மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாரதியின் பார்வையில் அறிவியல் தொழில்நுட்பச் சிந்தனைகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா

Nov 7, 2015

bharathi1பாரதி வறுமையில் வாடிய போதிலும் வீட்டை மறந்து நாட்டையே நினைத்து வாழ்ந்தவர். இவரது ஆற்றல் கவிதையில் மட்டுமல்லாது கலை, இலக்கியம், அரசியல், ஆன்மிகம், அறிவியல், பெண்கள் முன்னேற்றம், கைத்தொழில் பற்றிய விழிப்புணர்வு, தொழில்முறை, மருத்துவம் எனப் பல்துறைகளில் புலமை பெற்றவர். இப்பாரதியின் பல்நோக்குப் பார்வைகளில் நாம் பாரதியின் அறிவியல் நோக்கையும் அதன்மீது அவரது பார்வையின் பிரசுரங்களையும் கண்டுணரலாம்.

பாரதியின் குழந்தைப் பற்று

குழந்தைகளை ‘ராஜா’ வென்றே கூப்பிடுவார். நான் செய்வதைப் போல் செய்யாதீர்கள். சொல்வதையே செய்யுங்கள் என்பார் பாரதி. அதாவது தாம் செய்வதில் ஏதாவது கெடுதலிருக்கும். சொல்வதில் இராது என்பதே அர்த்தம். குழந்தைகளை பயமுறுத்தக்கூடாது, குழந்தைகளுக்குப் பருவத்திலேயே பயமுறுத்தி விட்டால் பிறகு அடிமை உணர்வு ஆழமாகப் பதிந்துவிடும் என்பார்.

பூனை என்று யாராவது குழந்தைகளைப் பயமுறுத்தினால் அவர்களைக் கோபிப்பார். குழந்தைகளைக் கூப்பிட்டுப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு ‘பூனையும் இல்லை, பயமும் இல்லை’ என்று சொல்லித் தருவார். பாரதி ராத்திரி வேளையில் குழந்தைகள் மலஜலம் கழிக்க வேண்டும் என்றால் துணையில்லாமல் தனியாகப் போகும்படிச் சொல்வார். தாம் கூடவே இருப்பதாக நினைத்துத் தைரியத்தை வளர்க்க வேண்டும் என்றும், இருளைக் கண்டு பயப்படக்கூடாது என்றும் சொல்லித் தருவார்.

உலகமே காற்றாலும், மண்ணாலும், நீராலும் அமைந்திருக்கிறது. இந்த 3 பூதங்களை விட்டு விலகி வாழ யாராலும் இயலாது. இந்த மூன்றின் வழியாகவும் எந்த நேரமும் ஒருவனுக்கு பயங்கரமான நோய்கள் வந்துவிடக்கூடும் என்ற மகா நாத்திகக் கொள்கையை நவீன ஐரோப்பா சாஸ்திரிகள் தாம் நம்பி ஓயாமல் பயந்து பயந்து மடிவது போதாதென்று அந்த மூடக் கொள்கையை நமது தேசத்திலும் இளஞ்சிறுவர் மனதில் அழுத்தமாகப் பதியும்படி செய்துவிட்டார்கள். சிறுபிராயத்தில் ஏற்படும் அபிப்பிராயங்கள் மிகவும் வளமை உடையன. அசைக்க முடியாதன. எனவே நமது நாட்டிலும் ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில் படித்த பிள்ளைகள் சாகுமட்டும் இந்தப் பெரும் பயத்துக்கு ஆளாய் தீராத கவலை கொண்டு மடிகிறார்கள்; பூச்சிகளால் மனிதர் சாவதில்லை; நோய்களாலும் சாவதில்லை; கவலையாலும் பயத்தாலும் சாகிறார்கள். இந்த உண்மை நமது தேசியப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் மனதில் நன்றாக அழுந்தும்படி செய்ய வேண்டும்.

ஓர் சமயம் பாரதியின் குழந்தைக்கு கடுமையான காய்ச்சல். அது அவஸ்தைப்படுவதைக் காண இவரால் சகிக்க முடியவில்லை. தாய் தந்தையர் செய்யும் அக்கிரமம் அக்குழந்தையைப் பாதிக்கும் என்ற மூதுரை அவருக்கு ஞாபகம் வந்தது. உடனே அவர் தம்மிடம் பற்றிக் கொண்டிருந்த துர்க்குணமாகிய புகையிலை போடும் வழக்கத்தை நிறுத்தினார். புகையிலையினால் குழந்தைக்கு கேடு ஏற்படும் என்ற எண்ணம் தோன்றவே நிறுத்திவிட்டதாகக் கூறுவர்.

பாரதி ஒரு சமயம் ஹார்மோனியத்தின் கட்டைகளில் பலவற்றை ஒரே தடவையில் அழுத்த அவற்றை தாறுமாறாகச் சப்தித்தன. ஏன் அவ்வாறு செய்கிறீர்கள்? சப்தம் காதுக்கு ரொம்பவும் அறுவறுப்பாகயிருக்கிறது. இவ்வாறு செய்தால் ஹார்மோனியம் உடைந்து விடாதா? என்றனர் வீட்டிலுள்ளோர். அதற்கு அவர் எல்லாம் சரிதான். நீங்கள் குழந்தைகளைக் கோபிக்கும்போதும், பேசும் பேச்சுக்களினாலும் என் காதுக்கு எவ்வாறிருக்கிறதென்பதையும், அப்பேச்சுக்களினால் எவ்வாறு குழந்தைகளின் மனம் வேதனைப்படுகிறதென்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளத்தான் அவ்வாறு செய்தேன் என்றார்.

பொன், வெள்ளி, செம்பு, கந்தகம் இவை போல வழக்கத்திலுள்ள பொருள்கள் இவை. க்ரோமியம், தித்தானியம், யுரேனியம்-இவை போலச் சாதாரண பழக்கத்திலகப் படாதன இவை; கன ரூபமுடையன இவை, திரவ ரூபமுடையன இவை, வாயு ரூபமுடையன இவை, இவற்றுள் முக்கியமான மூல பதார்த்தங்களின் குணங்கள் முதலியவை எடுத்துக் காட்டவேண்டும் என்றும் ரசாயனச் சேர்க்கை பிரிவு, இவற்றின் இயல்புகள், விதிகள் இவற்றை பரிட்சைகளின் மூலமாக விளக்க வேண்டும் என்றும்,
ரேடியம், ஹெலியம் முதலிய புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மூல பதார்த்தங்களின் அற்புதக் குணங்கள்.
பரமாணுக்கள், அணுக்கள், அணுகணங்கள்-இவற்றின் இயல்பு, குணங்கள், செய்கைகள் முதலியன.
இயற்கை – Physics, ரசாயனம்-Chemistry
செடிநூல் சாஸ்திரம் இவையே முக்கியமாகப் போதிக்க வேண்டியனவாம்.

இயற்கையில் அறிவியல் மனம்

விஞ்ஞான சாஸ்திரத்தில் பிரீதி உடையவர். இயற்கை அழகில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதில் தனிமையையே விரும்புவார். மாலை ஞாயிறைக் கண்டு மகிழ்வதிலும் மனோஹரமான மாலைத் தோற்றங்களிலும் மெய்மறந்து நின்று விடுவார். இதற்காகவே கடையத்திற்கு அரை மைல் தூரத்திலுள்ள தட்டப்பாறை என்ற பாறை மீது மத்தியான நேரங்களில் போய் உட்கார்ந்து கொள்வார்.
இயற்கை வர்ணிப்பதில் அவர் மற்ற கவிகளுக்குப் பின் விளங்கியவரல்லர் என்பதை கீழ்வரும் வரிகளிலிருந்து அறியலாம்.
“புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி
மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சிவந்து
. . . . .  விந்தைசெயுஞ் சோதியினை (சூரியன்)
. . . . . . . கண்விழித்து நான் தொழுதேன்”
என்றார். இதேபோன்று சூரியன் எப்படி செயல்பட்டதாம் என்பதை,
“இடிவானத் தொளிமின்னல் பத்து கோடி
எடுத்தவற்றை யொன்றுபட வுருக்கி வார்த்து
முடிவான வட்டத்தைக் காளியாங்கே
மொய் குழலாய் சுழற்றுவதன் மொய்ம்புகாணாய்”
சூரியனைப் பார்க்க பார்க்க உமாதேவி கவிதைகள் செய்வது போன்று இருக்கிறதாம். தீயின் குழம்புகள். செழும்பொன்னை காய்ச்சிவிட்ட ஓடைகள், வெம்மை தோன்றாமே எரிந்திடும் தங்கத் தீவுகள், இவையெல்லாம் சூரிய தரிசனத்தால் பாரதிக்குண்டான கற்பனை-இதன்மூலம் இவர் ஒரு வானவியல் ஆராய்ச்சியையே நிகழ்த்தியுள்ளார்.

சூர்ய வர்ணனையால் கம்பனும் இவ்வளவு தூரம் எட்டிப் பார்க்கவில்லை என்று சொன்னால் மிகையாகாது. பாண்டவர்கள் மிது துரியோதனனுக்கு ஏற்பட்ட பொறாமை எனுந் தீயை எரிமலைக்கு ஒப்பிட்டிருப்பதைக் காணலாம்.
“குன்ற மொன்று குழைவுற்றிளகிக்
காய்ந் தெழுந்து வெளிப்படல் போல்”
என்றும் சுட்டியுள்ளார். பாரதியின் உள்ளத்தை ஆவேசப்படுத்துவது இயற்கையின் அகத்தே ஒளிரும் எல்லையற்ற இன்பம்-கதிரழகு.
“புல்லை நகை யுறுத்திப் பூவை வியப்பாக்கி
மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி. . . . . . .”
என்ற கவியில் விந்தை செய்யும் திறனில் பாரதியின் ஏக்கம் தவிர்த்து ஆக்கம் அடைவார். இயற்கையின்பத்தில் இறையொளியுடன் காதலுறவு கொண்டு இடி மின்னலுக்கு இடையே சுயேச்சையாகவும் மகிழ்வாகவும் உலவுவார். இயற்கைக் காட்சிகள் இவரது மனப்பான்மையினை உருவாக்கின. அந்த உருவில் தம் உள்ளதும் வாழ்வும், இயற்கை அன்னையாகிய கண்ணம்மானது விளைபுலம் எனக் கண்டு வியந்தார். இயற்கையன்னையோடு காதலுறவு முறுகி வளர, நீல வானையும், விண்மீனையும், வீறிடும் கடலையும், கண்ணம்மாளாகக் கண்டு இன்புற்ற பாரதியார் கோலவெறி கொண்டு மனமுருகும் வண்ணம் பின்வருமாறு இசைப்பாராயினர்.
“சுட்டும் விழிச்சுடர்தான்-கண்ணம்மா
சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி-கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத்திரங் களடி
சோலை மலரொளியோ-உனது
சுதந்திரப் புன்னகைதான்
நீலக் கடலலையோ உனது
நெஞ்சு லலைகளடி
கோலக் குயிலோசை-உனது
குர லினிமையடீ
வாலைக் குமரியடீ- கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்”
இத்தகைய காதலறத்து இன்பத்தோடு, பாரதியாரது வாழ்வின் உயிர்நாடிகளாகிய அன்பும் அழகும் கலை இன்பத்தில் திளைத்தது. இவரது மனம் மானிட இதயங்களுடன் ஒன்றி உறவாடுங்காலை, படைபபின் உண்மையினையும் வாழ்வின் உண்மையினையும் அவர் உணர்ந்தார். அனந்தத்தை புற இயற்கைக் பொருளிலும் கண்டு கொண்டார்.
“காக்கைக் குருவியெங்கள் சாதி- நீள்
கடலு மலையுமெங்கள் கூட்டம்
நோக்குந் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்”
என விளையாட அவாவுவார்.
பாரத நாடு தவத்தினாலும் ஞானக் காட்சியிலும் துறவுப் பேற்றிலும் கலையுணர்விலும் பிறவியை நலமுடையதாக்க வல்ல நாடென்பர்.
“வெள்ள பனிமலையின் மீதுலாவுவோம்-அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித்தல மனைத்தும் கோயில் செய்குவோம்-எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்”
என்ற வரிகளின் வழி மலையையும், கடலையும், கப்பலையுமாக அறிவியல் சார்ந்த பார்வையைப் பதித்துள்ளார்.

bharathi4பாரதியின் உணவுப் பழக்கம்

பாரதி சாப்பிடும் முறையிலும் கண்டிப்பானவராகவே இருந்தார். சாதம் மல்லிகைப் பூவைப் போன்றிருக்க வேண்டும். இல்லையென்றால் அவருக்குப் பிடிக்காது. தயிருடன் சேர்ந்தால் சுண்ணாம்பு நீர் மாதிரித்தோன்ற வேண்டும் என்பாராம். களிமண் உருண்டை ஒன்றும் சாதத்தில் இருக்கக்கூடாது. வீசம்படி நெய் அளந்து பக்கத்தில் வைத்துவிடவேண்டும். கெட்டியான தயிர், நல்லெண்ணெய், உருக்கிய நெய், தேங்காய் தொகையல், பொரித்த அப்பளம், ஊறுகாய், இவைகளே அவருக்கு விருப்பம். ஓட்டல் சாப்பாடு ஒருபோதும் சாப்பிட மாட்டார்.
வெற்றிலையை முதலில் குளிர்ந்த நீரிலும் பிறகு வெந்நீரிலும் நன்றாய் அலம்பிய பிறகே உபயோகிப்பார். தினமும் 15 தடவை தாம்பூலம் போடுவார்.

மருத்துவத்துறையில் பாரதியின் பார்வை

ஒளவையார் வெறுமனே நூலாசிரியர் மட்டுமல்லர். அவர் காலத்திலேயே அவர் ராச நீதியில் மிகவும் வல்லவரென்று தமிழ்நாட்டு மன்னர்களால் நன்கு மதிக்கப்பெற்று ராசாங்கத் தூதில் நியமனம் பெற்றிருக்கிறார். மேலும் அவர் சிறந்த ஆத்ம ஞானி. யோக சித்தியால் உடம்மை முதுமை நோவு சாவுகளுக்கு இரையாக்காமல் காப்பாற்றி வந்தார்.
“மாசற்ற கொள்கை மனந்தமைத் தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு”
அதாவது, இருதயத்தில் சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களை நிறுத்திக்கொண்டால் உடம்பில், தெய்வத்தன்மை, அதாவது சாகாத் தன்மை (அமரத்தன்மை) விளங்கும் என்னும் பொருள்படுவது. இந்தக் குறள் பாடியவர் ஒளவையார். இவர் தாமே நெடுந்தூரம் இக்கொள்கைப்படி ஒழுகியவரென்பது இவருடைய சரித்திரத்தில் விளங்குகிறது.
“ஈதலறம் தீவினைவிட் டீட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காத லிருவர் கருத்தொருமித் தாதரவு
பட்டதே இன்பம்; பரனை நினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு”
இவ்வெண்பாவின் கருத்து யாதெனில், ஈதலாவது அருள் செய்தல், அல்லது கொடுத்தல் என்னும் பொருள்படும். அதாவது உலகத்தாருக்குப் பயன்படும் வண்ணமாக நம் உடல், பொருள், ஆவி மூன்றையும் தத்தம் பண்ணிவிடுதல்; நமது பொருளாலும், வாக்காலும், மனத்தாலும் உடற்செய்கையாலும், பிறருடைய கஷ்டங்களை நீக்கி அவர்களுக்கினியன செய்தல்; பொருள் கொடுப்பது மாத்திரமே ஈகையென்று பலர் தவறாகப் பொருள் கொள்ளுகிறார்கள். பிறர் பொருட்டாக நம் உயிரைக் கொடுத்தல் கொடையன்றோ? வைத்தியம் முதலிய சிகிச்சைகளால் பிறருக்குப் பிரதானம் செய்தல் ஈகையன்றோ?

பாரதியின் தொழில்நுட்பச் செய்திகள்

இயன்றவரை மாணாக்கர்கள் எல்லாருக்கும் விசேஷமாகத் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு நெசவு முதலிய முக்கியமான கைத்தொழில்களிலும், நன்செய் புன்செய் பயிர்த்தொழில்களிலும், பூ, கனி, காய், கிழங்குகள் விளைவிக்கும் தோட்டத் தொழில்களிலும் சிறு வியாபாரங்களிலும், தகுந்த ஞானமும் அனுபவமும் ஏற்படும்படி செய்தல் நன்று. இதற்கு மேற்கூறிய மூன்று உபாத்தியாயர்களைத் தவிர தொழிலாளிகள், வியாபாரிகள், விவசாயிகளிலே சற்றுப் படிப்புத் தெரிந்தவர்களும் தக்க லௌகிகப் பயிற்சியுடையவர்களுமான அனுபவஸ்தர்களைக் கொண்டு ஆரம்பப் பயிற்சி ஏற்படுத்திக் கொடுத்தல் மிகவும் நன்மை தரக்கூடிய விடயமாகும்.

வியாபார விடயத்தில் கூட்டு வியாபாரத்தால் விளையும் நன்மைகளை மாணாக்கர்களுக்கு எடுத்துகாட்டவேண்டும். மிகவும் சரசமான இடத்தில் விலைக்கு வாங்கி, மிகவும் லாபகரமான சந்தையில் கொண்டுபோய் எப்போதும் பிரமாணமாகக் கொள்ளக் கூடாது. விளைபொருளும் செய்பொருளும் மிஞ்சிக்கிடக்கும் தேசத்தில் விலைக்கு வாங்கி அவை வேண்டியிருக்குமிடத்தில் கொண்டுபோய் விற்கவேண்டும் என்பதே வியாபாரத்தில் பிரமாணமான கொள்கையாகும்.

வியாபாரத்தில் கூட்டு வியாபாரம் எங்ஙனம் சிறந்ததோ அதுபோலவே கைத்தொழிலிலும் கூட்டுத்தொழிலே சிறப்பு வாய்ந்ததாம். முதலாளியொருவன் கீழே பல தொழிலாளிகள் கூடி நடத்தும் தொழிலைக் காட்டிலும் தொழிலாளிகள் பலர் கூடிச்செய்யும் தொழிலே அதிக நன்மையைத் தருவதாகும்.

ஆகாயவிமானமும், அவை பற்றிய செய்தியும்

1903 டிசம்பர் 17ம் நாளில் ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டறிந்து அமெரிக்காவில் பறக்கவிட்டனர்.
உலகத்தின் முதல் ஆகாய விமானம் பறந்ததற்கு 6 வருடத்தில் 30.12.1909 அன்று இந்தியாவின் முதல் விமானம் ஆகாயத்தில் பறந்ததென்பது ஆச்சர்யமான செய்தி. இதை பஞ்சாபி ஒருவர் தயாரித்து கல்கத்தாவில் பறக்கவிட்டாரென்று ‘இந்தியா’ பத்திரிகையின் 1910 ஜனவரி 8ஆம் தேதி இதழ் தெரிவிக்கிறது.

ஆனால் இந்தியாவின் விமான சகாப்தத்தை உண்டாக்குவதில் சென்னையும் ஆரம்பகாலத்திலேயே பங்குகொண்டதென்று பெருமையான செய்தி நம்மில் பலருக்குத் தெரியாது. ஏன் இதைச் சாதித்துக் கொடுத்த சென்னை ஸிம்ஸன் கம்பெனிக்குக் கூட இச்செய்தி மறந்துபோய் விட்டது. தங்கள் நூறாண்டு சாதனை என்ற பாசுரத்தில் அதைச் சேர்க்கத் தவறிவிட்டார்கள்.

சென்னையில் செய்து பறக்கவிடப்பட்ட முதன் ஆகாய விமானத்தைப் பற்றிய செய்தியும் படமும் ‘இந்தியா’ பத்திரிகையின் 1910 பிப்ரவரி 19ந்தேதி இதழின் விசேச அனுபித்தத்தில் வெளியிட்டிருக்கின்றன. இந்த விமானம் பறந்தது உலகின் முதல் விமானம் பறந்ததற்கு ஆறேகால் வருடத்துக்குள்ளாகும். இதைப் பற்றிய செய்திகள் அக்காலத்திய சென்னைப் பத்திரிகையிலும் வெளிவந்தன.

யானைக்குத் தன் பலம் தெரியாதென்பர். அதேபோல் தமிழ்நாட்டினரான நாம் நம்முடைய பெருமையை மறந்துவிட்டோம். அதுவும் பாரதியின் பத்திரிகை குறிப்பிடுவதுபோல, இந்தச் சென்னை விமானம் ‘தமிழ் வேலைக்காரர்களால் செய்யப்பட்டது என்பதை மறந்துவிட்டோம். இதை நினைவூட்ட நமக்கு ஒரு பாரதி தேவையாக இருக்கிறார்.

bharathi2தீயும் பாரதியும்

தீ எங்கும் நிறைந்த பொருள். அஃதில்லாத இடமில்லை, சூரியன் பெரிய தீக்கோளமேயன்றி வேறில்லை. நட்சத்திரங்களும் அப்படியே பூமி முதலிய கிரகங்களும், தீயின்றி இருக்கவில்லை. பூமியே மேல் தோடு, சுமார் 10 அல்லது 12 மைல்தான், மண்ணும் நீருமென்றும், அதற்குள் எல்லையற்ற வெள்ளமாகத் தீக்குழம்பு ததும்பிக் கொண்டிருக்கிறதென்றும் (பூதத்வ) சாத்திரங்கள் சொல்கிறார்கள்.

இங்ஙனம் எரிகின்ற தீயைத் தவிர எரியாமல் எங்கும் அடங்கிக் கிடக்கும் தீயே அரந்தம். கல்லைப் பார்த்தால் அதில் தீ இல்லையென்று தோன்றுகிறது. அதை மற்றொரு கல்லுடன் உராய்த்துப் பார். குபீரென்று தீ வெளியேறும். மனிதனுக்குள்ளேயும் தீ நிரம்பியிருக்கிறது . வயிற்றுக்குள்ளே போட்டதெல்லாம் சீரணமாவதற்கு நம் முன்னே இருக்கும் தீயே காரணம்.

தீ தான் மழை பெய்விக்கிறது. சூரியனென்ற தீ வட்டத்தினின்று பிறக்கும் கதிர்களின் உஷ்ணத்தால் கடல் நீர் முதலியன நீராவியாகி மேகங்களாகின்றன. பூர்வகாலத்து மகரிசிகள் காலையில் எழுந்தவுடன் சூரியனை வணங்கிவிட்டு அடுத்தபடியாக ஹோமத்தில் வளர்க்கும் தீயை வணங்கினர்.  வேதங்களின் முதல் வேதமாகிய ரிக் வேதத்தின் முதல் மந்திரம் தீயைக் குறித்தது. ‘அக்னி மீளே புரோஹிதம்’ என்று தொடங்குகிறது. (தேவர்களின் அணியில்) முதல் வைக்கப்பட்டவனாகிய அக்னியை வேண்டுகிறேன் என்பது பொருள்.

‘தீயே மருந்து’ என்று கீர்த்தி பெற்ற கிரேக்க வைத்தியனொருவன் சொல்லுகிறான். எந்தப் பொருளையும் நன்றாகக் கொதிக்க வைத்துத்தின்றால் அதுவே பத்தியம். நீரைக் கொதிக்க வைத்தால் அதன் அசுத்தங்களெல்லாம் நீங்கிவிடும்.

தீ தான் மின் சக்தி. மின் சக்திதான் காந்த சக்தி; சலன சக்தி உஷ்ணமாக மாறும்; உஷ்ணம் மின்சக்தியாக மாறும்; அதுவே காந்த சக்தியாக மாறுவது, ப்ரக்குருதியின் சக்திகளெல்லாம் ஒரே ரூபமுடையன. அதாவது அக்னி ரூபன் அதன் ஆதி ரூபம் வேகம். யுத்த சக்திகளெல்லாம் அக்னி சக்திகளே. துப்பாக்கிகளிலிருந்தும் பீரங்கிகளிலிருந்தும் உஷ்ணத்தின் வேகத்தாலேதான் குண்டு முன் சென்று தாக்குகிறது.

அக்னியிருந்தால் மரணம் கிடையாது. மனிதர் உயிரைப் பாதுகாக்க விரும்பினால் அதில் எப்போதும் இயக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். யந்திரத்தைப் போன்றே சரீரத்தை நாம் யந்திரத்தின் காவலாளி போல் நடத்தாமல் மமகாரத்தின் மிகுதியால் இயக்கமின்றிக் காக்க விரும்புகிறோம். வெட்டிகூடக் கட்டாயத்துக்காக உழைக்கிறானே யொழிய, உயிரை அறிவயால் ஒழுங்குப்படி சோர்வின்றி இயங்கிக் கொண்டிருக்க வேண்டுமென்ற தீர்மானப்படி செய்யவில்லை. புஸ்தக மெழுதுகிறவன்கூட ஆரம்பத்தில் ஓரிரண்டு வருடம் சுகத்துக்காக எழுதுகிறான். பிறகு போகப்போகக் கடனுக்குச் செய்வதுபோல் ரூபாய் சம்பாதிக்கும் பொருட்டு மாத்திரமே எழுதத் தொடங்குகிறான். நாம் தண்டத்துக்காகச் செய்யாமல் யதார்த்தமான மகிழ்ச்சியுடன் உயிரை இயக்கிக் கொண்டிருப்போமானால் அதிக இலக்கியங்கள் தோன்றும்.

முடிவுரை

பாரதி கவிதையையும், கட்டுரையையும் அலசி ஆராய்ந்ததில் அவர் அரசியல் துறையில் மாத்திரமல்லாமல், தொழில், சமுதாயம், ஞானம், மதம், அறிவியல் வாழ்விற்கு அவசியமான சகல துறைகளிலும் செலுத்தியுள்ளார். கம்பீரத் தோற்றம், செய்கை, அஞ்சாநெஞ்சம் அனைத்தும் அவரது வீரத்தைக் காட்டும். அவரது வீரச்சொல்லே தமிழ்நாட்டில் தற்போது ததும்பி வழியும் தேசபக்திக்கு விதையாகும். எஞ்சின் ஓடுவதற்கு நீராவி முக்கியம் போல் தேசபக்தி பரப்புவதற்குத் தேசியப் பாட்டுக்கள் என்று இங்கேயும் அறிவியலைச் சுட்டிக்காட்டி அனைத்து துறையிலும் பாரதியின் பார்வை அமைந்துள்ள நோக்கை நன்குணரலாம்.

பார்வை நூல்கள்

1.    சுப்பிரமணிய பாரதியார், பாரதியார் கட்டுரைகள், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2000.
2.    ஆக்கூர் ஆனந்தசாமி, சுப்பிரமணிய பாரதி சரிதம், கிட்டப்பா மலர்ப் பிரசுரலாயம், செங்கோட்டை, 1936
3.    சுப்பிரமணிய பாரதி, பாரதி நூல்கள் (கட்டுரைகள்), பாரதி பிரசுராலயம், சென்னை, 1943.
4.    கந்த. சோமசுந்தரம், பாரதியின் பாடல் திறம், சாகர் பதிப்பகம், தஞ்சாவூர்.
5.    நல்லி குப்புசாமி செட்டியார் (தொகு.ஆ), பாரதி யார்? ஸ்ரீபுவனேஸ்வரி பதிப்பகம், சென்னை.
6.    மது.ச. விமலானந்தம், பாரதி சபதம், இளங்கே பதிப்பகம், புதுச்சேரி, 1963
7.    ரா.அ. பத்மநாபன் (தொகு.ஆ), பாரதி புதையல் பெருந்திரட்டு, வானதி பதிப்பகம், சென்னை, 1982.


முனைவர் பூ.மு.அன்புசிவா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாரதியின் பார்வையில் அறிவியல் தொழில்நுட்பச் சிந்தனைகள்”

அதிகம் படித்தது