ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

பா.ச.க-வின் ஆட்சியில் பலவீனமாக்கப்படும் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம்

சுசிலா

Jul 6, 2019

Siragu five years of bjp govt

இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் பா.ச.க அரசு, படு வேகமாக தங்கள் வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறது. ஆட்சியில் அமர்ந்து, இன்னும் இரு மாதங்கள் கூட ஆகாத நிலையில், தங்களின் ஒற்றை ஆட்சி என்ற அஜெண்டாவை நோக்கி விரைவாக நடைபோடுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம், ஒரே கல்வி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சிவில் சட்டம் என்றும் கூறி அதற்கான செயல் வடிவங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் அதி தீவிரமாக இறங்கிய மத்திய பா.ச.க அரசு இப்போது கையில் எடுத்திருக்கும் விடயம், ஒரே நாடு, ஒரே ரேசன் அட்டை என்பதாகும்.

இவர்கள் நடைமுறைப்படுத்த துடிக்கும் இந்த ஒரே என்ற செயல், ஒற்றை ஆட்சி முறையை நோக்கித்தான் நகர்த்தப்படுகிறது என்பது இந்திய அரசியலை உற்று கவனிப்பவர்களுக்கு நன்கு விளங்கும். அதுவும் இந்த ஒற்றை ஆட்சி என்பதன் உள்நோக்கமே, ஒரே இந்துராஷ்டிரம் என்பதாகும். ஒரே மதம் என்பது இந்து மதமாகும். ஒரே மொழி என்பது முதலில் இந்தி, அதன் பிறகு சமஸ்கிருதம் என்ற முறையில் நம் மீது திணிக்கப்படும் சர்வாதிகார முறை அல்லாமல் வேறில்லை என்பதை நாம் உணரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பா.ச.க கூறும் ஒரே தேர்தல் என்பதும், சனநாயகத்திற்கு வேட்டு வைக்கும் செயல்தான். மக்களாட்சி முறை ஒழிக்கப்பட்டு, சனாதிபதி ஆட்சி முறையை கொண்டுவருவதற்கான மறைமுக திட்டமாகும். ஏதோ ஒரு காரணத்தால், ஒரு மாநில ஆட்சி கலைக்கப்பட்டால், பொதுத் தேர்தல் வரும் வரை, மக்களால் தேர்ந்தெடுக்க முடியாத, ஆளுநர் ஆட்சி நடைபெறும் சூழல் ஏற்படும். மற்றும் இது தனக்கு இணங்காத மாநில ஆட்சியை காழ்ப்புணர்ச்சி காரணமாக நீக்கும் செயலாகக்கூட அமைய வாய்ப்பிருக்கிறது.

மேலும் மாநில உரிமைகளை பறிக்கும் விதமாக அமைகிறது. நம் கூட்டாட்சித் தத்துவத்தை கேள்விக்குறியாக ஆக்குகிறது.

பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள் நிறைந்த, நூற்றுக்கணக்கான பல நாடுகள் சேர்ந்த, இந்த ஒன்றுபட்ட இந்திய ஒன்றியம் பன்முகத்தன்மையை கொண்டிருக்கிறது. இது தான் இந்தியாவின் சிறப்பு. வேற்றுமையில் ஒற்றுமை காணுதல் என்பதுதான் உலகளவில் இந்தியாவின் பெருமையாக பார்க்கப்படுகிறது. உலக அரங்கில், நாம் அனைவரும் பன்முகதன்மையுடன் ஒற்றுமையாக வாழ்கிறோம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், மத்திய பா.ச.க அரசு, அதனை குலைக்கும் விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மிகவும் பேராபத்தானது. மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து, அதிகாரம் முழுவதும் ஒரே இடத்தில் குவிக்கப்படும். ஏற்கனவே, கடந்த ஆட்சியில், மருத்துவப்படிப்பிற்கு, ஒரே பொதுத்தேர்வு என்று நீட் தேர்வை கொண்டுவந்து நம் மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைத்து விட்டது. தற்போது, தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்படுத்தப்பட்ட, ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் மண்ணை அள்ளிப் போடுவதற்கு முயற்சி செய்கிறது.

siragu bjp aatchi1

அடுத்து, இந்த ஒரே ரேசன் அட்டை என்பது அந்தந்த மாநில மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதமாக இருக்கிறது. தமிழ்நாட்டில், ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் விதத்தில், அரிசி இலவசமாக அளிக்கப்படுகிறது. சலுகை விலையில், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் என வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தந்த மாநிலங்களில், உணவு நிலவரம் என்பது அந்தந்த வாழ்வியலுக்கேற்ப மாறுபடும். உணவு முறையே மாறுபடுகிறது. இங்கே நமக்கு அரிசி தேவைப்படுகிறது. அது தான் நம் உணவு. ஆனால், நாளை, இது ஒரே ரேசன் கார்டு என்று வந்தால், அதிகாரம் முழுவதும் மத்திய அரசிடம் செல்லும்போது, இனி அரிசி வழங்குவது சிரமம், நாங்கள் கோதுமை வழங்குகிறோம், அதையே நீங்கள் உண்ணுங்கள் என்று அறிவிப்பு வந்தாலும் வியப்பதிற்கில்லை.

இந்த ஒரே ரேசன் கார்டு என்பதற்கு அவர்கள் சொல்லும் காரணம், மற்ற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து வருகிறவர்கள் பயன்பெறுவது தான் என்று சொல்கிறார்கள். புலம் பெயர்ந்து வருகிறவர்கள் பெரும்பாலும், பஞ்சத்தில் அடிபட்டவர்களாகத்தான் வருகிறார்கள். இல்லையென்றால், வேலைவாய்ப்பின்மையின் காரணத்தால், இங்கு வந்து குடி அமர்கிறார்கள். இன்னும் சிலர், தங்களின் வறுமை காரணமாக பல குற்றச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். பணி நிமித்தமாக வேறொரு மாநிலத்திற்கு செல்லுதல் என்பது இயற்கை. அது ஏற்புடையதும் கூட. ஆனால், ஒரு மாநில மக்கள் பஞ்சம், பட்டினியால் வேறொரு மாநிலத்திற்கு புலம்பெயர்ந்தால், அது அந்த மாநில நிர்வாகத்தினரின் சீர்கேடாகத்தானே இருக்க முடியும். நம் மாநிலத்தில், தம் மாநில மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பது ஒரு அரசினுடைய கடமை. அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதற்கான உணவுப் பிரச்சனை, உணவு தேவை, உணவு உரிமை என தனித்தனியாக இருக்கிறது. அதில் மத்திய அரசாங்கம் கைவைப்பது என்பது நிர்வாக உரிமையை பறிப்பது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஏற்கனவே, வடமாநில மக்கள் இங்கு வந்து குவிக்கப்படுகிறார்கள். இது திட்டமிட்டு நடக்கிறதோ , என்ற ஐயம் நம் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அவர்களில், 80 லட்சம் மக்கள் வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள் என்ற செய்தி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதில் தமிழக அரசு ஒரு உறுதியான, தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

siragu bjp aatchi2

ஏற்கனவே, நாடெங்கும் ஒரே ஆதார் கார்டு என்ற முறையை கொண்டுவந்து, அதனை தனியார் வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என அனைத்திலும் ஒரு தனிமனிதனின் சுய விவரங்களை அறிந்துகொள்ளும் முறையை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. ஒரே மதம் என்று சொல்லும் இவர்கள், இனி எல்லோரும் சமம், வருண பேதம் வேண்டாம், சாதிகள் ஒழிக்கப்படும் என்று சொல்லும் துணிச்சல் மிக்கவர்கள் இல்லை. ஒரே மதம் என்று சொல்லிக்கொண்டு, பல சாதிகளை பிரித்து சமத்துவமின்மையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பிற மதத்தினரையும் அச்சுறுத்துகிறார்கள். மேலும், இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி பேசும் மக்களை குடி அமர்த்துவதின் மூலம், இந்தியை முதன்மை மொழியாக கொண்டுவர முடியும், பா.ச.க-வின் இந்துத்துவத்தை பரப்ப முடியும், அந்தந்த மாநிலங்களின் கலாச்சாரத்தை சிதைக்க முடியும் என்ற நோக்கம் தான் இதற்கு பின்னால் இருக்கிறது என்ற சூட்சமத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மோடி அரசின் ஒற்றையாட்சி என்ற இந்த முறை, ஒரே சாதியினருக்கான அரசியல், உயர்சாதியினர் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் பிராமண, பனியா சமூகத்தினரின், சாதி மற்றும் பொருளாதார ஆதிக்கத்தை நோக்கியே பயணிக்கிறது. இது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு முழுவதும் எதிரானது. பேராபத்தை விளைவிக்க கூடியது. மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, ஆட்சி, அதிகாரங்கள் ஒரே இடத்தில், அதாவது மத்திய அரசிடம் முழுவதும் குவிக்கப்படுவதற்கான ஏற்படாகும். இதனை முளையிலேயே கிள்ளியெறிய, மாநில அரசுகள் தவறினால், நாம் ஒரு மோசமான சர்வாதிகார ஆட்சிக்கு உட்படுத்தப்படுவோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆளும்கட்சி, எதிர்க் கட்சிகள் என எவ்வித பாகுபாடுமின்றி, ஒன்றிணைந்து, மக்களையும் ஒன்று திரட்டி மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்த வேண்டும்.

“மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்ற தமிழ்நாட்டின் நிரந்தர கொள்கை நிலைப்பாட்டிலிருந்து சிறிதும் விலகாமல், உறுதியாக நின்று வெற்றி பெற வேண்டும். மத்திய அரசு கொண்டுவர துடிக்கும் இந்த ஒற்றையாட்சி முறையை முறியடிக்கும் விதமாக விரைந்து, விவேகமாக செயல்படவேண்டும். இந்தியாவிலேயே, சமூகநீதி, இடஒதுக்கீடு, நலத்திட்டங்கள், கல்வி, தொழிற்வளர்ச்சி, பெண்விடுதலை, என அனைத்திலும் முன்னேறிய மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு, இந்த கூட்டாட்சித் தத்துவத்திலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் என உறுதியுடன் நம்புவோம். அதற்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் வலியுறுத்துவோம்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பா.ச.க-வின் ஆட்சியில் பலவீனமாக்கப்படும் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம்”

அதிகம் படித்தது