சனவரி 23, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 10

முனைவர் மு.பழனியப்பன்

Dec 12, 2020

siragu kathiresa chettiyar1

பண்டிதமணி அவர்களின் உரை கதிர்மணி விளக்கம் எனத் தனிப்பட நிற்பதைப்போல அவரின் மாணவர்கள், அவரைப் பின்பற்றுவோர் ஆகியோரால் பண்டிதமணியம் என்ற தனிப்பாதை வகுக்கப்பெற்றுள்ளமை, அவர் நினைவைப் போற்றுவதாக உள்ளது.

இப்பாதையின் முன்னணியில் நிற்பவர் செம்மல் வ.சுப.மாணிக்கனார். பண்டிதமணியாரின் நேரடி மாணக்கர் இவர் ஆவார். சன்மார்க்க சபை விளங்கும் ஊரான மேலைச்சிவபுரி இவரின் பிறந்த ஊராகும். சபையில் பண்டிதமணியாரின் அருகிருந்துத் தமிழ் அறிந்தவர். இவரே பண்டிதமணியாரின் நூல்கள் மறுபதிப்பு பெறவும், சபை நன்முறை வளர்ச்சி பெறவும் உதவியவர். இவர் பண்டிதமணியம் என்ற கொள்கையை முன்வைக்கின்றார்.

‘‘எத்துணையோ ஆயிரங் காத தூரங்களுக்கு அப்பாலுள்ள ஆங்கில தேயத்தார் தம் மொழிகளில் இவ்வரிய வேதாகம உபநிடதங்களைப் பொருட்படுத்தி மொழி பெயர்த்துப் பலவகைச் சிறந்த ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் வெளிப்படுத்தியிருக்கின்றனர். தொன்று தொட்டு ஒற்றுமையோடு வழங்கப்பட்டு வரும் நம் தமிழ்மொழியில் இது காறும் அவை வெளிவராமை ஒரு குறையேயாம். தெளிவான தமிழ் உரைநடையிற் பல்வகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் அவை வெளிவரல்வேண்டும்’’ என்ற ஒரு குறிப்பினை முன்வைத்து வ.சுப. மாணிக்கனார் பண்டிதமணியத்தை வளர்த்தெடுக்கிறார்.

‘தொன்றுதொட்டு ஒற்றுமையோடு வழங்கப்பட்டு வரும் நம் தமிழ் மொழியில்’ என்ற தொடரிலிருந்து வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள உறவைப் பண்டிதமணி எப்படி மதிக்கிறார் என்பது வெளிப்படை. தமிழில் இயல்பான பற்றுடைய பண்டிதமணியாருக்குப் பாரத மொழிகளில் ஒரு பெருமதிப்பு உண்டு. ‘‘நம் பாரத கண்டத்து மொழிகளை எல்லாம் நிலை பிறழாது என்றும் திருந்திய முறையிற்றிகழ்தல், மூல நூல்கள் எல்லாம் செய்யுள்களால் ஆக்கப்பட்டமையானேயாம்’’ என்று இப்புலவர் பெருமகன் வடித்தெடுத்த கருத்து, மொழி வளர்ச்சியுடையார்தம் சிந்தனைக்கு உரியது. தமிழ்ப்பற்றும், தமிழ் வளர்ச்சிக்கென அயல்மொழி உறவும், தூய தமிழ்ச்சொற்களால் ஆய உரைநடையும், தூய மொழி பெயர்ப்பும், செல்வர் தம் செல்வம் தமிழுக்குப் பயன்பட வேண்டும் என்ற அறிவுரையும் மொழி பற்றிய பண்டிதமணியங்கள் ஆகும்’’ (பண்டிதமணி உருவச்சிலை திறப்பு விழா மலர், ப. 17) என்ற கருத்து பண்டிதமணியத்தின் தேவையை அதன் பன்முகத்தன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது.

இவ்வகையில் பண்டிதமணியாரின் கொள்கைகள் பண்டிதமணியம் எனப்படுகின்றது. அவர் இலக்கியங்கள் பற்றிய கருத்துரைகள், ஆய்வுரைகள், கட்டுரைகள், நூல்கள் முதலானவையும் பண்டிதமணியத்தின் ஒரு பகுதியாகும்.

பண்டிதமணியின் நினைவைப் போற்றல்

பண்டிதமணியாருக்கு மணிவிழாவை அவரின் அன்பர்கள் உரிய காலத்தில் சிறப்பாகக் கொண்டாடினர். அவரின் உருவப்படத்தைத் திறந்துவைத்துச் சபை பெருமை கொண்டது.

பண்டிதமணியாருக்கு அவர் பிறந்த மகிபாலன்பட்டியில் ஆயிரத்துத்தொள்ளாயிரத்து எழுபத்து நான்காம் ஆண்டு திருவுருவச் சிலை அமைக்கப்பெற்றுத் திறக்கப்பெற்றது. இவ்விழாவில் அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு, டாக்டர், கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு உருவச்சிலையைத் திறந்து வைத்தார். செட்டிநாட்டு அரசர் மு.அ. முத்தையா செட்டியார் தலைமை ஏற்றார். தமிழகத்தின் அன்றைய தொழில்த்துறை அமைச்சர் மாண்புமிகு செ. மாதவன் அவர்கள் சிறப்பு மலரை வெளியிட்டார்கள். தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், பேராசிரியர் வ.சுப. மாணிக்கம் அவர்களும் பாராட்டுரை தந்தார்கள். இவ்விழாவிற்கு வரவேற்புரையாற்றியவரும், விழாமலரைத் தயாரித்தவரும் பேராசிரியர் மெ. சுந்தரனார் ஆவார்.

இவ்விழாவின் குழுவினராக தவத்திரு குன்றக்குடி அடிகளார், கம்பனடிப்பொடி சா. கணேசன், திரு தென்னரசு, கதி. கனகசபாபதி போன்ற பலர் அமைந்தனர். விழாமலரில் இருபத்தொரு அன்பர்கள் பண்டிதமணியாரின் அருமை பெருமைகளைத் தொகுத்து எழுதியுள்ளனர். இக்கட்டுரைகளில் ஒன்றான பண்டிதமணியாரின் தமிழ்க்கொள்கைகள் என்ற வ.சுப. மாணிக்கனார் கட்டுரையில்தான் பண்டிதமணியம் என்ற கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

பண்டிதமணியாரின் தமிழ்ப்புலமையை, தமிழ்த் தொண்டைப் போற்றும் அனைத்துப் பணிகளும் பண்டிதமணியத்துள் அடங்கும்.
பண்டிதமணியாரின் நூற்றாண்டு விழாவிற்கு முன்னதான ஒரு முன்னோட்டமாக அவரின் திருவுருவச் சிலை திறப்பு விழா நடத்தேறியது.

அவரின் கொள்கைகளை அறிவிக்கும் பண்டிதமணியத்தின் தொடக்க இலக்கிய மலராக சிலை திறப்புவிழா மலர் அமைந்தது.

நூற்றாண்டு விழா

பண்டிதமணியின் நூற்றாண்டு விழா பலவகைகளில் கொண்டாடப்பட்டது. தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலைக் கல்லூரியின் நிறுவனர் சேவு. அண்ணாமலையார் பெருந்தொகையை வைப்புநிதியாக வைத்து மதுரைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணியார் பெயரில் ஓர் அறக்கட்டளையை அமைத்தார். பொள்ளச்சியைச் சார்ந்த அருட்செல்வர் மகாலிங்கர் பண்டிதமணிக்கு ஒரு பெரிய விழாவை எடுத்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தன் அரங்கம் ஒன்றிற்கு பண்டிதமணி அரங்கம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது.

சன்மார்க்க சபை பண்டிதமணியாரின் எழுத்தோவியங்களை மறுபதிப்பாக்கி மணம் கொண்டது. சபைக்குப் பண்டிதமணியாரின் நூல்களை உரிமையாக்கிப் பண்டிதமணியார் குடும்பம் சபைக்கு நன்றி பாராட்டியது.

நூல்கள் மறுபதிப்போடு, பண்டிதமணியாரின் நூல்கள் பற்றிய ஆய்வுகள், அவர் பற்றிய காவியம், அவர் பற்றிய பிள்ளைத்தமிழ் ஆகியவற்றை ஆக்கியும் சபை நூற்றாண்டு நினைவைப் போற்றியது.

கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில் முதுகலை தொடங்கப்பெற்ற போது மாணவர்கள் பங்கேற்ற ஆய்வரங்கிற்குப் பண்டிதமணி ஆய்வரங்கம் எனப் பெயரிடப்பெற்றது.

பண்டிதமணி பற்றிய படைப்பாக்கங்கள்

இவ்வழியில் பண்டிதமணியாரின் வரலாற்றைப் பாடும் காவியமாக விளங்குவது ஊன்றுகோல் ஆகும். இதன் ஆசிரியர் கவிஞர் முடியரசனார் ஆவார். இவர் சபையின் அன்பர். சபையின் சார்பு அமைப்பான கணேசர் செந்தமிழ்க்கல்லூரியின் மாணவர்.பண்டிதமணியாரை நேரில் கண்டுப் பழகியவர். இக்கவிஞர் தன் பழக்கத்தைப் பின்வருமாறு நூலின் முன்னுரையில் பதிவு செய்கின்றார்.

‘‘பண்டிதமணியவர்கள், சபையில் வந்து தங்கியிருக்கும் பொழுது பெருமக்கள் புடை சூழப் பெரிய விரிப்பில் சாய்ந்து அமர்ந்திருப்பார்கள். அவர்களைச் சுற்றி நாங்கள் நின்ற வண்ணம் இருப்போம். அப்பொழுது அவர்கள், எங்கெங்கு என்ன என்ன நிகழ்ச்சிகள் நடந்தனவோ அவ்வந் நிகழ்ச்சிகளையெல்லாம் ஒன்றுவிடாது சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள். நகைச்சுவை ததும்ப,மலர்ந்த முகத்துடன் உரையாடிக் கொண்டிருக்கும் பெழுது இடையிடையே எம்மையும் பார்த்துக் கொள்வார்கள். அப்பார்வை ‘ நீங்களும் இவற்றை மனத்திற் கொள்ள வேண்டும்’’ என அறிவுறுத்துமாப்போலிருக்கும். ஆம்.. நாங்களும் பதிய வைத்துக் கொண்டோம் என்பது போல முறுவலிப்போம்.’’ என்ற கவிஞரின் அனுபவம் அவர் காவியம் பாடப் பெரிதும் உதவியிருக்கிறது. (ஊன்றுகோல்,முன்னுரை)

ஊன்றுகோல் பதினேழு காதைகளைக் கொண்டுள்ளது. ஆசிரியம் ,விருத்தம் போன்ற பாடல்களால் புனையப்பெற்றுள்ளது. இக்காப்பியம் தரும் பண்டிதமணிக் கருத்துகளில் சில எடுத்துரைப்பது இங்குத் தேவையாகும்.
‘‘வடித்தெடுத்த சொல்லழகர், நீறணிந்த
வடிவழகர், இருமொழியும் சொன்ன நூல்கள்
படித்தெழுத்த வாயழகர், சான்றோர் கூட்டம்
பழகவரும் நட்பழகர், முதுமையுற்றார்
துடுக்குடுத்த வாதநோய் அவரைப் பற்றித்
துன்புறுத்தத் துயர்கடலுள் வீழ்ந்து நொந்தார்
வடுக்கெடுத்த மதியரைத்தான் தமிழவானில்
வாமுகில் ஒளிமறைக்க வந்தம்மா’’ ( ஊன்றுகோல் 15, 2)
என்ற இப்பாடல் அழகர் என்ற சொல்லடுக்கு ஆழ்வார் பாசுரத்தை நினைவு படுத்துவதாகும். வாதநோய் முகிலாக வந்து வடுக்கு எடுத்து தலைவாரிய மதி போன்ற முகம் கொண்ட பண்டிதமணியாரை மறைத்தது என்று கவிஞர் கற்பனையும் உண்மையும் நிறைத்துப் பாடுகின்றார். கவிஞரையும் நோய் வாட்டிய சமயம் அது என்பது இங்குக் கூடுதலாகக் கவனிக்க வேண்டிய செய்தி. ஆகவே காவியத்திலும் பிணியுறுகாதை என்றொரு பிணியின் கோரம் பற்றிச்சொல்ல வந்துள்ளது.

இந்நூல் சோம.லெ அவர்களின் பண்டிதமணி நூலைப் பெரிதும் தழுவியதாகும். பண்டிதமணியத்தின் ஒரு முத்து இதுவாகும்.

பண்டிதமணி பிள்ளைத்தமிழ்

பொற்கிழிக் கவிஞர் சொ. சொ. மீ . சுந்தரம் அவர்கள் பண்டிதமணிபிள்ளைத் தமிழ் என்ற இலக்கியத்தைப் பாடியுள்ளார். இதுவும் சன்மார்க்க சபையின் விருப்பத்தின் பேரில் படைக்கப்பெற்றது.

இப்பிள்ளைத்தமிழ் சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகிய பருவங்களுக்குப் பதிலாக திருநீற்றுப் பருவம், திருவாசகப் பருவம், சன்மார்க்க சபைப் பருவம் ஆகிய பருவங்கள் புதிதாகச் சேர்க்கப்பெற்றுள்ளன.
செந்தமிழுக்குச் சங்கம் வைத்திடு
தென்மது ரைப்பதிபோல்
சீரால் உயர்சன் மார்க்க சபைதனைச
சிவபுரி பெற்றதுவே
அந்தக் காலம் சங்கத் தலைவனாய்
ஆண்டவன் முன்வந்தான்
அவன்போலின்று தலைமைப் புலவன்
ஆகிட நீவந்தாய்.
வந்திடு புலவோர் மட்டும் முன்னாள்
வண்டமிழ் துய்த்தார்கள்
வளரும் சபையால் பலரும்இன்று
வாழ்வி லுயர்ந்தார்கள்
சந்த மிகுந்தமிழ் தந்திடு மாமணி
சபையில் எழுந்தருளே
சாலத் தமிழ்தரு மேலைச்சிவபுரிச்
சபையில் எழுந்தருளே’’ ( பண்டிதமணி பிள்ளைத்தமிழ்,ப.109)
என்ற இப்பாடல் சபையின் சிறப்பினை எடுத்துரைப்பதாகவும் அச்சபைக்குப் பண்டிதமணியை அழைப்பது போலவும் மீளவும் வந்து சேர அழைப்பது போலவும் விளங்குகின்றது.

இந்நூல் பண்டிதமணியின் மாணவர் வ.சுப. மாணிக்கனார் காலத்திற்குப் பின்பு கல்லூர்க் குழுவிற்குத் தமிழண்ணல் தலைமையேற்ற காலத்தில் வெளிவந்துள்ளது. பண்டிதமணியாரின் நூற்றாண்டுக்குப் பின்னாகப் பத்து ஆண்டுகள் கழித்து அதாவது 1991 ஆம் ஆண்டு இது வெளியிடப்பெற்றுள்ளது.

திறனாய்வு நூல்கள்

பண்டிதமணியின் நூல்கள் வெளிவந்த நூற்றாண்டு விழாத் தருணத்தில் திறனாய்வு நூல்கள் பலவும் வெளிவர முயற்சிகள் மேற்கொள்ளப்பெற்றன. அவ்வழியில் இரா. மோகன் எழுதிய பண்டிதமணியின் நடைநயம், ஆ. பழநி எழுதிய பண்டிதமணியின் நாடகத்தமிழ் ஆகியன வெளிவந்தன. கதிர்மணித்திறன் என்ற திருவாசக உரைத்திறன் வெளிவரவேண்டும்.

பண்டிதமணியின் நடைநயம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக விளங்கிய முனைவர் இரா. மோகன் அவர்கள் எழுதிய நூல் பண்டிதமணியின் நடைநயம் என்பதாகும். இந்நூல் பண்டிதமணியாரின் நடைத்திறனை விரிவாக ஆராய்கின்றது. ‘‘செந்தமிழ் நடை ஆசிரியர், தமிழ் நயத்தந்தை, ஒப்பியல் நோக்கு’’ ஆகிய மூன்று பகுதிகளை உடையது இந்நூல் ஆகும்.

ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை
வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தை
தேன்நக்க மலர்க் கொன்றைச் செஞ்சடையார் சீர் தொடுக்குங்
கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்

சேக்கிழார் பெருமானின் இப்பாடல் திருஞான சம்பந்தரைக் குறிப்பதாகும். இதில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள ‘வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக் கொழுந்தை’ என்னும் தொடர்மொழிக்குப் பண்டிதமணி கூறியுள்ள நயம் பாராட்டத்தக்கதாகும். இங்கும், குறிப்பாக ‘வளர்மதி’ என்னும் வினைத்தொகைக்கு ஆசிரியர் காட்டியுள்ள நுண்பொருள் மனங்கொளத்தக்கதாகும்.

‘சம்பந்தப்பெருமான் றிருமேனியின் ஒளியும் மழவிளங் குழவிப் பருவமும் பொலிந்து திகழ்தலைப் புலப்படுத்தற்கே, ‘வானத்தின் மிசையன்றி மண்ணில் வளர் மதிக்கொழுந்தை ’ என்றார். இஃதோரணியாகும். மதி வானத்தினூர்ந்தியங்குவது. இஞ்ஞானமதி மண்ணுலகிற்றிகழ்ந்தின்புறுவது. ஈண்டு வளர்மதியென வினைத்தொகையாகக் கூறியதன் நுண்பொருள் ஆராயத்தக்கது. வளர்மதிக்குப் பதினாறு கலைகள் நிரம்பியது மேல் வளர்ச்சியன்று. அதுபோலச் சம்பந்தப் பெருமான் றிருவுடல் பதினாறியாண்டு வளர்ச்சியுற்றுப் பின் பேரொளிப் பிழம்பாகிய இறைவடிவில் மறைந்தது. இவ்வுண்மை புலப்படுத்தற்கே வளர்மதி என்று கூறினார் போலும்’’

திருஞானசம்பந்தப் பெருமானின் வரலாற்றோடு இயைபுபடுத்தி ஆசிரியர் கூறியுள்ள இந்நயம் அறிஞர் உள்ளத்தை மிகவும் இன்புறுத்துவதாகும்’’ (பண்டிதமணியின் நடைநயம்,பக்.73-74) என்ற இப்பகுதி பண்டிதமணியின் நடைநயத்தையும் விளக்குகின்றது, மோகன் அவர்களின் கட்டுரைத் திறனையும் காட்டுகின்றது.

இந்நூலின் ஒரு கட்டுரைப்பகுதி பின்வருமாறு முடிவு பெறுகின்றது. ‘பண்டிதமணி தமிழுக்குச் செய்துள்ள தொண்டுகள் முன்பு யாராலும் செய்யப்படாதவை. செய்தற்கும் இயலாதவை. சுக்கிர நீதியும், சாணக்கியமும், மண்ணியல் சிறுதேரும், அன்பின் திருவுரு போலும் கட்டுரைகளும், திருவாசகக் கதிர்மணி விளக்கமும் பண்டிதமணி தமிழ்த்தாயின் திருவடியில் வைத்துள்ள தனிப்படையல்கள். அனைத்திற்கும் மேலாக அறிஞர் வ.சுப. மாணிக்கம் கூறுவதுபோல், ‘அறிவியல் கண்டுபிடிப்புப் போல, இலக்கியக் கண்டுபிடிப்பு என்ற ஒரு புதுத்தடங் கண்டவர் பண்டிதமணியார். இதனால் நயத்தந்தை என்ற சிறப்புப் பெயர் இவர்க்கே உரியதாயிற்று’’ ( மேலது,பக் 93-94)
இவ்வாறு இந்நூல் பண்டிதமணியின் நடைநயத்தை ஆராயும் திறனாய்வு நூலாக விளங்கிப் பண்டிதமணியத்தில் இணைகின்றது.

பண்டிதமணியாரின் நூற்றாண்டு விழாவிற்கு முன்னதான ஒரு முன்னோட்டமாக அவரின் திருவுருவச் சிலை திறப்பு விழா நடத்தேறியது. அவரின் கொள்கைகளை அறிவிக்கும் பண்டிதமணியத்தின் தொடக்க இலக்கிய மலராக சிலை திறப்புவிழா மலர் அமைந்தது.

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பண்டிதமணியும் தமிழும் – பாகம் – 10”

அதிகம் படித்தது