நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

பாவேந்தரின் பிறந்தநாள்

தேமொழி

May 1, 2021

siragu bharathidasan birthday

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 130வது பிறந்த நாளை இந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று கொண்டாடுகிறோம்.  இன்று அவர் பிறந்தநாள் எது என்று ஐயத்திற்கு இடமின்றிப் பதிவாகி இருக்கும் நிலை போன்று முன்னர் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்திருக்கவில்லை.

ஒரு சில நூல்கள் பாவேந்தரது பிறந்த நாள் ஏப்ரல் 17, 1891 என்றும், ஏப்ரல் 18, 1891 என்றும், ஏப்ரல் 27, 1891 என்றும், மற்றும்  ஏப்ரல் 9, 1892 என்றும் பற்பல மாறுபட்ட  தவறான தகவலைக்  குறிப்பிட்டிருந்தன.  இது போன்ற தவறான தகவலின் அடிப்படையில் புலவர் மருதவாணன் அவர்கள் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில்  பாரதிதாசனின் 54ஆவது பிறந்த நாளுக்கு முன்னரே பிறந்தநாள் வாழ்த்துக் கூறி கடிதம் எழுதிவிட்டார். இது போன்ற குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்  பாரதிதாசன் தனது சரியான பிறந்தநாளைத் தெளிவுபடுத்த புலவர் மருதவாணன்  அவர்களுக்கு ஏப்ரல் 16, 1945 ஆம் ஆண்டு விவரமாக ஒரு கடிதம் எழுதினார்.  அக்கடிதத்தின் செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது:


16.4.1945
அன்புள்ள மருதவாணன் அவர்கட்கு
நலம்.
தாங்கள் எனக்கு அனுப்பிய வாழ்த்திதழ் வரப்பெற்றேன்.
நன்றி
ஆனால் நான் பிறந்தநாள் :
கர ஆண்டு சித்திரைத் திங்கள் 17 நாள், 1891 ஆண்டு ஏப்ரல் திங்கள் 29 ம் நாள் எனத் தங்கட்கு நினைவுப்படுத்த எண்ணுகின்றேன்.
தங்கள்
பாரதிதாசன்


பாரதிதாசன் தனது கைப்பட எழுதிய கடிதமும், அக்கடிதத்தின் படமும்  “பாரதிதாசன் கடிதங்கள்” என்ற தலைப்பில்  திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்ட நூலில் இடம் பெற்றுள்ளது.

உதவிய நூல்:
பாரதிதாசன் கடிதங்கள்,  இளவரசு இரா, 2009,  திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம்,   கடிதம் – 1.42; பக்கம் 118-119.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாவேந்தரின் பிறந்தநாள்”

அதிகம் படித்தது