சூன் 19, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

பா.ச.க ஆட்சியின் தோல்வியும், தற்போதைய ரபேல் ஊழலும்!

சுசிலா

Oct 6, 2018

Siragu avasara kaala2
மத்தியில் பா.ச.க-வின், மோடி ஆட்சி வந்ததிலிருந்தே, நாட்டின் வளர்ச்சி படிப்படியாக குறைந்துகொண்டே வந்து, இன்று முழுவதும் தோல்வியை கண்டிருக்கிறது என்பது அனைவராலும்  ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை.  ஊழலை ஒழிக்கப்போகிறோம், கள்ளப்பணத்தை கண்டுபிடிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, மிகப்பெரிய ஊழலை செய்து முடித்தது பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற பெயரில்.! இறுதியில், அதன்முலம் அவர்களால் மீட்கமுடிந்தது சொற்ப அளவே.!

இதனையடுத்து, அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு, ரூ. 73/- என  மிகவும் சரிந்துள்ளது.  மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அன்றாடம், சாமானிய மக்கள் கழுத்தை நெறிப்பதாக இருக்கிறது. வேலைவாய்ப்பு எடுத்துக்கொண்டோமானால், தேர்தலின்போது சொன்னபடி, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டமாதிரி, பாதியளவு கூட வழங்க முடியவில்லை. படித்த பட்டதாரிகளை, பகோடா வியாபாரம் செய்யுமாறு மோடி அவர்களே ஆலோசனை கூறினார். மேலும், மத்தியப்பிரதேசத்தில்,  பா.ச.க ஆட்சியில் ஏற்பட்ட வியாபம் ஊழல், அதி பயங்கரமானது. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கையில் மிகப்பெரிய ஊழல். இதில் தொடர்புடையவர்கள், விசாரிக்கப்படுபவர்கள், விசாரிக்க வருபவர்கள் என பலரை மரணமடைய வைத்திருக்கிறது. பலரின் மர்மமான மரணத்திற்கு, இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அடுத்து,  பா.ச.க-வின் இந்த 4 ஆண்டு ஆட்சியில், வாராக்கடன் தள்ளுபடி மட்டும் 7 மடங்கு அதிகரித்திருப்பதாக  ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறது.

Siragu rafele 1

தற்போது  எல்லாவற்றையும், மிஞ்சுவதாக இந்த ரபேல் ஊழல் உருவெடுத்திருக்கிறது என்றால் மிகையில்லை. இன்று, இந்த நாட்டின் பேசுபொருளாக இருப்பதுவும்  இந்த ரபேல் ஊழல் தான். இந்த மோடி ஆட்சியின் ஊழல் அனைத்துமே, இதுவரை நம் நாட்டினுள்ளே நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், ரபேல் ஊழலைப் பொருத்தவரை, பார்த்தோமானால், இது, இந்தியநாட்டைத் தாண்டி, பிரான்ஸ் வரை நீண்டிருக்கிறது என்பதுதான் உச்சகட்டக்  கொடுமை. இக்கட்டுரையில், இதைப்பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

2014 – ஆம் ஆண்டு, சனவரி மாதத்தில், அப்போதைய  பிரான்ஸ் அதிபர், ஹாலண்டே இந்தியாவிற்கு வந்தார். அப்போது இந்திய பிரதமராக இருந்த திரு. மன்மோகன்சிங் அவர்கள், பிரான்ஸ் அதிபருடன் பேச்சவார்த்தை நடத்தி, இருவரும் ஒன்று சேர்ந்து  ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தம் ராணுவ போர்விமானங்கள், டஸால்ட் ஏவியேஷன்  என்ற நிறுவனத்திடம், வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தில், இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகள் நிறுவனம், உதிரி பாகங்களை இணைத்து, விமானமாக மாற்றும் பணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு கையெழுத்தானது. அதில், ஒரு ரபேல் விமானத்தின் விலை, ரூ. 527 கோடி என,  126 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம்  போடப்பட்டது. அதாவது, ஒரு ஸ்குவாட்ரன்ஸ்க்கு 18 விமானங்கள் என்ற அடிப்படையில், 7 ஸ்குவாட்ரன்ஸ்க்கு 126 விமானங்கள் என ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் தற்போதைய அவசர தேவை, 7 அல்லது 8 ஸ்குவாட்ரன்ஸ் என்ற செய்தியை, தற்போது,  முன்னாள் உள்துறை மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆனால், 2014 -ல், அதன்பிறகு, சில மாதங்களில்,  நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரசு தோல்வியை சந்தித்ததினால், மோடி  தலைமையிலான  பா.ச.க அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்தது.  அதன்பிறகு, 2015-ல், மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றபோது, ஒப்பந்தத்திலுள்ள இந்துஸ்தான் நிறுவனம் நீக்கப்பட்டு, ரிலைன்ஸ் டிபென்ஸ்  நிறுவனம் சேர்க்கப்படுகிறது. அதன்படி,  ஒரு விமானத்தின் விலை, ரூ. 1,570 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. விமானங்களின் எண்ணிக்கையும், 2 ஸ்குவாட்ரன்ஸ் என்ற அடிப்படையில் 36 விமானங்கள் தான்  வாங்கப்படுகின்றன. ஒவ்வொரு விமானத்திற்கும், மூன்று மடங்கு விலை ஏற்றப்பட்டு, ஒவ்வொரு விமானத்திற்கும், 1000 கோடி ரூபாய் ரிலைன்ஸ் நிறுவனத்திற்கு, இந்திய அரசாங்கத்தால், தாரைவார்க்கப்பட்டிருக்கிறது. பெரும் நிதிநெருக்கடியில் இருக்கும், அணில்  அம்பானி நிறுவனத்திற்கு உதவ வேண்டுமென்று இந்த ஊழலை நடத்தியிருக்கிறது மோடி அரசு. 2015-ல் மோடியுடன், அணில் அம்பானியும் சென்றிருக்கிறார் என்ற உண்மையும் தற்போது தெரியவருகிறது. இதில், இன்னும் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், இந்த தொழில்நுட்பத்தில் மிகுந்த அனுபவம் வாய்ந்த, பாராட்டுகளும் பெற்ற  நிறுவனமான இந்துஸ்தான் நிறுவனத்தை, நீக்கிவிட்டு, இந்த ஒப்பந்தம் போடப்படுவதற்கு, 14 நாட்கள் முன்னர் தொடங்குவதற்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் அணில்  அம்பானியின் ரிலைன்ஸ் டிபென்ஸ் ஒப்பந்தத்திற்கு மாற்றியதுதான். இந்த மாற்றத்தை, இந்திய அரசு தான்  மாற்ற வேண்டும் என்று கூறியது என்ற உண்மையை, முந்தைய பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே அவர்களே, சமீபத்தில் ஊடகத்திடம் கூறியிருக்கிறார். இந்த மாபெரும் ஊழலுக்கு, இதைவிட சான்று வேறெதுவும்  இருக்க முடியுமா???

ஒரு நாட்டின் பாதுகாப்பு கருதி செய்யப்படும் போர் விமானங்கள், எவ்வளவு முக்கியமானது என்று இந்த அரசிற்கு தெரியாத ஒன்றா???

அனுபவமே இல்லாத ஒரு நிறுவனத்திடம், அதுவும் முன்பு போடப்பட்ட விலையைவிட, மூன்று மடங்கு அதிகமாகவும், விமானங்களின்,  எண்ணிக்கையையும் குறைத்து, செய்யப்படுவதின் நோக்கம் என்ன???

மக்களின் வரிப்பணம், அணில் அம்பானியின் கையில் கொண்டுபோய் கொடுப்பதற்கான காரணங்கள் என்ன???

Siragu Rafale-deal2

இந்த கேள்விகளையெல்லாம்,  எதிர்க்கட்சிச் தலைவர், திரு.ராகுல்காந்தி அவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறார். ஆனால், மத்திய அரசிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. மாற்றாக, ராகுல் பாகிஸ்தானுடன் கூட்டு சேர்ந்து சதி செய்கிறார் என்று கூறுகிறது, பலவாறு திசை திருப்ப முயல்கிறது. பா.ச.க-வின் கூட்டணியில் இருந்த சிவசேனாவே, தற்போது, இந்த ரபேல் ஊழலைப்பற்றி, பேசி வருகிறது, கேள்வி எழுப்புகிறது. “ரபேல் ஊழலை மறைக்க மோடி அரசு ராமர் கோயில் விவாகரத்தையும், இந்து-முசுலீம் விவகாரத்தையும் கையில் எடுத்துள்ளது” என சிவசேனா தன்னுடைய அதிகாரப்பூர்வ நாளிதழான, ‘சாம்னா’ வில் எழுதியுள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு, பா.ச.க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களே, இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடியில் இருப்பதாக கூறியிருக்கிறாரே. இதற்கு பிரதமர்  மோடி என்ன சொல்லப் போகிறார்? தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளப் போகிறாரா?
அனைத்து வகையிலும், இந்த பா.ச.க மோடி அரசு, மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது, தோல்வியடைந்திருக்கிறது. ஊழல் பெருகி, நாட்டின், மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு பணமும், பெரும் பணக்காரர்கள் மற்றும் சாமியார்கள் கையில் கொட்டப்பட்டிருக்கிறது என்ற இந்த உண்மைகளை, மக்கள் உணர வேண்டும். மதரீதியாகவும் சரி, பொருளாதார ரீதியாகவும் சரி, பா.ச.க ஆட்சி என்பது இந்தியாவை வளர்ச்சியற்ற ஒரு நாடாக, பல நூற்றாண்டுகள் பின்னுக்குக் கொண்டுபோய் விட்டுவிடும் ஆபத்தான ஆட்சி. இந்த ஆட்சியை வெளியேற்றுவது என்பது மிக முக்கியம். தற்போதைய காலகட்டத்தில், இதனை உணர்ந்து, எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து, ஓரணியில் திரண்டு, மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி, நாட்டை மீட்டெடுப்பது என்பது அவசரமான அவசியம்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பா.ச.க ஆட்சியின் தோல்வியும், தற்போதைய ரபேல் ஊழலும்!”

அதிகம் படித்தது