மே 14, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

பதிற்றுப் பத்துப் பதிகங்களின் வழி மீட்டெடுக்கப்படும் தாய்வழிச் சமுதாய மரபு

முனைவர் மு.பழனியப்பன்

Mar 20, 2021

siragu pathitrupaththu1முன்னுரை

சங்க இலக்கியங்கள் பல்வேறு இனக்குழு சார்ந்த சமுதாயத்தின் வெளிப்பாட்டுக் களங்களாக விளங்குகின்றன. வேட்டைச் சமுதாயம், நிலவுடைமைச் சமுதாயம், ஆணாதிக்கச் சமுதாயம், தாய வழி முறைச் சமுதாயம் போன்ற பல சமுதாய அமைப்புகள் சங்க இலக்கியங்களில் காணத்தக்கனவாக உள்ளன. பதிற்றுப் பத்து என்னும் புற இலக்கியத்தின் வழியாக தாய வழிமுறை சங்க காலத்தில் நிலவியதை அறியமுடிகின்றது. தாய்வழி மரபின் எச்சங்கள் இன்னமும் இந்தியாவிலும் பல உலக நாடுகளிலும் எச்சம் மிச்சமாக இருந்து வரும் நிலையில் தமிழ்க் குடியிலும் தாய வழி மரபு இருந்ததைப் பெரிதும் காட்டுகின்றன பதிற்றுப் பத்தும் அதன் பதிகங்களும். பதிற்றுப்பத்தின் பதிகங்கள் வழி வெளிப்படும் தாய வழி முறைமைகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

சங்க இலக்கியங்களில் குறிக்கத்தக்க இடம் புறநானூற்றுக்கும், பதிற்றுப்பத்துக்கும் உண்டு. ஏனெனில் அவை உண்மை சார்ந்த, கற்பனை கலவாத வரலாற்றுப் பதிவுகளை உடைய இலக்கியங்கள் ஆகும். குறிப்பாக சேரர் வரலாற்றின் குறிப்பிட்ட ஒரு வரலாற்றுப் பகுதியை வெளிப்படுத்தும், பதிற்றுப் பத்து சேர மரபினை உணர்த்தும் பண்பினாலும், தாய வழிக் கூறுகள் அமைந்திருப்பதன் தன்மையினாலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த சங்கப் பனுவலாகக் கருதப்படுகிறது.

பதிற்றுப்பத்தில் முதலும் இறுதியுமாகிய ஆகிய இருபத்துகள் கிடைத்தில என்றாலும் கிடைத்த எட்டுப் பத்துகள் கொண்டு சங்க கால, எட்டுச் சேர மன்னர் மரபினை அறிந்து கொள்ள முடிகின்றது. பதிற்றுப்பத்தின் பத்துகள் முறையே குமட்டூர்க் கண்ணனார், பாலைக் கௌதமனார், காப்பியாற்றுக் காப்பியனார், பரணர், காக்கைப் பாடினி நச்செள்ளையார், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்க் கிழார் போன்ற தனித்தனிப் புலவர்களால் பத்து தனி மன்னர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டுப்பாடப்பெற்றுள்ளன. இப்பத்துப் பாடல்களுக்கு உரிய தலைப்புகளும், துறை, வண்ணம், தூக்கு போன்றனவும் இப்பாடல்களுடன் குறிக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு பத்துக்கும் பதிகம் என்றொரு பகுதி காணப்படுகிறது. இப்பதிகம் பத்துப்பாடல்களைப் பாடியத் தனிப் புலவர்களால் எழுதப்படவில்லை என்பதும் இப்பதிகங்களை ஒருவரே எழுதியிருக்க வேண்டும் என்பதும் அதன் படைப்புமுறைமையை அறிகின்றபோது தெரியவருகின்றது.

பதிற்றுப் பத்தின் வழிகிடைத்துள்ள எட்டுப் பதிகங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்க இடம் பெற்றனவாகும். இப்பதிகங்கள் வழியாக சேரர் மரபும், பாட்டுடைத் தலைவனாகக் கொள்ளப்பட்ட சேரனின் தாய், மனைவி ஆகியோர் பற்றிய குறிப்புகளும் பெறப்படுவது சிறப்பிற்குரிய நிலைப்பாடாகும். வேறு எவ்விலக்கியகத்திலும் பெண்கள் குறித்த பதிவு இவ்வளவு கவனமாகப் பதிவு செய்யப்படவில்லை என்பது உண்மை. இன்றைய படைப்பிலக்கியங்களிலும் பாட்டுடைத் தலைவனின் தாய், மனைவி போன்றோர் குறிப்பிடப்படுவது இல்லை என்ற நிலையில் சங்க இலக்கிய காலத்தில் பெண்களின் பெயரைப் பதிவு செய்த ஒரே இலக்கியம் பதிற்றுப் பத்து என்பது எண்ணுதற்குரியது.

தாய்வழிச் சமுதாயம்

உலகில் முதன் முதலாகத் தோற்றம் பெற்ற சமுதாயம் தாய்வழிச் சமுதாயம் ஆகும். தாயே முதன்மையான இடம் பெற்று அவளின் தலைமையிலேயே சமுதாயம் இயங்கிய நிலைப்பாடு மனித குல வரலாற்றின் முந்தையான நிலைப்பாடாகும்.” ஒருவர்தம் மரபினைத் தந்தை வழியிலோ தொடர்பு படுத்தாமல் தாய் மூலம் தொடர்பு படுத்தினால் அவரது மரபு தாய்வழி மரபு எனப்படும்”1 என்று தாய்வழி மரபினுக்கான வரையறை தரப்பெறுகிறது.

தாய்வழிச் சமுதாயம் உலகில் இன்னமும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. ‘‘கழிந்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாகக் கேரளத்திற் பல வகுப்பார் பெண்வழியில் மருமக்கட்டாயமுறை பேணுவதைக் காணுகின்றோம். நாம் அறிய இவ்வழக்கம் நாயர் பெருமக்களிடம் மட்டுமில்லை, தென்திருவாங்கூரில் நாஞ்சில் நாட்டு வேளாளர் முதல் வடமலையாளத்தில் மகம்மதிய மாப்பிள்ளைமாரும், பொய்யானூர்க் கூற்றத்துப் பார்ப்பன நம்பூரிகளும், தென்கன்னடத் தொன் மக்கள் பலரும், துளுவர் கொங்கணர் சிலரும் இத்தாய் வழித்தாய் முறையையே நெடுநாளாகக் கையாண்டு வருகின்றனர். இவ் வழக்கமுடையாரெல்லாரும் குடமலைக்கு மேற்கே பண்டைச் சேரநாட்டின் பகுதிகளான மேலைக்கடற்கரை நாடுகளிலே இருப்பதாகவும் அறிகின்றோம். பார்போசா, சோனரத்து முதலிய ஐரோப்பிய யாத்திரிகர் மேலமலைத்தொடருக்கு மேற்குநிலமக்கள் பலர் தம்முள் பிறிதிடத்திற் காணரிய இப்பெண்வழித் தாயம் பெரிதும் வழங்கப்பெறுவதைக் கவனித்துத் தம் யாத்திரைக் குறிப்பபுக்களில் இவ்வதிசயச் செய்தியை எழுதியிருக்கின்றனர்”2 என்று தாய்வழி முறைமை இருக்கும் பகுதிகளைச் சேரர் தாய்முறை என்ற நூலின் முன்னுரையில் நாவலர் சோமசுந்தர பாரதியார் குறிப்பிடுகிறார்.

பிரிட்டானிகா தளம் மேலும் சில இடங்களில் தாய்விழிச் சமுதாயம் இருந்து வருவதை எடுத்துரைக்கிறது. ‘‘மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியான கானா என்னும் இடத்தில் வாழும் அசாந்தே, அல்லதுஅசாந்தி என்ற தாயமுறைமை திருமணச் சமுதாயம் வாழ்ந்து வருகிறது.

இதில்பெண்கள்தங்கள்தாய்மார்களிடமிருந்துநேரடியாகஅந்தஸ்தையும்சொத்தையும்பெறுகிறார்கள். இந்தோனேசியாவின் சுமத்ராவின் மினாங்காபாவ் என்பது உலகின் மிகப்பெரிய திருமண சமூகமாகும், இதில் நிலம் மற்றும் வீடுகள் போன்ற பண்புகள் பெண் பரம்பரை மூலம் பெறப்படுகின்றன. மினாங்க்கபாவ் சமுதாயத்தில், மனிதன் பாரம்பரியமாக தனது மனைவியின் வீட்டிற்கு திருமணம் செய்து கொள்கிறான், மேலும் அந்தப் பெண் மூதாதையரின் வீட்டைப் பெறுகிறாள். இந்தியாவில் மேகாலயா மாநிலத்தில் வாழும் காஸி குழு மற்றும் கேரளாவில் உள்ள பாரம்பரிய நாயர் குழு ஆகியோரிடத்திலும் இம்முறைமை உள்ளது”3 என்கிறது பிரிட்டானிகா.

பண்டைய சமுதாயத்தில் தாய்வழிச் சமுதாயம் முதலாவதாக இருந்துள்ளது. அதன்பின் தந்தை வழிச் சமுதாயம் அதன்பின் தாய்வழிச் சமுதாயம் என மாறி மாறி நிகழ்ந்துள்ளது என்று கருத்துரைக்கிறார் தேவி பிரசாத் சட்டோபத்தியாயா. ‘‘ஆண் பெண், உயர்வு தாழ்வுகளுக்குக் காரணம் பொருளாதார வாழ்க்கையின் வளர்ச்சியே. வேட்டைக்கு (ஈட்டியைப் பயன் படுத்துதல்) முற்கால சமுதாய நிலையில் தாயுரிமை இருந்தது. வேட்டை வளர்ச்சி பெற்றபோது ஆண்களுக்குச் சமூகத்தில் உயர்வு ஏற்பட்டது. வேட்டைச் சமுதாயம் ஆடுமாடு வளர்ப்பு சமுதாயமாக மாறியபின் பெண்ணுக்குச் சமூகத்தில் உயர்வு ஏற்பட்டது.அதளுல் தாய் வழி உரிமை மீண்டும் அவர்களிடையே தோன்றியது. காளைகள் இழுக்கும் கலப்பையைப் பயன்படுத்தி நிலத்தை உழும் பயிர் தொழில் தோன்றிய பின் தாயுரிமை முற்றிலும் மறைந்து விட்டது. ஆயினும் அதன் எச்சங்களைத் தந்தையுரிமைச் சமுதாயத்தில் காணலாம்”4 என்ற குறிப்பு அவ்வப்போது தாய்வழிச் சமுதாயம் எழுந்த எழுச்சியைக் காட்டுகிறது. இவ்வடிப்படையில் காணுகையில் சங்க காலத்தில் நடைபெற்ற குறிஞ்சி வாழ்க்கைமுறை தந்தை வழிச் சமுதாயம் சார்ந்தும், முல்லை வாழ்க்கை தாய்வழிச் சமுதாயம் சார்ந்தும் நடைபெற்றிருக்க வேண்டும். அதனை அடுத்து மருத வாழ்க்கை, நெய்தல் வாழ்க்கை முறையில் தந்தை வழிச் சமுதாயம் முழு ஆளுமை பெற்றும் விளங்கியிருக்க வேண்டும் என்று கொள்ள முடிகின்றது. அதாவது தாய்வழிச் சமுதாயம் கழிந்துபோய் இருக்க வேண்டும் என்று அறிய முடிகிறது. இவ்வகையில் சங்க இலக்கியங்களை அணுகவும் வாய்ப்புள்ளது.

சேரர்தம் தாய்முறை

தாய்வழிச் சமுதாயம் சங்க காலத்தில் நிலவியது என்பதற்குப் பல சான்றுகள் இருந்தபோதிலும் மிகத் தெளிவாக தாயமுறை அமைந்திருந்ததைப் பதிற்றுப் பத்து பதிவு செய்துள்ளது. பதிற்றுப்பத்தின் பாடல்களும், பதிற்றுப்பத்தின் பதிகங்களிலும் தாயமுறை பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. பாட்டுடைத்தலைவனின் தாய், மனைவி, மனைவியின் தந்தை பற்றிய குறிப்புகள் பதிகங்களில் காட்டப்பெற்றுள்ளன.

பதிற்றுப்பத்து பாடல்கள் இரு சேரர் குடிகளைப் பதிவு செய்துள்ளன. ஒரு குடி உதியன் சேரலாதன் வழி வந்த குடி ஆகும். இதனை தாய வழி மரபின்படிச் சொல்வதானால் நல்லினி என்ற அரசியின் பரம்பரை என்று குறிக்க வேண்டும். அதாவது இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியன் சேரலின் மகன் (நல்லினியின் முதல் மகன்) நெடுஞ்சேரலாதன் என்பதும், மூன்றாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ்சேரலின் இரண்டாவது மகன் (நல்லினியின் இரண்டாம் மகன்) பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பதும் அறியத்தக்கது.

நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பத்துக்களின் பாட்டுடைத்தலைவர்களான களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய மூவரும் உதியஞ்சேரலின் பெயரர்கள் (நல்லினியின் பேரர்கள் ) என்பதுவும் உணரத்தக்கது. இவர்கள் அனைவரும் நல்லினியின் தலைமுறையினர் ஆகின்றனர்.

மற்றொரு குடி அந்துவஞ்சேரல் இரும்பொறை வழி வந்த குடியாகும். அதாவது பொறையன் பெருந்தேவியின் பரம்பரை வழி வந்த குடியினர் ஆவர். பெருந்தேவியின் மருமகள் மையூர்க்கிழான் வேண்மாள் அத்துவஞ்செள்ளைக்குப் பிறந்தவன் இளஞ்சேரல் இரும்பொறை ஒன்பதாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் ஆவான். பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை ஆகிய இருவரும் இவ்வழியில் ஆட்சி பெறுகின்றனர்.

சேரலாதன் குடி (நல்லினி குடி), இரும்பொறை குடி (பொறையன் பெருந்தேவி குடி) ஆகிய இரு சேரர் குடிகள் பதிற்றுப்பத்தில் பதிவு செய்யப்பெற்றுள்ளன. இவர்களை தாய்வழி முறைமையினர் என்று உறுதிபட உரைக்கிறார் நாவலர் சோம சுந்தர பாரதியார். அவரே ஒரு வினாவை எழுப்பிப் பின்வருமாறு விடை காண்கிறார். ‘‘சேரரை மக்கட்டாய முடையராய்க் கருதுபவர் எண்ணுகிறபடி இரண்டாம் பதிகத்தலைவனான இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு, பதுமன்மகன், மணக்கிள்ளிமகள் எனும் இருமனைவியரால், களங்காய்க்கண்ணிநார் முடிச்சேரல், செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என மூவர் மக்கள் உளர். இருந்தும், இவர்களை விலக்கி இவர்தம் சிறிய தந்தையான பல்யானைச் செல்கெழுகுட்டுவன் முடி சூடி இருபத்தைந்து ஆண்டு அரசு வீற்றிருக்கின்றான். அவனுக்குப் பிறகுதான் அவன் தமையன்மக்களான இம்மூவரும் நாடாட்சி பெறுகின்றனர். இது மக்கட்டாய அறமுறையில் நிகழொணாதது” என்பது எழுப்பப்படும் வினா. இதற்கு அவரே விடை காண்கிறார்.

‘‘ஆனால், சேரர் மருமக்கட்டாய முடையராகில், பதிற்றுப்பத்தில் நாம் காணும் முறைதான் அறமுறையாகும். இமையவரம்பனுக்குப் பின் அவன் தம்பியே தாய்வழித் தாயக்கிரம உரிமையில் அரசனாகவேண்டும். அவ்விருவர்களுக்கும் பிறகே, அவர்களின் மருகர்கள் தங்கள் வயதுக் கிரமவரிசைப்படி ஒவ்வொருவராய் முடிபுனைந்து நாடாள்வர். மேலேநாம் கண்டபடி, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் இவர்களின் தாய் சேரர்கோக்குடிப் பிறப்புடையவள், பதுமனுக்கு மனைவி. ஆவிக்கோமான் பதுமன் எனும்வேளுக்கு வாழ்க்கைப்பட்டு, அவனால் இவர் சேரர்கோக்குடிக்கு இருமக்களை ஈன்றுதவினள். அதுவேபோல் நற்சோணை என்பாளும் சேரர்குடிப்பிறந்து சோழனை மணந்து வாழ்ந்தவளாகும். அவளீன்ற மக்கள் செங்குட்டுவனும் இளங்கோவும் ஆவர். இளங்கோ துறவுபூண்டு அடிகளாகவே, அத்தாய்வழியிற் கோலுரிமைக்குடையவன் குட்டுவன் மட்டுமே யாகி நிற்பன். இவர்கள் தாய் நற்சோணையும் வேள்பதுமனின் மனைவியும் சேரர்குடியில் மணந்து புகுந்த பிறகுடிப் பெண்டிரில்லை, அக்குடியிற் பிறந்து சிறந்த பேரரசிமாராவர். அவர்கள் வயிற்றுதித்த மக்களான மூவரும் இமையவரம்பனுக்கும் அவன் தம்பி குட்டுவனுக்கும் பிறங்கடையரான மருகராவர். ஆகவே தங்கள் மாமன்மாரான அவ்விருவரும் ஆண்டு முடிந்தபிறகு இம்மருகர் மூவரும் வழி முறையில் தம் மரபு நியதிப்படி ஆட்சிபெறுகின்றனர். இது அறமும் அடிப்பட்ட குடிவழக்குமாய்ப் பொருத்தமும் சிறப்பும் பெற்று அமைகின்றது. இவர்களுக்குமுன் இமையவரம்பனுக்குப்பின் இவர்தம் இளைய மாமனான செல்கெழுகுட்டுவன் நாடாளுவதில் வரிசை முறைப்பிறழ்ச்சியில்லை. இவர்தம் ஆட்சிமுறையில் தாய்க்குடித் தாயமுறையறமே பேணி ஓம்பப்படுகின்றது.”5 என்ற கருத்தின்வழி சேரர் தம் தாயமுறைமை உறுதியாகின்றது.

இனி சேரர்தம் குடிமுறைமையைப் பதிகங்கள் வழி தெளிவுபடுத்தலாம். மேலும் ஒரு பெண் குடும்பத்தில் வகிக்கும் பொறுப்புகளை ஓரிரு இலக்கியத் தொடர்கள் கொண்டு வெளிப்படுத்தவும் இப்பகுதி முயல்கிறது.

நல்லினி குடி (சேரலாதன் குடி)

நல்லினி அல்லது சேரலாதன் வழி வந்த ஐந்து சேர அரசர்கள் பற்றிப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. அவர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானை செல்கெழு குட்டுவன், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், கடல் பிறகோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியோர் ஆவர். இவர்களுக்காக இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பத்துகள் பாடப்பெற்றுள்ளன. இவர்களுள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானை செல்கெழுகுட்டுவன் ஆகிய இருவரும் நல்லினிக்குப் பிறந்தவர்கள்.ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். அண்ணனுக்குப் பின் தம்பி அரசாண்டுள்ளான் அல்லது நல்லினியின் வம்சமே ஆண்டுள்ளது.

இதற்குப் பின்னுள்ளவர்கள் நல்லினியின் பெயரர்கள். நல்லினியின் மகன்கள் இருவருள் ஒருவரான இமயவரம்பன் இரு மனைவியரைப் பெற்றிருந்தான்.அவர்கள் நற்சோனை, வேளாவிக்கோ பதுமன் தேவி ஆகியோர் ஆவர். இவர்களில் வேளாவிக் கோ பதுமன் தேவி இருபிள்ளைகளின் தாயாவாள். களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய இருவர் ஆவர். இவர்கள் இருவரும் ஆட்சியில் அமர்ந்தனர். இவர்களுக்கு இடையில் நற்சோணை என்பவளின் புதல்வன் கடல் பிறகோட்டிய செங்குட்டுவன் ஆவான். இவ்வகையில் இவர்கள் அனைவரும் நல்லினியின் பரம்பரை ஆகின்றனர்.

இமய வரம்பன் நெடுங்சேரலாதனின் தாய் நல்லினி , தாயின் தந்தை, மனைவி பற்றிய குறிப்புகள்

பதிற்றுப்பத்தின்வழி பெறப்படும் முதல் சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆவான். இவன் இரண்டாம் பத்தில் குமட்டூர் கண்ணன் என்பவரால் பாடப்பெற்றுள்ளான்.

உதியன் சேரலாதனுக்கும், வெளியன் வேண்மாள் நல்லினி என்பாளுக்கும் பிறந்தவர்கள் இருவர். ஒருவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். மற்றொருவன் பல்யானை செங்கெழு குட்டுவன்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன். இவனுக்கு மனைவியர் இருவர். அவர்களில் ஒருத்தி வேளாவிக்கோ பதுமன் தேவி, மற்றொருத்தி சோழன் மணக்கிள்ளி பெற்ற மகள் நற்சோணை.

வேளாவிக்கோ பதுமன் தேவிஎன்பவளுக்கு இருமகன்கள் பிறந்துள்ளனர். முதலில் பிறந்த மகன் களங்காய்க் கண்ணி நெடுமுடிச்சேரல் என்பவன் ஆவான். இரண்டாமவன் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்.

நற்சோணைக்குப் பிறந்த மகன் கடல் பிறகோட்டிய செங்குட்டுவன். இவன் சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குக் கோயில் கட்டிய செங்குட்டுவன் ஆவான்.

இவனுக்கு முன்பு களங்காய்க் கண்ணி நெடுமுடிச் சேரலும், பின்பு ஆடு கோட்பாட்டுச் சேரலாதனும் ஆட்சி செய்துள்ளனர்.

மேற்கண்ட செய்திகளின்வழி, வெளியன் வேண்மாள் நல்லினி, வேளாவிக்கோ பதுமன் தேவி, நற்சோணை போன்ற அரசிகளின் பெயர்களை வரலாற்றுப் பதிவுகளாகப் பெறமுடிகின்றது. இவ்வளவில் பதிவு செய்த தமிழிலக்கியங்கள் வேறெதுவும் இல்லை.

இவ்வாறு ஐந்து சேர அரசர்களின் பெருமைகளை எடுத்துரைப்பனவாக இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு ஆகிய பதிற்றுப் பத்துக்கள் விளங்குகின்றன.

வெளியனின் மகள் – உதியஞ் சேரலாதனின் மனைவி – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தாய்- நல்லினி
வெளியனின் மகள்

‘‘வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப” ( முது கூத்தனார் -நற்றிணை 58 – )
என்ற பாடலில் வெளியன், வேண்மான் போன்ற சொற்கள் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தின் பதிகக் குறிப்புகளுடன் பொருந்துவனவாக அமைகின்றன. உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் வெளியன் தித்தன் என்பவன். இவனது ஊரில் இவனின் முரசு ஒலிக்க மாலைப்பொழுதில் தீபங்கள் ஏற்றும் நடைமுறை இருந்துள்ளது. இதனை நற்றிணை குறிக்கிறது. இத்தலைவனின் மகளாக அமைபவள் நல்லினி ஆக இருக்க வாய்ப்புள்ளது.

உதியஞ் சேரலாதனின் மனைவி

‘‘மன்னிய பெரும்புகழ் மறுஇல் வாய்மொழி
இன்இசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்றமகன்”
(பதிற்றுப் பத்து இரண்டாம் பத்து பதிகம்)
என்ற பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்தின் பதிகக் குறிப்பின்படி இவள் உதியஞ்சேரலாதனின் மனைவியாக விளங்கியமை தெரியவருகிறது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தாய்

மேலே காட்டிய பாடல்பகுதி வழி இவள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தாயாகவும் விளங்குகிறாள். இந்த மூன்று அடையாளங்கள் நல்லினி என்பவளின் வரலாற்றுப் பதிவுகளாக விளங்குகின்றன.

பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடும் குமட்டூர் கண்ணனார் ‘‘அவனை ஈன்ற தாய் வயிறு மாசு இலீயர்” (பதிற்றுப்பத்து, பாடல் 20) என்று பெற்ற தாயாரை வாழ்த்துகிறார். இதுவே சேரர் மரபினர் தாய வழியினர் என்பதை உணர்த்துவதாக விளங்குகின்றது.

வேளாவிக் கோமான் பதுமன் தேவி, சோழன் மணக்கிள்ளி மகள் நற்சோணை ஆகியோரின் மாமியார்

வெளியின் வேண்மாள் நல்லினி என்பவள் வேளாவிக் கோமான் பதுமன் தேவி, சோழன் மணக்கிள்ளி மகள் நற்சோணை ஆகியோரின் மாமியாராகவும் விளங்கியுள்ளாள்.

இவ்வளவில் ஒரு பெண்ணின் பெயர் குறிப்பிடும் நிலையில் அவள் வகித்த சமுதாயப் பாத்திரங்கள், இடம் ஆகியன பெருமளவில் தெரியவருகின்றன.

%MCEPASTEBIN%


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பதிற்றுப் பத்துப் பதிகங்களின் வழி மீட்டெடுக்கப்படும் தாய்வழிச் சமுதாய மரபு”

அதிகம் படித்தது