நவம்பர் 27, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 6

முனைவர் மு.பழனியப்பன்

Nov 14, 2020

siragu kathiresa chettiyar1

உரையாசிரியர்:

திருவாசகத்திற்கு பலரும் போற்ற, மெய்யன்பதர்கள் கசிந்துருக உரைநலம் கண்டவர் பண்டிதமணியார். அவர் திருச்சரகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகியவற்றிற்கு மட்டுமே உரைவரைய காலம் அனுமதித்தது. என்றாலும் அவரின் இ்ம்மூன்றுப் பனுவல்களுக்கான உரைகளை மட்டுமே கருதி அவற்றின் மேன்மைத்தன்மை கருதி, அவற்றின் தனித்தன்மை கருதி அவ்வுரை கதிர்மணி விளக்கம் என்று தனித்து அழைக்கப்பெறும் சிறப்பினைப் பெற்றது.

திருவாசகத்திற்கு முற்றிலும் உரையெழுத பண்டிதமணியாருக்குக் காலம் கைகூடவில்லை. காலம் கைகூடியிருந்தால் திருவாசகம் முழுமைக்கும் கதிர்மணி விளக்கம் கிடைத்திருக்கும். பக்தியாளர்களுக்கு கூடுதல் மெய்யனுபவம் சித்தித்திருக்கும்.

‘‘திருச்சதகம் நுவலும் பொருள் பக்தி வைராக்கிய விசித்திரம் என்பது. நீத்தல் விண்ணப்பம் என்ற பகுதியின் உள்ளுறை உலக வாழ்க்கையின் பற்றறுதி என்பது, திருவெம்பாவை இப்பகுதியின் உள்ளுறை சக்தியை வியந்தது என்பது இவ்வாறு கதிர்மணி விளக்கம் கூறுகின்றது’’ என்று இம்மூன்றின் தலைப்பு விளக்கத்தை பண்டிதமணியாரின் சொற்களைக் கொண்டு எடுத்துரைக்கிறார் ஆய்வாளர் தியாகராசன் (பண்டிதமணியின் தமிழ்ப்பணி,ப.187)

திருவாசகத்தின் முதல் நான்கு பகுதிகளுக்கு மறைமலை அடிகள் எழுதிய விளக்கம் போதுமானது என்பது கருதியே ஐந்தாம் பகுதியான திருச்சதகத்தில் இருந்து தன் உரை வழங்கும் நிலையைத் தொடங்குகிறார் பண்டிதமணியார். அது திருவெம்பாவை வரை தொடர்ந்தது. இச்செயலால் அவர் மறைமலை அடிகளின் புலமை மீது கொண்டிருந்த உயர்வும் வெளிப்படுகிறது, செய்ததையே செய்து காலம் கழிக்கலாகாத அவரின் காலச் சேமிப்பும் தெரியவருகிறது.

பண்டிதமணி அவர்களின் உரையமைப்பு என்பது மாறனலங்காரம் சுட்டும் இலக்கண விதியைத் தழுவியது என்கிறார் ஆய்வாளர் தியாகராசன் (பண்டிதமணியின் தமிழ்ப்பணி.ப.187) கருத்துரைத்தல், கண்ணழித்தல், பொழிப்புத்திரட்டல், அகலங்கூறல் என்று நான்கின் அடிப்படையில் பண்டிதமணியாரின் உரைநலம் அமைக்கப்பெற்றுள்ளது. இதை பண்டிதமணி அவர்களும் தன்னுரையாகத் தெரிவித்துள்ளார். இந்நான்கின் விளக்கங்கள் பின்வருமாறு.

கருத்துரைத்தலாவது திருப்பாட்டை அடுத்து அமையும் கருத்துரையாகும். கண்ணழித்தல் என்பது பதப்பொருள் உரைத்தலாகும். பொழிப்புத் திரட்டல் என்பது பொருள்களைத் திரட்டிக் காட்டுதலாகும். அகலம் கூறுதல் என்பது திருப்பாட்டின் பொருளை மேலும் அறிவதற்கு வினாவிடை உள்ளுறுத்துதலும், நயங்கள் காட்டியும் மேற்கோள் காட்டியும் விளக்குதல் ஆகும். இவையனைத்தையும் உள்ளடக்கிப் பண்டிதமணியாரின் உரை அமைக்கப்பெற்றுள்ளது.

திருச்சதக உரைத்திறன்

திருச்சதகம் என்பதற்குப் பண்டிதமணியார் தரும் விளக்கம் பின்வருமாறு ‘‘திருச்சதகம் என்பது தெய்வத் தன்மை வாய்ந்த நூறு திருப்பாட்டுக்களைத் தன் அகத்துக் கொண்ட ஒரு பகுதி என்னும் பொருள்தாம். சதம் என்னும் வட சொற்கு நூறு என்பது பொருள். அந்நூறு எண்களையுடைய திருப் பாட்டுக்களைத் தன்னகத்துக் கொண்டது என்னும் பொருளில், ஓர் இடைச்சொற் புணர்ந்து, சதகம் என்றயிற்று. ஒரு பாட்டின் ஈற்றில் உள்ள சொற்றொடர், சொல், எழுத்து என்னும் இவற்றுள் ஒன்றை அடுத்த பாட்டின் முதலாகக் கொண்டு பாடுதல் அந்தாதித் தொடர் எனப்படும். இவ்வந்தாதித் தொடராகவே இந்நூறு திருப்பாட்டுக்களும் அருளிச் செய்யப்பட்டன. “மெய்தான் அரும்பி” என முதல் திருப்பாட்டின் முதலடி தொடங்கப்பட்டு, “மெய்யர் மெய்யனே” என நூறாம் திருப்பாட்டின் இறுதி முடிக்கப்பட்டமை அறிக. (திருச்சதக முன்னுரைப் பகுதி)

இவ்வாறு எடுத்துக்கொண்ட பனுவலின் தலைப்புத் தொடர்பினை நயம் பட உரைப்பது பண்டிதமணியாரின் இயல்பாகும். பாடல்களுக்குப் பொருள் சொல்லும்போது இன்னும் பல நயங்கள் வெளிப்படும். திருச்சதகத்தின் ஒருபாடலின் உரை முறைமை எடுத்துக்காட்டிற்காக இங்குக் காட்டப்படுகின்றது.

உத்தமன் அத்தன் உடையான்
அடியே நினைந்துருகி
மத்த மனத்தொடு மால்இவன்
என்ன மனைநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட
ஊரூர் திரிந்துஎவரும்
தத்தம் மனத்தன பேசஎஞ்
ஞான்றுகொல் சாவதுவே

கருத்துரை:

தன் மனம் முதலியன பிறர் வயப்படாமல் சிவபிரான் ஒருவனையே பற்றி நிற்கும் என முன்னைத் திருப்பாட்டிற் கூறிய அடிகள், அங்ஙனம் நிகழும் தம் நினைவு சொற்செயல்கள் உலகத்தவர்க்கு மாறுபாடாகத் தோன்றினும் அந்நிலை மகிழ்ந்து ஏற்கத்தக்கது என்பதை இத்திருப்பாட்டிற் கூறுகின்றார்.

பதிவுரை:

உத்தமன் அத்தன் உடையான் — தலையாயவனும் தந்தையும் உடையானும் ஆகிய இறைவனுடைய, அடியே நினைந்து உருகி — திருவடியே இடையறாது எண்ணி உள்ளம் உருகி, இவன் மால் என்ன — இவன் மயக்கமுற்றான் எனப் பிறர் கருதும்படி, மத்த மனத்தொடு — களிப்பேறிய நெஞ்சத்தோடு, ஊர் ஊர் திரிந்து — பல ஊர்களிலும் போக்கு வரவு செய்து, மன நினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட — என் உள்ளக்கருத்திற் பொருந்தின பொருந்தின செய்திகளை யான் பேச, எவரும் —இந்த நிலையைக் கண்டார் எல்லோரும், தம் தம் மனத்தன பேச — தங்கள் தங்கள் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்திச் சொல்ல, சாவது எஞ்ஞான்று — இவ்வுலக வாழ்க்கையினின்றும் ஒழிவடைவது எப்பொழுது? என்பது.

விளக்கவுரை:

நினைந்து உருகி என்னத் திரிந்து சொல்லிடப் பேசச் சாதல் எஞ்ஞான்று என முடிக்க. ஏகாரங்கள் இரண்டனுள், முன்னது பிரிநிலையும், பின்னது ஈற்றசையுமாம். “கொல்” அசை நிலை.

உலகத்து அறிவுடைப் பொருள்களை நோக்க, இறைவன் ஆண்டான் எனவும் அவை அடிமை எனவும், அறிவில் பொருள்களை நோக்க, அவன் உடையான் எனவும் அவை உடைமை எனவுங் கூறுப. இம்முறையில் அறிவுடைப் பொருள்களை ஆளும் இயல்புடைமையால் ஆண்டான் என்பது போதர உத்தமன் எனவும், அறிவின் பொருள்களை உடைமையாகக் கொள்ளும் இயல்பினன் என்பது போதர உடையான் எனவும் கூறினர். ஓர் அரசன் புதல்வன் வேடர் சூழலிற் பட்டு தன் இயல்பை அறியாமல் வளர்ந்தானாக, நல்லூழ் வயத்தால், “நீ வேட்டுவன் மகனல்லை; உண்மையில் என் புதல்வனாவாய்” என அறிவித்து, அவ்வரசர் அப் புதல்வற்குத் தன் அரசுரிமைச் செல்வத்தை நல்குதல் போல, அடிகள் ஐம்புலமாகிய வேடர் சூழலிற் பட்டுத் தம் இயல்பு அறியாமல் இருந்த நிலையில், கட்டறுக்கும் பருவம் உற்றமையால், “நீ புலனுகர் இன்பம் பெறுதற்கு உரியை அல்லை; உண்மையில் பேரின்பம் நுகர்தற்குரிய என் புதல்வனாவாய்” என மெய்யுணர்வால் அறிவித்து, இறைவன் தன் பேரின்பப் பெருஞ் செல்வத்தை அருளிக் காத்தமை தோன்ற, “அத்தன்” என்றார். ஆண்டவன் திருவருளை நினைத்தற்கு அவன் திருவடியே அன்றி வேறு பற்றுக்கோடு இன்மையால், “அடியே நினைந்து” எனவும், அந்நினைவின் முதிர்ச்சி தோன்ற, “உருகி” எனவும் கூறினர்.

அடிகள் தம் புறச்செயலைக் கண்ட பிறர், உண்மையுணராமல் பித்துப்பிடித்து மயங்கினர் என்று கருதும்படி, பல ஊர்களிலும் சிவதரிசன நிமித்தம் போக்குவரவு செய்து, சிவானந்தத் தேறலை மிகுதியாக உண்டு, அக்களிப்பினால் உலகியலை மறந்து தம் உள்ளக் கருத்திற்குப் பொருந்தின பொருந்தினவாகிய மெய்யன்பு மயமான சொற்களைத் தாம் பேசவேண்டும் என்பார், “மாலிவன் என்ன மத்த மனத்தொடு ஊரூர் திரிந்து மன நினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட” எனவும், அடிகள் அங்ஙனம் உலகியலை நோக்காமல், இறையருள் வயப்பட்டுத் தம் அநுபவத்திற் கண்ட உண்மைகளை வெளிப்படுத்துக் கூறும் மொழிகளைக் கேட்பார் எல்லோரும் தத்தம் உள்ளங்களில் நல்லனவாகவும் தீயனவாகவும் தோன்றிய கருத்துக்களை வெளிப்படுத்துக் கூறினும் கூறுக என்பார், “எவரும் தத்தம் மனத்தன பேச” எனவும் கூறினர். அடிகள் அருட்செயலைக் கண்டாருள் ஒரு சாரார், அவர் தம் மெய்யன்பின் இயல்பை உய்த்துணர்ந்து, அவ்வுணர்ச்சியால் தம் உள்ளத்துத் தோன்றிய நிகழ்ச்சிகளை வெளிப்படுத்துப் பாராட்டிப் புகழ்ந்து கூறுவர் என்பதும், பிறிதொரு சாரார் உண்மை யுணராமல், புறச்செயலைக் கண்டு, அக்காட்சி காரணமாகத் தம் உள்ளத்துத் தோன்றிய நிகழ்ச்சிகளை வெளிப்படுத்து இகழ்ந்து கூறுவர் என்பதும், “எவரும் தத்தம் மனத்தன பேச” என்னுந் தொடரிற் குறிப்பிற் புலனாதலறிக.

புகழ்ந்து கூறுதலையும் இகழ்ந்து கூறுதலையும் குறித்து மனத்தனவெனப் பன்மையாற் கூறினர் என்பது. இங்ஙனம் தம்மைப் புகழ்வாரும் இகழ்வாரும் முறையே நல்வினை தீவினைகளை ஏற்றுக்கொள்ள, அதன் முகமாகத் தமக்கு வினையொழிவு உண்டாக வேண்டுமென்பது அடிகள் கருத்தன்று. “கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றி” என்றபடி, ஆண்டவன் அருளினால் வினை ஒழிதல் வேண்டும் என்பதே குறிக்கோள். ஆயினும் ஞானநிலை யுடைய பெரியோன்பால் அமைந்து கிடைக்கும் ஆகாமிய கன்மமாகிய நல்வினை தீவினைகள், முறையே அப் பெரியோனைப் புகழ்வார்பாலும் இகழ்வார்பாலும் அடைய, அவற்கு அவ்வினை யொழிவுண்டாம் என்பது அறிவியல் நூலிற் கண்டதாகலின், அம்முறையாலும் அடிகளின் உண்மை அன்பைக் கண்டு புகழ்ந்து கூறுவார், ஆகாமிய கன்மத்துள் நல்வினைப் பகுதியையும், புறச்செயலைக் கண்டு எள்ளிக் கூறுவார் தீவினைப் பகுதியையும் ஏற்றுக்கொள்ள, வினையொழிவுண்டாம் என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. “சாதல்” — ஈண்டுக் கட்டறுத்து உலக வாழ்வினின்றும் ஒழிவு பெருதலைக் குறிக்கும். அடிகள் “சகம்பேயென்று தம்மைச் சிரிப்ப, நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை பூணதுவாகக்” கொண்டு, உலக வாழ்க்கையினின்றும் ஒழிவு பெறுதல் எப்பொழுது வாய்க்குமோ என்பார், “எஞ்ஞான்று கொல் சாவதுவே” என்றார்.

இத்திருப்பாட்டில், “ஒத்தன ஒத்தன சொல்லிட” என்பதும், “தத்தம் மனத்தன பேச” என்பதும் ஆகிய இரண்டனையும் பிறர் கூற்றுக்களாகக் கொண்டு, முறையே உள்ளூராரும் அயலூராரும் அடிகளைக்கண்டு கூறியனவாகப் பலரும் உரை கூறியுள்ளார். உள்ளூரார் அயலூரார் கூற்றுக்களை நினைந்து அடிகள் கூறினாரென்றதில் ஒரு பொருட்சிறப்பின்மையையும், பின்னர் “எவரும் தத்தமனத்தன பேச” என்றதனால், முன்னர் “ஒத்தன ஒத்தன சொல்லிட” என்பது அடிகள் கூற்றென்பது தானே பெறப்படுதலையும் அவர் உணர்ந்திலர். அதனால் அஃது உடையன்றென்பது தெளிக.

இதன்கண், உலகத்தவர் புகழ்தலினும் இகழ்தலினும் விருப்பு வெறுப்புக் கொள்ளாமல், திருவருள் ஒன்றிலே தோய்ந்து நிற்றல் மெய்யுணர்வின் பயனாம் என்பது பெறப்படுதலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக. இவ்வாறு விரிவான ஆழமான நயமான உரை காண்பது என்பது பண்டிதமணியாரின் உரைச்சிறப்பாகும்.

நீத்தல் விண்ணப்பம் உரைத்திறன்

நீத்தல் விண்ணப்பத்தின் தன்மை பற்றிப் பின்வருமாறு கருத்துரைக்கிறார் பண்டிதமணியார். ‘‘நீத்தல் விண்ணப்பம் என்னும் இப்பகுதியின் உள்ளுறை பிரபஞ்ச வைராக்கியம் என்தாம். உலக வாழ்க்கையில் பற்றறுதி என்பது இத்தொடரின் பொருளாகும். திருச்சதகத்தில் ‘பக்தி வைராக்கிய விசித்திரம்’’ என்று பொது முறையில் புலப்படுக்கப்பட்டதே ஈண்டு பிரபஞ்ச வைராக்கியம் எனச் சிறப்பு முறையில் கூறப்படுகிறது. இதனால் திருச்சதகத்திற்கும், இதற்கும் உள்ள இயைபு புலனாதல் அறிக’’ என்று திருச்சதகத்தினையும் அதனைத் தொடரும் நீத்தல் விண்ணப்பத்தையும் தொடர்புபடுத்தி உரை காணுகின்றார் பண்டிதமணி. நீத்தல் விண்ணப்பப் பாடல்கள் பலவற்றிற்கு அவர் தந்த உரைநலம் எண்ணி எண்ணிப் போற்றத்தக்கது.

‘‘இருதலைக் கொள்ளியினுள்ளெறும் பொத்து’’ என்று ஒரு உவமையை நீத்தல் விண்ணப்பம் ஒன்பதாம் பாடலில் கையாளுகின்றார் மாணிக்கவாசகர். அதற்குப் பண்டிதமணி தரும் விளக்கம் போற்றற்குரியது.

‘‘இருதலைக் கொள்ளி- இரண்டு பக்கமும் நெருப்புப் பற்றியெரியும் கொள்ளிக்கட்டை. ஒரு கட்டையின் இரு பக்கங்களிலும் தீப்பற்றி எரியுற்கால் அக்கட்டையின் நடுவிடத்தில் தங்கிய எறும்பு இரு மருங்கும் சென்று உய்ந்து போதற்கு இயலாமல் கெட்டழிதல் போல் இவ்வுலக வாழ்க்கையை வெறுத்தும் நின்னை அணுக இயலாமலும் வருந்தி உழல்கின்றேன் என்பார், ‘‘இருதலைக் கொள்ளியினுள்ளெறும்பொத்து’’ என்றார். கொள்ளி நடுவண், கொள்ளி மேல் என்னாது கொள்ளியுள் என்றது ஒரு நயம். கொள்ளி நடுவிடத்துள்ள எறும்பு, அங்கும் இங்கும் சென்று போக்குவழி பெறாமல் உழன்று அக்கொள்ளிக்குப் பற்றுக்கோடாக உள்ள தொன்றைத் தானும் பற்றி ஒருவாறு உய்யவுங் கூடும். அக்கொள் நிலத்திற் கிடந்தால் அவ்வெறும்பும் நிலத்தில் இறங்கலாம். அஃது ஒன்றிற் சார்த்தப்பட்டிருந்தால் அச்சார்ச்சிப் பொருளைத் தானும் பற்றி உய்யலாம். அக்கொள்ளி உட்டுளையுடைய மூங்கிலாக இருக்க முன்னரே அதன் துளையுள் ஓர் எறும்பு நுழைந்திருக்குமாயின், இருபுறமும் நெருப்பு எரியுங்கால் அதனுட்பட்ட அவ்வெறும்புக்கு எவ்வாற்றானும் உய்யும் நெறி அற்றென்பது கண் கூடாகக் காணத்தக்கது. இந்நயம் கருதியே கொள்ளிமேல், நடு என்னாது ‘‘இருதலைக்கொள்ளியின் உள் எறும்பொத்து’’ என்றார் என்க. இதனால் அடிகளது ஆராய்ச்சி நுண்கருத்துப் புலனாதல் அறிந்து இன்புறத்தக்கது. இருதலைக் கொள்ளியின் ஒரு தலை இவ்வுலக வாழ்க்கையின் வெறுப்பிற்கும், மற்றொரு தலை ஆண்டவது பிரிவுக்கும் உவமம் ஆயின. ஆண்டவனது பிரிவினால் உண்டாய சூடும் ஆற்றவொண்ணாதது என்பது கருத்து. விரிதலை- துன்ப நிகழ்ச்சியினால் உண்டாம் அலங்கோலத்தின் அறிகுறியாம். இங்ஙனம் உய்யும் நெறி அறியாமல் தவிக்கின்ற நிலையில் என்னைக் கைவிடலாகாதென்பது வேண்டுகோள் விண்ணப்பமாகும்’’ (நீத்தல் விண்ணப்பம், ப.49)

உவமை ஒன்றுக்கு நயம்பட விளக்கம் தரும் பண்டிதமணியாரின் நுண்மான் நுழைபுலம் கற்பாருக்கு இலக்கிய இன்பம் மிகச் செய்வதாகும்.
‘‘பரம்பரனே, நின் பழவடியாரோடு’’ என்ற தொடர் பாடல் எண் முப்பத்தைந்தில் இடம்பெற்றுள்ளது. பரம்பரன் என்பதற்கும், பழவடியார் என்பதற்கும் பண்டிதமணியார் உரைகாணும் முறை பின்வருமாறு.

பரம் என்னும் வடசொல் மேலானது என்று பொருள்படுமாதலின், பரம்பரம் என்பது மிக மேலான வீட்டு நிலையை உணர்த்துவதாகும். அதனால் மெய்மையான வீட்டு நிலையை யருளும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் பரம்பரன் எனப்பட்டான். ஈச்சுவரன், பரம்பரன் முதலிய சொற்களெல்லாம் மற்றைத் தேவர்களை உபசாரமாகவும், இறைவனை உண்மையாகவும் குறிக்கும் என்பதை மறையாகம ஆராய்ச்சி நூல்கள் தெளிவுறுத்துக் கூறுவன. உண்மையான வீட்டுநிலை, நெடுங்காலம் அருந்தவம் இயற்றப்பெற்றதாகலின் அத்தவ முயற்சி மேற்கொண்டு ஒழுகும் மெய்யடியாரே பழவடிவயாராவர். ‘‘பன்னாளுன்னைப் பணிந்தேத்தும் பழையவடியார்’’ என்னும் அடிகள் திருவாக்கும் இதனை வலியுறுத்துவதாகும். சிவபிரான் பரம்பரனாதலும் அவனடியார் பழவடியாராதலும் இயல்பே. இறைமைக்குணம் இல்லாரைக் கடவுள் எனக்கொண்டு அவரால் மெய்மையான வீட்டுநிலையை அடையலாம் என்று நம்பி முயல்வோரெல்லாம் சின்னாளில் உண்மையுணர்ந்து அம் முயற்சியினின்றும் மீள்வாராதலின் அவர் பழவடியாராதல் சாலாதென்க.’’ (நீத்தல் விண்ணப்பம், ப. 158)

இக்கருத்துரை வீட்டின்பம் நல்கும் பரம்பரன் சிவபெருமான் என்பதையும், மாற்றி மாற்றித் தெய்வத்தை வழிபடும் அடியார்கள் பழவடியார் ஆகமாட்டார் என்பதும் உணர்த்துவதாக உள்ளது. இவ்வாறு அடிக்கு அடி, சொல்லுக்குச் சொல் நயம் காணும் நயவுரையாசிரியர் பண்டிதமணியாவார்.

திருவெம்பாவை உரைத்திறன்

திருச்சதகத்தில் பொதுமை நிலையில் கூறப்பட்ட பக்தி வைராக்கிய விசித்திரங்களுள், வைராக்கியத்தின் சிறப்பியல்பை நீத்தல் விண்ணப்பத்திலும், பக்தி தோன்றுவதற்குக் காரணமாக சக்தியின் (உமா தேவியின்) பேருபகாரச் செயலைத் திருவெம்பாவையிலும் மாணிக்கவாசகப் பெருமான் கூறியருளுகின்றார் என்று திருவெம்பாவைக்குப் பண்டிதமணி விளக்கமளிக்கின்றார்.

திருவெம்பாவையில் குறிக்கத்தக்க ஆனால் மயக்கம் தருகின்ற ஒரு தொடர் ‘உன்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்பதாகும். இத்தொடரின் மயக்கத்தைப் போக்குகின்றது பண்டிதமணியாரின் உரை.

இப்பழமொழி திருமணக் காலத்தில் மணமகளை மணமகன் பால் ஓம்படுத்தற் பொருட்டுப் பெற்றோர் கூற்றாகப் பண்டு வழங்கியது என்ப. மணமகன் கைப்பிடித்த ஞான்றே அவனுக்கு அப்பெண் உரியவளாகவும் அவளைப் பெற்றோர் தம் ஆர்வத்தால் ‘‘சிறப்பு முறையிலும் பாதுகாக்குங் கடமை நின்பாலதே’’ என வற்புறுத்திக் கூறுமுகமாக எழுந்ததாகும் இப்பழமொழி.

‘‘பருவமடைந்த மகளிரை உரிய காலத்தே மணஞ் செய்து கொடுத்தல் தங்கள் கடமை எனப் பெற்றோர் கருதுவது இயல்பு. அம்முறையில் எம்மைப் பெற்றோரும் எம்மை மணஞ்செய்து கொடுக்குங்கால் அப்பழஞ் சொல் அவர்களால் கூறப்படுமே என்பார் புதுக்கும் எனவும் அந்நிலையில் எங்களுக்குக் கணவராக வர இருக்கின்றவர்கள் குடிப்பிறப்பு, உருவம், பருவம், அறிவு, அன்பு, ஆண்மை, திரு முதலியவற்றால் ஒத்து உலகத்தார் மதிக்கும் தகுதிகள் பல உடையராயினும் எங்கள் பெருமானாகிய நினக்கு அன்பராம் சிறப்புடைத்தகுதி இல்லாதவராயின் எங்கள் வாழ்க்கை பயனுடையதாகாதே என்ற அச்சமே எங்கள் உள்ளத்தில் குடிகொண்டுள்ளது என்பார். ‘எம் அச்சத்தால்’ எனவும் இவ்வச்சங் காரணமாக நின் திருமுன் யாங்கள் கூறும் ஒரு செய்திக்குத் திருச்செவி சாய்த்தருள வேண்டுமென்பார். அச்சத்தால் உனக் கொன்றுரைப்போம் கேள் எனவும் கூறினார் என்க. (மேற்கோள், பண்டிதமணியின் தமிழ்ப்பணி,ப.197) என்ற உரைப்பகுதி சொல்நலமும், பொருள்நலமும் கொண்டு மயக்கத்தைத் தீர்த்து வைப்பதாக உள்ளது.

இவ்வாறு அருள் மணக்கும் செய்யுட்களில் உள்ள நுண்பொருள்களைப் பண்டிதமணியார் போன்ற உரையாளர்களால் எடுத்துரைக்கும்போது அதனால் பெரும் பயன் பக்திக்கும் ஆகின்றது. தமிழுக்கும் ஆகின்றது. உயிர்ப்பிறவிக்கும் மருந்தாகின்றது.

பண்டிதமணியார் கண்ட உரை நயவுரை ஆகும். இவர்தம் உரையில் நிரல் நயம், அடைமொழி நயம், சொல்நயம், தொடர்நயம், பொருள் நயம், இலக்கண நயம், எடுத்துக்காட்டு நயம், கருத்து நயம், மறுப்பு நயம், ஒப்பியல் நயம் போன்ற பல நயங்கள் இடம்பெற்றுள்ளன என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். (பண்டிதமணியின் தமிழ்ப்பணி,ப.262)

செய்யுளில் நயம் காண்பதற்கு சொல் நலனும், பொருளறிவும், கவிதையை உணரும் திறனும், காலத்திற்கேற்ற சிந்தனையும் வாய்க்கப்பெற வேண்டும். இவையணைத்தும் வாய்க்கப்பெற்றதால் உரையாசிரியர்களில் கதிராக மணியாக கதிர்மணியாக பண்டிதமணி விளங்கினார். அவரின் உரை கதிர்மணி விளக்கமாக உரைகளுக்குள் விளங்குகின்றது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 6”

அதிகம் படித்தது