மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 3

முனைவர் மு.பழனியப்பன்

Oct 23, 2020

siragu kathiresa chettiyar1

தமிழகத்தின் இயற்கை வளம், இலக்கிய வளம் என்பது சிற்றூர், பேரூர் என்று வேறுபாடில்லாமல் அனைத்து ஊர்களின் வளங்களினாலும் ஏற்பட்டதாகும். தமிழ் வளர்த்த பெருமக்கள் பலர் தோன்றிய ஊர்கள் சிற்றூர்கள் என்பது எண்ணுதற்குரியது. தமிழுக்கு உலக அளவில் பெருமை பெற்றுத் தந்த ஒரு சிற்றூர் மகிபாலன்பட்டி என்று தற்காலத்தில் அழைக்கப்பெறும் பூங்குன்றம் என்ற சங்க காலத்தில் அழைக்கப்பெற்ற ஊர் ஆகும். இந்த ஊரினைச் சார்ந்தவர் சங்கப் புலவரான கணியன் பூங்குன்றனார் ஆவார். இவரின் ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’’ என்று தொடங்கும் பாடல் உலகப்புகழ் பெற்றதாகும். ஐக்கிய நாடுகள் சபையில் உலக இலக்கியங்களின் ஒப்பற்ற வரிகள் எழுதப்படுகின்ற காலத்து இந்தியாவின் இலக்கியப்பெருமையைக் காட்ட இந்த ஒரு பாடலடியை எழுதுவற்கு ஐக்கிய நாடுகள் சபையார் முன்வந்தார்கள் என்றால் அந்த ஊரின் பெருமை பாராட்டத்தக்கதாகும். இத்தகைய ஒப்பற்ற இலக்கியப் பாடல் எழுந்த ஊர் பூங்குன்றம் என்ற ஊராகும். இந்த ஒரு பாடல் இந்தியாவின் பண்பாட்டையும், அதன் மத,மொழி, இனச் சார்பின்மையையும் எடுத்துரைக்கும் பெற்றியது ஆகும்.

இத்தகு பெருமை பெற்ற இவ்வூரில் பிறந்தவர் பண்டிதமணியார். சங்க இலக்கியப் பின்புலம் பெற்ற இவ்வூரில் பிறந்த பண்டிதமணியார் தமிழார்வம் பெற்றிருந்தது என்பது இம்மண்ணின் குணம், மணம் ஆகும். தமிழ்ப் புகழ் பொலிந்த மண்ணில் பிறந்தவர் பண்டிதமணியார். பண்டிதமயணியாரின் இயற்பெயர் கதிரேசன் என்பதாகும். வாழ்க்கை வரலாற்றினை விவரிக்கும் இக்கட்டுரையில் பண்டிதமணி என்ற பட்டத்தைப்பெறும் வரையிலும் கதிரேசன் என்றே பண்டிதமணியார் சுட்டப்பெறுகிறார். பண்டிதமணி என்ற பட்டத்தைப் பெற்ற பின்னர் பண்டிதமணியார் என்ற பெயரிலேயே இவ்வாழ்க்கை வரலாற்றை உரைக்கும் கட்டுரை அவரை விளிக்கின்றது,

சங்ககாலப் பின்னணி

siragu pandidhamani2

சங்க காலத்தில் பூங்குன்றம் என்ற இந்த ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு இருபத்துநான்கரை கிராமங்கள் அமைந்த பூங்குன்ற நாடு என்ற நாடு உருவாக்கம் செய்யப்பெற்றிருந்திருக்கிறது என்று கருத்துரைக்கிறாரி் ஆய்வாளர் சோமலே(பண்டிதமணி, ப.10) இவ்வூர் சார்ந்து கிடைக்கும் கல்வெட்டுகளிலும் பூங்குன்ற நாடு என்ற வழக்கு இடம்பெற்றுள்ளது. இங்குள்ள குகைக்கோயில் ஒன்றில் ‘‘பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றத்துடையார்’’ என்ற குறிப்பு காணப்படுவதாக சதாசிவப் பண்டாரத்தார் குறிக்கின்றார். (மேலது.ப.13) மேலும் இவ்வூரில் உள்ள ஒரு குன்றுக்கு இன்றும் பூங்குன்றம் என்ற பெயர் வழங்கப்பெற்று வருகின்றது. இதுதவிர இக்குன்று சார்ந்து கோயில் கொண்டுள்ள அம்பிகைக்குப் பூங்குன்றத்துநாயகி என்ற பெயரும், அய்யனாருக்குப் பூங்குன்றத்து அய்யனார் என்ற பெயரும் வழங்கி வருகின்றன. இதன் காரணமாக இவ்வூரின் பழமை தெரியவருகின்றது. இவ்வளவில் பூங்குன்றம் என்ற ஊரும் நாடும் சங்ககாலம் முதலே தமிழகத்தின் தலைசிறந்த பகுதியாக, இலக்கிய வளம் கொழிக்கும் பகுதியாக விளங்கியதை மேற்கண்ட குறிப்புகளால் அறியமுடிகின்றது.

மணிமுத்தாறு ஓடும் அழகிய கிராமம் பூங்குன்றம் ஆகும். மேலும் இதனை ஒட்டி அமைந்த குன்றுகளும் சிறு காடுகளும் இவ்வூருக்கு அழகு சேர்ப்பன. இவ்வூர் சற்று உள்ளடங்கிய பகுதியாக இப்பகுதியில் விளங்குவதால் இன்னமும் இவ்வூர் போக்குவரத்து வசதிகளில் சற்றுப் பின்தங்கியே உள்ளது. இங்குள்ள மணிமுத்தாறு பெருகினால் ஊரில் உள்ள மக்கள் வெளியில் செல்ல இயலாது. யாரும் ஊருக்குள் வரவும் இயலாது.

இவ்வூரின் தற்காலப் பெயர் மகிபாலன்பட்டி என்பதாகும். மகிபாலன் என்ற அரசன் முற்காலத்தில் ஆண்டதன் காரணமாக இதன் பெயர் அவ்வரசன் பெயரினால் மகிபாலன்பட்டி என வழங்கப்பெற்றதாக ஒரு வாய்மொழி வரலாறு இவ்வூரில் வழங்கி வருகின்றது. சங்க காலச் சிறப்பு மிக்க பூங்குன்றம் எனப்பட்டுப் பிற்காலத்தில் மகிபாலன்பட்டி என்று அழைக்கப்பெற்ற இந்த மண்ணே (பண்டிதமணியார்) கதிரேசனார் பிறந்த மண்ணாகும்.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூர் வட்டத்தில் தற்போது இருந்துவரும் இந்த ஊர் பழைய காலத்தில் பாண்டி நாடு எனப்பட்ட பகுதியின் ஒரு அங்கமாக விளங்கியுள்ளது. தமிழ் வளர்த்த பாண்டிப் பகுதியில், தமிழ் இலக்கியம் பூத்த மண்ணில் பெரும்புலவர் கதிரேசனார் தோன்றியது என்பது அம்மண்ணிற்கு இன்னமும் பெருமை சேர்க்கத்தக்கதாக உள்ளது.

பண்டிதமணியார் பிறந்த இனம் நகரத்தார் இனம் ஆகும். இவ்வினத்தார் இந்த ஊரில் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வருகின்றனர். ஒன்பது நகரக்கோயில்களை அடிப்படையாக வைத்து அவ்வகையில் பிரிவுகளைச் சமைத்து சிவவாழ்வினை வாழ்ந்து வரும் வணிகக் குடியினர் நகரத்தார்கள் ஆவர். இவ்வொன்பது பிரிவுகளில் வயிரவன் கோயில் என்ற கோயிலின் அடிப்படையில் வந்த நகரத்தார் குடியில் பிறந்தவர் கதிரேசனார்..

பெற்றோர்

கதிரேசனாரைப் பெற்றெடுத்த பெருமக்கள் முத்துக்கருப்பன், சிகப்பி ஆகியோர் ஆவர். இவர்களுக்கு 16.10.1881 ஆம் நாள் பிறந்த குழந்தையே கதிரேசன் ஆவார். இவர் பிறந்த நாளைத் தமிழில் குறிப்பிடவேண்டும் என்றால் விசு ஆண்டு புரட்டாசி மாதம் இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை அன்று திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர் கதிரேசன் ஆவார்.

இவர் தனது பெற்றோரின் அருமை, பெருமை கருதி, அவர்களை எண்ணி, அவர்களுக்குத் தன் நூல்களைக் காணிக்கையாக்கியுள்ளார் பண்டிதமணி. உரைநடைக்கோவையின் முதல் பகுதியானது தந்தையார்க்கும், இரண்டாம் பகுதி தாயார்க்கும் காணிக்கையாக்கப்பெற்றுள்ளது. இக்காணிக்கையை அழகான பாடல்களாகக் கதிரேசனார் வரைந்துள்ளார்.

தந்தையைப் பற்றிய பாடல் பின்வருமாறு.

‘‘செந்தமி ழமிர்தத் திவலையும் உலகிற்
றிகழ்வட மொழிமணி சிலவும்
முந்துறப் பெறுதற் கறிவொளி யுதவி
முன்னுமென் சிறுபரு வத்தே
நந்தலில் புகழை நிறுவியெம் இறைவன்
நல்லடி யடைந்தவென் அரிய
தந்தையின் அருளை நினைவுறீஇ யுருகுந்
தன்மைக்கீ தறிகுறி யாமால்’’

(உரைநடைக்கோவையின் உரிமையுரை)
என்ற இப்பாடலில் தன் தந்தையார் பற்றிய நினைவுகளைத் தொகுத்தளித்துள்ளார் பண்டிதமணி. இப்பாடலுக்கு எளிமையான அளவில் உரையும் தந்துள்ளார் பண்டிதமணி. அவ்வுரை பின்வருமாறு.

‘‘கற்றுவல்ல பெரியோர் அவைகளில் சிறியேனாகிய யானுங் கலந்து பயன் எய்துதற்குரிய நல்லறிவு பெறுதற்குக் காரணிகராகிய என் அரிய தந்தையார் அவர்களின் அருட்பெருக்கை நினைந்து, நினைந்து உருகுதற்கு அறிகுறியாக இந்நூலை வெளியிட்டு அவ்வருட்கு இதனை உரிமைப்படுத்துகிறேன்’’ என்ற இப்பாடலின் உரையில் தந்தையின் அருளை எண்ணி எண்ணி உருகும் மகன் தான் எனக் கூறிக்கொள்வதில் பெருமை அடைகின்றார் கதிரேசனார். தான் பிறந்து ஏறக்குறைய நாற்பதாண்டுகள் கழிந்த நிலையில் தன் தந்தைக்கு நன்றிப் பெருக்கினைச் செய்யும் இனிய புதல்வனின் நிலையை இப்பாடல் உலகிற்குக் காட்டுகின்றது. மேலும் தான் தமிழ் அமிர்தத்தை, வடமொழியைக் கற்கத் தடைசெய்யாது அவ்விருப்பத்தை வளர்க்க உதவியமைக்காகத் தந்தைக்கு இவர் நன்றி பாராட்டுகின்றார். இக்காலத்தில் தந்தையும் தாயரும் அயல்மொழிக் கல்வியில் நாட்டம் கொண்டு அதற்காகச் செலவழித்துத் தன் குழந்தைகளைப் படிக்க வைப்பதைக் காணும்போது தமிழறிவைத் தந்த இந்தத் தந்தையைத் தாயைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

கதிரேசனாரின் தாயாரைப் பற்றிய பாடல் உரைநடைக்கோவை இரண்டாம் பகுதியில் காணிக்கைப் பாடலாக அமைக்கப்பெற்றுள்ளது.

‘‘என்னையீன் றெடுத்தென் உடல்நலம் பேணி
இருந்தமிழ்ப் புலவர் தங் குழுவில்
துன்னியான் இருப்பக் கண்டுள மகிழ்ந்து
சொலற்கரும் உதவிகள் புரிந்து
முன்னையான் செய்த நல்வினைப்பேற்றின்
முதிர்ச்சியால் நெடிதுநாள் புரந்த
அன்னை யினருளை நினைவுறீஇ யுருகற்
கமையடை யாளமீ தாமால்’’
(உரைநடைக்கோவை, இரண்டாம் பகுதி, உரிமையுரை)
இப்பாடலில் தன்னைத் தாய் நெடிது நாள் காத்ததாகக் குறிக்கின்றார் கதிரேசனார். இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பெற்ற குழந்தைக்குத் தாய், வெளியில் சொல்ல இயலாத பல நிலைகளில் உதவியாகவேண்டும் என்பதையும் அவ்வளவில் பெருத்த உதவியைக் கதிரேசனாரின் தாய் செய்தார் என்பதையும் இப்பாடல் எண்ணி அத்தாய்க்கு நன்றி செலுத்துகின்றது,

இளம்பிள்ளை வாத நோய் காரணமாகத் திருமணம் தள்ளிப்போன காலத்தில் மகனையும் தன்னையும் ஆற்றி வாழ்நாள்களை வீழ்நாள்களாக ஆகாமல் காத்த பெருமை தன் அன்னைக்கு உண்டு என்பதால் இத்தகைய அருமைப் பாடலைக் கதிரேசனார் பாடியுள்ளார்.

இதற்கும் அவரே உரை கண்டுள்ளார். ‘‘ அறிவு வளர்வதற்கு இடனாக உள்ள என் உடலை நன்கு பேணி வளர்த்து, எனக்கு உறுதுணையாம்படி உபசரித்து யான் கலைநலம் பெறுதற்குப் பெரிதும் துணையாக இருந்தவர்களும், புலவர் குழுவிற் சிறியேனும் ஒருவனாக இருக்கும் நிலை கண்டு, உள மகிழ்ந்து நீண்ட நாட்களாக என்னைப் பாதுகாத்து வந்தவர்களும் ஆகிய என் இனிய அன்னையார் அவர்களின் அருட்பெருக்கை உன்னியுன்னி உருகுதற்கு அடையாளமாக இந்நூல் வெளியிட்டு அவ்வருட்கு இதனை உரிமைப்படுத்துகிறேன்’’ (உரைநடைக்கோவை, உரி்மையுரை) என்ற கதிரேசனாரின் இப்பாடல் உரை இவர் தாயாரின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பதாக உள்ளது. மேலும் புலவர் குழுவில் கதிரேசனார் இருந்து அணி செய்வதைப் பார்க்கும் பெருமை இவரின் தாயருக்குக் கிடைத்தது. தந்தையார் இவரின் சிறுவயதிலேயே இறந்துவிட்டார் என்ற குறிப்பும் இப்பாடலில் பொதிந்து கிடக்கின்றது. இவ்வாறு தன் பெற்றோரை நினைந்து நினைந்துப் போற்றி, நன்றிப் புரப்பவராக பண்டிதமணி விளங்குகின்றார்.

கதிரேசனாரின் இளமைப் பருவத்தில் முதல் இரண்டரை ஆண்டுக்காலம் உடல் நலத்திற்கு எக்குறையும் வராமல் நலமாகவே இருந்தது. இக்காலத்திற்குப் பிறகு அவருக்கு ஏற்பட்ட சுரநோய் காரணமாக அவருக்கு இளம்பிள்ளை வாதம் என்ற நோய் தாக்கியது. இந்நோயின் கடுமை காரணமாக கதிரேசனாரின் இடது கை, இடது கால் ஆகியன வலுவிழந்து அவரால் மற்ற குழந்தைகள் போல உடனுக்குடன் தன் வேலைகளைப் பார்த்துக் கொள்ள இயலமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்நோய் தாக்கியதன் காரணமாக அவர் பிறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரே கதிரேசனார் திண்ணைப் பள்ளிக்கு அனுப்பப்பெற்றார். இருப்பினும் அங்கும் அவர் ஏழு மாதங்கள் மட்டுமே கல்வி கற்றார். ஆத்திச்சூடி, உலக நீதி போன்ற எளிய செய்யுட்கள் இத்திண்ணைப் பள்ளி வாயிலாகக் கதிரேசனாருக்கு அறிமுகமாயின. இதுபோன்று பல நூல்கள் தமிழில் இருப்பதை அவர் அறிந்ததால் அந்நூல்களைப் பெற்றுப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் கதிரேசனாருக்குத் தோன்றியது.

அத்தகைய பெருமை மிக்க நூல்கைளை அவர் தேடினார். அந்நேரத்தில் கம்பராமாயணம், திருத்தொண்டர் புராணம் போன்றன அவருக்குப் படிக்கக் கிடைத்தன. இவை ஏதோ முன்னர் படித்த உணர்ந்த நூல்கள் போல அவருக்குப் பொருள் புரிந்தன. மூலபாடங்களே அவருக்கு எளிதில் பொருள் விளங்கிப் புரிபட ஆரம்பித்தன. இவ்வாறு தனக்குக் கிடைக்கும் நூல்கள் அனைத்தையும் தொடர்ந்து கற்றுவரும் பழக்கத்தை அவர் மேற்கொண்டார்.

கதிரேசனார், அவரின் குடும்ப வழக்கப்படி தன் பதினோராம் வயதில் வணிகத்தில் ஈடுபட ஆரம்பித்தார். இலங்கைக்குச் சென்று வணிகம் செய்து வரலானார். இலங்கை நாட்டில் உள்ள கம்பளை, நுவரேலியா ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட வழியில் அமைந்துள்ள இரட்டைப் பாதை என்னுமிடத்தில் உள்ளத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரிசி, புடவை ஆகியவை விற்பனை செய்யும் வணிகத்தை அவர் மேற்கொண்டார். யாழ்ப்பாணத்து அறிஞர்கள் பலரின் தொடர்பும் இக்காலத்தில் பண்டிதமணிக்குக் கிடைத்தது.

இவ்வாறு வணிகம் செய்து பொருளீட்டி வரும் காலத்தில், மூன்றாண்டுகள் கழிந்த நிலையில் கதிரேசனாரின் தந்தை இந்தியாவில் இறந்த செய்தி அவருக்கு எட்டியது. உடனே கதிரேசனார் இந்தியா திரும்பினார்.குடும்பத்தின் மூத்த பிள்ளை இவர் என்பதால் குடும்பத்தைச் சுமக்க வேண்டிய சுமை இவரை மீளவும் இலங்கை செல்லவிடாமல் தடுத்தது. இந்தியாவிலேயே இருந்துத் தன் குடும்பத்தைக் காக்க வேண்டிய கடமைக்கு ஆளானார் கதிரேசனார். நோயின் வாட்டத்தைப் போக்க பல மைல் தூரம் நடந்து செல்வது என்பது அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. சுண்டைக்காடு. வேலங்குடி போன்ற மகிபாலன்பட்டியை ஒட்டிய கிராமங்களுக்கு நடந்து சென்று தன் நோயை ஆற்றினார் கதிரேசனார்.

கதிரேசனாருக்குப் பதினான்கு வயது நெருங்கும்போது இளம்பிள்ளை வாத நோய் அவரைப் பெரிதும் வருத்தத் தொடங்கியது. இதன் காரணமாக ஊன்றுகோல் கொண்டே நடக்கும் நிலைக்கு ஆளானார் கதிரேசனார். வீட்டிலேயே பெரும்பான்மைக் காலம் உறையும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

அந்நிலையில் தன் வீட்டுச் சன்னலின் அருகே இருந்து கொண்டு வருவோர் போவோருடன் உரையாடி தன் ஊர், நகர, நாட்டுச் செய்திகளை அறிந்து கொள்வது என்பது இவருக்குப் பிடித்த மற்றொரு பொழுதுபோக்கு ஆகும். அக்காலத்தில் செய்திகளைத் தாங்கிவந்த சுதேச மித்திரன் இதழை தன் இல்லத்திற்கு வரவழைத்து அதன் வழியாக உலகச் செய்திகளை அவர் அறிந்துகொண்டார். பல தமிழ் இலக்கிய நூல்களை இக்காலத்தில் விடாமல் கற்றுவந்தார். அவரின் தமிழறிவு பெருகிய காலம் இதுவேயாகும்.

இக்காலத்தில் தன் வழிபடு கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி அவரையே குருவாகக் கொண்டுக் கதிரேசனார் கற்ற நூல்கள் பலவாகும். தமிழ்ப்புலவர், இலக்கணக் கடல் அரசஞ் சண்முகனார் என்பரைத் தன் ஆசானாக் கொண்டுக் கற்ற நூல்களும் பல. அரசஞ் சண்முகனார் கதிரேசனார் இல்லத்தில் தங்கி அவருக்குத் தமிழ் நூல்களைப் போதித்தார். அரசஞ் சண்முகனாரை மற்றொரு பிள்ளையாகக் கருதிச் சிவப்பி ஆச்சி வளர்த்தார்கள். அந்த அளவிற்கு கதிரேசனாருக்கும், அரசஞ் சண்முகனாருக்கும் நெருங்கியத் தமிழ்த் தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பால் இலக்கணப் புலமையும், இலக்கியப் புலமையும் செழிக்கப் பெற்றார் கதிரேசனார். தன் ஆசிரியராக விளங்கிய அரசஞ் சண்முகனார் பொருள் இன்றி வற்றியபோது அவருக்கு அவ்வப்போது பொருள் உதவிகள் செய்து தன் நன்றியினைக் கதிரேசனார் தெரிவித்து வந்தார்.

தமிழைக் கற்றுத் தேறியது போலவே, வடமொழியையும் கற்றுத் தேர வேண்டும் என்ற ஆர்வம் கதிரேசனாருக்கு ஏற்பட்டதால், அம்மொழியைக் கற்ற தருவை நாராயண சாஸ்திரியாரிடம் மாணவராக அமைந்தார். அவரிடம் ஐந்தாண்டுகள் சமஸ்கிருதப் பயிற்சி பெற்றார். அவர் வழியாகப் பாணினி, வியாகரணம், வடமொழிக் காவியங்கள், நாடகங்கள் போன்றவற்றைக் கற்றார். இதன் காரணமாக வடமொழி அறிஞராக பண்டிதமணி விளங்க முடிந்தது.

இவற்றோடு சைவ சித்தாந்தப் புலமையும் தனக்கு நிரம்ப வேண்டும் என்று கதிரேசனார் எண்ணினார். இதற்காகத் தக்க ஒருவரைத் தேடியபோது காரைக்குடியைச் சார்ந்தச் சித்தாந்த வித்தகர் சொக்கலிங்க ஐயா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் சைவ சிந்தாந்த பாடத்தை இரண்டாண்டுகள் கேட்டார். இச்சொக்கலிங்க ஐயா கதிரேசனாரின் இலக்கியப் பேச்சினைக் கேட்டு மகிழ்ந்தவர். ஒரு முறை இவரின் இலக்கியப் பேச்சினைப் பாராட்டிய இவர் சமயத்துறையிலும் கதிரேசனார் முன்நிற்கக் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையிலேயே கதிரேசனார் சைவ சித்தாந்தம் கற்கும் எழுச்சியை, வழியைப் பெற்றார்.

இவ்வளவில் கதிரேசனாரின் இலக்கிய இலக்கண அறிவு, வடமொழி அறிவு, சைவ சித்தாந்த அறிவு ஆகியன மேம்பட்டன. இவ்வறிவை மேலும் விரிவாக்கச் சான்றோர் பலரை நேரிலும் கடிதங்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டார் கதிரேசனார்.

மு.ரா. கந்தசாமிக் கவிராயர், மறைமலையடிகள் போன்ற பலரது அறிமுகம் கதிரேசனாருக்கு அரசஞ் சண்முகனார் வழி கிடைத்தது. உ, வே. சாமிநாதையர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ஞானியாரடிகள், ரா. ராகவையங்கார், வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார்ஈ, நாவலர் சோம சுந்தர பாரதியார் போன்றோருடன் இவர் நட்பு கிளைத்து வளர்ந்தது.

மறைமலையடிகளைச் சந்திக்க நாகப்பட்டிணம் வரை சென்று வருவார் கதிரேசனார். அவ்வாறு செல்லும்போது ஒரு பயணத்தின்போது, சைவ சித்தாந்த சமாஜத்தின் சார்பில் நடந்த விழாவில் கதிரேசனார் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றார். இதுவே சொற்பொழிவுத் துறையில் கதிரேசனார் கால் பதித்த முதல் நிகழ்வாகும்.

இதன் பின்னர் ஞானியார் அடிகளாரின் நட்பு கிடைக்கப்பெற்று அவரின் பேச்சாற்றலை அறிந்து அவரைத் தன் முன்னோடியாகக் கொண்டு பேச்சுத்துறைக்குள் நுழைந்தார் கதிரேசனார். செட்டி நாட்டில் பல இடங்களில் கதிரேசனார் பொழிவுகளை ஆற்றினார்.

கதிரேசனாரின் சொற்பொழிவுகளை அப்படியே அச்சாக்கம் செய்யுமளவிற்கு அவை பொருத்தமுறத் தயாரிக்கப்படும். தேவையான விளக்கங்கள், மேற்கோள்கள், சிந்தனைகள் முதலானவை சேர்க்கப்பெற்று அப்பொழிவுகள் கனமாக இருக்கும். மேலும் பேச்சின் நிறைவில் பேசியதன் சாரம் அப்படியே சுருங்கிய நிலையில் எடுத்துரைக்கப்படும். இவரின் பேச்சுரைகளே உரைநடைக் கோவைகளாக இரு தொகுதிகளாகப் பின்னாளில் தொகுக்கப்பெற்றன. அந்த அளவிற்குச் சொற்பொழிவை ஒரு கலையாகக் கதிரேசனார் ஆற்றி வந்தார்.

இலக்கியப் பயிற்சியோடு சமுதாய நலமும் சிறக்கத் தொண்டுகள் ஆற்றியவர் கதிரேசனார். கண்டவராயன் பட்டி என்ற ஊரில் இருந்து மகிபாலன்பட்டிக்கு வரும் பாதை நலமுடையதாக இருக்காது. மழை பெய்துவிட்டால் வண்டிமாடுகள் வண்டியை இழுக்க வெகு சிரமப்படும். தன் பயணத்திற்கு மாட்டுவண்டியையே நம்பிய இருந்த கதிரேசனார் இப்பாதையைச் சீரமைக்க ஒருவரைத் தேடினார். அக்காலத்தில் மகிபாலன் பட்டியில் இருந்து தேவகோட்டையில் உள்ள ஒரு செல்வம் மிக்கக் குடும்பத்திற்கும் வாரிசு இல்லாத காரணத்தால் தத்துப் பிள்ளையாகச் சென்ற திரு வீரப்பச் செட்டியார் என்பவரை அணுகினார். அவரின் பொருளுதவியால் தன் சொல்லுதவியால் திருந்திய பாதை ஒன்றைக் கதிரேசனார் நிறுவினார். இப்பாதையே இன்றும் பேருந்துகள் செல்லும் பாதையாக உள்ளது.

மேலும் இவ்வூருக்கு அஞ்சலக வசதி, கல்விக்காக மங்கல விநாயகர் வித்தியாசாலை, மோட்டார் போக்குவரத்து போன்றவற்றை ஏற்படுத்தித் தந்த்தில் கதிரேசனாரின் பங்கு பெரிதாகும். இவ்வாறு தான் வாழ்ந்த ஊரில் சமுதாயச் சேவையை ஆற்றியவர் கதிரேசனார். இந்நன்றியை நினைவூட்டும் வண்ணம் ஊரில் நடுவில் இவரின் சிலை தற்போது நிறுவப்பெற்றுள்ளது. சிலைவடிவில் கதிரேசனார் நின்று நிலவி இன்னமும் இவ்வூர் வளமும் நலமும் பெற வாழ்த்துரைத்து வருகின்றார்.

கதிரேசனாருக்கு செட்டி நாட்டில் மக்கள் தரமான கல்விச் செல்வத்தைப் பெறுவதற்கான பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் இல்லை என்ற மனக்குறை இருந்து வந்தது. அதனை நிறைவிக்க வேண்டும் என்ற பேரார்வம் அவர் மனதில் நாளும் எழுந்து கொண்டே இருந்தன.

இக்காலத்தில் இவர் பலவான்குடியில் மணிவாசகர் சங்கம் என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தினார். அதன் வழி சமய அறிவை மக்களுக்குப் புகுத்தி வந்தார். அவ்வூரின் சிவநேசர் திருக்கூட்டத்தின் முதல் தலைவராக இருந்தும் அவர் தொண்டாற்றினார்.

தொடர்ந்து தயாரின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து இராமேசுவரம் வரை அவர் தலயாத்திரை மேற்கொண்டார். கதிரேசனார் வாழ்வில் திருமணம் முதலான நல்ல நிகழ்வுகள் நடைபெறவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட தலயாத்திரை இதுவாகும். இத்தல யாத்திரையைத் தமிழ் யாத்திரையாக மாற்றிக் கொண்டார் கதிரேசனார். இராமநாதபுரத்தில் இருந்த இராகவையங்காரைச் சந்தித்து அவரின் நட்பினைப் பெற்றார். அவர் வழியாகப் பாண்டித்துரைத் தேவரைச் சந்தித்து நான்காம் தமிழ்ச் சங்கத்தின் புலவர் அவையில் இடம்பெறச் செய்யப்பெற்று அணிபெற்றார். தமிழ்ச் சங்கத்தின் தொடர்பு அவருக்கு என்றைக்கும் இருப்பதாக வளர்ந்துவந்தது.

செட்டிநாட்டில் தமிழ் வளர்க்கும் நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற அவரின் அவா மேலைச்சிவபுரி என்ற சிற்றூரில் இருந்த தனவணிகர்களால் நிறைவேறியது. 1909 ஆம் ஆண்டு மேலைச்சிவபுரியில் சன்மார்க்க சபை என்பதை அவர் நிறுவ எண்ணம் கொண்டார். இவ்வூருக்கு அக்காலத்தில் சிவப்பட்டி என்றே பெயர். திரிந்து வழங்கும் அப்பெயரை மேலைச்சிவபுரி என்ற இலக்கியப் பெயரால் அழைத்தவர் கதிரேசனார். இவ்வூரில் கதிரேசனாரின் தமக்கையார் மணம் முடிக்கப் பெற்றிருந்தார். இதன் காரணமாக அடிக்கடி கதிரேசனார் இவ்வூருக்கு வரும்படியாயிற்று. இவர் இவ்வூருக்கு வரும்போதெல்லாம் அங்கு சைவமும் தமிழும் தழைத்தோங்கும் நல்லெண்ணம் கொண்ட வ.பழ. சா குடும்பம் என்றழைக்கப்படும் குடும்பத்தைச் சார்ந்த பழனியப்பச் செட்டியார் அவர்களையும், அவரது தம்பி அண்ணாமலைச் செட்டியார் அவர்களையும் சந்தித்து உரையாடுவது வழக்கம்.

அண்ணன், தம்பி இருவரும் தமிழார்வமும் தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் குணமும் மிக்கவர்கள். இவர்களிடம் கதிரேசனார் பேசும்போதெல்லாம் இலக்கியம், சமயம் வளர்க்கும் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கூறிவருவார். அதற்குக் காட்டாக நான்காம் தமிழ்ச் சங்கத்தையும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தையும் எடுத்துக்காட்டுவார். இவரின் பேச்சில் கவரப்பட்ட இருவரும் மேலைச் சிவபுரியில் சன்மார்க்க சபை தொடங்க முன்வந்தனர்.

சன்மார்க்கம் என்பதற்குக் கதிரேசனார் தரும் பொருள் எண்ணத்தக்கது. தன்னைச் சார்ந்தாரைப் பசுத்துவ நீக்கிப் பதித்துவமீந்து சிவபிரனோ டிரண்டறக் கலப்பிப்த்து அசைவறு நிலையாகிய பேரானந்தப் பெருவாழ்விற் றலைப்படுத்துவது இச் சன்மார்க்கம் என்பது கதிரேசனார் சன்மார்க்கத்திற்குக் காட்டும் பொருளாகும். வள்ளலார் கண்ட சன்மார்க்கம் இதனின்று வேறானது என்றாலும் இவ்விரு சன்மார்க்கங்களும் மாறானவை அல்ல. முக்தி நெறியைத் தலைப்படுதற்கு உரிய வழி சன்மார்க்கம் என்பதால் அந்நெறியை வழங்க மேலைச்சிவபுரியில் நிறுவப்பட்டதே சன்மார்க்க சபையாகும்.

இச்சபையின் தோற்றம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஒன்பதாம் ஆண்டு மே மாதம் பதிமூன்றாம் நாள் நடைபெற்றது. இந்நாள் திருநாவுக்கரச சுவாமிகள் குருபூசைக்குரிய நாள் ஆகும். இந்நாளில் சபையைத் தொடங்கலாம் என எண்ணிய கதிரேசனார் இந்நாளைக்குச் சில நாள்கள் முன்னர் மேலைச்சிவபுரி வந்து சேர்ந்தார். அந்நேரம் வ.பழ.சா குடும்பத்தின் முன்னவர் பழனியப்பன் கொழும்பு சென்று இருந்தார். எனவே அவரின் தம்பி அண்ணாமலையாரைக் கண்டு சபையைத் தொடங்கும் நாள் குறித்தும், உடன் செய்ய வேண்டுவது குறித்தும் கதிரேசனார் உரையாடினார்.

திருநாவுக்கரசு சுவாமிகளின் குருபூசை நாளி்ல் அவருக்குக் குரு பூசை நடத்தி அன்னதானம் அளித்து மாலையில் அறிஞர்களைக் கொண்டுச் சொற்பொழிவாற்றச் செய்வது என்ற அமைப்பில் சபையின் துவக்க நாள் திட்டமிடப்பெற்றது. இருப்பினும் அண்ணாமலையார் இதற்கு ஓரளவே ஒப்புதல் தந்துப் பணிகளைச் செய்தார். அண்ணன் வராத குறை அவர் மனதில் இருந்தது. அண்ணனில்லாமல் சபை தொடங்குவதில் அவருக்கு சற்றுப் பின்னடைவு இருந்தது. ஆனாலும் அண்ணன் பழனியப்பர் சபை தொடங்கும் நாளன்று வந்து சபையின்தொடக்க விழாவில் கலந்து கொண்டார். இது நன்னிமித்தமாகவும், அனைவர் மனத்தை மகிழச் செய்வதாகவும் இருந்தது.

தி்ட்டமிட்டப்படி மேலைச்சிவபுரியின் ஆதிகாலத்து, விநாயகர் கோயிலான சாமிநாத விநாயகர் சன்னதியில் அப்பெருமானுக்கு அபிடேக ஆராதனை செய்யப்பெற்றது. அதன்பின் திருநாவுக்கரசு நாயனாரின் புராணம் வாசிக்கப்பட்டது. அவருக்குக் குருபூசை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பெற்றது.

மாலை மூன்று மணியளவில் மகாவித்வான் அரசன் சண்முகனார் தலைமையேற்க, மு.ரா. கந்தசாமிக் கவிராயர்,கீழச் சீவல்பட்டி வித்வான் பீமகவி, தேவகோட்டை சொ. வேற்சாமி கவிராயர், வேந்தன்பட்டி புலவர் வாத்தியார் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். இவ்விழாவின்போது சாமிநாத விநாயகர் மீது பதிற்றுப் பத்தந்தாதி என்பதைக் கதிரேசனார் பாடினார். இக்கவிகளிளைக் காண்கையில் இவரின் கவியாற்றல் மிகுதியாக வெளிப்பட்டு இருப்பதைக் காணமுடிகின்றது.

மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை இவ்வளவில் தொடக்கம் பெற்றது. இதன் தலைவராக வ.பழ.சா. பழனியப்பச் செட்டியார் விளங்கினார். நாளும் சபை வளர அவர் சிந்தனை கொண்டார்.

ரூபாய் பன்னிரண்டாயிரம் செலவில் சபைக்கு ஒரு கட்டிடம் உருவாக்கப்பெற்றது. இச்சபையின் துணை நிறுவனங்களாக கணேசர் செந்தமிழ்க்கலாசாலை, தொல்காப்பியர் நூலகம் ஆகியன உருவாக்கப்பெற்றன.

சபையின் வாயிலாக திங்கள் தோறும் சமய இலக்கியச் சொற்பொழிவுகள் நடத்தப்பெற்றன. ஆண்டுதோறும் ஆண்டுவிழா நடத்தப்பெற்றது. இவ்வாண்டுவிழாக்களில் தமிழகத்தின் தலைசிறந்த புலவர்கள் கலந்து கொண்டனர். பக்கத்து ஊர்களில் இருந்து இந்நிகழ்வைக் காண வரும் அன்பர்கள் மாட்டுவண்டியில்தான் வரவேண்டும். அவ்வாறு வரும் மாடுகளுகளின் உணவிற்காக வைக்கோல் போர் உருவாக்கும் பணிதான் ஆண்டுவிழாவின் முதல் பணியாக சபையாருக்கு இருந்தது. இதனடிப்படையில் காணுகையில் இச்சபையின் இலக்கியபணி, மக்கள் பணி சிறந்தது என்பதை உணரமுடிகின்றது. அனைத்து உயிர்களுக்கும் உணவளித்துப் புரக்கும் செயலே சன்மார்க்கம் என்பதை எண்ணிச் சபையார் மாடுகளுக்கும் விருந்துவைத்து, மக்களுக்கும் இன்சுவை, சொற்சுவை விருந்து படைத்து, வந்திருக்கும் புலவர்களுக்கும் தங்குவதற்கு ஏற்ற வகையில் குடில்கள் அமைத்துச் செய்த திருப்பணி தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றிய செம்மைப் பணியாகும்.

தொடர்ந்து சபையும் வளர்ந்தது. அதன் துணை நிறுவனங்களும் வளர்ந்தன. கணேசர் செந்தமிழ்க் கலாசாலையில் தமிழ்ப்பாடங்கள் நடத்தப்பெற்று முறையே தேர்வுகளும் வைக்கப்பெற்றன. இப்பணிகளைப் கதிரேசனாரும் அரசன் சண்முகனாரும் பகிர்ந்துக் கவனித்துக் கொண்டனர்.

கதிரேசனார் கலை உள்ளமும், கல்வி அவாவும் சன்மார்க்க சபை கண்ட காரணத்தால் ஓரளவிற்கு அமைதி பெற்றன. இவரின் பொருளாதாரத்திற்கும் வ.பழ.சா குடும்பத்தார் வழி செய்தனர். பர்மாவிலும், மலாய் நாட்டிலும் நடைபெறும் வணிகத்தில் கதிரேசனாருக்கு பங்கு ஏற்படுத்தப்பெற்றது, இவ்வாறு பற்பல நிலைகளில் தமிழ் உயரவும், கதிரேசனாரின் நிலை உயரவும் வ.பழ.சா குடும்பத்தார் உதவினர்.

சபையின் இரண்டாம் ஆண்டுவிழாவின்போது பண்டிதமணி அவர்கள் பேசிய பேச்சுரை நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சீர்திருத்தம் என்பதாகும். இதனை நூலாக வெளியிட்டு நூல் வெளியிடும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது சன்மார்க்கசபை.

சபையின் மூன்றாம் ஆண்டு விழா நெருங்குகையில் வ.பழ. சா குடும்பத்தின் முன்னவர் பழனியப்பர் உடல் நலிவுற்று இறைவனடி சேர்ந்தார். தொடர்ந்து சபையின் பணிகளைப் பழனியப்பருக்குப் பின்னவரான அண்ணாமலையார் கவனித்து வரத் தொடங்கினார். சபையின் வைப்பு நிதியாக ரூபாய் ஐம்பதாயிரம் என்ற நிலையில் இவ்வமைப்பு வலுப்பெற்றது. இச்சபையின் பெருமையும் இதனை தன் வழியால் நடத்தி வரும் கதிரேசனாரின் புகழும் இணைந்துத் தமிழகமெங்கும் பரவத் தொடங்கின.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 3”

அதிகம் படித்தது