மே 30, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Apr 22, 2017

ஏப்ரல் மாதம் இரு பெரும் கவிஞர்களின் பிறந்த நாள். ஆசிரியருக்கும், மாணவருக்கும் ஒரே மாதத்தில் பிறந்த நாள்!! அவர்கள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் அவரின் மாணவராகிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்!

Siragu-pattukottai-kalyanasundaram2

இருவரும் புரட்சிகரக் கருத்துகளை இந்தத் தமிழ் மண்ணில் தங்கள் கவிதைகள் மூலம் ஆழமாக ஊன்றிவிட்டுச் சென்றவர்கள். திராவிட இயக்க கருத்துகளின் மறுவடிவமே புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதைகள் என்றால் அது மிகையன்று. அதேப்போல பொதுவுடமை தத்துவங்களின் ஊற்றாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைகள் இருந்தது என்றால் அது மிகையன்று.

பட்டுக்கோட்டை அவர்கள் புரட்சிக்கவிஞர் அவர்களின் மாணவர். 1952 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சென்று பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய குயில் இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

தனக்கு தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுத்தான் கடிதம் எழுதத் தொடங்கிடுவாராம் பட்டுக்கோட்டை அவர்கள்.

அந்த வகையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் ஆற்றல்கள் பற்றியும் கவிபுனையும் திறன் பற்றியும் பார்ப்போம்.

Siragu pattukottai-kalyanasundaram1

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர். உழவர், மாட்டு வியாபாரி, மாம்பழம், இட்லி, முறுக்கு, கீற்று போன்றவற்றை வைத்து வியாபாரம் செய்தவர். மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளியாகவும் இருந்துள்ளார். இவைகளைத் தவிர்த்து பாடகராக, நடிகராக, நடனக்கலைஞராக, கவிஞராக கலைத்துறையில் வெற்றியுடன் வலம் வந்தவர்.

அவரது பதினைந்தாவது வயதிலேயே கவிபுனையும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார் என அவர் வரலாற்றைப் படிக்கும்போது புலப்படுகின்றது.

1946 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனுபவத்தை அவரே கூறுகின்றார்.
‘சங்கம் படைத்தான் காடு என்ற எங்கள் நிலவளம் நிறைந்த சிற்றூரைச் சேர்ந்த துறையான்குளம் என்ற ஏரிக்கரையில் நான் ஒரு நாள் வயல் பார்க்கச் சென்று திரும்பும் போது வேப்பமரநிழலில் அமர்ந்தேன். நல்ல நிழலோடு குளிர்ந்த தென்றலும் என்னை வந்து தழுவவே எதிரிலிருக்கும் ஏரியையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். தண்ணீரலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள் “எம்மைப் பார், எம் அழகைப் பார்” என்று குலுங்க, ஓர் இளங்கெண்டை பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் கிடந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்தவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. அதுவரை மெளனமாக இருந்த நான் என்னையும் மறந்தவனாய்ப் பாடினேன்” என்றார். அதுதான் இது.

“ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே -
கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே -
கரை தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு- ரொம்பத் துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே”

இவ்வாறு ஆரம்பித்த நான் வீடு வரும்வரை பாடிக்கொண்டு வந்தேன். அப்பாடலை பலரும் பலமுறை பாடச் சொல்லி மிகவும் இரசித்தார்கள் என்றார்.

மேலும் அவர் திரைப்பாடல்களில் பொதுவுடமை கருத்துகள் மிளிரும். 1955ஆம் ஆண்டு ‘படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

அவருடைய பாடல் ஒன்றில் எப்படி பணம் படைத்தவன் பொருளை பதுக்கி வைத்துக்கொண்டு நாட்டை நாசமாக்குகிறான் என எழுதியிருப்பார்.

‘வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்…
எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன்
சோறு போடுறான் அவன்
கூறு போடுறான்…’

அதேப்போல தத்துவங்கள் மட்டுமல்லாது நகைச்சுவை ததும்ப கவிதைகள் எழுதுவதில் வல்லவர் .

Siragu pattukottai-kalyanasundaram3

ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார். நாடகத்திற்கு சரியான வசூல் இல்லாமல் தங்கள் குழுவினருடன் பசி, பட்டினியுமாக சென்னை திரும்ப பேருந்தில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தைத் தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்தப் பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது.
அந்தப் பாடல் இதுதான்,

‘சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!’

இந்த பாட்டு பின்னர் ஆரவல்லி படத்தில் வெளியானது.

மறந்த முன்னாள் முதலமைச்சர் திரு. எம்.ஜி. ஆர் அவர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிக் கூறும்போது,

என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’’ என்றார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் மிக எளிமையானவர். அவர் எளிமையை விளக்கும் ஒரு நிகழ்வு!

உங்கள் வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில் எழுதவேண்டும்’’ என்று கேட்டநிருபர் ஒருவரை, தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம் நடந்துசென்றார் கல்யாணசுந்தரம். பிறகு, ரிக்‌ஷா ஒன்றில் அவரை அழைத்துச்சென்றார். அதன் பிறகு, பேருந்தில் பயணம். கடைசியில் கார் ஒன்றில் ஏறி, தன் பாடல் பதிவான ஸ்டூடியோவில் போய் இறங்க… தன்கூட பயணித்த நிருபர், ‘‘கவிஞரே, வாழ்க்கை வரலாறு’’ என்று ஞாபகப்படுத்தியுள்ளார்.

அதற்கு, ‘‘முதலில் நடையாய் நடந்தேன்; பிறகு, ரிக்‌ஷாவில் போனேன்; அதன் பிறகு, பேருந்தில் போக நேர்ந்தது, இப்போது கார். இதுதான், என் வாழ்க்கை. இதில் எங்கே இருக்கிறது வரலாறு?’’ என்று சிரித்துக்கொண்டே கூறினாராம்.

பொதுவுடைமைக் கருத்துகளை சரியான முறையில் உள்வாங்கியவர் வேறு எப்படி இருக்க முடியும்?

பொதுவுடைமைத் தோழர்களில் ஒருவரான திரு. ஜீவா அவர்கள் தான் திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பை பட்டுக்கோட்டை அவர்களுக்கு ஏற்படுத்தித் தந்தார். பட்டுக்கோட்டை அவர்கள் மிக குறுகிய காலம், வெறும் 29 ஆண்டுகள் தான் இந்த மண்ணில் வாழ்ந்தார். ஆனால் அந்த வயதிற்குள் அவர் 17 வகையான தொழில்களை செய்திருக்கின்றார். அதனால் தான் அவர் பாடல்களில் பன்முகத்தன்மை இருக்கின்றது என திரு. ஜீவா அவர்கள் கூறுவார்.

திரைப்படத்தில் பாடல்கள் எழுதினாலும் எந்த நேரத்திலும் அவர் தன்மானத்தை விட்டுக் கொடுத்ததில்லை. ஒரு முறை திரைப்படம் நிறுவனம் ஒன்றுக்கு அவர் பாட்டு எழுதிக்கொடுத்தார். ஆனால், பணம் கைக்கு வந்துசேரவில்லை. பணத்தைப் பெறுவதற்காகப் பட அதிபரிடம் நேரில் சென்று கேட்டிருக்கிறார். ‘‘பணம் இன்னிக்கு இல்லே… நாளைக்கு வந்து பாருங்க” என்று பட அதிபர் பதில் சொல்ல அதைக் கேட்ட கல்யாணசுந்தரமோ, பணம் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். ‘‘நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்’’ என்று பட அதிபர் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார்.

உடனே கல்யாணசுந்தரம், சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும் பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, மேசை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

‘தாயால் வளர்ந்தேன்..
தமிழால் அறிவு பெற்றேன்…
நாயே – நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்…
நீ யார் என்னை நில் என்று சொல்ல?’

என்று அதில் இருந்ததைப் பார்த்த பட அதிபர், அடுத்த நிமிடமே பணத்தைக் கொடுத்தனுப்பினார்.

கவிஞர் கல்யாணசுந்தரம் தாம் இறப்பதற்கு முன் ஒரு திரைப்படத்துக்கு,

‘தானா எவனும் கெடமாட்டான்
தடுக்கி விடாம விழமாட்டான்
போனா எவனும் வரமாட்டான் – மேலே
போனா எவனும் வரமாட்டான் – இதப்
புரிஞ்சிக்கிட்டவன் அழமாட்டான்!’ – என்று எழுதியிருந்தார்.

இப்படி பல பாடல்கள், கவிதைகள் எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இந்த மண்ணை விட்டு குறுகிய காலத்திலேயே மறைந்தாலும் அவரின் பாடல்கள் மூலம் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்”

அதிகம் படித்தது