ஆகஸ்டு 1, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

பாச பேதம் (சிறுகதை)

ஸ்ரீதரன்

Sep 29, 2018

father daughter dispute conflict

மனைவிக்குப் பிடித்திருப்பது கணவனுக்குப் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று நம் குழந்தைகளிடம் காட்டும் அன்பில் வித்தியாசம் இருக்கக் கூடாது. ஆனால் கணவர் குழந்தைகளிடம் காட்டும் அன்பில் பேதம் இருக்கிறதே” என்று சங்கரி சிந்தித்துக் கொண்டே மருத்துவமனையில் அவள் கணவர் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள். ”நித்யா அப்பாவுக்கு இப்போ எப்படிமா இருக்கு?”

”அப்படியேதான் இருக்குமா. இன்னும் கண்ணைத்திறக்கல”.

அப்போது, “சிற்றம்பலம், சிற்றம்பலம்” என்று உரத்தக்குரலில் கூப்பிட்டுக் கொண்டே மருத்துவர் அறைக்குள் நுழைந்தார்..

”அவர் தூங்குகிறார் போலிருக்கு” என்றாள் சங்கரி.

மருத்துவர் சிற்றம்பலத்தின் மருத்துவ அறிக்கையைப் பார்த்துவிட்டு நகரும்போது, ”இப்போது அவருக்கு எப்படியிருக்கு மருத்துவர். எப்போ குணமாகும்” என்று கேட்டாள்.

”நாளைக்குத் தான் சொல்ல முடியும்” என்ற மருத்துவர், ”மேரி அதே மருந்தைத் தொடர்ந்து கொடு” என்று நர்ஸிடம் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார்.

”அப்பாவுக்கு உடம்பு எப்போம்மா சரியாகும்?” என்று வினவினாள் சங்கரியின் பெரிய பெண் நித்யா.

”அப்பா எப்போ என் கிட்டே பேசுவார்?” என்று கேட்டாள் சின்னவள் மோனிகா. அவள் அப்பா செல்லம்.

இரண்டு பேருக்கும் இரண்டு வயசு வித்தியாசம். பெரியவளுக்கு இருபது. சின்னவளுக்கு பதினெட்டு.

”சீக்கிரம் சரியாயிடும் கண்ணு. நீங்க இரண்டு பேரும் கடவுளை வேண்டிக்கோங்க”.

”சங்கரி அவருக்கு எப்படி இருக்கு. மருத்துவர் என்ன சொல்றார்” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் மங்களம் சங்கரியின் அம்மா.

”நாளைக்குத்தான் தெரியும்னு மருத்துவர் சொன்னார் அம்மா”.

”அவருக்குச் சீக்கிரம் குணமாயிடுணம்டி. நான் திருப்பதி வெங்கடேச பெருமாள் கிட்டே வேண்டிண்டு இருக்கேன்”.

மருத்துவமனைக்கு வந்து பத்து நாட்கள் ஆகி விட்டது. எப்போது இங்கிருந்து விடுதலை ஆகிப் போவோம் என்று தெரியல. பணமும் இலட்சக் கணக்கிலே செலவாகிறது” என்றாள் சங்கரி.

பதிலுக்கு சங்கரியின் அம்மா தெரியல என்று சொல்வது போல் இரண்டு கையை விரித்து ஒரு பெருமூச்சு விட்டாள்.

சிற்றம்பலம் கணித பட்டாதாரி. சின்ன வயசிலேயே பெற்றோரை இழந்தவர். வறுமையில் வாடியவர். சித்தப்பாவின் வீட்டில் தங்கிப் படித்தார்.

அவருக்கு ஆளுமை பண்பு அதிகம். மோனிகா என்னும் பெயரில் வீடு கட்டிக் கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். குறைந்த பணத்தில் வீடு கட்டிக் கொடுப்பதால் சிற்றம்பலத்துக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர். இதுவரை ஆயிரம் வீடுகளுக்கு மேல் கட்டி இருக்கிறார். சிறந்த நிறுவனம் என்று விருது வாங்கி இருக்கிறார். தன் திறமையால் முன்னேறி வெற்றி அடைந்தவர். வீட்டிலும் அவர் சொல்லும் வார்த்தையைச் சங்கரி தட்டமாட்டாள். அவளைப் பொறுத்தவரை அவர் கணவர் சொல்வதுதான் வேத வாக்கு. சங்கரியின் அம்மா அவள் திருமணத்தின் போது சொன்ன அருமையான அறிவுரையை அவள் இன்றுவரை பின்பற்றுகிறாள். அது வேறொன்றுமில்லை. ”உங்க வீட்டுக்காரர் சொல்ற பேச்சைக் கேள். எதிர்த்துப் பேசாதே” என்னும் மந்திரம்தான். அதைக் கடைப்பிடிப்பதால் சங்கரியின் குடும்ப வாழ்க்கைப் படகு மிகவும் அமைதியாய் போய் கொண்டிருந்தது.

சிற்றம்பலம் சங்கரியிடம் அதிக பாசம் காண்பிப்பார். அவரது இரண்டாவது மகளான மோனிகா பிறந்த போது அவர் வியாபாரம் சாதரணமாய்தான் இருந்தது. மகளின் பெயரில் நிறுவனத்தை ஆரம்பித்த பிறகு அதிர்ஷ்ட தேவதை கண் திறந்தாள். வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்து ஒஹோ என்று எல்லாரும் வியக்கும்படி உச்சிக்கு வந்து விட்டார். ஊரே வியக்கும் கோடீஸ்வரன் ஆகி விட்டார். ஒரு வேளைச் சாப்பாட்டுக்கே திண்டாடிக் கொண்டிருந்த அவர் இப்போது சாப்பிடுவதற்கே நேரம் இல்லாத அளவுக்கு இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்ல. தனக்கு உதவியவர்களுக்கு அவர் ஏதாவது ஒரு வழியில் உதவினார். அவர்களுக்குத் தன் நிறுவனத்தில் வேலைப் போட்டு கொடுத்தார். ஒரு திருநங்கைக்கு தன் நிறுவனத்தில் வேலைப் போட்டுக் கொடுத்தார். அவர் தன் சொந்த ஊரான கும்பகோணம் அருகில் இருக்கும் தராசுரத்திலிருந்து ஏழுமலை என்னும் பையனை அழைத்து வந்து அவனுக்கு வேலை கற்றுக் கொடுத்து, இருக்கும் இடமும் கொடுத்து மகன்போல் வளர்த்து வருகிறார்.

தன்னுடைய எழுச்சிக்கு மோனிகாதான் காரணம் என்று அவளுடைய இரண்டாவது மகள் மேல் அவளுக்கு அதிக பிரியம் உண்டு. ஆனால் அந்த அளவு பாசம் மூத்த பெண் நித்யாவிடம் இல்லை. அதென்னமோ தெரியல. அவர் நித்யா மேல் எரிந்து விழுந்தார். எது செய்தாலும் குறை கண்டு பிடிப்பார். தன் வெறுப்பை அவளிடம் வெளிப்படையாய் காண்பித்தார். நித்யா தன்னை அப்பா உதாசீனப்படுத்துவதாக அம்மாவிடம் குறை பட்டுக்கொண்டாள்.

”கொஞ்சம் பொறுத்துக்கோ நித்யா. அப்பாவுக்கு உன் மேல் மனசுக்குள்ளே பாசம் இருக்கு. அதை அவர் வெளியிலே காட்டல. இரத்த சம்பந்தம் இருக்கும்போது பாசப் பிணைப்பு இல்லாமல் போகுமா?

நான் சமயம் பார்த்து அப்பாக்கிட்டே பேசிப் பார்க்கிறேன். உன்னிடம் அன்பு காட்டவில்லை என்பதற்காக அவரை நீ வெறுக்காதே கண்ணு” என்று மகளிடம் ஆதரவாகப் பேசினாள்.

இவர் ஒரு பெண்ணின் மேல் அதிக பாசம் காட்டுகிறார். இன்னொரு பெண்ணின் மேல் குறைந்த… ஒரு தாய் பாசம் காட்டுவது போல் ஒரு தந்தையால் காட்ட முடியாது. இந்த விசயத்தில் ஆண்களைப் பெண்களுடன் ஒப்பிட முடியாது என்று சங்கரி எண்ணினாள். சங்கரிக்குத் தன் கணவர் செய்வது சரியில்லை என்னும் எண்ணம் இருந்தது.

தக்க சமயம் பார்த்து அவரிடம் கேட்டபோது, ”எனக்கு இரண்டு பெண்களில் மோனிகாவைத்தான் மிகவும் பிடிக்கும். ஏன்னா, அவள் என்னை மாதிரி” என்றார்.

”நித்யா என்னை மாதிரி. அவளை உங்களுக்குப் பிடிக்கலயா?”

புன்சிரிப்புதான் பதில்.

ஒரு நாள் மங்களம் வந்திருந்தபோது, ”ஏன் சங்கரி ஒரு மாதிரியாய் இருக்கிறாய்? உனக்கு என்ன கவலை? மாப்பிளை வியாபாரம் நல்லாதானே போய்க்கிட்டிருக்கு. உன் கண்ணின் கீழே கருவளையத்தைப் பார்க்க எனக்குக் கவலையாய் இருக்கு” என்றாள்

”அம்மா, அவர் நித்யா மேல் காரணமில்லாமல் எரிந்து விழுகிறார். எதுக்கெடுத்தாலும் குறை கண்டு பிடிக்கிறார். நித்யா மனசு ஒடிஞ்சு போயிருக்கா. அவரிடம் எப்படிப் பேசுவதென்று தெரியல. நான் கேட்டா, சிரிக்கிறார். எனக்கு அவளைப் பிடிக்கலன்னு சாதாரணமாய் சொல்றார்”.

”நீ சொல்றது நிஜமாடி? அப்பா காட்டற அன்பில வித்தியாசம் இருக்குமா? உன் அப்பா உன் மேலே எவ்வளவு அன்பு வைச்சிருந்தார். நீ குழந்தையாய் இருந்தபோது பள்ளிக்கூடம் போறத்துக்கு முன் உன்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து அனுப்புவார். நீ கல்லூரி போகும்வரை…  நான் தான் அவள் பெரிய பெண் ஆயிட்டா. இனிமே முத்தம் கொடுக்காதீங்க என்று சத்தம் போட்டேன். அவர் நிறுத்திட்டார். உன் மேல் கொள்ளை பாசம் உன் அப்பாவுக்கு. அவர் நம்மை விட்டுப் போய் மூன்று வருஷம் ஆகிவிட்டது” என்று தன் கணவரை நினைத்துக் கொண்டாள் மங்களம்.

எல்லாரும் என் அப்பா போல் ஆவார்களா?. குழந்தைகளிடம் பாசம் காட்டுவதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பாசம் காட்டுவதில் கெட்ட தாய் என்று யாருமில்ல. எல்லாத் தாய்களும் தன் குழந்தையிடம் பாசத்தைப் பொழிகிறார்கள். ஆனால் அப்பா பாசத்தில் ஆளுக்கு ஆள் மாறு படுகிறது. சில அப்பாக்கள் தன் மகளிடம் பாசத்தைப் பொழிகிறார்கள். சில அப்பாக்கள் சிறிதளவு அல்லது பாசம் காட்டாமலே இருக்கிறார்கள். இது அவர்கள் மனத்தைப் பொறுத்த விசயம்”.

”ஒரு நாய் குட்டிப் போட்டால் தன் குட்டியை யாரும் அண்ட விடாது. ஒரு நாய்க்கே இவ்வளவு பாசம் இருக்கும்போது ஒரு மனுசனுக்குத் தன் குழந்தையிடம் எவ்வளவு பாசம் இருக்கணும்?”

”அவர்கிட்டே அந்தப் பாசம் இல்லையே. என்ன செய்யறது?”

”இருந்தாலும் உன் வீட்டுக்காரரிடம் நீ பேசிப் பார். இப்போது இல்லாவிட்டாலும் நாளடையில் அவர் மனம் மாறிவிடுவார் என்று நான் நம்புகிறேன்.”.

”நான் முயற்சி செய்கிறேன் அம்மா”.

வாழ்க்கையில் எப்போதும் இன்பம் மட்டும் வரும் என்று சொல்லமுடியாது. இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை என்பதை நிரூபிப்பதைப் போல் இரண்டு மாதத்துக்கு முன் ஒரு நாள் சிற்றம்பலம் படுக்கையிலிருந்து எழுந்தபோது காலை எடுத்து வைக்க முடியவில்லை. மரணவலி போல் பயங்கர வேதனையை அனுபவித்தார்.  பக்கத்திலுள்ள மருத்துவ மனையில் காண்பித்து எல்லாப் பரிசோதனையும் செய்தும் என்ன வியாதி என்று கண்டு பிடிக்க முடியலே. அதனால் பெரிய மருத்துவமனையில் சேர்ந்து இரண்டு மாதமாக வைத்தியம் செய்து கொண்டு வருகிறார். எல்லாச் சோதனைகளும் செய்த பிறகு சிறு நீரகத்தில் புரோட்டின் போவதுதான் அவரது செயலிழப்புக்குக் காரணம் என்று கண்டு பிடித்தார்கள். சாதாரணமாக இந்த வியாதி வெளிநாட்டில் தான் பிரசித்தம். இந்தியாவில் யாருக்காவது அபூர்வமாய் வருமாம். என்ன நோய்?  என்று கண்டு பிடிப்பதற்கே ஆறு வாரம் ஆகிவிட்டது. ஏராளமாய் பணம் செலவு ஆயிற்று. உயிர் பிழைத்தால் போதும் என்று சங்கரி மருத்துவரிடமும் இறைவனிடமும் எல்லாப் பொறுப்பையும் விட்டு விட்டாள்.

சிற்றம்பலத்துக்குக் கிமோ கொடுக்கப்பட்டது. அவருக்குச் சின்ன வயசிலிருந்தே மூச்சுத் திணறல் எப்பாவது தலைகாட்டும். இப்போது கிமோ கொடுத்ததும் அவருக்கு மூச்சுத் திணறல் வர ஆரம்பித்தது. கிமோ ஒத்துக்கொள்ளாததால் மருத்துவர்கள் அவருக்கு வேறு எந்த விதமான சிகிச்சை கொடுத்துக் காப்பாற்றலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றைக் கொடுத்தால் மூச்சுத் திணறல். அதைக் கொடுக்காவிட்டால் அவரால் எதுவும் செய்ய முடியாமல் படுத்தப்படுக்கையாய் இருக்கிறார். உடல் பலவீனமாகிக்கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சனைக்குக் கடவுள்தான் வழிகாட்ட வேண்டும் என்று இறைவனிடம் சங்கரி வேண்டிக் கொண்டாள்.

மருத்துவர் இன்று என்ன சொல்வாரோ என்னும் பதைபதைப்புடன் சங்கரி இருந்தாள். அப்பாவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த நித்யா தன் அம்மாவிடம், ”அப்பா பாவம்மா!! என்றாள். அவள் போனவருடம்தான் பி.காம், பட்டப் படிப்பை முடித்து சமீபத்தில் வங்கியில் வேலையில் சேர்ந்திருக்கிறாள். அவள் அப்பா ஆஸ்பிட்டலில் படுத்தப் படுக்கையாய் இருப்பதால். அவள் வேலையில் சேர்ந்தது அப்பாவுக்குத் தெரியாது.

அவள் என்ன செய்தாலும் அவர் அவளைப் பாராட்ட மாட்டார்.ஒரு தடவை நித்யா சங்கரியிடம் கேட்பாள்,

“ஏம்மா அப்பா என்னிடம் கடுமையாய் நடந்துக்கிறார். நான் கஷ்டப்பட்டு படித்து எழுபது சதவீதம் வாங்கி பி.காம் தேர்ச்சி அடைந்தேன். அப்பா என்னைத் திட்டி தொன்னுறு சதவீதம் ஏன் வாங்கல?” என்று திட்டுகிறார்.

”நித்யா, நீ இன்னும் மேம்படவேண்டும் என்பதற்காக அப்பா அப்படிச் சொல்றார் நீ எதையும் தவறாக எடுத்துக் கொள்ளாதே” என்று அவளைச் சமாதானம் செய்தாலும், அவரிடம் தனியாக இருக்கும்போது, நீங்கள் செய்வது நியாயமா? நித்யாவிடம் பாரபட்சமாய் இருக்கீங்களே” என்று கேட்டாள்.

அவர், ”என்னமோ தெரியல. அவளைப் பார்த்தாலே எனக்குப் பத்திண்டு வருது” என்று சிரித்து மழுப்பினார்..

”அவளுக்கு உங்க மேலே ரொம்ப பாசம். அவ மனசு உடைஞ்சு போயிடுவா. அவளைத் திட்டாதிங்க”

”எல்லாம் எனக்குத்தெரியும் நீ எதுவும் எனக்குச் சொல்ல வேண்டாம்”.

அவர் பலமுறை நித்யாவை ஏசியிருக்கிறார். ”உனக்கு இதுகூடத் தெரியாதா?” என்று சீறியிருக்கிறார். மோனிகா கூட அம்மாவிடம், ஏம்மா அப்பா இப்படி நித்யாவை நாய் போல் நடத்துறார். எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு என்று கலங்கிய கண்களுடன் கேட்டதெல்லாம் சங்கரியின் மனம் அசை போட்டுக்கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த ஏழுமலை, சாருக்கு இப்போ எப்படி இருக்கு அம்மா என்று கேட்டுக் கொண்டே அவளருகில்வந்தான்.

”சாப்பிட்டியா?” ஏழுமலை.

”இன்னும் இல்லை, அம்மா”

”நீ போய் ஓட்டலில் சாப்பிட்டு வந்துடு” என்று சங்கரி அவனிடம் நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினாள்.

அப்போது சிற்றம்பலத்துக்கு விழிப்பு வந்தது.ஆ ஆ ஆ அம்மா என்று வலியால் அரற்றினார்.

”என்னங்க உடம்பை என்ன செய்யறது?” என்று கேட்டுக் கொண்டே சங்கரி அவரருகில் சென்றாள்.

அவர் அவளைப் பார்த்துப் பார்த்து பேச முயன்று மயக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.

அப்போது ”மருத்துவர்” என்று கத்திக் கொண்டே செவிலியர் மேரி வெளியே ஓடினாள். வேகமாக வந்த மருத்துவர் சிற்றம்பலத்தின் நாடித்துடிப்பைப் பரிசோதித்து விட்டு, “அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்” என்று செவிலியரிடம் சொல்லிவிட்டு அகன்று விட்டார்.

அவசர சிகிச்சைப் பிரிவு அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவர் சங்கரியைப் பார்த்து,”என் அறைக்கு வாங்க, உங்களுடன் பேச வேண்டும்” என்றார்.

சங்கரி அவருடன் சென்றாள்.

உங்கள் கணவருக்கு இந்த ஊசி போடவேண்டும். இந்த ஊசியை வாங்கிக் கொடுங்கள்” என்று ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்து, “இதன் விலை ஒரு இலட்சம். உடனே வாங்க வேண்டும்” என்றார்..

”ஒரு இலட்சமா! !” திகைப்புடன் கேட்டாள் சங்கரி.

”ஆமாம். ரொம்ப சக்தி வாய்ந்த மருந்து. நேரம் கடத்தாமல் துரிதமாக வாங்க முயற்சி செய்யுங்கள்”.

”இந்த ஊசி போட்டால் அவர் பிழைத்து விடுவாரா? மருத்துவர்.

”பிழைக்கலாம். ஆனால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. இந்த ஊசி போடாவிட்டால் அவர் பிழைக்க மாட்டார் என்பதை நிச்சயமாய் சொல்ல முடியும். எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். அப்புறம் இறைவன் விட்ட வழி”.

சங்கரி விரைந்து மருந்து கடைக்குச் சென்று அந்த மருந்தை வாங்கிக் கொண்டு போய் டாக்டரிடம் கொடுத்து விட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே வந்தாள்.

அங்கு அமர்ந்திருந்த மோனிகாவும் நித்யாவும் அவள் வருவதைக் கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்தார்கள்.

”அப்பா எப்பவும் உன் கிட்டே பாரபட்சமாய்தான் நடந்துப்பார். அதனாலே அப்பா மேல் உனக்குக் கோபமா? என்று கேட்ட மோனிகாவுக்கு, என்னிடம் அப்பா அன்பா நடந்துக்கலயேன்னு எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான் என்றாலும் போகப்போகப் என் மேல் அன்பைப் பொழிவார் என்று எதிர்பார்க்கிறேன். அவருக்கு உள்ளுக்குள்ளே என் மேல் பாசம் இருக்கும். ஏதோ ஒரு காரணத்தினால் என் மேல் எரிந்து விழுகிறார். என்ன காரணமென்று எனக்குத் தெரியல” என்று பதிலளித்தாள் நித்யா.

அவர்கள் பேசுவதைக் கேட்ட சங்கரிக்குத் திக்கென்றது.

“இரண்டு பேரும் என்னடி பண்ணறீங்க?” என்றாள்..

”பேசிக்கிட்டு இருக்கோம்மா” என்றாள் நித்யா.

”சரி இரண்டு பேரும் கீழே போய் ஏழுமலை இருந்தா அழைச்சிட்டு வாங்க” என்றதும் அவர்கள் நகர்ந்தார்கள்.

”கூப்பிட்டிங்களா அம்மா” என்று கேட்டுக் கொண்டே வந்தான் ஏழுமலை.

”ஏழுமலை எனக்குத் தலைவலியாய் இருக்கு. நீ போய் காபி வாங்கி வந்து கொடு”.

ஏழுமலை உணவகம் நோக்கிச் சென்றான்.

அப்போது செவிலியர் ஓடி வந்து, ”அவர் ஏதோ சொல்ல முயல்கிறார், ஓடி வாங்க” என்றாள். உடனே சங்கரி அவசர சிகிச்சை அறைக்கு விரைந்தாள். நித்யா அவளைப் பின் தொடர்ந்தாள்.

சிற்றம்பலம் சங்கரியைப் பார்த்து பேச முயற்சித்தார்.

உ… உ…உ.. என்று சொல்லிவிட்டு தலை சாய்ந்தார்.

”உ என்கிறாரே, என்ன சொல்ல முயன்றிப்பார்” என்று சங்கரி யோசித்தாள்.

பக்கத்தில் நின்றிருந்த நித்யா,”உன்னை விட்டுப் போக மாட்டேன் என்று அப்பா சொல்ல நினைச்சிருப்பார்” என்றாள்.

”ஆமாம் அப்படிதான் எனக்கும் தோன்றுகிறது” என்றாள் சங்கரி..

ஏழுமலை சங்கரியிடம்,”அம்மா உங்களிடம் ஒரு விசயம் சொல்ல வேண்டும். கொஞ்சம் வெளியே வாங்க” என்றான்.

அவள் வெளியே வந்து ’என்ன விஷயம்? ஏழுமலை” என்றாள்.

”அம்மா ஐயா உயில் பத்திரத்தை என்னிடம் கொடுத்துப் பத்திரத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ள சொன்னார். அவருக்கு ஏதாவது ஆகி விட்டால் அதை வழக்கறிஞரிடம் கொடுத்து விடு” என்று சொல்லியிருக்கிறார். இதுதான் அந்த உயில் என்று என்னிடம் ஒரு பத்திரத்தைக் கொடுத்தான்.

”ஓ, அதனால்தான் அவர் ”உ என்று சொன்னாரா? சங்கரியின் மண்டையில் உரைத்தது ”உ” என்றால் உயில் என்று எனக்குத் தோணாமல் போய் விட்டதே” என்று நினைத்தாள்.

ஏழுமலை அவர் உயில் எழுதினதைப் பற்றியோ, உன்னிடம் கொடுத்ததைப் பற்றியோ, நீ அதை என்கிட்டே கொடுத்தது பற்றியோ ஒருத்தரிடமும் மூச்சு விடாதே.. உயில் ஏதாவது எழுதினாரா என்று யாராவது கேட்டால் எனக்குத் தெரியாது என்று சொல்லிவிடு.

அப்படியே சொல்லிவிடுகிறேன் அம்மா. என்னைப் பெத்த அம்மா மாதிரி நீங்க என்னை நல்லா கவனிச்சிருங்கீங்க. எத்தனையோ முறை எனக்குச் சோறு போட்டிருக்கீங்க. எனக்கு நன்றி விசுவாசம் உண்டு” என்றான் ஏழுமலை.

அப்போது நித்யா வந்து அம்மா, ”மருத்துவர் உன்னைக் கூப்பிடுகிறார்” என்று ஓடி வந்து சொன்னாள். அவள் உடனே உயிலை இடுப்பில் சொருகிக்கொண்டே அவசர சிகிச்சை அறைக்குள் ஓடினாள்.

மருத்துவர் சிற்றம்பலத்தின் கையைத் தூக்கிப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கி அவர் மேலே போய் விட்டார் !! என்றார்.

சங்கரியின் கண்களில் கண்ணீர் பீரிட்டு வந்தது. ”அவர் என்ன சொல்ல நினைச்சாரோ அதைச் சொல்லாமலே போய்விட்டாரே” என்று அரற்றினாள்.

”ஒரு இலட்சம் கொடுத்து ஊசி வாங்கியும் பிரயோசனம் இல்லாமல் போயிடுத்தே என்று புலம்பினாள் மங்களம்.

”உயிரே போய் விட்டது. பணம் போனால் பரவாயில்லை. நான் அவருக்குக் கொள்ளிப் போடுகிறேன் ” என்றான் ஏழுமலை கலங்கிய கண்களுடன்.

அவரது உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

துக்கம் விசாரிக்க நண்பர்களும், உறவினர்களும் நிறையப் பேர்கள் வந்தார்கள். அவர் வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

அவருடைய நண்பர்கள் நாலைந்து பேர் அங்கமர்ந்து திருவாசகம் ஓதிக் கொண்டிருந்தார்கள்.

”பால் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து…” என்று பாடும்போது அதன் பொருள் சங்கரியின் மனதுள்ளே ஊடுருவிச் சென்றது.

”குழந்தைக்குப் பசிக்கும் நேரத்தை அறிந்து பால் ஊட்டுகின்ற தாயின் அன்பைப் பற்றி மாணிக்கவாசகரே பாடி இருக்கிறார்” என்று அறிந்தாள்.

அவருடைய மாமா பரமசிவம் சங்கரியிடம் துக்கம் விசாரித்துவிட்டு, ”சிற்றம்பலம் உயில் ஏதாவது எழுதி வைத்திருக்கிறாரா?” என்று மெல்லிய குரலில் வினவினார்.

அப்படி எதுவும் எழுதவில்லை மாமா. அதற்கு அவசியமும் இல்லை என்றாள்.

பக்கத்தில் இருந்த ஏழுமலையும், ”ஐயா, உயில் எதுவும் எழுதலிங்க. அவருக்குப் பிறகு சொத்துகள் அவருடைய குடும்பத்தினருக்குத்தானே போகும். அதுதானே சட்டம்” என்றான்.

பரமசிவம் பதில் எதுவும் சொல்லவில்லை.

பரமசிவம் உயில் என்று சொன்னதால் சங்கரிக்கு ஏழுமலை கொஞ்ச நேரத்துக்குமுன் ஆஸ்பத்திரியில் கொடுத்த காகிதத்தைத் தான் இடுப்பில் சொருகிக் கொண்டது நியாபகம் வந்தது. படிக்கலாம் என்றால் யாரவது ஒருவர் மாற்றி வந்து கொண்டே இருக்கிறார்கள். அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. குளியறைக்குள் சென்றாள். அவள் வீட்டில் குளியலறையும் டாய்லெட்டும் சேர்ந்து ஒன்றாகத்தான் இருக்கும்.

அவள் அங்கு உயிலைபிரித்து அவசர அவசரமாய் படித்தாள். சங்கரி அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாலு கோடி பெறுமானமுள்ள அடையாரில் இருக்கும் வீட்டைச் சின்ன பெண் மோனிகா மேல் எழுதி வைத்திருந்தார். அதோடு இல்லாமல் பணத்திலும் அதிக அளவு மோனிகாவுக்குக் கொடுக்க வேண்டும் என்று படித்த அவள், ஐயோ சாமி, முதல் பெண் மேல் எப்போதும் கடிந்து கொள்வார். அது போதாது என்று சொத்து விஷயத்திலும் பாரபட்சமாய் இப்படிச் செய்துவிட்டாரே என்று நினைத்து அதிர்ந்தாள்.

“என்னைப் பொறுத்தவரை எனக்கு இரண்டு பெண்களும் இரண்டு கண்கள். அவர்களுக்குள் வித்தியாசம் பார்க்க மாட்டேன். இந்த உயில் இருந்தால் பிரச்சனை வரும். இரண்டு பெண்களுக்கும் ஏற்றத் தாழ்வு வர நான் விட மாட்டேன்” என்று நினைத்த அவள் பத்திரத்தைச் சுக்கு நூறாய் கிழித்து டாய்லெட்டுக்குள் போட்டு விட்டு தண்ணீரைக் கொட்டியதும் அது அடித்துச் சென்று விட்டது. அப்பாடா ! தொல்லை விட்டது என்ற நிம்மதியுடன் அவள் குளியல் அறையை விட்டு வெளியே வந்தாள்.

“அம்மா எங்களைவிட்டு எங்கேமா போயிட்டீங்க. எங்களுக்குப் பயமாய் இருக்கு” என்று அவளருகில் வந்த மோனிகாவும் நித்யாவும் அவளின் இரண்டு பக்கத்தில் ஒட்டிக் கொண்டனர். அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டாள். மாலுமி இல்லாத கப்பலுக்குப் பொறுப்பேற்ற  மாலுமி போல்.””கவலைப்படாதீங்க, உங்களுக்கு நான் இருக்கேன், ஜெயிச்சடலாம்” என்றாள். துக்கம் விசாரிக்க வந்த நாத்தனார் அவளைப் பார்த்து, ”சிற்றம்பலத்துக்குக் இரண்டு பெண்கள் மேலும் கொள்ளை பிரியம்” என்றாள்.

”ஆமாம் எங்கள் எல்லாரிடமும் பாசமாய்தான் இருந்தார்” என்று அழுத்தமாய் சொன்னாள் சங்கரி…


ஸ்ரீதரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாச பேதம் (சிறுகதை)”

அதிகம் படித்தது