ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

பயனில செய்யாமை

தேமொழி

Sep 10, 2016

இது ஒரு ‘வெட்டிவேலை’ என்ற சொல்லாடல் பொதுவாக இன்றைய வழக்கத்தில் உள்ளது. இந்த இடத்தில் நாம் குறிப்பிட விரும்பும் கருத்து; இது ஒரு தேவையற்ற வேலை, இதனைச் செய்வதினால் பலன் ஒன்றும் இருக்காது, இதைச் செய்வதால் எந்த ஒரு பயனையும் அந்த வேலையைச் செய்பவர் அடையப்போவதில்லை என்பது போன்ற பொருளில் அமைந்திருக்கும். அதாவது, ஒரு ‘பயனற்ற செயல்’ அல்லது ‘பயனற்ற வேலை’ என்பது வெட்டிவேலை. வெட்டி முயற்சி என்று குறிப்பிடும் பொழுது, அந்த முயற்சி பலன் தராது என்று அறியப்படுகிறது.

அதைப்போலவே, எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருப்பவர்களை ‘வேலைவெட்டி’ இல்லாதவர் என்றும் சொல்வோம். ‘வெட்டிவேலை’ என்பதற்கும் ‘வேலைவெட்டி’ என்பதற்கும் உள்ள வேறுபாடே வேலையும் வெட்டியும் இடம் மாறிவிடுவதுதான். வேலைவெட்டி இல்லாதவரை நாம் பயனற்றவர், அவரால் எந்த பலனும் கிடையாது என்ற பொருளில் தான் குறிப்பிடுகிறோம். அதாவது, இங்கு மீண்டும் நாம் ‘பயன்’ குறித்த பொருளில்தான் வேலைவெட்டி என்பதையும் கையாளுகிறோம். வேலைவெட்டி இல்லாதவர்களை ‘வெட்டி ஆபீசர்’ என்று நையாண்டி செய்யும் நிலைமையும் உள்ளது.

‘உனக்கு வேறு ஏதாவது வேலைவெட்டி இருந்தால் அதனைப் போய் செய்வதுதானே’ என்று மறைமுகமாக நம் செயலில் இடையிடும் ஒருவரைத் துரத்திவிடும் பொழுதும், ‘எல்லாம் நீ வெட்டிக் கிழித்ததே போதும்’ என்றோ; ‘பெரிதாய் இங்கே என்ன வெட்டி முறிக்கின்றாயாம்?’ என்று எரிச்சலுடன் ஒருவரைக் கடிந்து கொள்ளும் பொழுதும் ஒருவரது செயலைத்தான் குறிப்பிடுகிறோம். வேலை என்று சொல்லாமலே, வெறுமையாக வெட்டி என்றாலும் கூட அந்த இடத்தில் அது வேலையைத்தான் குறிக்கிறது.

வேலையும் வெட்டியும் ஏன் சேர்ந்தே வருகிறது? அதன் பொருள் என்ன என்று நாம் சிறிதும் யோசிப்பதில்லை. இவை வழக்கத்தில் வந்துவிட்ட சொற்றொடர்கள்.

வெட்டி என்ற சொல்லும் வேலை என்ற சொல்லும், ‘வேலைவெட்டி’ என்றோ, ‘வெட்டிவேலை’ என்றோ அடுத்தடுத்து ஓசையின் பொருட்டு இணைந்தே வருவது வழக்கமாகவும் உள்ளது. அதாவது ‘அரசல் புரசல்’, ‘நகை நட்டு’ என்பது போல வெகு இயல்பாக அடுத்தடுத்து ஓசையுடன் இணைந்தே வருகிறது. ஆகவே, பொதுவாக ‘வெட்டி’ என்றாலே அது பயனற்ற ஆளையோ, செயலையோ குறிப்பிடுவதாக நாம் புரிந்து கொள்கிறோம்.

மாறாக, ‘வெட்டி’ என்பதற்கு ‘வெட்டிவிடுதல்’ (cut) என்றும் பொருளும் உண்டு என நாம் அறிவோம். அதன் அடிப்படையில், இறந்த பிறகு சொந்த பந்தங்களை வெட்டிவிடும் பணியினைச் செய்பவர் ‘வெட்டியான்’ என்ற விளக்கமும் கொடுக்கப்படுகிறது. எனவே ‘வெட்டு’, ‘வெட்டி’ என்ற வேர்ச் சொற்களிலிருந்து ‘வெட்டியான்’ என்ற சொல் தோன்றியிருக்கவேண்டும் என்றும் கூறப்படுகிறது [1].

வெட்டி என்பதற்கு என்ன பொருள் என்று தேடினால், ‘வெட்டி’ என்பதற்கு வீண், பயனற்றது, பொழுதை வெட்டியாகக் கழிக்காதே, வெட்டிப்பேச்சு என்று ‘செந்தமிழ் அகராதி’ (ந.சி. கந்தையாப்பிள்ளை, 1957) பொருள் தருகிறது. ‘வெட்டி’ என்பது பயனற்றது என்பதைக் காட்டும் பொருட்டு, ‘பொழுதை வெட்டியாகக் கழிக்காதே’, ‘வெட்டிப்பேச்சு’ என்பனவும் விளக்கத்திற்காக எடுத்துக்காட்டுகளாகக் காட்டப்படுகிறது.

‘வெற்றாக இருப்பது’ என்பதைக் குறிக்கும், ‘வெற்று’ என்பது மருவி ‘வெட்டி’ என்று அழைக்கப்படுகிறது என்றும் இதன் மூலம் புலப்படுகிறது. ‘வெற்றாள்’ என்ற சொல்லின் பொருளை நோக்குவோமானால் அது ‘வேலையற்ற’ ஒருவரைத்தான் குறிக்கிறது. ஆனால், ‘விருஷ்டி’ என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்துதான் ‘வெட்டி’ என்ற சொல் வந்திருக்கும் என்று கருதுபவர்களும் உள்ளனர் [1].

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல். (குறள் – 200)

என்ற குறளுக்குப் பொருள் கூறும் முனைவர் செங்கை பொதுவன் அவர்களும் ‘பயனிலாச் சொல்’ என்பதை ‘வெட்டிப் பேச்சு’ என்றுதான் குறிப்பிடுகிறார் [2].

‘வெட்டி குடி’ என்பது கோயில் கல்வெட்டிகளில் பயன்படும் ஒரு சொல் வழக்கு. பெரும்பாலும் கல்வெட்டுகளின் தகவலின்படி கோவிலில் விளக்கேற்ற நெய் அளப்பது, நெய்விளக்கேற்ற கொடையாகக் கொடுக்கப்படும் ஆடு, மாடுகளுக்குப் பொறுப்பேற்பது போன்றவற்றைச் செய்பவர்கள் வெட்டி குடி என்பவர்களாக அறியப்படுகிறார்கள்.

தொல்லியல் துறை ஆய்வாளர் முனைவர் சொ. சாந்தலிங்கம் (Archaeological officer (Retd.) Dr. C. Santhalingam) அவர்கள், “வெட்டி குடி” என்பவர்கள் ஊதியம் பெறாமல் கோவிலில் பணிபுரியும் ஒரு குழுவினர் எனக் குறிப்பிடுகிறார் (“Vettikudi refers to a group of people who are unpaid temple workers”). மதுரை வைகை ஆற்றின் தென் கரையில் உள்ள திருப்புவனம் (திருப்பூவணம்), திருப்பூவணர் கோவிலில்; பாண்டிய மன்னன் சடையன் மாறனின் பொது ஆண்டு 10 ஆம் நூற்றாண்டு காலத்துக் கல்வெட்டு ஒன்றில், கோவிலில் அணையாவிளக்கு ஏற்றுவதற்காக வழங்கப்பட்ட கொடையானது “திருப்பூவணத்து தேவர் வெட்டி குடி பூவணவன் அரையன்” (Vettikudi PoovananArayan) என்றழைக்கப்பட்ட வெட்டி குடி ஒருவரின் பொறுப்பில் ஒப்படைக்கப்படுகிறது [3].

கோயில் திருச்சுற்று நடைபாதையில் வடமேற்கு மூலையில் பதிக்கப்பட்டிருக்கும் துண்டு கற்களில் உள்ள கல்வெட்டு வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, பார்க்க வரிகள் 30-33, (எண் = கல்வெட்டின் வரி எண்)   [4]:

23 இதனுக்கு

24 குடுத்த சாவா மூவாபே

25 ராடு எயருஈ பத்தஞ்

26 சும் சாத்து வைச்சு நி

27 சதம் நாராய உழக்கா

28 ல் உழக்கு நெய் மு

29 ட்டாமல் அட்டு வா

30 ன் திருப்பூவணத்து

31 தேவர் வெட்டி குடி

32 பூவணவன் அரைய

33 ன் இவனுக்கு

34 தேவன் அ….

ஊதியம் பெறாமல் பணி புரிந்ததாகக் குறிப்பிடப்படும் இத்தகைய வெட்டி குடிகள் கோவிலில் பணி புரிந்ததைத் தென்னிந்திய கல்வெட்டு நூலில் காணும் மற்றொரு கல்வெட்டும் குறிப்பிடுகிறது. திருநெல்வேலி நரசிம்ம பெருமாள் கோவிலில் வடக்குசுவரில் இருக்கும் கல்வெட்டு, ‘எட்டி ஜடவேதன்’ என்ற வெட்டி குடி ஒருவர் அணையாவிளக்கை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள, அவருக்கு ‘மனநடை மாதேவன்’ என்ற வெட்டி குடி உதவும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார் எனக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டுத் தகவலை முழுமையாகக் கட்டுரையின் இறுதியில் கீழே காணலாம் [5].

அழகர் கோவிலின் கருவறையின் வடக்குச் சுவரில் காணப்படும் 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று, கோவிலின் விளக்கு ஏற்றும் நன்கொடைக்கான பொறுப்பை உள்ளூர் தேவர் குலத்தைச் சார்ந்த வெட்டி குடி ஒருவர் ஏற்றுக்கொண்டதைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டுத் தகவலும் கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது [6].

இராமநாதபுரம் மாவட்டம் மடப்புரம் கோவிலின் சுவரில் காணப்படும், பாண்டிய மன்னன் மாறன் சடையனின் 9 ஆம் -10 ஆம் நூற்றாண்டு காலத்திய தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டொன்றில், அணையாவிளக்கு ஏற்ற கொடுக்கப்பட்ட கொடையை ஏற்று தேவர் வெட்டி குடி சேந்தன் கரந்தன் என்பவர், தினமும் உழக்கு நெய் ஊற்றி விளக்கேற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுத் தகவலையும் இக்கட்டுரையின் இறுதியில் காணலாம் [7].

திருநெல்வேலி பகுதியில் வெட்டி குடி இருந்த தகவலையும், ஊதியமின்றி தனது உழைப்பை நல்கிய வெட்டி குடிகள் போர்க்காலத்தில் படையிலும் சேர்ந்து நாட்டின் பாதுகாப்பிற்காகவும் உழைத்தார்கள் என்பதை தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை வெளியிட்ட பாண்டியர்கள் குறித்த வெளியீடு – 151 குறிப்பிடுகிறது [8].

உழைப்பிற்குப் பலன் பெறாமல் ஊழியம் செய்த வெட்டி குடிகளைத் தன்னார்வத் தொண்டர்களாக கருதவும் வழியில்லை என்பது சி. இராஜாராம் அவர்கள் கொடுக்கும் சில குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது [1]. மன்னர்கள் காலத்தில், வெட்டி குடிகள் இவ்வாறாக ஊதியம் இன்றி உழைக்க நேர்ந்தது அவர்களுக்காக வழங்கப்பட்ட தண்டனை காரணமாகவும் இருக்கலாம். கோவில் பணியில் ஈடுபட விரும்பாதவர்களை ‘சிவத் தூரோகி’ என்று குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் கோவிலுக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், இப்பணியை இவர்கள் செய்யாவிட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்றும், ஆனால் பணியை செய்தால் கூலி கிடையாது என்றும் சி. இராஜாராம் கூறுகிறார். இக்கருத்தும் தொல்லியல் துறை ஆய்வாளர் முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்கள் அளித்த கருத்தையே ஒத்திருக்கிறது. இதே வெட்டி குடி பணியாளர்கள் முறை திருவிதாங்கூர் இராச்சியத்திலும் இருந்திருக்கிறது என்பதும் சி. இராஜாராம் கூறும் தகவல். திருவிதாங்கூர் இராச்சிய மன்னரிடம் 64 வகை ஊழியர்கள் பணிபுரிந்தனர். இவர்கள் செய்யும் ஊழியம் என்பது வெட்டி வேலை. ஊழியம் செய்யாவிட்டால் தண்டனை உண்டு, ஆனால் ஊதியம் கொடுக்கப்படமாட்டாது என அவர் குறிப்பிடுகிறார்.

வெட்டி குடி செய்த பணியின் அடிப்படையில் பொருள் காண்போம் என்றால், அவர்கள் செய்தது ஒரு வெட்டிவேலை என்பதால் அவர்களுக்கு அதனால் எந்தப் பலனும் இல்லை. அவர்கள் விரும்பிச் செய்திருந்தாலும், விரும்பாமல் செய்திருந்தாலும் அவர்கள் அளித்த உழைப்பிற்கு ஈடாகப் பொருளாதார வகையில் அவர்கள் பயனடையவில்லை.

இந்த நிலையை, புராணக் கதையின் குறிப்பொன்றில் இருந்தும் நாம் பெறலாம். வைகையின் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த வீட்டுக்கு ஒருவர் வந்து உழைக்க வேண்டும் என்ற பாண்டியனின் கட்டளையாக திருவிளையாடற் புராணம் கூறுவதும் ஒரு வெட்டிவேலைதான். அந்த உழைப்பிற்கு ஊதியம் கொடுத்திருந்தால் வாரிசு இல்லாத, தள்ளாத வயதுடைய பிட்டு சுடும் வந்தி பாட்டி சிவனிடம் முறையிட நேர்ந்திருக்காது. அடுத்த வீட்டுக்காரரே வந்தியின் சார்பாக தனது வீட்டிலிருந்த மற்றொருவரை அனுப்பி மண்வெட்டச் சொல்லி அந்தக் கூலியைப் பெற்றுக் கொண்டிருப்பாரல்லவா? இதனால் சிவன் வந்து வெட்டிவேலை (மண்வெட்டி சுமந்து செல்லும் வேலை எனவும் கொள்ளலாம்) செய்யும் நிலை ஏற்பட்டிருப்பதை புராணக்கதை கூறும் தகவலாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இதனால், வேலை என்பது வருமானம் தரும் ஒரு பணி என்றும், வெட்டி என்பது வருமானம் தராத பணி என்றும், அதாவது வெற்றாகப் போன உழைப்பு என்றும் கருத வழியுண்டு. இந்த அடிப்படையில் காணும் பொழுது, வெட்டிவேலை என இக்காலத்தில் குறிப்பிடுவதன் பொருள் நமக்குத் தெளிவாக விளங்கும். உழைப்பதனால் பயனடைய முடியாத ஒரு வேலையைச் செய்பவர் வெட்டிவேலை செய்பவர்.

வருமானம் தரும் ஒரு வேலையையோ, வருமானம் தராத ஒரு வெட்டிவேலையையோ செய்யாதவரை வேலைவெட்டி இல்லாதவர் (வேலையும் அவருக்கு இல்லை, வெட்டியும் அவருக்கு இல்லை) என அழைப்பதும் பொருந்துகிறது. இந்த வெட்டிவேலை என்பதன் பொருள் காலப்போக்கில் மறக்கப்பட்டிருந்தாலும், அதன் பொருள் மாறாமல் வெட்டிவேலை, வேலைவெட்டி என்பது அதே வழக்கத்தில் இன்றும் தொடர்ந்து வருவது தெரிகிறது.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும். (குறள் – 466)

என்று குறள் அறிவுறுத்துவதால், ‘செய்தக்க செய்யாமை யானும் கெடும்’ என்பதை உணர்ந்து உழைக்கத் தேவையற்ற நிலையில் இருப்பவர்களும் கூட ஏதேனும் தொண்டூழியம் செய்யும் நோக்கில் வெட்டிவேலை (ஊதியமற்ற வேலை) செய்தால், அவர்களுக்கு அது பயனளிக்கா விட்டாலும் பிறர் அவரது தொண்டால் பலனடைவர். இங்குக் குறிப்பிட்ட வரையறையின்படி, தன்நலன் கருதாது, பயன் கருதாது உழைக்கும் தொண்டூழியம் ஒரு வெட்டிவேலைதான். அதனைத் தொண்டு செய்பவர் மறுத்து தனக்கு மனநிறைவு என்ற பயன் இருக்கிறது எனக் குறிப்பிட்டாலும், அவர் செய்வது ஒரு வெட்டிவேலை என்பது அவரது குடும்பத்தவர் கருத்தாக இருக்கும்.

________________________________________________

[5]

No. 18

(A. R. No. 85 of 1927.)

Tirunelveli, Tirunelveli Taluk, Tirunelveli District.

On the north wall of the Narasimha-Perumal temple.

This Vatteluttu record is dated in the 2nd year of the reign of Maranjadaiyan and registers a gift of cows made by Sattanammai, for burning a lamp in the temple of Brahmapurittevar at Tirunelveli, on behalf of Sattan-Deyam, a devaradiya of Tirunelvel in Kil-Vemba-nadu. Etti-Jatavedan, a ‘vettikkudi’ agreed to burn the lamp and Mananadai-Madevan, another ‘vettikkudi’ stood security (punai) for the former.

It is possible that the temple was originally one of Siva called Brahmapurittevar. A record of rajaraja I dated in the 12th year of his reign also refers to the god by this name only (No. 84 of 1927) ; and it is only in a record of Jatavarman Kulasekhara (No. 83 of 1927) that the Narasimha-Perumal is referred to as Vikrama-Pandya-vinnagar-Alvar.

[South Indian Inscriptions: Volume 14]

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_14/stones_1_to_25.html

________________________________________________

[6]

On the north wall of the central shrine in the Alagar temple. Dated in the third year of the Chola- Pandya king Jatavarman alias Udaiyar Sri-Chola-Pandyadeva (1021 43). Records gift of twenty-five sheep for a lamp to the temple of Ten-Tirumalirunjolai by a native of Devar-’Vettikudi’ near Tirunelveli in Kilvembanadu, a subdivision of Mudigonda Chola-valanadu, a district of Rajaraja-Pandi-nadu.

431. 408 of 1906

[A topographical list of the inscriptions of the Madras presidency (collected till 1915) with notes and references - Page No. 1493]

https://archive.org/stream/topographicallis03rangiala#page/1492/mode/2up/search/Vettikudi

________________________________________________

[7]

16. PANDYA INSCRIPTION, MADAPPURAM, DISTRICT RAMANATHAPURAM.-This record, engraved on a stone built into the wall of the temple, is in Tamil language and Vatteluttu characters of ninth-tenth century AD. Though the record is damaged in the beginning, from the extant portion, it may be restored that the record belongs to the reign of the early Pandya king Maranjadaiyan. It registers the gift of fifty sheep for a perpetual lamp by Vilandai Siruvan alias Tennavan alias Pallavaraiyan of Mannuru. It is stated that Devar ‘Vettikkudi’ Sendan-Karandan of this village undertook to supply one ulakku of ghee daily by the measure called Solivan.

[Indian Archaeology. Indian Archaeology - A Review (An Annual Publication on Archaeological Reports) , 1990-91, ed., S.K. Mahapatra (1995). Page No. 85]

http://asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201990-91%20A%20Review.pdf

________________________________________________

நன்றி:

திருப்பூவணம் கோவிலின் கல்வெட்டு வரிகளை, திருப்பூவணக்காசி என்ற தனது நூலில் இருந்து எடுத்துத் தந்த முனைவர் காளைராஜன் அவர்களுக்கு நன்றி.

‘வெட்டி குடி’ குறித்த பொருள் விளக்கம் தந்த தொல்லியல் துறை ஆய்வாளர் முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்களுக்கும் நன்றி.

________________________________________________

தகவல் பெற்ற இடங்கள்:

[1] வெட்டியான் முதல் ஹரிஜன் வரை, சி. இராஜாராம் (http://www.tamilpaper.net/?p=8271)

[2] திருக்குறள் பாவுரை – 191-200, முனைவர் செங்கை பொதுவன் (http://vaiyan.blogspot.com/2016/06/tirukkural-pavurai-191-200.html)

[3]Namma Madurai: The Lord of Thirupuvanam

(http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/namma-madurai-the-lord-of-thirupuvanam/article5093118.ece)

[4] திருப்பூவணக்காசி, முனைவர் கி. காளைராஜன், 2007, கே. நித்யா பதிப்பு. பக்கம் 62.

[5] PANDYA INSCRIPTIONS, INSCRIPTION OF THE EARLY PANDYAS

(http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_14/stones_1_to_25.html)

[6]A topographical list of the inscriptions of the Madras presidency (collected till 1915) with notes and references

by Rangacharya, V. (Vijayaraghava); Archaeological Survey of India, Published 1919; Volume III; Page No. 1493

(https://archive.org/stream/topographicallis03rangiala#page/1492/mode/2up/search/Vettikudi)

[7]Indian Archaeology. Indian Archaeology – A Review (An Annual Publication on Archaeological Reports) , 1990-91, ed., S.K. Mahapatra (1995). Page No. 85

(http://asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201990-91%20A%20Review.pdf)

[8] The Pandiyan Townships Part – II,

(The Pandyan Townshops, their Organaisation and Functioning)

R. Tirumalai, 2003. Chapter – 4, Page No. 174.

Department of Archaeology, Government of Tamilnadu – Publication Number: 151


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பயனில செய்யாமை”

அதிகம் படித்தது