மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆவணப்படுத்தல் பயனும், அதில் தமிழர்களின் சிறப்பும் – பகுதி 3

காசி விசுவநாதன்

Feb 1, 2012

இது கட்டுரையின் மூன்றாவது மற்றும் இறுதி பகுதி. முந்தைய பகுதிகளுக்கான இணைப்புகள்:

ஆவணப்படுத்தல் பயனும், அதில் தமிழர்களின் சிறப்பும் – முந்தைய பகுதி 1

ஆவணப்படுத்தல் பயனும், அதில் தமிழர்களின் சிறப்பும் – முந்தைய பகுதி 2

 

பண்டைய காலங்களில் ஆவணப்படுத்தும் முறை

1. செப்பேடுகள், 2. கல்வெட்டுக்கள், 3. சுவடிகள், 4. நாட்டார் வழக்காற்றியல்.

1. செப்பேடுகள் : சங்க காலம் தொட்டு மூவேந்தர்களும், தமிழ் வேளிர்குடி தலைவர்களும் தங்கள் அரசாட்சி, போர் வெற்றிகள் ஆகியவற்றை செப்பேடுகளில் பொறித்து, காப்பிட்டு பாதுகாத்துள்ளனர்.வேள்விக்குடி செப்பேடு ஒரு சான்று. மிக பிற்காலத்தில், 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒல்லாந்தருக்கு தஞ்சை ரகு நாத நாயக்கர் அளித்த வணிக ஒப்பந்த செப்பேடு ( இன்றும் கோபன் ஏகன் அருங்காட்சியத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது ) அனைவரும் அறிந்ததே. இப்படியான பல செப்பேடுகள் அகழ்வாய்விலும், தனியார் நிலங்களிலும் கிடைக்கின்றன. அப்படிக் கிடைப்பவற்றை மாவட்ட ஆட்சியர், மாவட்ட அருங்காட்சியர் போன்றவர்களிடம் கையளித்து பாதுகாக்கலாம். இவை மேலும் வரலாற்று ஆய்வுகளுக்கு உதவும்.

2. கல்வெட்டுக்கள் : இந்தியாவிலேயே மிக அதிகமான கல்வெட்டு ஆவணங்கள் தமிழர்களாலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களும் கல்வெட்டுச் செய்திகளும் பொருந்தி வருவது, தமிழர்களின் துல்லியமான வரலாற்றுப்பதிவு செய்யும் முறையை சான்று சொல்லி விளக்குகிறது.

மாமன்னன் இராச இராச சோழனின் தமக்கையார், தமது இளவலிடம் (இராச இராச சோழனிடம்,) செப்பேடுகளில் கிடைக்கும் முந்தைய தகவல்களை, கோவில் சுற்றுச்சுவர்களில் கல்வெட்டுக்களாக , முந்தைய ஆவணங்களை பதிவேற்றம் செய்யும்படி அறிவுரை செய்கிறார். அதன் படி, தானும், தன் மகன் முதலாம் இராசேந்திரனும் சீரமைத்த 32 கோவில்களிலும், அந்த அந்தப் பகுதிகளின் பழைய தகவல்களை, கல்வெட்டுக்களாக ஆவணப்படுத்தப்பட்டு ” கல்லில் வடித்த சொல்லாக, காலம் கடந்தும் வாழ்ந்து வருகிறது. படித்த பெண்கள் வாழும் வீடும் நாடும் செழிப்புறும் அன்றோ..!?!?.

3. சுவடிகள் : சுவடிகள் தான் அன்றாட வாழ்வில் தமிழருக்கு மிக கூடுதலாய் பயன்பட்ட பொருள். இது பனை மரத்தின் கொடை. பனை மரம் தமிழரின் வாழ்வில் பிரிக்க முடியாத உறவு கொண்டது. பாலை படர்ந்த நிலங்களிலும் உயர்ந்து நின்று தன்னை முழுமையாக தமிழுக்கு கொடையளித்த பெருமை, பனை மரத்திற்கே முதன்மை. இதில் கிடைக்கும் ஓலைகளை செப்பம் செய்து துளையிட்டு நூலால் கோத்து வேப்பிலை காப்பிட்டு பராமரிப்பர். இதில் எழுத்தாணி கொண்டு எழுதியே, தங்கள் இலக்கியங்களை பதிவு செய்தனர் நம் பழந்தமிழர். ஆகவேதான் நாம் படிக்கும் எதனையும்  “நூல்” என்று சொல்கிறோம். வள்ளுவப் பெருந்தகையும் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்பதையும் உணர்க. இந்த சுவடிகளில்தான் நம் சங்க இலக்கியங்கள் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக, ஆவணப்படுத்தப்பட்டு பாதுகாத்து இன்று நமக்கு முகவரி சொல்கிறது. பனை ஓலைகள் சில நூற்றாண்டுகளே தாங்கி நிற்கும். அதனை பின்பு மீண்டும் படியெடுக்கவேண்டும். இது வழி வழியாக, படித்த பண்டிதர்கள் இதனை, தவறாமல் செய்ததனால் தான், தமிழ் தாத்தா அவர்கள் ஊர் தோறும் கவிராயர் வீடுகளை தேடிச்சென்று சங்க இலக்கியங்களை அச்சேற்றினார். இதனை முறையாக தமது, தன் வரலாற்றில் பதிவுசெய்துள்ளார்.

4. நாட்டார்வழக்காற்றியல் : நாட்டுப்புற பாடல்கள் தான் தொன்று தொட்டு பாமர மக்களால் உணர்வு குன்றாமல் தங்கள் வாழ்வியலை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக :       1. சங்கம் மருவிய காலங்களில் இருந்து சங்க இலக்கியங்கள் மன்னர்களாலும் ஆதரிக்கப்படாதவையாக மாறி, ஒரு சில தன் ஆர்வம் மிக்க, மத காழ்ப்பு இல்லாத கவிராயர், பண்டிதர் வீடுகளில் மட்டுமே போற்றிப் பாதுக்காக்கப்பட்டு வந்தது. அந்த இலக்கியங்கள் பல 19ம் நூற்றாண்டி பிற்பகுதியில் அச்சிற்கு வந்த பின்னர் தான், பெரும்பான்மையான மக்களுக்கும் தெரிய வந்தது. இந்த இடைப்பட்ட காலங்களில் கூட பாரி, அவர் தம் மகளிர், அதியமான் நெடுமாண் அஞ்சி, என பலரைப் பற்றியும் நாட்டுப்புற பாடல்கள் வாயிலாக படிக்காத பாமர மக்களே செவி வழியாக அந்த உண்மை வரலாற்றை அண்மைக்காலம் வரை கொண்டு வந்தனர். அந்தப் பதிவுகளில்தான் பாரி மகளிர் அங்கவை, சங்கவை என்ற பெயர் குறிப்பு வருகிறது. 2. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த நல்லதங்காள் கதையும் நம் நாட்டுப்புற பாடல்களில் பதிவாகி மக்கள் வாழ்வியலின் மாண்பினை ஆவணப்படுத்தி பெருமை சேர்த்தது.

இலக்கியமும்ஆவணங்களும் :- உலகம் முழுவதும், வரலாறு பல பண்பாடுகளை தொல்லியல் ஆய்வுகள் சான்றின் படியே அறியமுடிந்தது.. தமிழ்ச்சமுதாயம் ஒன்றுதான், தன் வாழ்வியலை மிகத்தெளிவாக பதிவு செய்தது. ஏனைய நாகரீகங்கள் அனைத்தும், தொன்மக் கதைகளாக தங்கள் வரலாற்றினை படிமங்களாக தொடர்ச்சியாக கூறி வந்த பொழுது, வரலாறும், வாழ்வும், இலக்கியங்களும் வேறு வேறு அல்ல என்று முதன்மையாக தங்களை வெளிப்படுத்திய ஒரே பண்பாடு, தமிழர் தொல்குடியே..!!!

அற்றைத்திங்கள்அவ்வெண்ணிலவின்

எந்தையுமுடையோமெங்குன்றும்பிறர்கொளார்

இற்றைத்திங்கள்இவ்வெண்ணிலவின்

வென்றறிமுரசின்வேந்தரெம்குன்றும்கொண்டார்

யாமெந்தையுமிலமே..!!!! ”

(புறநானூறுபாடல் -112 ; பாரிமகளிர்).

பாரி மகளிர் அன்று அழுதவையெல்லாம் இற்றைத்திங்களில் நாம் அறிய, அவர்கள் செய்வித்தது, தமிழர் வாழ்வும், வரலாறும், இலக்கியமும் வேறு வேறு அல்ல என்பது மட்டுமல்ல, இப்படிஒருதேர்ந்தஞானம், தமிழர்தொல்குடிக்குமட்டுமேஉரித்தானது. வாழ்வியலை அகம், புறம் என பிரித்து பதிவு செய்த ஒரே இனம், நாம் மட்டுமே. அந்த தொன்மைச்சிறப்பை நாம் தான் காப்பாற்ற வேண்டும்.

இதுகாறும் ஆவணப்படுத்தல் என்பது பற்றியும், ஆவணங்களை இனம் காண்பது பற்றியும், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவை குறித்தும் பார்த்தோம். எளிய மக்களாகிய நாம் என்ன செய்யலாம் ?

உங்கள் பெற்றோரின் திருமண அழைப்பிதழ், உங்கள் குடும்ப கடிதங்கள், நாட்குறிப்பேடுகள், உங்களது மற்றும் உங்கள் குடும்பத்தினர் கல்விச்சான்றிதழ், மதிப்பெண் அட்டைகள், உங்கள் குடும்பத்தின் பெயர் தொகுதிகள், குடும்ப கிளைகள் (Family tree ), என பல வகையாக ஆவணப்படுத்தலாம். தனி மனிதன் ஒரு குடும்பமாக, ஒவ்வொரு குடும்பமும் இணைந்து ஒரு தொகுப்பாக ( தோப்பு என்பதன் வேர்ச்சொல் ), தேசியஇனமாக நம்மை நாமே பதிவு செய்ய இவையெல்லாம் அவசியம்.

ஒரு குடும்ப ஆவணத்தால் இனத்திற்கோ, நாட்டிற்கோ என்ன பயன் ? என்று கேட்டால்…….

1. மதுரையில் ஒரு கல்லூரி மாணவி, சிற்றூரில் உள்ள தனது மூத்த சகோதரிக்கு, தான் எட்டயபுரம்பாரதியார்மணிமண்டபம் திறப்பு விழாவுக்குச் சென்றதையும் அங்கு சுப்புலட்சுமி அம்மாள் பாட்டுக்கச்சேரியும், அறிஞர்களின் சொற்பொழிகளைக் கேட்டதையும் கடிதத்தில் எழுதி பதிவு செய்கிறார்.

2.1960-களில் சிங்கப்பூர் நாட்டிற்கு கடல் வழியாக பயணப்பட்ட ஒருவர், தன் குடும்பத்திற்கு நலமாக வந்தடைந்ததையும், கப்பல் பயண அனுபவத்தையும் இயற்கைச் சீற்றமில்லாமல் இருந்ததையும் எழுதுகிறார். Razula என்ற கப்பல் பெயரும் அதில் குறிப்பிடப்படுகிறது.

3.1954ம் ஆண்டு சனவரி முதல் நாள் புதுக்கோட்டை மாவட்டம், கொப்பனாபட்டி என்ற சிற்றூரில் இரண்டு மாணவர்கள், தாங்களே உருவாக்கிய  வானொலிப்பெட்டியில் முதன் முதலாக அதில் பாக்கிஸ்தான் தலைவர் திரு. முகமது அலி ஜின்னா ஆற்றிய ஆங்கில உரை குறித்து தனது நாட்குறிப்பேட்டில் ஒருவர் பதிவு செய்கிறார்.

4. 1956-ம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இலக்கம் – 118, இளங்கோ இல்லம் என்ற மாணவர் விடுதியில் இருந்து, தன் தகப்பனாருக்கு பணம் அனுப்பும் படியும், அதற்கான தேவை, கையிருப்பில் இருந்த பணத்திற்கான செலவுக்கணக்கு ஆகியவற்றை பட்டியலிட்டு, தேர்வுக்கான கட்டண விபரங்களையும் குறிப்பிட்டு, கூடுதல் பொருள் உதவி நாடி, கடிதம் எழுதுகிறார்.

5. மதுரையில் ஒரு மாணவர் 1954 – ம் ஆண்டு, தன் நாட்குறிப்பேட்டில், தான் தேசிய மாணவர் படையணியில் இருந்து கல்லூரி சார்பாக, சித்திரை திருவிழாவிற்கு பாதுகாப்பு மற்றும் மக்கள் நலப்பணிக்கு உதவியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டதை பதிவு செய்கிறார்.

6. 1949-ம் ஆண்டு சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவி, தன் இளைய சகோதரனுக்கு, தேர்வுகள் நன்றாக எழுதினால் (Parker) பேனா வாங்கித்தருவதாக கடிதம் மூலம் உறுதி சொல்கிறார்.

7. இந்தியா வருகை தந்த பேராசிரியர் திரு. கிளாரன்ஸ் எரிக் க்ளிக் (Prof. Clarence E Glick) என்ற சமூகவியல் துறை அறிஞர், தனது இந்திய மாணவருக்கு எழுதும் கடிதத்தில், அண்மையில் காலமான பிரதமர் நேருவிற்கு இரங்கலும், புதிய தலைமைப்பொறுப்பேற்றிருக்கும் திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் தலைமையில் இந்திய மேலும் பல சிறப்புகளை எட்டும் எனவும் குறிப்பிடுகிறார். ஐ. நா வின் யுனஸ்கோ அமைவனத்திற்காக தனது தலைமையில் கனடா நாட்டு மான்ட்ரியல் நகரில் சர்வதேச சமூகவியல் குறித்த மிகப்பெரிய ஆய்வுக் கருத்தரங்கம் ஒன்றை செயல்படுத்தும் பெரும் பணியில் ஈடுபட்டுள்ளதையும் பதிவுசெய்கிறார். (இவரது மனைவி திருமதி. க்ளிக் என்பார், மலேசிய தலை நகரில் நடைபெற்ற உலகத்தமிழ் மா நாட்டில் கலந்து கொண்டவர் என்பது கூடுதல் குறிப்பு.)

இப்படி பல வகையான மக்கள் வாழ்வியல் எல்லாம், பதிவு செய்யப்பட்டவைதான் குடும்ப ஆவணங்கள். இவர்கள்எல்லாம்எளியமக்கள்தான்என்பதைகவனத்தில்கொள்க.

ஆவணங்கள் வரலாற்றுடன் தொடர்பு உள்ளவை. அவை பாதுகாக்கப்பட வேண்டும். அது எல்லா துறைகளிலும். அதாவது நிர்வாகத்துறை, அரசியல்,கல்வி, புவியில் ( ஆம்புவியில்பற்றியஆவணத்தெளிவுஇருந்திருந்தால்கச்சத்தீவும், எல்லையில்உள்ளநமதுமாவட்டங்களும்மாற்றார்கையகப்படுத்தவிட்டிருக்கமாட்டோம்.) மற்றும் குடும்பம், என அனைத்து தளங்களிலும் பதிவுகளும், ஆவணப்படுத்தலும் வாழையடி,வாழையாகதொடரவேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

நிறைவுற்றது

ஆவணப்படுத்தல் பயனும், அதில் தமிழர்களின் சிறப்பும் – முந்தைய பகுதி 1

ஆவணப்படுத்தல் பயனும், அதில் தமிழர்களின் சிறப்பும் – முந்தைய பகுதி 2


காசி விசுவநாதன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “ஆவணப்படுத்தல் பயனும், அதில் தமிழர்களின் சிறப்பும் – பகுதி 3”
  1. swamynathan says:

    மிகவும் அவசியமான ஒன்ரு.

அதிகம் படித்தது