மார்ச் 28, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

பாரதிதாசன் பாடிய முல்லைக்காட்டில் மணக்கும் நகைச்சுவை

முனைவர் மு.பழனியப்பன்

Apr 16, 2016

puratchi kavignar1புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்றே பலராலும் அறியப்பட்டாலும் நகைச்சுவை பாடுவதில் ஈடு இணையற்றவர் பாரதிதாசன். அவர்தம் பாடல்களில் மெல்லிய நகைச்சுவை இழையோடுவதைக் காண முடியும். காப்பியங்கள் பாடினாலும், தனிக்கவிதைகள் பாடினாலும் நகைச்சுவை ஆங்காங்கே மிளிரச் செய்வது இவரது தனித்த பாங்கு ஆகும். இருண்ட வீட்டில் பாத்திரங்களை வருணிக்கும் போது, படிப்பவர் தன்னையறியாமல் வாய்விட்டுச் சிரிக்கும் அளவிற்கு இவரின் கவியாற்றல் பெருகிக்கிடக்கிறது. பாண்டியன் பரிசிலும் நரிக்கண்ணன் மகனை வருணிக்கும் திறத்தில் நகைச்சுவை கலந்தே இருக்கும். இவைதவிர நகைச்சுவை, சிரிப்பு என்றே தலைப்பிட்டு அவர் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவற்றில் நகைச்சுவை உணர்வு நிரம்பிக்கிடக்கின்றது. அவரின் கவிதைச் சுவையையும், நகைச்சுவை உணர்வையும் எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

முல்லைக்காடு என்ற தொகுப்பில் நகைச்சுவை என்ற தலைப்பில் ஒரு பகுதி அமைந்துள்ளது. அதில் அவர் தன் காலத்தில் நடைபெற்ற நகைச்சுவை கலந்த நிகழ்வுகளைப் படைத்தளித்துள்ளார்.

பாரதிதாசனார் சென்னை நகரத்தில் அவ்வப்போது குடியேற வேண்டியவராக இருந்தார். அப்போது அவர் தங்குமிடத்திற்கு பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. அதனை அழகான ஒரு கவிதையாக வடித்துள்ளார். சென்னையில் வீட்டு வசதி என்பது அவர் எழுதிய கவிதையின் தலைப்பு.

                ஒரு வரம் தேவை! உதவுவீர் ஐயா!

                திருவரங்கப் பெருமாள் நீரே!

சென்னையில் உங்கள் சிறந்த நாமம்

              தெரியாதவர்கள் ஒருவருமில்லை!

பிச்சை எடுத்துப் பிச்சை எடுத்துநான்

              பெற்ற பொருளில் மிச்சம் பிடித்துத்

   தேன் போட் டுண்ணத் தினையில் ஒருபடி

     சேகரித்தேன்! ஆகையால் அதனை

வீட்டில் வைத்து வெளியிற் சென்று

                விடிய வந்து எடுத்துக்கொள்கிறேன்.

     வீட்டுக் காரன் கேட்டுத் துடித்தான்

     “பாட்டுப் பாடும் பராபர வஸ்துவே!

     படித்தினைக் கிடமிருந்தால்,

     குடித்தனத் துக்கிடம் கொடுத்திருப்பேனே!!”

என்பது அப்பாடல். இதில் கவிஞரை வீடு வைத்திருக்கும் முதலாளியான ஒருவர் பாட்டுப் பாடும் பராபர வஸ்துவே என்று விளிக்கிறார். காசு பார்ப்பவருக்கு இலக்கியமாவது பாட்டாவது என்ற நிலையில் கவிஞருக்கு அவ்வீட்டுக்காரர் தந்த மதிப்பினை இதில் பதிவு செய்துள்ளார். மேலும் சென்னைக்கு வந்து அவர் தேடிய பொருள் ஒருபடி திணையளவு என்பதும் குறிக்கப்பெற்றுள்ளது. இதனை வைத்து அடுத்தநாள் காலை எடுத்துச் செல்லக் கூட இடம் இல்லையாம் கவிஞர்க்கு. தினையளவில் படியில் இடம் இருந்தால் அதனை ஒரு குடித்தனத்துக்கு விட்டுவிடும் முதலாளித் தனத்தை இப்பாடல் காட்டுகின்றது.

கொசுத் தொல்லையைப் பற்றி இரு பாடல்களில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துகிறார் கவிஞர்.

கும்பகோணத்திற்குப் போகவேணும் — அங்குக்

   கும்பலிற் சேர்ந்து நடக்க வேணும்

சம்பள வீரர் பிடிக்கவேணும் — அங்குச்

   சாவுக்கும் அஞ்சாத தன்மை வேணும்

கும்பலும் வீரரும் ஏதுக்கென்பீர்? — நல்ல

   கும்பகோணத்தினில் என்ன என்பீர்?

அம்பு பிடித்த கொசுக் கூட்டம் — அங்கே

   ஆட்களை அப்படியே புரட்டும்!

என்ற பாடலில் கவிஞர் கும்பகோணத்திற்குச் சென்று பட்டபாட்டினை எடுத்துரைக்கிறார். சம்பளத்து ஆள் பிடித்து கொசுவை விரட்டும் அளவிற்குக் கவிஞர்க்கு கும்பகோணக் கொசு தொல்லை கொடுத்திருக்கிறது.

baaradhidasan1கும்பகோணத்தில் கொசுத் தொல்லை என்றால் புதுச்சேரியில் ஈ தொல்லை- கவிஞரை விட்ட பாடில்லை. நண்பர் ஒருவர் வீட்டிற்குக் கவிஞர் போகின்றார். அங்கு கூடத்தில் மிளகு கொட்டி வைத்தது போல் ஒரு காட்சி தெரிகிறது. அந்த வீட்டில் யாரும் இல்லாததால் கொட்டிக் கிடக்கும் மிளகை துடைப்பம் எடுத்துச் சேகரிக்க எண்ணுகிறார் கவிஞர். இதன் காரணமாக துடைப்பத்தைத் தரையில் வைத்ததும் உடனே மிளகுக் கூட்டம் காணாமல் போய்விடுகிறது. காணவில்லையே என்று துடைப்பத்தைக் கீழே போட்டால் உடனே வந்து மிளகுகள் உட்கார்ந்துவிடுகின்றன. இதென்ன மாயம் என்று கவிஞர் வியக்கிறார்.

இந்த அதிசயம் எங்கும் கண்டிலேன்!

பூமியில் துடைப்பம் போட்டு நின்றேன்!

போன மிளகு பூமியில் வந்தது!

கூட்டப் போனேன் கூட்டமாய்ப் பறந்தது!

கூட்டாப் போது பூமியில் குந்தும்!

வீட்டுக்காரி வந்து

பாட்டாய்ப்பாடினாள் “ஈ”ப் படுத்துவதையே||

என்று ஈக்களின் பட்டாளத்தை கவிதை வடிவில் ஓட்டப்பார்க்கிறார் கவிஞர்.

குடும்பத்தில் வந்து சேரும் உறவுகளைக் குடும்பத்தார் எதிர் கொள்ளும் நிலைகளிலும் சில நகைச்சுவை அள்ளித் தெளிக்கிறார் பாரதிதாசன். அம்மானை ஏசல் என்று அதற்குத் தலைப்பும் தந்துள்ளர்.

அழகான பெண்ணிற்கு உருவத்தில் அழகற்ற ஒரு மணமகன் வந்து சேர்வதைச் சில பிள்ளைகள் கேலி செய்து பாடுவதாக ஒரு பாடலை அவர் பாடியுள்ளார்.

மந்தை எருமைகளில் வளர்ந்திருந்த காட்டெருமை

இந்தவிதம் சோமன் கட்டி மாப்பிள்ளையாய் இங்கு வந்தீர் மாமா — எங்கள்

இன்ப மயிலை நீர் மணக்கலாமா?

ஆந்தை விழி என்பதும்         அம்மிபோன்ற மூக்கென்பதும்!

ஓந்தி முதுகென்பதும்   உமக்கமைந்து கிடப்பதென்ன? மாமா — எங்கள்

ஓவியத்தை நீர் மணக்கலாமா? …..

எட்டாள் எடுக்க ஒண்ணா   இரும்புப் பீப்பாய் போலுடம்பு

கொட்டாப்புளிக் கால்களால்   குள்ளவாத்துப் போல் நடப்பீர் மாமா — எங்கள்

கோகிலத்தை நீர் மணக்கலாமா?

மாமாவின் பெருமைகளை இப்பாடல் கேலி செய்து பாடுகின்றது. கோகிலம், ஓவியம், இன்ப மயில் என்று பெண்ணை அழகுபடுத்தி ஆணின் அழகை கேலி செய்யும்போது அழகற்ற உருவமும் அழகான உருவமும் கவிதைக்கு வந்து வந்து சிரிப்பினை மேலும் மேலும் உண்டாக்குகின்றது.

அண்ணி வந்தார்கள் — எங்கள்   அண்ணாவுக்காக — நல்ல (அண்ணி)

கண்ணாலம் பண்ணியாச்சு!     கழுத்தில் தாலி கட்டியாச்சி!

பிண்ணாக்குச் சேலை பிழியப்   பெரியகுளமும் சேறாய்ப் போச்சு! (அண்ணி)

எட்டிப் பிடித்திடலாம்   இரண்டங்குலம் ஜடை நுனிதான்

பட்டி வெள்ளாட்டு வாலைப்   போல மேலே பார்க்கும்படி! (அண்ணி)

நத்தைப்பல் சொட்டை மூக்கு    நாவற்பழ மேனியிலே

கத்தாழை நாற்றம் எங்கள்   கழுத்தை நெட்டித் தள்ளிடுதே! (அண்ணி)

பக்குவமாயப் பேசும்போது   பாய்ந்துவரும் குரல்ஒலிதான்,

செக்காடும் சங்கீதமே   செவியில்வந்து துளைத்திடுதே! (அண்ணி)

என்ற பாடலில் அண்ணியின் பெருமையை எடுத்துக்காட்டப்பெறுகின்றது. அண்ணியின் அழுக்கான நிலை, குறைவான ஜடை, செக்குபோன்ற குரல் போன்றனவற்றைக் கேலி செய்வதாக இப்பகுதி அமைகின்றது.

இவ்வாறு மரபுக்கவிதைகளில் நகைச்சுவை கலந்து பாடும் இனிய நயம் வேறெந்த புவலர்களுக்கும் வாய்க்காத புகழ்நிலை பாரதிதாசனுக்கு மட்டும் உண்டு. இதற்குக் காரணம் அவர் பல ஊர்களுக்குச் சென்று இலக்கியம் பேசியும், படைத்தும் வந்த காரணம்தான். மக்கள் முன்னிலையில் தரமான கவிதைகளை அளிக்கும் பாரதிதாசன் தனக்கு நேர்ந்த சிரிப்பு கலந்த அனுபவங்களை தன் நூல்பகுதிகளில் வெளிப்படுத்தியுள்ளார். இவை அவர் வாழ்ந்த வாழ்க்கையின் தரத்தை எடுத்துரைக்கும் பெருமை பெற்றனவாகும்.

சகமனிதர்கள் கொசுக்களாலும், ஈக்களாலும் படும் துயரைத் தனதாக்கிப் பாடுகிறார் கவிஞர். குடும்ப உறவுகளில் உள்ள எதிர் மனப்பான்மைகளைக் கண்டு தம் கவிதைகளில் இனம் காட்டுகிறார்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாரதிதாசன் பாடிய முல்லைக்காட்டில் மணக்கும் நகைச்சுவை”

அதிகம் படித்தது