சனவரி 23, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 11

முனைவர் மு.பழனியப்பன்

Dec 19, 2020

siragu kathiresa chettiyar1பண்டிதமணியின் நாடத்தமிழ்

கவிஞர் ஆ.பழநி அவர்கள் எழுதிய நூல் பண்டிதமணியின் நாடகத்தமிழ் என்பதாகும். இவர் பாவலர் மணி என்றழைக்கப்படுபவர். இவரின் அனிச்சஅடி மிகச்சிறந்த நாடகப் பாவியம். இவர் சபை அன்பர். சபையின் சார்பு நிறுவனமான கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில் பயின்றவர். இவரைப் பண்டிதமணி நூற்றாண்டு விழாக் குழு ஒரு திறனாய்வு நூலை எழுதப் பணித்தது. இதன் காரணமாக மண்ணியல் சிறுதேர் என்ற நாடக மொழிபெயர்ப்பு ஆக்கத்தை எடுத்துக்கொண்டு இவர் ஆய்வினை நிகழ்த்து இந்நூலை அளித்துள்ளார்.

இந்நூல் பதினாறு பகுதிகளை உடையது. குறிப்பாக இந்நூல் ஆய்வு நூலாக ஒப்பீட்டு நூலாக, நாடகத்திறன் உரைக்கும் நூலாக ஆக்கப்பெற்றுள்ளது.

இந்நூலின் முன்னுரையில் இந்நூல் ஆசிரியர் பழநி பின்வருமாறு தன் நன்றியறிதலை வெளிப்படுத்திப் பண்டிதமணிக்கும் தனக்கும் உள்ள தமிழ் உறவை வெளிப்படுத்துகின்றார்.

‘‘இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில், வரலாற்றில் பண்டிதமணியார்க்குள்ள இடம் விரிவானது என்பதைத் தமிழ் கூறு நல்லுலகம் அறியும். நாவீறு படைத்த சொற்பொழிவாளராக, ஆற்றல் மிக்க மொழிபெயர்ப்பாளராக, நுண்மான் நுழைபுலம் மிக்க உரையாசிரியராக, படித்தாரை ஈர்க்கும் பாவல்லராக, சாத்திரம் வழுவாச் சமயியாக வாழ்ந்து காட்டியவர் நம் பண்டிதமணியார். தம் பன்முக ஆற்றலால் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் தொண்டு புரிந்து தமிழன்னையின் தளர்ச்சி நீக்கியவர்.

‘நிழலில் நீளிடைத் தனிமரம் போல’ நின்று தமிழ் வளர்த்த பெருமை மேலசை்சிவபுரி சன்மார்க்க சபைக்கு உண்டு. அத்தனிமரத்திற்கு வித்தூன்றி வேலி கட்டியவர் திருமிகு வபழ.சா. பழனியப்பச் செட்டியார் ஆவார். ஆனால் அத்தனிமரத்தைக் கிளைபரப்பித் தழை விரித்துக் கொழுநிழல் பரப்பும் தன்மையாக வளர்த்தவர் நம் பண்டிதமணியார் அவர்களே. இத்தனிமரத்தின் கொழு நிழலில் தங்கி அறியாமை வெப்பம் அகற்றிக் கொண்டவர்களில் யானும் ஒருவன். ஆதலின் இவ்வாய்ப்புச் சிற்றுரை அக்கொழு நிழற்கு ஒரு சிறு கைம்மாறு என்று கருதினும் பிழையன்று’’ (பண்டிதமணியின் நாடகத்தமிழ், ப.2) என்ற இவ்வாசிரியரின் நன்றியுரை இந்நூல் எழக்காரணமான வித்தாகப் பண்டிதமணியாரைச் சுட்டுகின்றது.

இந்நூலின் ஒரு பகுதி பின்வருமாறு. ‘‘பண்டிதமணியார் பொதுவாக மொழிபெயர்ப்பாளர் கைக்கொள்ள வேண்டும் நெறியனைத்தையும் கைக்கொண்டதோடு தமிழ்மை தவழச் செய்தல், நேர்மொழி பெயர்ப்பாகச்செய்தல், விளக்கமின்றேல் அடிக்குறிப்பில் விளக்கல், நுட்பப் பொருளை எடுத்துக்காட்டல், இழிவழக்குகளை அறவே நீக்கல், ஒப்புமைப் பகுதியினை எடுத்துக்காட்டல் எனத் தனக்கே உரிய சிறப்புக்களையும் வெளிப்படுத்தியதனாலேதான் இ்ம்மொழிபெயர்ப்பு ஏனைய மொழிபெயர்ப்புகளைக் காட்டிலும் சிறப்பானதாக விளங்கக் காண்கிறோம். நூலைப் படித்து முடிக்கின்றபோது ஐயப்பாடுகள் நம்மை அலைக்கழிக்கவி்ல்லை. தோன்றும் ஐயப்பாடுகளும் தோன்றிய இடத்திலேயே களையப்படும் வகையில் மொழிபெயர்ப்பாளர் படிப்பவர்க்குத் துணை செய்பவராக நின்று பெயர்க்கும் மொழிபெயர்ப்பே சிறந்த மொழிபெயர்ப்பாம் தகுதியைப் பெறும். இவ்வகையிலும் பண்டிதமணியார் மொழிபெயர்ப்பு சிறந்த மொழிபெயர்ப்பே’’ (பண்டிதமணியின் நாடகத்தமிழ்,ப.288) என்ற பகுதி பண்டிதமணியின் மொழிபெயர் நலத்தை எடுத்துரைப்பதாகும்.

மேற்கண்ட நூல்கள் சபையாராலும், நூற்றாண்டு விழாக்குழுவினராலும் விரும்பிச் செய்யப்பெற்ற பண்டிதமணியியத் தொண்டுகள். இவைதவிர தனி மனிதர்கள் பண்டிதமணியியத்தில் தன் விருப்போடு பங்கேற்றுள்ளனர். அவர்களின் வரிசை இனித் தொடர்கிறது.

ஆய்வு நூல்கள்

பண்டிதமணியார் படைப்புகள் பற்றிப் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் குறிக்கத்தக்கன பின்வருமாறு. பண்டிதமணியின் தமிழ்ப்பணி என்ற தலைப்பில் வெளிவந்துள்ள க. தியாகராசன் அவர்களின் ஆய்வுநூல், மண்ணியல் சிறுதேர் ஒரு மதிப்பீடு என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கவிஞர் மீராவின் ஆய்வு நூல் ஆகியன இவ்வழியில் கவனிக்கத்தக்கன.

பண்டிதமணியின் தமிழ்ப்பணி

பண்டிதமணியின் புதல்வர்களுள் ஒருவரான க. தியாகராசன் என்பவரால் படைக்கப்பெற்ற ஆய்வு நூல் இதுவாகும். ஒரு முழுமையான முறையான ஆய்வேடாக இது பண்டிதமணியின் தமிழ்ப்பணியைப் பற்றி எடுத்துரைக்கின்றது. இது அண்ணாமலைப் பல்கலை வெளியீடாக இரண்டாயிரமாவது ஆண்டில் வெளிவந்துள்ளது.

இந்நூலில் ஐந்து பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இதனுள் மொத்தம் பதினைந்து கட்டுரைகள் அளிக்கப்பெற்றுள்ளன. பண்டிதமணி கதிரேசனாரின் வாழ்க்கைக் குறிப்புகள், பண்டிதமணி மற்றும் அவரது படைப்புகள் பற்றிய ஆய்வுகள்- ஒரு மதிப்பீடு, பண்டிதமணியின் சொல்லாட்சி, பண்டிதமணியின் பாநலன் போன்ற பல கட்டுரைகள் இதனுள் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன.

‘‘பண்டிதமணியின் ஆளுமையென்பது, பன்மைப் பரிமாணங்களை உடையது. முதற்கண் சமுதாய வாழ்வில் நல்ல மாந்தராகத் திகழ்ந்துள்ளார். பிறகு ஒரு சமயவாதியாக மிளிர்ந்திருக்கிறார். தலைசிறந்த இலக்கியவாதியாகவும், படைப்பாளியாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். சிறந்த நாவலராகவும் விளங்கியுள்ளார்.’( ப.323) என்பது இவ்வாய்வு தரும் முடிவுகளில் ஒன்று.

மண்ணியல் சிறுதேர் – ஒரு மதிப்பீடு

மீரா எனப்படும் மீ.ராஜேந்திரன் அவர்கள் வரைந்த இந்நூல் மண்ணியல் சிறுதேர் என்ற நாடக நூலை மதிப்பிடுவதாக உள்ளது, இது மதுரைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டபோது அதனைப் பாடமாக மாணவர்களுக்கு நடத்தியவர் மீரா. இதன் காரணமாக இவர் இந்நூலைப் பற்றிச் சேமித்து வைத்த குறிப்புகளே இந்நூலாக எழுந்தது.

‘‘அறம் வெல்லும், பாவம் தோற்கும் என்னும் கருத்தை நன்றாய் விளக்க எண்ணிச் சூத்திரகன் மிருச்சகடிக நாடகத்தைப் படைத்தார். அதை நானிலத் தமிழர்க்கு நன்றாய் விளங்க வேண்டும் என்று பண்டிதமணி மண்ணியல் சிறுதேராய்ப் படைத்தார். அந்நாடகப் பெருமையைத் தமிழ் மாணவர்க்கு நன்றாய் விளங்க வேண்டும் என்று நான் இந்நூலைப் படைக்கிறேன்’ (வணக்கம், ப.16) என்று மீரா தன் விளக்கமாக நூல் உருவான வரலாற்றை எடுத்துரைக்கின்றார்.

‘பண்டிதமணியின் வடமொழிப்புலமை தமிழை வளப்படுத்தவே பயன்பட்டது. பல வடமொழி நூல்களையும் சுவை குன்றாமல் தமிழில் மொழிபெயர்த்தார். ‘இவர் மொழிபெயர்த்துள்ள பிரதாப ருத்தரீயம்,மாலதி மாதவம் என்னும் இரண்டு நூல்களும் இன்னும் அச்சிடப்படவில்லை. சுக்கிரநீதி, சுலோசனை, உதயண சரிதம், கௌடிரீயம், மண்ணியல் சிறுதேர் போன்ற நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்கள். இவற்றுள் மண்ணியர் சிறுதேர் அவருடைய இருமொழிப் புலமைக்கு ஓர் உரைகல்’’ (ப.35) என்ற மீராவின் கருத்துரை பண்டிதமணியாரின் மொழிபெயர்ப்பாற்றலை விளக்குவதாகும். இந்நூல் அன்னம் பதிப்பாக இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு வெளிவந்துள்ளது.

பண்டிதமணியின் திருவாசக உரை சில சிறப்புகள்

இரா. இராசகோபாலன் எழுதிய நூல் பண்டிதமணியின் திருவாசக உரை சில சிறப்புகள் என்ற நூலாகும். திருப்பத்தூரைச் சார்ந்த பேராசிரியரான இவர் தன் ஆரார் பதிப்ப வெளியிடாக இதனை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூல் இரு பகுதிகளை உடையதாக விளங்குகின்றது. முதல் பகுதி பண்டிதமணியும் திருவாசக உரையும் என்பதாகும். அடுத்த பகுதி உரைவிளக்கக் கூறுகள் அல்லது உத்திகள் என்ற தலைப்பில் அமைக்கப்பெற்றுள்ளது.

‘‘வாதவூரடிகள் தாம் பாடிய பாக்களில் இடையிடையே தம்மைத் தாழ்த்தியும், தவறு செய்பவராகவும் கூறிக்கொள்கிறார். இஃது உரையாசிரியர்க்கு உளவியல் நெருக்கடி ஒன்றை உண்டாக்குகின்றது.

அவ்வாறாய பகுதிகட்கு உரை எழுத அவர்தம் நெஞ்சம் கலங்குகின்றது. ஆயின் உரை எழுதாமலும் விடுதல் இயலாது. அவ்வப் பகுதிகளில் அடிகள் கூறுவதன் கருத்துப்பொருளை உணர மாட்டாத எளியோர் சொற்பொருள் உண்மை என்று கொண்டுத் தடுமாறல் கூடும். இப்படி ஒரு நெருக்கடி உரையாசிரியருக்கு முன்வந்து நிற்கிறது. ஆகவே அது பற்றி அவர் உண்மையை அழுந்தப் பதிப்பது இன்றியமையாதது என்பதால் கூறியது கூறினும் பிழையில்லை என்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் விடாது எடுத்து மொழிகின்றார்.

திருச்சதகம் 54 ஆம் பாட்டுக்கு உரை வரைகின்ற போது உரையாசிரியர் தம் உளப் போராட்த்தை வெளியிடாமல் இருக்க முடியவில்லை. அதனிடை அவர்தம் சுரந்த கண்ணீர் நம் அகக்கண்களுக்குப் புலனாகின்றது.

‘‘அடிகளின் அன்பு முதிர்ச்சியும் சிவானுபவ நுகர்ச்சிக்குரிய தகுதியும் மிகப் பெரியன. அவை நம்மனோர் உள்ளத்தைக் கவரும் பெற்றியன. அங்ஙனமாகவும் அவர் தம்மை பலவிடத்தும் மிக இழிவாகக் கூறிக் கொள்”ளுதல் அடிமை இயல்பு தோன்றற்கு என்க. அடிகள் தம்மை இழிவாகக் கூறியவற்றை எடுத்துக் கூறற்கு எம் உள்ளம் மிகக் கவலுகின்றது. உரை விளக்க நிமித்தம் மேற்கொள்ளும் இக்குற்றம், இறைவன் திருவருளால் பொறுக்கப்படும் என்னும் உறுதியுடைமை அதற்கு ஆறுதல் அளிப்பதாகும்’’ என்பன உரையாசிரியரின் சொற்கள்’’ (ப.26) என்ற இந் நூலாசிரியரின் கூற்று பண்டிதமணியாரின் உள இயல்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.

வாழ்க்கை வரலாற்று நூல்கள்

இந்நூல்களைத் தவிர பண்டிதமணி பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் பல எழுந்துள்ளன. அவற்றில் குறிக்கத்தக்கன பின்வருமாறு.

சோம.லெ, விசு. திருநாவுக்கரசு, வே. சோமசுந்தரனார் ஆகியோர் எழுதிய பண்டிதமணி எனப் பெயரிடப்பெற்ற நூல்கள், பண்டிதமணியின் பேத்தியாகிய மீனாட்சி இலட்சுமணன் அவர்கள் எழுதிய பண்டிதமணி வரலாறும் தமிழ்ப்பணியும் என்ற நூல், சி.பி கணேசன் எழுதிய தமிழ் வளர்த்த பேராசியர்கள், நிர்மலா மோகன் எழுதிய சாகித்திய அகாதமி வெளியீடான பண்டிதமணி ஆகியன இவ்வகையில் குறிக்கத்தக்கன.

சோம.லெ.

சோம. லெட்சுமணன் என்ற இயற்பெயர் கொண்ட சோம.லெ அவர்கள் பண்டிதமணி என்ற தலைப்பில அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். ..இவர் மகிபாலன் பட்டிக்கு அருகில் உள்ள நெற்குப்பையைச் சார்ந்தவர். இவர் பண்டிதமணியாருடன் நேரடியாகப் பழகியவர். அந்நட்பு முறையில் இந்நூலைச் சிறப்புடன் வடிவமைத்துள்ளார்.

‘‘இறப்பதற்கு முதல்நாள், பண்டிதமணி அவர்கள் என்னை அழைத்து அவர்களிடமிருந்த அனைத்து ஆதாரங்களையும் தந்தார்கள். அவற்றின் அடிப்படையில் யான் 280 பக்கங்களில் விரிவான நூல் எழுதினேன். இரு பதிப்புகள் வெளிவந்த அந்நூலில் புதுமுக வகுப்பு மாணவர்களுக்கு ஏற்ற சில பகதிகளை மட்டும் கொண்டு இந்தப் பதிப்பு வெளிவருகிறது’ (முன்னுரை) என்று நூல் எழுந்த வரலாற்றைக் குறிக்கின்றார் சோம.லெ.
இந்நூலில் பண்டிதமணியாரின் சொற்பொழிவு நலம், நகைச் சுவை நலம் விரிவாகக் காட்டப்பெற்றுள்ளது. பண்டிதமணியாரின் வாழ்க்கைச் செய்திகளை அறிந்து கொள்ள இந்நூல் நல்ல கைவிளக்காகும். இந்நூலின் அடிப்படையிலேயே ஊன்றுகோல் என்ற காவியத்தைக் கவிஞர் முடியரசனார் யாத்துள்ளார்.

‘‘பண்டிதமணியின் பெரும் புலமையைக் குன்றின் மீதிட்ட விளக்கென ஒளிரச்செய்தது மேலைச் சிவபுரி சன்மார்க்க சபையே. இச்சபை, தோன்றிய நாள்தொட்டுத் தமிழ் மக்களுக்குச் செய்து வரும் நலங்கள் பலவாகும். இச்சபையின் தோற்றத்திற்கு முன், செட்டி நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கென எத்தகைய கழகமும் நிறுவப்படவில்லை. தமிழ்ப்புலவர் பலரையும் அவ்வப்போது அழைத்துச் சொற்பொழிவுகள் வாயிலாக அவர்களுடைய அறிவுரையை இப்பகுதியில் பரப்பி வருவதும் இதுவே. இச்சபையின் உறுப்புகளுள் ஒன்றாகிய நூல் நிலையம் அரிய நூல்கள் பலவற்றைப் பெற்று நல்ல வளர்ச்சியடைந்து வருகின்றது’’ என்ற இந்நூல் பகுதி பண்டிதமணியாரையும் அவர் கண்ட சபையையும் உயர்த்தி நிற்கின்றது. இந்நூல் பூம்புகார் பிரசுரத்தின் சார்பாக 1977 ஆம் ஆண்டு, மூன்றாம் பதிப்பாக வெளிவந்துள்ளது.

பண்டிதமணி வரலாறும் தமிழ்ப்பணியும்

பண்டிதமணியாரின் பேத்தியாகிய மீனாட்சி அவர்கள் தன் பாட்டனாரைப் பற்றி எழுதியது இந்நூல். இது அவர்கள் வைத்துள்ள பதிப்பகமான ஏகம் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிடப்பெற்றுள்ளது. 2004 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

இந்நூல் ஏறக்குறைய சோம.லெ எழுதிய புத்தகத்தின் தழுவல் என்றாலும் இதன் பின்பகுதியில் உள்ள பண்டிதமணியார் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு பண்டிதமணியாரைப் பற்றிய கருத்துக்களை அறிந்து கொள்ள உதவும்.

‘‘ஐயாவின் பெயரில் பண்டிதமணி என்று மணி விளங்குவதாலோ என்னவோ மணி ஒலிப்பது போல் ஐயா இருந்த இடங்களில் எல்லாம் சிரிப்பொலி கேட்டது. ஆம் சிரிப்பொலி முழங்கத் தமிழ் மணம் கமழச் செய்தவர்கள் பண்டிதமணி ஐயா’’ ( என்னுரை) என்று ஐயாவின் பெருமையை எடுத்துரைக்கும் நூல் இதுவாகும்.

இவர்கள் தவிர பண்டிதமணியின் நூல்களுக்கு அணிந்துரை போன்றன வழங்கிய டாக்டர் தமிழண்ணல், டாக்டர் சுப. அண்ணாமலை போன்றோரும் பண்டிதமணி இருந்த காலத்து அவருடன் நட்புரிமையுடன் பழகிய புலவர்களான, உ.வே. சாமிநாதையர், அரசன் சண்முகனார், ரா. இராகவையங்கார், மறைமலையடிகள், சோம சுந்தர பாரதியார், டி.கே. சிதம்பரநாத முதலியார், திரு.வி. கலியாண சுந்தரனார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், கா. சுப்பிரமணியப் பிள்ளை, விபுலாநந்த அடிகள் போன்றோரும் பண்டிதமணியத்தின் உறுப்பினர்களே.
பண்டிதமணியின் புகழ்பாடும், அவரின் தமிழை அள்ளிப்பருகும் அத்தனை அன்பர்களும் பண்டிதமணியத்தின் உறுப்பினர்கள் என்பதில் ஐயமில்லை.

துணைநூற்பட்டியல்

இராசகோபலன்.இரா.,பண்டிதமணியின்திருவாசகஉரை, சிலசிறப்புகள், ஆரார்வெளியீடு, திருப்புத்தூர், 1996

கதிரேசச்செட்டியார், பண்டிதமணி, மு. உதயணசரிதமும், சுலோசனையும், பண்டிதமணிநூற்றாண்டுவிழாவெளியீடு, சன்மார்க்கசபை, மேலைச்சிவபுரி, 1983

கதிரேசச்செட்டியார், பண்டிதமணி, மு. மண்ணியல்சிறுதேர், அன்னைநிலையம், சென்னை, நான்காம்பதிப்பு, 1969

கதிரேசச்செட்டியார். பண்டிதமணி, மு.,உரைநடைக்கோவை, இரண்டாம்பாகம், மீனாட்சிபுத்தகநிலையம், மதுரை,1986

கதிரேசச்செட்டியார். பண்டிதமணி, மு., திருவாசகம், நீத்தல்விண்ணப்பம், சன்மார்க்கசபை, மேலைச்சிவபுரி, மூன்றாம்பதிப்பு,1973

கதிரேசச்செட்டியார்.பண்டிதமணி.மு.,உரைநடைக்கோவை, பாகம்.1. சன்மார்க்கசபை, மேலைச்சிவபுரி, இரண்டாம்பதிப்பு, 1982

சுந்தரம், சொ.சொ. மீ.,பண்டிதமணிபிள்ளைத்தமிழ், பண்டிதமணிநூற்றாண்டுவிழாவெளியீடு, சன்மார்க்கசபை, மேலைச்சிவபுரி, 1991

சுந்தரம். மெ., (பொறுப்பாசிரியர்) பண்டிதமணிகதிரேசச்செட்டியார்அவர்கள்திருவுருவச்சிலைதிறப்புவிழாமலர், மகிபாலன்பட்டி, 1974

சுந்தரம்.அரு.வெற்றியூர், நகரத்தார்பெருமை, மணிமேகலைபிரசுரம், சென்னை, 2007

தியாகராசன். க. , பண்டிதமணியின்தமிழ்ப்பணி, அண்ணாமலைப்பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், 2000

பழநி.ஆ. புலவர்,பண்டிதமணியின்நாடகத்தமிழ், பண்டிதமணிநூற்றாண்டுவிழாவெளியீடு, சன்மார்க்கசபை, மேலைச்சிவபுரி, 1982

மீரா, மண்ணியல்சிறுதேர்ஒருமதிப்பீடு, அன்னம், தஞ்சாவூர், 2004

மீனாட்சிஇலட்சுமணன், பண்டிதமணிவரலாறும்தமிழ்ப்பணியும், ஏகம்பதிப்பகம், சென்னை, 2004

முடியரசன். கவியரசு.,ஊன்றுகோல், பண்டிதமணிநூற்றாண்டுவிழாவெளியீடு, சன்மார்க்கசபை, மேலைச்சிவபுரி, 1983

மோகன்.இரா. டாக்டர்., பண்டிதமணியின்நடைநயம், பண்டிதமணிநூற்றாண்டுவிழாவெளியீடு, சன்மார்க்கசபை, மேலைச்சிவபுரி, 1982

லெ. சோம.,பண்டிதமணி, பூம்புகார்பிரசுரம், சென்னை, மூன்றாம்பதிப்பு, 1977

பயன்பட்ட இணைய தளங்கள்

விக்கிப்பீடியா.
தமிழ் மரபு அறக்கட்டளை
பண்டிதமணி


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 11”

அதிகம் படித்தது