பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்
ஆச்சாரிJun 7, 2014
பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயம் – ஜெர்மன் குழந்தைகள் செவ்வாய்கிரகத்தில் போராட்டம்
திரைப்படங்களில் வசனங்கள், பாடல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் இருந்தாலும் பெயர்மட்டும் தமிழில் வைத்து விட்டால் போதும் இலட்சக்கணக்கில் வரிச்சலுகை பெற்றுவிடலாம் என்பது போன்ற சிறந்த தமிழ் வளர்ப்பு திட்டங்களை வழங்கி வந்த தமிழகஅரசு சமீபத்தில் உருப்படியான ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது.
அந்த அறிக்கையின்படி 2016 ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் முதல் பாடமாக கட்டாயம் எழுதவேண்டும். இது ஒன்றும் புதிய செய்தி அல்ல. 2006 ஆம் ஆண்டு இயற்றிய சட்டத்தின்படி முதல் வகுப்பில் இருந்து தமிழ் பாடத்தை அறிமுகப்படுத்தி, 2016 ஆண்டில் பத்தாம் வகுப்பிற்கு கொண்டு வருகின்றனர்.
ஆனால் நூறு, இருநூறு ஆண்டுகள் கூட அவகாசம் கொடுக்காமல் எப்படி பத்தாண்டுகளுக்குள் தமிழ் பாடத்தை கட்டாயம் ஆக்கலாம் என்று கல்வி தாத்தாக்கள் (எவ்வளவு நாளா தந்தையாக மட்டுமே இருக்க முடியும்) பொங்கி எழுந்திருக்கின்றனர்.
எல்லையோர மாவட்ட மக்கள் எப்படி தமிழ் பாடத்தில் தேர்வு எழுத முடியும் என்று பள்ளி முதலைகள் (முதலாளிகள் என்றும் வாசிக்கலாம்) கண்ணீர் வடிக்கின்றனர். சென்னை, மதுரை, திருச்சி போன்ற எல்லையோர நகரங்களில் வாழும் குழந்தைகள் இதுவரை அவர்களின் மாவட்டமொழிகளான ஜெர்மன், பிரஞ்சு சம்ஸ்கிருதம் போன்றவற்றில் தேர்வு எழுதுவதைத் தடுப்பது உரிமை மீறலாகும். இதை உடனடியாக நீக்காவிட்டால் ஜெர்மன் குழந்தைகளைக் கொண்டு செவ்வாய் கிரகத்தில் கைதாகி விடுதலையாகும் வரை போராட்டம் நடத்தப்படும் என்று முதலைகள் அறிவித்திருக்கின்றனர்.
நடுவண் அரசில் பணியாற்றும் அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வேலை மாறி வந்தால் அவர்களின் குழந்தைகள் எப்படி தமிழில் தேர்வு எழுத முடியும் என்று பக்கத்து இலைக்குபாயாச கேள்வியை எழுப்பி இருக்கின்றனர். நடுவண் அரசு அதிகாரிகளுக்கென்றே இந்தியாமுழுவதும் ஒரே பாடத்திட்டங்களைக் கொண்ட பள்ளிகளை நடுவண் அரசே நடத்துகின்றதே அதில்படிக்க வேண்டியது தானே என்று கேட்டால், அங்கே படித்து வீணாக போகவா, எங்கள் பிள்ளைகளை எங்கே படிக்கவைக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும் என்று முகத்தை வெட்டிச்செல்கின்றனர். வடைக்கடையில் வந்து வாழைப்பழம் கேட்டு வம்பிழுத்தால் என்ன செய்யமுடியும்?
எங்கள் பள்ளிகளில் நாங்கள் தமிழ் பாடமே நடத்துவதில்லை எங்கள் மாணவர்களால் தமிழ்தேர்வு எழுதவே முடியாது அவர்களின் வாழ்க்கையையே நாசமாக்கிவிடாதீர்கள் என்று தனியார் பள்ளி குண்டர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். அரசு சட்டப்படி 2006 ஆம் ஆண்டு முதல் தமிழ் பாடம் நடத்தி இருக்க வேண்டுமே என்று கேட்டால் நாங்கள் பொதுவாக சட்டங்களை பின்பற்றுவதில்லை என்று அப்பாவியாக தெரிவிக்கின்றனர். அவர்களை குறைசொல்ல முடியாது அவர்கள் இதற்கு முன்னர் செய்து வந்த தொழில்கள் அப்படி.
இந்த சட்டத்தால் ஜெர்மன், பிரெஞ்சு சமஸ்கிருதம் உருது போன்ற மொழிகள் மட்டுமே அறிந்த ஆசிரியர்கள் வேலை இழக்க வேண்டிவரும். பிட்டே ஹெல்பன் (bitte helfen – ஜெர்மன் மொழியில் தயவு செய்து உதவுங்கள்) சில் வாஸ் ப்லைட் ஐடெர் (s’il vous plaît aider – பிரஞ்சு மொழியில் அதே தாங்க) என்று ரங்கநாதன்தெருவில் வெள்ளைத்தோல் ஆசிரியர்கள் அலைந்தால் அந்த பாவம் உங்களையே சேரும்என்று கல்வி பாட்டிகள் சாபம் கொடுக்கின்றனர். இவர்களை நீங்கள் யாரேனும் பார்த்தீர்களே ஆனால் பத்துரூபாய் கொடுத்து Tamilisch lernen (ஜெர்மனில் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்), apprendre tamil (பிரெஞ்சில் அதே தாங்க) என்று கூறுங்கள், வேறு என்ன சொல்வது தமிழ்நாட்டில் தாய்லாந்து மொழியையா கற்றுக்கொள்ள சொல்லமுடியும்?
இந்தித் திணிப்பையே எதிர்த்தவர்கள் நாங்கள், இந்த தமிழ் திணிப்பை கண்டா அஞ்சிவிடுவோம் என்று புதிதாக சிலர் கிளம்பி இருக்கின்றனர். பள்ளி இடைவேளை நேரங்களில் கூட தமிழில் பேசி விளையாடினால் அபராதம் விதித்து நீங்கள் தானே ஆங்கிலத்தை திணிக்கிறீர்கள் என்றால், நாங்கள் ஆங்கிலத்தை திணிக்கவில்லை நூதனமாக பணம் வசூலிக்கின்றோம் என்று தொழில்இரகசியத்தை கூறுகின்றார்கள்.
தனியார் கல்வி போக்கிரிகள் அனைவரும் கூடி தமிழக அரசை கண்டித்து கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கின்றனர்.
1. தமிழ் தேர்வை ஆங்கிலத்தில் எழுத அனுமதிக்க வேண்டும்.
2. தமிழ் தேர்வில் கருணை மதிப்பெண்களாக அனைவருக்கும் 100 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.
3. தமிழ் பாடம் நடத்துவதற்கு பெற்றோர்கள் ஆண்டிற்கு ஒரு இலட்சம் ரூபாய் மொழிக்கட்டணம் செலுத்தவேண்டும்.
4. அரசு பள்ளிகள் அனைத்தையும் மூடி தனியார் பள்ளி கல்வியை கட்டாயமாக்க சட்டம் இயற்றவேண்டும்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் பதினைந்து நாட்களுக்குள் ஜெர்மன் குழந்தைகளைக்கொண்டு செவ்வாய் கிரகத்தில் வரலாறு காணாத போராட்டம் நடத்தப்படும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்”