நவம்பர் 27, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டுப் பார்ப்பானை அடிக்கச் சொன்னாரா பெரியார்?

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Apr 18, 2020

siragu karpu4
பெரியரைப் பற்றி பல அவதூறுகள் தொடர்ந்து பரப்பப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. இன்றைய இணையக் காலத்தில் தான் என்றல்ல, அவர் என்றைக்குக் காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறி, பார்ப்பன ஆதிக்கத்தை அடக்கியே தீருவேன் என்று சுயமரியாதை இயக்கத்தை 1925 இல் தொடங்கினாரோ அன்றிலிருந்தே அவரைப் பற்றிய அவதூறுகளும் தொடங்கி விட்டன. இதனைப் புராணக் கதைகளோடு பொருத்திப் பார்க்க இயலும். கதைகளில் அரக்கர் எனச் சொல்லப்படுவோர் அனைவருமே திராவிடர் இன மக்கள் தான் அண்ணல் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு போன்றவர்களே ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த அரக்கர் என்பவர்கள் தேவர்களுக்கு (பார்ப்பனர்கள்) இடையூறாக இருந்தனர் என்றும், அவர்கள் மிக மோசமானவர்கள் என்றும் கதைகளில் எழுதி வைத்தவர் பார்ப்பனர்கள்.

அவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் தட்டிக் கேட்டால் அவர்கள் கெட்டவர்கள் என்று கதை கட்டுவது அவர்களுக்கு வழக்கம். அந்த வகையில் தான் திராவிடர் இயக்கத் தலைவர்கள் அனைவரின் மீதும் ஆதாரம் இல்லா கதை எழுதிப் பரப்பி விடுவார்கள்.

அந்த வகையில் ஒரு கதை தான் வெகு காலமாகப் பெரியார், பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டுப் பார்ப்பானை அடிக்கச் சொன்னார் என்பது. 2015 ஆம் ஆண்டு இதே பொய்யை எந்த வித ஆதாரமும் இன்றி ரங்கராஜ் பாண்டே என்ற பார்ப்பன ஊடகவியலாளர் தந்தி தொலைக்காட்சியில் கூறினார்.

உண்மை என்ன?

1944 ஆம் ஆண்டு Beverley Nicholas என்ற பிரித்தானிய இதழலாளர் இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் செய்தார். அந்த அனுபவங்களை வைத்து அவர் ஒரு நூல் எழுதினார். Verdic on India . அந்த நூலின் 1944 பதிப்பில், பக்கம் எண் 32 இல்,

The Brahmins, inspite of their lofty position, have not attracted much love to themselves in the long history of India. And ancient saying, still current, is ‘if you meet a snake and a Brahmin kill the Brahmin’. Perhaps this is due to the preposterous nature of their claims. For example, Manu, make of laws, ruled that to accuse a Brahmin of a crime was sinful even if the Brahmin was guilty.”

(பார்ப்பனர்கள் தங்களை எப்போதும் உயர்ந்தவர்களாக பாவித்துக் கொண்டனர். இந்திய வரலாற்றைப் பார்க்கும் பொழுது அவர்கள் எந்த ஒரு காலகட்டத்திலும் பார்ப்பனர்களைத் தாண்டி பிற மக்கள் மீது அன்பு கொண்டதாகச் சரித்திரம் இல்லை. இதனால் தான் தொன்றுதொட்டு ஒரு முதுமொழி உண்டு பார்ப்பானையும், பாம்பையும் கண்டால், முதலில் பார்ப்பானைக் கொல்லு என்று கூறுவார்கள்.
இந்த முதுமொழி பார்ப்பனர்கள் மூடத்தனத்தை ஊராரிடம் திணித்து, தனது வயிறு வளர்ப்பைக் கொள்கையாகக் கொண்டதால் ஏற்பட்டது ஆகும். மனு தர்மத்தில் பார்ப்பனர் தவறு செய்திருந்தாலும் அது தவறாகக் கருதப்படக்கூடாது என்றும், எந்த ஒரு பார்ப்பனரையும் குற்றவாளி என்று குற்றம் சுமத்துவது பாவகரமானது என்றும் எழுதி வைக்கப்பட்டது. அதாவது பார்ப்பன் எந்த குற்றத்தைச் செய்தாலும் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று பீவர்லி நிக்கலஸ் எழுதிய நூலில் கூறப்பட்டுள்ளது)

வடநாட்டில் இப்படி ஒரு முதுமொழி உள்ளது என்பதைத் தான் கூறியிருப்பாரே தவிர்த்து, அவர் அந்தச் சொற்களைக் கூறவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் பெரியார் மீது இந்த அவதூறு பரப்பப்படுவதற்குக் காரணம், அவரின் எழுத்துகளை முழுமையாகப் படிக்காமல் உள்ளதே காரணம்.

1948 இல் சன்னாநல்லூரில் பெரியார் பிப்ரவரி மாதம் காந்தியாரின் கொலைக்குப் பின் உரையாற்றுகிறார், அதில் உள்ள சில பகுதிகளை இங்குப் பகிர்கிறேன்.

“பார்ப்பன் ஒருவன் சுட்டான் என்ற காரணத்திற்காக அந்தப் பார்ப்பனரைத் திட்டிவிடுவதாலோ, அல்லது அந்தப் பார்ப்பன சமூகத்தையே அழித்துவிடுவதாலோ, எத்தகைய உருப்படியான பலனும் ஏற்பட்டுவிடாது. நான் கூறுகிறேன், சுட்டது பார்ப்பன் அல்லன், சுட்டது கைத் துப்பாக்கி அதற்காகப் பார்ப்பன்மீது கோபித்துக்கொள்வதாயிருந்தால் அந்த அளவுக்கேனும் அந்தப் பார்ப்பனனின் கைக் கருவியாக இருந்த அந்தத் துப்பாக்கியின் மீதும் நாம் கோபித்துக்கொண்டாக வேண்டும், காந்தியரைச் சுட்டுக்கொல்ல உதவியாயிருந்த துப்பாக்கியின் மீது நாம் எவ்வளவு கோபப்படலாமோ எவ்வளவு பழிக்கலாமோ அந்த அளவுக்குத்தான் அதை உபயோகப்படுத்திய பார்ப்பனன் மீதும் நாம் கோபித்துக்கொள்ள முடியும்;” ஏனென்றால் இதை அவன் செய்யக் காரணம் மதம்,
“மதத்தின் பெயரால் உள்ள மூடநம்பிக்கைக் கருத்துகளுக்கும், சாதியின் பேரால் உள்ள ஆசார அனுஷ்டானங்களும், மற்றும் கடவுள் சாஸ்திரம் இவைகளின் பெயரால் உள்ள அறியாமையுந்தான் இம்மாதிரிக் காரியத்தைச் செய்யும்படி அவனைச் செய்துவிட்டன. அவனைத் தூக்கில் போட்டுவிடுவதாலோ அல்லது அவன் சேர்ந்திருந்த ஸ்தாபனத்தைக் கலைத்துவிடுவதாலோ அல்லது அவனுக்காக ஆதரவாயிருந்த அத்தனைப்பேரையும் அழித்துவிடுவதாலோ இப்படிப்பட்ட காரியம் நின்றுவிடாது. இவை வெறும் தற்கால சாந்தியாகத்தான் இருக்க முடியும். இப்படிப்பட்ட கொலைகாரர்கள் தோன்ற எது ஆதாரமாக இருந்ததோ அதை ஒழிக்க வேண்டும்.

மலேரியா காய்ச்சல் வருமானால் கொயினா மருந்து கொடுப்பது தற்காலிகம். கொசு வலையிட்டுப் பாதுகாத்துக் கொள்வதும் தற்காலிகம் தான். அந்தக் கொசுக்கள் உற்பத்திக்குக் காரணமான சாக்கடை நீர்த்தேக்கங்களைச் சுத்தப்படுத்துவது தான் நிரந்திர தீர்வு. மதமும் அதற்கு ஆதாரமாயிருந்துவரும் சாஸ்திரங்களும், புராணங்களும் அவற்றின் இடைவிடாத துவேஷப் பிரச்சாரத்தால் உண்டாக்கப்பட்டவன்தான் மதவெறிகொண்ட கோட்சே. அவனைக் கொன்று பயன் இல்லை. மதம், கடவுள் அதற்கு ஆதரமாய் இருந்துவரும் அனைத்தையும் ஒழிக்க வேண்டும்”
என்று உரையாற்றினார். இது போன்ற பக்குவமான உரைகள் தான் மகாராட்டிரத்தில் பூனேவில் காந்தியாரின் கொலைக்குப் பார்ப்பனர்கள் அடிக்கப்பட்டபோதும் எந்த ஊரில் பெரியார் பார்ப்பனர்களை அடி என்றுக் கூறினார் என்று கூறுகிறார்களோ அந்த ஊரில் பார்ப்பனர்களைத் தாக்கும் எந்த வன்முறையும் நடக்கவில்லை. நடக்கத் தந்தை பெரியார் அனுமதிக்கவும் இல்லை.

மேலும்,

பார்ப்பனர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் செயல்திட்டமும் அது வல்ல. திராவிடர் கழகமும் நானும் சொல்வதெல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழவேண்டும் என்பது தான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

தவிரவும் பார்ப்பனர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றுமில்லை. அவர்கள் அனுசரிக்கிற சில பழக்க வழக்கங்களையும், முறைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக்கொள்வது பெரிய காரியம் அல்ல.

விஞ்ஞானம் பெருக்கம் அடைந்து விட்டது. இந்நிலையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே உள்ள பேதம் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் பாடுபடுகின்றேன். நம்மிடையே பேதவுணர்ச்சி வரக்கூடாது என்பதில் எனக்குக் கவலையுண்டு.

எனவே முயற்சியில் பலாத்காரம் சிறிதும் இருக்கக்கூடாது என்பதிலும் எனக்குக் கவலையுண்டு.

காலம் எப்போதும் ஒன்றுபோல இருக்க முடியாது. நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும் பொறுமைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்பிற்கிடமில்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர்கழக பின் சந்ததிகளும், பார்ப்பனர்களின் பின் சந்ததிகளும் இப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூறமுடியாது. ஆகவே, அதிருப்திகளுக்குக் கடினமானவற்றை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம். எனவே கால வளர்ச்சிக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று சென்னை இராயப்பேட்டை, இலட்சுமிபுரத்தில் பார்ப்பனர் சங்கக் கூட்டத்திலே (5.1.1953) பேசியவர் பெரியார் அவர்கள்.

அந்த நிலையிலிருந்து எண்ணிப்பாருங்கள்; தந்தை பெரியார் மானுட விடுதலையைப் பேசியவர் ; அந்த விடுதலையை அடையத் தடையாக உள்ளவற்றைத் தகர்த்தார்.

பெரியாரை நிறையப் படிப்போம் அவரை புரிந்துக்கொள்வோம்!

அவதூறுகளை முறியடிப்போம்!!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டுப் பார்ப்பானை அடிக்கச் சொன்னாரா பெரியார்?”

அதிகம் படித்தது