இனிப்பான பழங்களைத் தின்பவன் ஈரல் எவ்வளவு சுவையாக இருக்கும்! அதைக் கொண்டுவந்து எனக்குக் கொடு. அதனால் நான் மூப்போ சாவோ இல்லாமல் நீண்ட காலம் உனக்குத் துணையாக இருந்து சுகம் தருவேன்.

ஆண்முதலை: எனக்கு உயிர்க்கு உயிரான நண்பனாக அந்த சுமுகன் இருக்கிறான். அவனுக்கு நீ ஏன் தீங்கு நினைக்கிறாய்?

பெண்முதலை: என்னைவிட உன் நண்பன் உனக்கு முக்கியமா? நான் உனக்கு நெருக்கமானவள் என்றால் அவன் ஈரலைக் கொண்டுவந்து கொடு. இல்லாவிட்டால் நான் உயிரை விட்டுவிடுவேன்.

ஆண்முதலை: நெருக்கமான நண்பன் ஒரு சகோதரனைவிட முக்கியமானவன். ஆகவே அவனைக் குறித்து நீ அடம் பிடிக்காதே.

பெண்முதலை: நீ எப்போதும் எனக்குக் குறுக்கே பேசியதில்லை. இன்று மாத்திரம் வீணாக நீதான் அடம் பிடிக்கிறாய். ஆகவே நான் உயிரை விடுவதுதான் நல்லது.

ஆண்முதலை: நண்பனைக் கொல்லுவது எனக்குத் தகாது. ஆனால் நீயோ பிடித்ததை விடாமல் வம்பு செய்கிறாய். என் நிலை இருதலைக் கொள்ளி எறும்பு போல் ஆனது.
இவ்வாறு கூறிவிட்டு முதலை சுமுகன் இடத்திற்குச் சென்றது.

சுமுகன் (முதலையிடம்): நண்பா, நீ ஏன் இன்றைக்கு வருத்தமாக இருக்கிறாய்?

முதலை: உன் மதினி, அதுதான் என் மனைவி, என்னைப் பார்த்து, “துஷ்டனே, நன்றி கெட்டவனே, நீ மாத்திரம் உன் நண்பன் வீட்டுக்குச் சென்று அவனிடம் பழங்கள் வாங்கித் தின்கிறாய். அவனை ஒரு நாளாயினும் நம் வீட்டுக்கு அழைத்துவந்து விருந்திட வேண்டாமா?” இப்படிச் சொல்லி என் மனைவி கோபித்துக் கொண்டாள். அதனால் என் வீட்டுக்கு வா. உனக்காக என் மனைவி சிறப்பான விருந்து தயாரித்து வைத்திருக்கிறாள். ஆனால் உன்னை எப்படி அழைத்துப் போவது என்றுதான் கவலையோடு இருந்தேன்.

குரங்கு: நண்பா, நான் தண்ணீரில் இறங்கும் ஆள் அல்ல. உனக்குத் தான் அது தெரியுமே. ஆகவே என் மதினியை இங்கே அழைத்துக் கொண்டு வா.

முதலை: அது என் மனைவிக்கு விருப்பமல்ல. ஒன்று செய். நீ என் முதுகின் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு வா. உனக்கு எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் கொண்டு செல்கிறேன்.
முதலை கூறியதில் நம்பிக்கை வைத்துக் குரங்கு முதலையின் முதுகின் மீது உட்கார்ந்து கொண்டது. முதலை நீரில் குதித்துக் குதித்துச் செல்லலாயிற்று.

குரங்கு: எனக்கு பயமாயிருக்கிறது நண்பா, மெதுவாகச் செல்.
‘இப்போது சுமுகன் நம் ஆதீனத்தில் இருக்கிறான். இனி இவனால் தப்பிச் செல்ல முடியாது. உரலில் அகப்பட்ட பொருள் உலக்கைக்குத் தப்ப முடியுமா? ஆகவே இனிமேல் நம் உண்மையான எண்ணத்தை இவனிடம் வெளியிடலாம்’ என்று முதலை நினைத்தது.

முதலை: நண்பா, நீ உனக்கு விருப்பமான கடவுளை தியானம் செய்துகொள். என் மனைவியின் பிடிவாதத்தினால் உன்னை நான் கொண்டுபோகிறேன்.

குரங்கு: நான் என்ன தவறு செய்தேன்?

pancha thandhira kadhaigal1

முதலை: நீ நேற்று எனக்குக் கொடுத்த பழங்களில் சிலவற்றை வீட்டுக்குக் கொண்டுசென்று என் மனைவிக்குக் கொடுத்தேன். அதை அவள் தின்ற பிறகு, “இத்தகைய பழங்களை தினந்தோறும் தின்றவனுடைய ஈரல் மிகவும் சுவையாகத்தான் இருக்கும். நீ அவன் ஈரலை எனக்குக் கொண்டுவந்து தரவேண்டும். இல்லாவிட்டால் நான் இறந்து போவேன்” என்றாள். அதற்காகவே நான் உன்னை இப்போது அவளிடம் கொண்டு செல்கிறேன்.

குரங்கு: நல்லது, நண்பனே! நட்பின் இலக்கணமே அடுத்தவனுக்கு உதவுவது தானே? ஆகவே உன் ஆவலை நான் நிச்சயம் பூர்த்தி செய்திருப்பேன். நீ இந்தச் செய்தியை முன்னாலேயே சொல்லியிருந்தால், நான் மரத்தின் மேல் ஒளித்து வைத்திருக்கின்ற ஈரலை உன்னிடம் எடுத்துக் கொடுத்திருப்பேன். இப்போது ஈரலற்ற என்னை அங்கே கொண்டுபோய் என்ன செய்யப்போகிறாய்?

முதலை: என் உயிருக்கு உயிரான நண்பனே! உன் ஈரல் உடலுக்கு வெளியே இருக்கிறது என்று தெரியாமல் போனது. ஆகவே நீ அதை எடுத்துக் கொண்டு வா.

இவ்விதம் கூறி, முதலை குரங்கைத் திரும்ப அழைத்துச் சென்று, மரத்தடியில் விட்டது. குரங்கு குதித்து மரத்தின்மீது ஏறிக்கொண்டது. ‘அப்பா, இன்றைக்கு எப்படியோ எமன் கையிலிருந்து விடுபட்டேன்’ என்று தனக்குள் நினைத்தவாறு இருந்தது.

முதலை: நண்பனே, ஈரலை விரைவாக எனக்குக் கொடு. உன் மதினிக்குக் கொடுத்துவிட்டு நான் வருகிறேன்.
இதைக் கேட்ட குரங்கு (சிரித்து): மூடா! துஷ்டா! ஈரல் எங்கேயாவது உடம்பை விட்டு வெளியில் இருக்குமா? நண்பனுக்குத் தீங்கு நினைத்த உன்னைப் பார்க்கவே என் கண் வெட்கப்படுகிறது. இங்கிருந்து போய்விடு. விசுவாசமற்ற உன்னை இனி நண்பன் என்று நான் கருதமாட்டேன்.
முதலை, பச்சாத்தாபப் பட்டு, ‘நான் இவனுக்கு வழியிலேயே உண்மையைக் கூறி இவனை இழந்துவிட்டேனே. இப்போது மறுபடியும் நம்பிக்கை வருமாறு பேசி இவனை அழைத்துச் செல்லவேண்டும்’ என்று நினைத்தது.

முதலை: நண்பா, நான் உன்னைச் சோதிக்க வேண்டியே அப்படிச் சொன்னேன். நீ சொன்னதை நம்பி அதற்காக உன்னைத் திரும்ப அழைத்துக் கொண்டு வரவில்லை. ஈரல் உடலுக்கு வெளியே இருக்காது என்பது சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியுமே? சும்மா, இதெல்லாம் நான் விளையாட்டுக்குச் செய்தது. ஆகவே என் வீட்டுக்கு பயமில்லாமல் வா.

குரங்கு: பசித்தவனின் விசுவாசத்தில் நம்பிக்கை வைக்கலாகாது. அதனால்தான் பிரியதத்தனுக்கு கங்காதத்தன் பயந்து மறுபடியும் காணவில்லை.

முதலை: கங்காதத்தன் ஏன் அஞ்சினான்?

குரங்கு: கங்காதத்தன் என்பது ஒரு பெரிய தவளை. அதற்கு அதன் இனத்தைச் சேர்ந்த தவளைகளே தொல்லை கொடுத்து வந்தன. அது பிரியதரிசனன் என்ற பாம்பை ஒருநாள் கண்டது. ‘நம்முடைய தாயாதிகள் வலியவர்களும் பலருமாக இருக்கிறார்கள். இந்தப் பாம்பை நமது வீட்டுக்குக் கொண்டுசென்று பங்காளிகளைக் கொல்லவேண்டும்’ என்று நிச்சயம் செய்தது. அதன்படியே அது பாம்பின் புற்றுக்கு அருகில் சென்று அதைக்கூவி அழைத்தது. பாம்பு புற்றுக்குள்ளிருந்தபடியே “நீ யார்?” எனக் கேட்டது. “நான் கங்காதத்தன் என்னும் தவளையரசன். உன்னைச் சரணம் அடைய வந்தேன்” என்றது தவளை. “நான் உன் பகைவன் ஆயிற்றே, நீ ஏன் இந்த விபரீத விளையாட்டில் ஈடுபடுகிறாய்?” என்றது பாம்பு.

pancha thandhira kadhaigal3

கங்காதத்தன்: என்னைப் பகைவர்கள் வருத்துகிறார்கள் என்று எண்ணி, உன்னிடம் வந்தேன். நீ எங்கள் வம்சத்திற்கு வைரி என்பது மெய்தான்.. ஆனால் வலிமையான பகைவர்களை வேறு பகைவர்களைக் கொண்டுதான் வெல்லவேண்டும் என்று நீதிநூல் இருக்கிறது. ஆகவே உங்களைச் சரணடைய வந்தேன்.

பாம்பு, வலிய வரும் சீதேவியை ஏன் உதைத்துத் தள்ள வேண்டும் என்று கருதி அந்தத் தவளையுடன் சென்றது. தன் வளைக்கு அழைத்துச் சென்ற தவளை, தனக்குக் கஷ்டம் கொடுத்துவந்த மற்றத் தவளைகளைக் காட்டியது. பாம்பும் சில நாட்கள் அவற்றையெல்லாம் வயிறார உண்டது. இப்படிச் சில நாள் சென்ற பிறகு, கங்காதத்தனை அந்தப் பாம்பு பார்த்து, “உன் பகைவர்களை எல்லாம் நான் கொன்றுவிட்டேன். இனிமேல் எனக்கு உணவு கொடு” என்று கேட்டது.

கங்காதத்தன்: நீ எனக்கு ஒரு நண்பன் எப்படி உதவ வேண்டுமோ அப்படி உதவினாய். இப்போது வா, உன் புற்றுக்கே போகலாம்.

பாம்பு: கங்காதத்தா, இப்போது அந்தப் புற்றில் வேறு ஏதாவது வந்து தங்கியிருக்கும். நான் அங்கே போய் என்ன செய்ய? நீயே உன் இனத்தவர்களிலிருந்து எனக்கு தினமும் ஓர் தவளையைக் கொடு. இல்லாவிட்டால் உடனே எல்லாரையும் கொன்றுவிடுவேன்.
இதைக் கேட்ட தவளை பயந்து பாம்பு கூறியவாறே செய்துவந்தது. கடைசியாக ஒருநாள் கங்காதத்தனின் மகனையும் கொன்று தின்றுவிட்டது பாம்பு. இதைப்பார்த்து கங்காதத்தன் ‘இனி என்ன செய்யலாம்’ என்று ஆராய்ந்துகொண்டிருந்தது.

பாம்பு: எனக்கு ஏதேனும் தின்னக் கொடு.

கங்காதத்தன்: நண்பா, நான் இருக்கும்போது நீ உணவுக்கு ஏன் கவலைப்படுகிறாய்? இப்போது என் மனைவியை அனுப்பி வேறு கிணறு ஏதேனும் ஒன்றிலிருந்து தவளைகளை அனுப்ப ஏற்பாடு செய்கிறேன். அதுவரையில் நீ சும்மா இரு.

பாம்பு: அப்படியே செய்.
கங்காதத்தன் தன் மனைவியை வேறொரு கிணற்றுக்கு அனுப்பிவிட்டது. பிறகு பாம்பிடம் வந்து, “போனவளை நெடுநேரமாகக் காணவில்லை. ஆகவே நானே சென்று அழைத்து வருகிறேன்” என்று அதுவும் வெளியே கிளம்பிச் சென்றுவிட்டது. அதுவும் திரும்பி வராததால், பாம்பு, அங்கிருந்த பல்லி ஒன்றைப் பார்த்து, “உனக்கு இந்தத் தவளை மிகவும் பழக்கம் அல்லவா, நீ சென்று என்ன ஆயிற்று என்று பார்த்துவா” என்று அனுப்பியது. பல்லி அவ்வாறே சென்று கங்காதத்தனிடம் செய்தியைச் சொல்ல, அது, “பசித்தவன் விசுவாசத்தை நம்பலாகாது. நீ போய் அந்தப் பாம்பிடம், இனி கங்காதத்தன் வரமாட்டான் என்று சொல்” என்று கூறியது. அதுபோல, நான் மீண்டும் உன் வீட்டுக்கு வரமாட்டேன்” என்று முதலையிடம் குரங்கு கூறிமுடித்தது.

முதலை: நீ வராவிட்டால் எனக்கு நன்றிகெட்ட தன்மை ஏற்பட்டுவிடும். ஆதலால் நான் பட்டினி இருந்து இங்கேயே உயிரை விடுவேன்.

குரங்கு: நரி, நீள்செவியனுக்கு நம்பிக்கை வருவித்து எப்படிக் கொன்றதோ, அதுபோல நீயும் என்னைக் கொல்லவே விரும்புகிறாய்.

முதலை: அது என்ன கதை?

சுமுகன்: ஒரு காட்டில் கேசரி என்கிற சிங்கம் இருந்தது. அதற்கு உடல் நலம் இல்லாமல் இருந்ததால் தனக்கு உற்ற நண்பனாகிய நரியைப் பார்த்து, “நண்பா, இன்று எனக்கு உடல்நலமில்லை. நீயே போய் எனக்கு ஏதேனும் இரையைக் கொண்டுவா” என்றது.
நரி காடுமுழுவதும் ஓடித்திரிந்தது. ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியாக அது நீள்செவியன் என்னும் கழுதையைக் கண்டது. அதனருகில் சென்று,

நரி: மாமா, பார்த்துப் பலநாள் ஆயிற்று. கும்பிடுகிறேன். நீ இப்போது மிகவும் இளைத்துப் போயிருக்கிறாய்.

கழுதை: மருமகனே, என்ன சொல்வேன்! எனக்குத் தலைவன் வண்ணான். அவன் மிகவும் இரக்கமற்ற கொடியவன். என்மேல் பெரிய சுமைகளை ஏற்றிக் கொல்வதை அன்றி வயிற்றுக்குப் புல்லோ செத்தையோ போடுவதில்லை. வெறும் புழுதியில் இருக்கும் அருகம் வேரைத் தின்று கொண்டிருக்கிறேன். அது உடம்புக்கு எப்படி சத்தினைக் கொடுக்கும்? என் பிழைப்பும் ஒரு பிழைப்பா?

நரி: அப்படியானால் என்னோடு நீ வா. ஆற்றங்கரையில் பச்சைப் புல் நிறைய இருக்கிறது. அதை உனக்குக் காட்டுகிறேன்.

நீள்செவியன்: அந்த இடம் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அங்கே நான் ஒற்றையாக எப்படி இருப்பேன்?

நரி: அங்கே உன் இனத்துப் பெட்டைகளும் இருக்கின்றன. அதனால் நீ கவலைப்படத் தேவையில்லை.
இதைக் கேட்டு, கழுதை நரியின் பின்னே சென்றது. உடனே சிங்கம் பாய்ந்து வந்து அதைக் கொல்ல முயன்றது. அதைக் கண்ட நீள்செவியன் ஓடிப்போயிற்று. நரி மீண்டும் அதனிடம் சென்று, “நீ ஏன் ஓடி வந்துவிட்டாய். உன் இனத்துப் பெண் கழுதை ஒன்றுதான் உன்னைத் தழுவ வந்தது. நீ வீணாக பயந்து விட்டாய்” என்று கூறி மறுபடியும் அழைத்துவந்தது. சிங்கம் அதை உடனே அடித்துக் கொன்றுவிட்டு, நரியைக் காவல் வைத்துவிட்டு ‘நீராடி வருகிறேன்’ என்று போயிற்று. அதற்குள் நரி அதன் ஈரலையும் காதையும் தின்றுவிட்டது.

pancha thandhira kadhaigal4

சிங்கம்: இதற்கு ஏன் ஈரலும் காதும் இல்லை?

நரி: உள்ளபடியே இதற்கு ஈரலும் காதும் இல்லை. இருந்தால் மறுபடியும் என்னை நம்பி வந்திருக்குமா?
சிங்கம் அதன் பேச்சை நம்பி, அதற்குரிய பாகத்தையும் கொடுத்துவிட்டுத் தானும் மிச்சத்தைத் தின்றது. இப்படித்தான் நீ என்னைக் கொல்ல விரும்புகிறாய்” என்று சுமுகன் என்னும் குரங்கு முதலையிடம் கூறியது. முதலை, “எவன் தனது நன்மையைப் புறக்கணித்து, உள்ளதைச் சொல்கிறானோ அவன் உதிட்டிரன் என்னும் குயவனைப் போன்று துன்பம் அடைவான்” என்றது.

குரங்கு: அது எப்படி?

முதலை: ஒரு குப்பத்தில் உதிட்டிரன் என்னும் குயவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் பானைகளைச் சுடச் சுள்ளிகள் எடுக்கப் போகும்போது அவனுக்கு அவற்றின் கூரிய முளைகள் குத்திக் காயம் உண்டாயிற்று. பிறகு அது ஒரு நீண்ட வடுவாகவே நிலைத்துவிட்டது.
சிலநாட்கள் கழித்து அவன் வாழ்ந்த இடத்தில் பஞ்சம் வந்ததால், வேறொரு இடத்திற்குச் சென்று அங்கிருந்த அரசனிடம் வேலைக்கு அமர்ந்தான். அவனது நீண்ட வடுவைப் பார்த்த அரசன், ‘இவன் ஒரு வீரனாக இருப்பான் போலும்’ என்று எண்ணி அவனுக்கு ஒரு சேனைப் பிரிவுக்குத் தலைமைப் பதவி கொடுத்தான்.

(தொடரும்)


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11”

அதிகம் படித்தது