ஜூலை 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

பண்பாட்டு படையெடுப்பும் – திருக்குறளும்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Nov 16, 2019

siragu thirukkural1

திருக்குறளைச் சுற்றி எப்போதும் வட்டமிடும் சனாதனம் விரும்பிகளிடம் இருந்து திருக்குறளை மீட்க வேண்டிய பொறுப்பு திராவிடர் இயக்கங்களுக்கு உண்டு. பரண் மீது தூங்கிக் கொண்டிருந்த திருக்குறளை மீட்டெடுத்து மக்களிடம் உலவ விட்ட பெறுமை திராவிடர் இயக்கத்தையே சாரும். திருக்குறள் ஏன் பரண் மீது தூங்கிக் கொண்டு இருந்தது? என்ற கேள்விக்குப் பின் இருக்கும் பதில் அது சனாதன எதிர்ப்பு பேசியது, வர்ணபேதங்களை எதிர்த்தது என்பது தான். இன்று எவை எல்லாம் திராவிடர் இயக்கத்தால் மீட்கப்பட்டு தமிழர்களின் அடையாளமாக மாற்றப்பட்டதோ அதை எல்லாம் தொடர்ந்து காவிகள் அணைத்து அழிக்கப் பார்க்கின்றனர். ஒரு பக்கம் திருக்குறளை உவமையாக பேச்சில் எடுத்துக்காட்டுவது மறுபுறம் திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசுவது, பட்டையும் கொட்டையும் மாட்டி விடுவது, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பேருந்துகளில் திருக்குறள் என்பதை மாற்றி இந்து மத வாசகங்களை எழுதி வைப்பது என தொடர்ந்து தமிழ்நாட்டை மதசார்பற்ற நிலையில் இருந்து மாற்ற – கலவரத்தைத் தூண்ட ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது. அதற்கு இன்றைய துருப்புச் சீட்டு திருக்குறள்.

திருக்குறள் ஏன் ஒரு மத நூலாக இருக்க வாய்ப்பில்லை என்பதை திருக்குறளும் மனுதர்மமும் என்ற நூலில் நாவலர் இரா. நெடுஞ்செழியன் பல எடுத்துக்காட்டுகளோடு எழுதி உள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
அந்த நூலின் சில பகுதிகளைப் பார்க்கலாம்:

வடமொழி நூலாகிய மனு தமது சாத்திரத்தில் கூறுகின்ற தருமம் என்பது ஒன்று. வள்ளுவப் பெருந்தகையார் திருக்குறளில் உணர்த்துகின்ற அறம் என்பது முற்றிலும் மாறுபட்ட வேறொன்று. மனுவின் கருத்தப்படி மனிதகுலம் நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வருணத்திற்கும் ஒவ்வொரு வகையான சட்ட விதியின் கீழ் நீதி கூறப்படுவதாகும். அதுதான் மனுவின் தருமம் என்று அழைக்கப்படுகின்றது. ஆனால், வள்ளுவரின் கருத்துப்படி, அறம் என்று அழைக்கப்படுவது மனித குலம் அனைத்திற்கும் வேறுபாடு இல்லாமல் ஒரே தன்மையதாய், அன்பு நெறி, அருள் நெறி, அறிவு நெறி, பண்பு நெறி, ஒழுக்க நெறி போன்றவற்றின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை உணர்த்துவதாகும். என்கிறார்
மேலும்,

எல்லா மக்களுக்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையானதாகத்தான் அமையும். பிறப்பைப் பொறுத்து ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லை என்னும் கருத்துப்பட,
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று கூறுவது வள்ளுவர் அறம் ஆனால், பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததனாலும் மற்ற எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்குவதற்குரிய தலைவனாகிறான், என்று மனு அத்தியாயம் 1 சுலோகம் 100 இல் கூறுகிறது.

இதன் பொருட்டே, திருக்குறள் ஒரு மத மக்களுக்கானது அல்ல, உலகம் பொதுமறை என்பது விளங்கும்.

siragu thirukkural2

திருவள்ளுவர் காலத்தில் வர்ணபேதங்கள், மேல் – கீழ் சாதி முறைகளை பார்ப்பனர்கள் சமூகத்தில் வேரூன்றச் செய்த காரணத்தினால்தான் தன் குறட்பாக்கள் மூலம் அதை கடுமையாக திருவள்ளுவர் சாடுகிறார். சாதி முறையில் ஆண்ட பரம்பரை பெருமை பேசிக்கொண்டு கல்வி கற்காது அன்றும் இருந்திருப்பார்கள் போல, அதனால் கல்லாதவர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும் தாழ்ந்த குடியில் பிறந்த கற்றவர்களைப் போல பெருமைக்குரியவராக கருதப்பட மாட்டார்கள் என்பதை,

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதர் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு என்று அறம் செப்புகிறார் வள்ளுவர்.

பிரமணர் இந்த மனுநூலைப் படிக்கலாம், மற்ற வருணத்தாருக்கு அதனை ஓதுவிக்கக் கூடாது (அத் 1, சு 103) என்றும், சூத்திரன் பக்கத்தில் இருக்கும்போது பிரமாணன் வேதம் ஓதக்கூடாது (அத் 1, சு 99) என்றும் கூறுவது இந்து மத அடிப்படை.

இவை இரண்டும் எப்படி ஒன்றாக முடியும் என்பதே நாவலர் நூல் மூலம் நாம் கேட்கும் கேள்வி.

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் என்பது வள்ளுவரின் அறம். அதாவது ஒருவர் தாம் தேடிய உணவுப் பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் தாம் மட்டும் தனியாக இருந்து உண்ணுதல் என்பது வறுமையின் காரணமாக இரத்தலைக் காட்டிலும் கொடியது என்பது கருத்து. ஆனால், சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றையும் ஓமம் பண்ணிய மிச்சத்தையும்கூடக் கொடுக்கலாகாது (மனு அத் 4, சு 80) என்பது அவர்களின் தருமம்.

உலகத்தார் பல்வேறு தொழில்களையும் செய்து பார்த்து அலைந்து திரிந்து சுழன்று வந்தாலும் இறுதியில் ஏர்த் தொழிலின் பின்னேதான் நிற்கவேண்டியிருக்கிறது. ஆகையினால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழில்தான், தலைசிறந்த தொழிலாகத் திகழ்கின்றது என்னும் கருத்துப்பட
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை என்பது வள்ளுவரின் அறம்.

ஆனால் மனுவில் அத் 10, சு 84 இல் பயிர்த்தொழில் நல்ல தொழில் என்று பலர் நினைக்கிறார்கள் அந்தத் தொழில் பெரியோர்களால் மிகவும் இபழப்பட்ட ஒன்றாகும் என்று கூறுகிறது.

திருக்குறள் முழுவதும் இழைந்தோடும் ஒரு பொதுக்கருத்து எல்லா வகையிலும் எல்லா நிலைகளிலும் பொது அறம் பேணப்பட வேண்டும் என்பதே ஆகும். அதன் காரணமாகத் திருக்குறளுக்கு அறம் என்ற பெயரும் உண்டு.

இன்றைய சூழலில் திருக்குறள் என்பது தமிழர்களின் மதம் கடந்த அடையாளம் என்பதை நிறுவ வேண்டிய பொறுப்பு வரலாற்று அறிவு கொண்ட அனைவருக்கும் உண்டு, தொடர்ந்து பண்பாட்டு படையெடுப்பை எதிர்த்து போராடுவோம்!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பண்பாட்டு படையெடுப்பும் – திருக்குறளும்”

அதிகம் படித்தது