மே 30, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

பறிக்கப்படுகிறதா … மாநில சுயாட்சி

சுசிலா

May 20, 2017

Siragu-state-govt1

தற்போது நிலவும் தமிழக அரசியல் சூழல் மிகவும் வருத்தப்படக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நம் மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொன்றும் புதிராகவே காணப்படுகின்றன. ஆளும் மாநில கட்சி அதிமுக-வை பலகீனமடையச் செய்து, இரு முக்கிய குழுக்களாகவும், மற்றும் சில சிறிய குழுக்களாகவும் பிரித்து, அக்கட்சியைத் தன வசம் வைத்துக்கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு.

இந்தியாவிற்கே, ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்று முழங்கி, புரிய வைத்தவர்கள் தமிழக மக்கள் மற்றும் அப்போதைய அரசியல் தலைவர்கள். ஆனால், அப்பேற்பட்ட தமிழகத்திற்கு இன்று ஏற்பட்டிருக்கும் நிலைமை என்னவோ பொம்மலாட்ட அரசு தான். நம் மாநில ஆட்சியின் கயிறு மத்திய அரசிடம் முழுவதுமாக போய் விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நம் ஆட்சியாளர்கள் கைப்பாவைகளாக மாறி விட்டிருக்கின்றனர் என்பது வேதனைக்குரிய ஒன்று. கண்டனத்துக்குரிய ஒன்று.

Siragu-state-govt3

முன்னாள் முதல்வரால் நிராகரிக்கப்பட்ட நீட் தேர்வு, உதய் மின்திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச்சட்டம் முதலியவை கையெழுத்து இடப்பட்டு அமுலாக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் ‘நீட் தேர்வு’ என்பது நம் வருங்கால சந்ததியினரின் கல்வியை கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இடஒதுக்கீட்டையும் ஒழித்துக்கட்ட மத்திய மதவாத அரசு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏழாம் தேதி (7-5-2017) அன்று நடந்த நீட் தேர்வின் போது மாணவர்களை எந்த அளவிற்கு மனஉளைச்சலுக்கு ஆளாக்கினார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். சிறிது கூட ஏற்றுக்கொள்ள முடியாத அக்கிரமம் அது. மத்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு கல்வித்துறைக்கு இந்திய மனித உரிமை ஆணையம் கேள்விகேட்டு தாக்கீது அனுப்பி இருக்கிறதென்றால், இதை விட அவமானம் ஒரு நாட்டிற்கு உண்டா?.

பலதரப்பட்ட கல்வி முறைகள் உள்ள இந்நாட்டில் ஒரே பொதுத்தேர்வு என்பது எப்படி சாத்தியமாகும். வசதியற்ற, கிராமப்புற, ஒடுக்கப்பட்ட மாணவர்களை வஞ்சிக்கும் செயல் அல்லவா இது.!

இது சமூகநீதிக்கு எதிரானது என்பது நன்றாகவே தெரிகிறதே… இதற்கு நாடெங்கிலும் இருந்து எதிர்ப்புக்குரல் ஒலிக்கப்பட வேண்டும். அதனுடைய முதல் குரல் தமிழகத்திலிருந்துதான் வர வேண்டும். நம் மாநிலம் சமூகநீதி கற்று கொடுத்த மாநிலம். ஆனால் ஆட்சியாளர்களோ, மத்திய அரசை விமர்ச்சிக்கக் கூட வேண்டாம் என்று நம்மை கேட்டுக்கொள்கிறது என்றால் நம் எதிர்காலம் என்னவாகும்.?

அனைத்திலும் மக்களுக்கு எதிரான முடிவை எடுக்கும் ஆட்சி எப்படி மக்களாட்சி என்று கூற முடியும். மக்கள் இதனை நன்கு சிந்திக்க வேண்டும். இல்லையேல் நாம் மறுபடியும் அடிமைத்தனத்திற்கு ஆளாக்கப்படுவோம்.

மேலும், தருமபுரி பகுதியில், ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ‘ஷாகா’ ஊர்வலங்களில், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கலந்துக் கொண்டிருக்கிறார் என்பது எத்துனை கண்டத்துக்குரியது. கட்சியின் பெயரில் திராவிடத்தை வைத்திருக்கும் கட்சி, திராவிடக்கொள்கைகளை மறந்து செயல்படுகிறதென்றால், இதனை ஏற்றுக்கொள்ள முடியுமா…?
தமிழக அரசின் கீழ் செயல்படும் இந்து அறநிலையத்துறையே, மழைக்காக வருண ஜெபம் செய்கிறது. இப்படி அனைத்திலும் மதத்தை புகுத்தி, நம் மாநிலத்தை சீரழிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. தமிழகம் எப்போதும் மதவாத அரசியலை ஆதரித்தது இல்லை.

Siragu-neduvasal2

தான் கேட்க வேண்டும் என்பதற்காகவே, அமைச்சர்களை வருமானவரி சோதனை மூலம் அச்சுறுத்துகிறது மத்திய அரசு. நம் அமைச்சர்களும் மக்களைப்பற்றி கவலைகொள்ளாமல், தங்கள் நலனைப் பார்த்துக்கொள்கிறார்கள் என்றால் இந்த அரசு இனிமேலும் தொடர முடியுமா என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது. மாநில தலைமைச் செயலகத்தில், மத்திய அமைச்சர் திரு.வெங்கையாநாயுடு கோப்புகளை பார்வையிடுகிறார் என்றால், நம் மாநிலம் அவர்களின் கையில் போய்விட்டது என்பதைத் தானே உறுதி செய்கிறது.!

எக்காரணம்கொண்டும் நம் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது. இது யூனியன் பிரதேசமல்ல, சுயாட்சி தத்துவம் கொண்ட ஒரு மாநிலம். ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதற்கென பல துறைகள் இருக்கின்றன. அவைகளை மத்திய அரசிடம் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நம் தற்போதைய முதல்வரோ, எல்லாவற்றையும் மத்திய பாஜக அரசிடம் ஒப்படைத்து விட்டாரோ என்ற அச்சம் வருகிறது. மக்கள் அனுமதி இல்லாமல் செய்ய மாட்டோம் என்ற ஹைட்ரோ கார்பன் திட்டம், தற்போது கையெழுத்திடப்படுகிறது. ஆறு மாதத்தில் வேலையைத் தொடங்குவோம் என்று அந்த தனியார் நிறுவன மேலாளர் கூறுகிறார். அடுத்து பொய்த்துப்போன விவசாயம், மீத்தேன், நியூட்ரினோ, குடிநீரே இல்லாமல் அவதிப்படும் மாநிலத்தில், பெப்சி என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தாமிரபரணி ஆற்றின் நீரை உறிஞ்சி எடுத்துக்கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதுபோல் அனைத்திலும் தமிழகத்திற்கு தீங்கு செய்கிறது மத்திய மோடி அரசு. இவைகளை தட்டிக்கேட்க வேண்டிய மாநில அதிமுக அரசோ, வாய் மூடி மெளனமாக இருக்கிறது.

விழிப்புணர்வு ஊட்டி, சமூகநீதி காத்து, நம் மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்… தேவை தற்போது ஒரு மாபெரும் மக்கள் போராட்டம்.!

தமிழகம் எல்லாவற்றிலும் தனித்தன்மையுடன் முன்னெடுக்கும் முதல் மாநிலமாக திகழ்கிறது. இப்பொழுதும் சிறந்த முன்னோடியாக நாம் இருக்கிறோம் என்பதை பறைச்சாற்றுவோம் … வாருங்கள் மக்களே.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பறிக்கப்படுகிறதா … மாநில சுயாட்சி”

அதிகம் படித்தது