பதிற்றுப் பத்துப் பதிகங்களின் வழி மீட்டெடுக்கப்படும் தாய்வழிச் சமுதாய மரபு – (பாகம் -2)
முனைவர் மு.பழனியப்பன்Mar 27, 2021
வெளியனின் மகள் – உதியஞ் சேரலாதனின் மனைவி – பல்யானை செல்கெழுகுட்டுவனின் தாய் – நல்லினி
உதியன் சேரலாதன், வெளியன் வேண்மாள் நல்லினி ஆகியோருக்குப் பிறந்த இரண்டாவது மகன் பல்யானை செல்கெழுகுட்டுவன் ஆவான். மேற்குறித்து குறிப்புகளின் படி பல்யானை செல்கெழுகுட்டுவனை ஈன்ற நல்லினி வெளியனின் மகளாகவும் உதியஞ் சேரலாதனின் மனைவியாகவும் விளங்குகிறாள்.
பல்யானை செல்கெழு குட்டுவன் மனைவி
பல்யானை செல்கெழு குட்டுவன் பற்றிப் பாடிய பாலைக் கௌதமனார் இவனின் மனைவி பற்றியக் குறிப்புகள் சிலவற்றைத் தருகிறார்.
‘‘மண்ணா வாயின் மணம்கமழ் கொண்டு
கார்மலர் கமழும் தாழ்இரும் கூந்தல்
ஒரீஇயின போல விரவுமலர் நின்று
திருமுகத்(து) அலமரும் பெருமதர் மழைக்கண்
அலங்கிய காந்தள் இலங்குநீர் அழுவத்து
வேய்உறழ் பணைத்தோள் இவளோ(டு)
ஆயிர வெள்ளம் வாழிய பலவே” (மூன்றாம்பத்து,பாடல்1 )
என்று ஒப்பனை செய்யாதபோதும் அழகுடன் விளங்கும் அரசமாதேவி இவனின் மனைவி என்ற குறிப்பு இப்பத்தின் முதல் பாடலில் சுட்டப்பெற்றுள்ளது. மேலும். ‘‘திருந்தியஇயல்மொழித்திருந்(து)இழைகணவ” (மூன்றாம் பத்து, 4 ஆம்பாடல்) என்று மனைவியைக் கொண்டு இவனை அடையாளப் படுத்துகிறார். இவனின் மனைவி திருந்து இழை அணிந்த திருந்திய அழகினை உடையவள் என்ற குறிப்பு இவனின் மனைவி பற்றியதாகும்.
இவனைப் பதிகம் ‘‘இமய வரம்பனின் தம்பி ” (பதிகம்) என்று குறிப்பிடுகிறது. இவ்வகையில் இமயவரம்பனின் தம்பி பல்யானை செல்கெழு குட்டுவன் பற்றிய செய்திகள் அறியவருகின்றன. இவனின் மனைவி பற்றிய குறிப்புகள் தனிப்பட அமையாமல், பொதுப்பட அமைந்திருப்பது இங்குக் குறிக்கத்தக்கது.
வேளாவிக்கோவின் மகள் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மனைவி – களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலின் தாய் பதுமன் தேவி
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானை செல்கெழு குட்டுவன் ஆகியோருக்கு அடுத்து, சேரர் தம் அடுத்த தலைமுறை பட்டத்திற்கு வருகிறது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மக்கள் அரசுரிமை பெறுகின்றனர்.பல்யானை செல்கெழு குட்டுவன் மக்கள் அரசுரிமை பெற்ற தகவல் இல்லை.
வேளாவிக் கோமானின் மகள் பதுமன் தேவி
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், வேளாவிக்கோ பதுமன் தேவி இணையருக்கு மகனாகப் பிறந்தவன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் ஆவான்.பதுமன் தேவி என்பவளின் தந்தை வேளாவிக் கோ என்பது இதன் வழி தெரியவருகிறது.ஆவியர் குலம் என்பது பழனியை மையமாக வைத்து ஆண்ட குலம் ஆகும்.இவர்கள் சேரர்களுடன் கொள்வினை கொண்டவர்கள் என்பதும் இங்கு அறியத்தக்கது.
இமயவரம்பன் நெடுங்சேரலாதன் மனைவி பதுமன் தேவி
”ஆராத் திருவின் சேரலாதற்கு
வோளவிக் கோமான்
பதுமன் தேவி ஈன்ற மகன் ” ( பதிற்றுப்பத்து, நான்காம்பத்து பதிகம்)
என்று இமயவரம்பன் சேரலாதாற்கு மனைவியாக அறியப்படுகிறாள் பதுமன் தேவி.
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் தாய்
களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் என்ற சேர மன்னன் பதுமன் தேவி மகனாக பதிகத்துள் விளிக்கப்படுகிறான். இதன்வழி தாய நடைமுறை இப்பரம்பரையிலும் தொடர்வதை இதன் வழி உணரமுடிகின்றது.
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் மனைவி
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்ற சேரமன்னனின் மனைவி பற்றிய தனிக்குறிப்புகள் எதுவும் சுட்டப்படவில்லை. பொதுவாக ”வாள் நுதல் கணவ” என்று வாள் நுதலை உடையவளாக களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் மனைவி குறிக்கப்படுகிறாள்.
களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலின் ஆட்சிக்காலம் இருபத்தைந்து ஆண்டுகள் நடைபெற்று முடிந்தது. இதன்பின் கடல் பிறகோட்டிய செங்குட்டுவன் ஆட்சிக்கு வருகிறான்.
கடல் பிறகோட்டிய செங்குட்டுவனின் தாய் , மனைவி பற்றிய குறிப்புகள்
சோழன் மணக்கிள்ளி மகள் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மனைவி- கடல் பிறகோட்டிய செங்குட்டுவனின் தாய் – நற்சோணை
சோழன் மணக்கிள்ளியின் மகள் நற்சோணை
நற்சோணை என்பவள் சோழன் மணக்கிள்ளியின் மகளாவாள்.இவள் சோழ மரபில் இருந்து சேர மரபினுக்கு மருமகளாக வந்தவள். மணக்கிள்ளி என்பதை மணம் பேசிய கிள்ளி, சம்பந்தம் பேசிய கிள்ளி என்று பட்டப்பெயராகக் கொள்வாரும் உளர். தித்தன் என்பவன் நற்சோணையின் தந்தை என்ற கருத்தும் உண்டு.மணக்கிள்ளி என்பதை நற்சோணையின் மற்றொரு பெயர் என்பாரும் உண்டு.இருப்பினும் சோழன் மணக்கிள்ளி என்பதனால் நற்சோணையின் தந்தையைக் குறிக்கும் தொடராகவே இதனனைக் கருதுதல் வேண்டும். எவ்வாறாயினும் சோழன் மணக்கிள்ளி என்று பெண்ணின் தந்தை பெயரும் பதிகத்தில் குறித்திருப்பது சிறப்புடையதே ஆகும்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மனைவி
இமயவரம்பனின் முதல் மனைவி நற்சோணையே ஆவாள்.இவளின் குழந்தைப் பேறு தாமதம் கருதி இவளுக்கு அடுத்த மனைவியான பதுமன் தேவியின் மகன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் அரசுரிமை பெறுகிறான்.
‘‘வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன் ” (பதிற்றுப் பத்து ஐந்தாம் பதிகம்)
என்ற குறிப்பின்வழி நெடுஞ்சேரலாதனின் மனைவி சோழன் மணக்கிள்ளியின் மகள் மனைவியானமை தெரியவருகிறது.
கடல் பிறகோட்டிய செங்குட்டுவனின் தாய்
கடல் பிறகோட்டிய செங்குட்டுவனின், களங்காய் நார்முடிச் சேரலின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனே.ஆனால் தாயர் வேறு வேறு. கடல் பிறகோட்டிய செங்குட்டுவனின்தாய் சோழன் மணக்கிள்ளியின் மகள் நற்சோணை. களங்காய் நார்முடிச் சேரலின் தாய் பதுமன் தேவி ஆவாள். நற்சோணை என்ற சோழன் மணக்கிள்ளியின் மகள் நற்சோணை சிலப்பதிகாரம் பாடிய இளங்கோடிவகளுக்கும் தாய் என்பது அறியப்பட வேண்டிய சிறப்புச் செய்தியாகும். இச் செங்குட்டுவனே கண்ணகிக்குக் கோயில் எழுப்பியவன் ஆவான். இவ்வாறு நற்சோணை என்ற சோழன் மணக்கிள்ளியின் மகள் மகளாகவும், மனைவியாகவும், தாயாகவும் விளங்கி நிற்கிறாள்.
கடல் பிறகோட்டிய செங்குட்டுவன் மனைவி
கடல்பிறகோட்டிய செங்குட்டுவன் பத்தினித் தெய்வத்திற்குக் கோயில் எடுக்கவேண்டும் என்று எண்ணிய போது அவனுக்கு சரியான பத்தினித் தெய்வத்தை அடையாளம் காட்டியவள் வேண்மாள் என்னும் அவனின் மனைவியாவாள். இவள் தன் கணவனுக்கு அறிவு புகட்டும் அளவிற்கு நுண்மதியாளராக இருந்துள்ளாள். அவளின் எண்ணமே வெற்றி பெற்ற நி்லையில் சேர மரபினர் பெண்களுக்குத் தந்துள்ள முக்கியத்துவத்தை அறியமுடிகின்றது.
ஆடு கோட்பாட்டுச் சேரலாதனின் தாய், மனைவி
கடல் பிறகோட்டிய செங்குட்டுவனின் ஆட்சிக்குப் பிறகு, ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் ஆட்சி ஏற்றான். அவனின் தாய் பற்றியும், மனைவி பற்றியும் பல குறிப்புகள் பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ளன.
வேளாவிக்கோமான் பதுமன் மகள் - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மனைவி, ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் தாய் –பெருந்தேவி (பதுமன் தேவி)
இம்மூன்று உறவு முறைகளும் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் பற்றிய குறிப்புகளில் முன்னரே இடம்பெறச்செய்யப்பெற்றுள்ளன. அவை அப்படியே ஆடுக் கோட்பாட்டுச் சேரலாதனுக்கும் பொருந்தும்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் மனைவி
சில்வளை விறலி என்ற தலைப்புடைய பாடலில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பெண்களுடன் துணங்கை ஆடிய நிலையில் ஊடல் கொள்பவளாக அவனின் தேவி விளங்குகிறாள். அவள் இவன் மீது குவளைமலர்ச் செண்டுகளை வீசி எறிய இவன் அம்மலர்களை தமக்குத் தந்து உதவுக என்று கேட்பவனாக விளங்குகிறான்.இவ்வளவில் அரசவையிலும் அந்தப்புறத்திலும் வலிமை மிக்கவளாக ஆடுகோட்பாட்டுச் சேரனின் மனைவி விளங்கியுள்ளாள். இவ்விருவரும் நல்லினியின் மருமக்கள் என்பதும் ஓர் அடையாளம் ஆகும்.
இவ்வாறு உதியஞ் சேரலாதன் மரபினர் தம் தாய வழி முறையை எடுத்துரைக்கிறது பதிற்றுப்பத்து.
இரும்பொறை மரபினர்
சங்ககாலச் சேரர்களின் மற்றொரு மரபினர் இரும்பொறை மரபினர் ஆவர். இவர்களில் மூவரைப் பற்றிய செய்திகள் பதிற்றுப்பத்தில் தரப்பெற்றுள்ளன. செல்வக் கடுங்கோவாழியாதன், பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை ஆகியோர் ஆவர்.
செல்வக் கடுங்கோ வாழியாதனின் தாய், மனைவி
இரும்பொறை மரபில் பதிற்றுப் பத்தின் வழி அறியப்படும் மன்னர்களுள் முதலாமவர் செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆவார்.இவரின் தாய், மனைவி பற்றிய குறிப்புகள் தெளிவாக பதிக வழி கிடைக்கின்றன.
ஒரு தந்தை ஈன்ற மகள் – அத்துவஞ்சேரல் இரும்பொறையின் மனைவி, செல்வக்கடுங்கோ வாழியாதனின் தாய் –பொறையன் பெருந்தேவி
”மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடு நுண் கேள்வி அந்துவற்கு ஒரு தந்தை
ஈன்ற மகள் பொறையன் பெருந்தேவி ” ( பதிற்றுப் பத்து, ஏழாம்பத்து, பதிகம்)
என்ற பாடலடிகள் வழி பொறையன் பெருந்தேவியைப் பெற்ற தந்தை பெயர் தெரியா நிலையிலும் அவனைக் குறிப்பால் உணர்த்தும் நிலையில் இவளின் தாய் வீட்டு மரபு உணர்த்தப்படுகிறது.
அத்துவஞ் சேரல் இரும்பொறையின் மனைவி
மேற்குறிக்கப்பட்ட பாடலடிகள் வழி பொறையன் பெருந்தேவி என்ற குறிப்பு அத்துவஞ் சேரல் இரும்பொறையின் மனைவியாகப் பெருந்தேவியைக் குறிப்பதாகும். இவளின் இயற்பெயரும் தெரிந்திலை போலும்.
செல்வக்கடுங்கோ வாழியாதனின் தாய்
பொறையன் பெருந்தேவி செல்வக் கடுங்கோ வாழியாதனின் தாயாவாள்.பொறையன் பெருந்தேவி பெற்ற மகன் என்ற குறிப்பு இதனை வெளிப்படுத்துகிறது.இங்குத் தாயைச் சொல்லிச் சேயைச் சொல்லும் தாயமுறை இருப்பதை கவனிக்கவேண்டியுள்ளது. இவள் மையூர் கிழான் வேண்மாள் அத்துவஞ்செள்ளையின் மாமியார் என்ற முறையையும் பெற்றவள். இவ்வாறு பெருந்தேவியின் மகள், மனைவி, தாய், மாமியார் ஆகிய முறைமைகள் தெரியவருகின்றன.
வேளாவிக் கோமான் மகள் – செல்வக்கடுங்கோ வாழியாதன் மனைவி- தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் தாய் – பதுமன் தேவி
வேளாவிக் கோமான் மகள் – பதுமன் தேவி
ஆவி குலத்தைச் சார்ந்த கோமானின் மகளாக விளங்கியவன் பதுமன் தேவி.இவளை செல்வக்கடுங்கோ வாழியாதன் மணந்தான்.
செல்வக் கடுங்கோ வாழியாதன் மனைவி –பதுமன் தேவி
”பொய்இல் செல்வக் கடுங்கோவுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்”
( பதிற்றுப் பத்து எட்டாம் பத்து,பதிகம்)
என்ற அடிகளின் வழியாக பதுமன் தேவியின் தந்தை பற்றிய குறிப்பும் கணவன் பற்றிய குறிப்பும் கிடைக்கின்றன.இவள் செல்வக் கடுங்கோ வாழியாதனின் மனைவியாவாள்.அதாவது முன்சொன்ன பெருந்தேவியின் மருமகள் என்பதும் இங்குக் குறிக்கத்தக்கது.
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் தாய்
பதுமன் தேவி தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் தாய் ஆவாள்.இவ்வாறு மகளாக, மருமகளாக, மனைவியாகத், தாயாக முறைமையால் விளங்குகிறாள் இத்தேவி.
பையூர் கிழான் மகள் – குட்டுவன் இரும்பொறையின் மனைவி- இளஞ்சேரல் இரும்பொறையின் தாய்–அத்துவஞ்செள்ளை
பையூர் கிழான் மகள் -அத்துவஞ்செள்ளை
பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பின் இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சிக்கு வருகிறான்.அவனுக்கும் பையூர் கிழான் மகளாகிய அத்துவஞ்செள்ளைக்கும் மணம் நடைபெறுகிறது.
‘‘குட்டுவன் இளம்பொறைக்குப் பையூர் கிழாஅன்
வேண்மாள் அத்துவஞ்செள்ளை ஈன்ற மகன்”
(பதிற்றுப்பத்து, ஒன்பதாம் பத்து, பதிகம்)
என்ற குறிப்பின்பபடி வேண்மாள் அத்துவஞ்செள்ளை பையூர் கிழான் மகளாக அறியப்பெறுகிறாள்.
குட்டுவன் இரும்பொறையின் மனைவி
மேற்குறிக்கப்பட்ட பாடலடிகள் வழி குட்டுவன் இரும்பொறையின் மனைவியாக விளங்கியவள் அத்துவஞ் செள்ளை என்பதை அறியமுடிகிறது.
இளஞ்சேரல் இரும்பொறையின் தாய் –அத்துவஞ்செள்ளை
இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சிக்கு வரும் நிலையில் அவளின் தாயான அத்துவஞ்செள்ளையும் இப்பதிகத்தில் குறிக்கப்படுகிறாள்.
இவள் வேளாவிக் கோமான் மகள் பதுமன் தேவி என்வளின் மருமகளும் ஆவாள்.
இவ்வாறு மகள், மனைவி, தாய், மாமியார், மருமகள் போன்ற உறவுகளின் வழியாக பெண்ணிடம் இருப்பிடம் எத்தகையது என்பதை உணர்ந்து கொள்ளமுடிகின்றது.
தாய்முறை நோக்கும் பெண்ணியமும்
ஆதிகாலத்தில் அல்லது தொன்மைக் காலத்தில் பெண் தலைமையிலான ஒரு சமுதாயம் இருந்தது என்பதற்கான பல சான்றுகள் உலகெங்கிலும் காணக்கிடைக்கின்றன. இம்மரபில் பெண் விடுதலை மிக்கவளாக, உடல் அளவிலும்,பொருளாதார அளவிலும் திகழ்ந்துள்ளாள். அவளை யாரும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அவளே தலைமைத்துவம் பெற்றுத் தனக்கென ஒரு சமுதாயத்தை அமைத்துக்கொண்டாள். இதனைத் தாய்மைச் சமுதாயம் என்று கொள்ளலாம்.இதில் பெண்ணுக்கு ஆளுமையும் அதிகாரமும் இருந்தது.
மெல்ல இந்நிலை மாறி தாய்வழிச் சமுதாய மரபு தோற்றம் பெற்றது. அதாவது பெண் தன் உரிமைகளை ஆண் தலைமையிடத்தில் பறிகொடுத்து அவனின் கட்டுப்பாட்டில் வாழ வேண்டியவளாக மாற்றம் பெற்றாள்.இந்நிலையில் அவளை சரி செய்வதற்காக பெண் வழியாகச் சொத்துப் பரிமாற்றங்கள் இன்னும் பிற நடைபெற்றிருக்க வேண்டும். இதுவே தாய முறை அமைப்பாகும்.இத்தாய முறை அமைப்பின் வழி ஆண் அரசுரிமை அல்லது அதிகாரம் பெறுகிறான்.ஆனால் அவ்வாண் பெண் வழி வந்தவனாக இருப்பான்.
இந்நி்லைப்பாட்டில்தான் பதிற்றுப்பத்து கால சமுதாயத்தை இனம் காணமுடிகின்றது. பெண் ஆண் அதிகாரத்துக்கு உட்பட்டு நிற்கிறாள்.ஆனால் அவள் வழியான இனக்குழு தொடர்ந்து வலிமை பெற்றிருந்தது என்பதைக் காட்டும் மிகச் சிறந்த சங்க இலக்கிய ஆவணம் பதிற்றுப்பத்தின் பதிகங்கள் ஆகும்.
ஒரு மகனை, ஒரு கணவனை முறையே அவனின் தாயின் பெயர் சொல்லி, அவனின் மனைவி பெயர் சொல்லி அறிமுகப் படுத்தும் முறைமை பதிற்றுப் பத்தின் பதிக காலத்தில் அமைந்திருக்கின்றது. இந்நிலை பிற்கால இலக்கியங்களில் இல்லை என்பது தெளிவு.
ஆணின் அப்பா, தாத்தா, பாட்டன், பூட்டன் பெயர் அறியும் நிலையில் பெண்ணின் அப்பாவைக் கூட அடையாளம் காண முடியாத நிலையில்தான் பெண் பற்றிய பதிவுகள் தமிழிலக்கியங்களில் உள்ளன. இந்நிலையில் பதிற்றுப் பத்து பதிகங்கள் வழி பெண் வரலாறு தெரியவருகிறது.அவளின் உறவு, அவளிடம் மதிப்பு, அவளின் இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் பதிற்றுப் பதிகங்கள் ஆய்வுலகில் குறிக்கத்தக்க பார்வையினை பெறத்தக்கனவாகும்.
முடிவுரை
பதிற்றுப் பத்துப் பதிகங்களின் வழியாக சேரர் குடியின் அரசப் பெண்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகின்றது.இன்றைக்கு வரையான வேறு இலக்கிய வகைகளில் காணக் கிடைக்காத புறமரபு இதுவாகும். ஒரு பெண் மகளாக, தாயாக, மனைவியாக, அரசியாக சமுதாயத்தில் இடம்பெற்றாள் என்பதற்கான சான்றுகள் பதிற்றுப்பத்தின் பதிகங்களில் உள்ளன. இதுவரை சேரலாதன் குடி, இரும்பொறை குடி என்றழைக்கப்பட்ட சேரர் குடிகளை நல்லினி குடி, பொறையன் தேவி குடி என்று காண வாய்ப்பு இருக்கிறது. இவ்வி்ரு தேவியரும் தன் மகன், மருமகள் , பேரன் பேத்தி வழியாக வரலாற்றில் இடம்பெற்றிருப்பது மிகச் சிறந்த வரலாற்றுப் பதிவு என்பதில் ஐயமில்லை. இனி பதிற்றுப் பத்து தாய் வழியால் வரலாற்றில் அறியப் பெறும்.
அடிக்குறிப்புகள்
1. பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல் ப. 426
2. நாவலர் சோம சுந்தர பாரதியார், சேரர் தாயமுறை, முன்னுரை
3. இணைய தளச் சான்று (https://www.britannica.com/topic/matrilineal-society)
4. மேற்கோள் நா. வானமாமலை, தமிழர் பண்பாடும் தத்துவமும், ப. 127
5. நாவலர் சோம சுந்தர பாரதியார் , சேரர் தாயமுறை, ப. 120
முனைவர் மு.பழனியப்பன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பதிற்றுப் பத்துப் பதிகங்களின் வழி மீட்டெடுக்கப்படும் தாய்வழிச் சமுதாய மரபு – (பாகம் -2)”