மே 21, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

பின்னோக்கிப் பயணிக்கின்றதா இந்திய உச்ச நீதிமன்றம்?

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Oct 15, 2016

siragu-judgement

அண்மையில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு தந்திருக்கின்றது. அதாவது தனிக்குடித்தனம் கோரும் மனைவிக்கு  ஒரு இந்து ஆண், கொடுமையின் அடிப்படையில்  மணவிலக்கு தரலாம் என்பது தான் அந்தத் தீர்ப்பு. இந்துப்  பண்பாட்டின்படி கணவனின் பெற்றோரிடமிருந்து பிரிப்பது தவறு என்றும் அப்படி செய்வது மேற்கத்திய பண்பாட்டின் தாக்கம் தான் எனவும் அந்தத் தீர்ப்பு கூறுகின்றது.

இந்தத் தீர்ப்பு இன்று பெரும் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கின்றது இன்றைக்கு உலகமயமாதல் என்ற நிலையில் அனைத்துத் துறைகளிலும் அரசும், மக்களும் மேற்கத்திய நிலைப்பாடுகளை தங்கள் உடையில், உணவில், நிர்வாகத்தில் பின்பற்றுகின்றபோது அதையெல்லாம் கேள்விக்கு உட்படுத்தாத இந்த நீதிமன்றம் இந்து குடும்ப அமைப்பு சிதைந்து விடக்கூடாது என்ற ஒற்றை காரணத்துக்காகவே இந்தத் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது என்று தான் எண்ணத்தோன்றுகிறது.

எந்த மதமாக இருந்தாலும் அவள் ஆண் மகனைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்ற கட்டமைப்புத்தான் இங்கு நிலவுகின்றது. அன்றைய காலகட்டத்தில் பெண்ணுக்கு கல்வி, சொத்துரிமை என அனைத்தும் மறுக்கப்பட்ட நிலையில் அவள் ஆண்களை, அவன் வீட்டை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டியிருந்தது. இந்த சார்ந்திருத்தலின் பெரும் சங்கடம் என்னவென்றால் தன் உரிமைகள் நசுக்கப்படும் போது, தன் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும்போதும் கூட அந்தப் பெண்கள் ஆண் வீட்டாரை எதிர்த்து வாய்த்திறக்க முடியாது. அப்படியே பேசினாலும் அவளின் கேள்விகளுக்கு அங்கே பதில் இருந்ததில்லை.

ஆனால் இன்று பெண் படித்து தன் சுய உழைப்பில் பொருள் ஈட்டுகின்றாள். அப்படி ஈட்டும் பொருளை தன்னை வளர்த்து படிக்க வைத்த பெற்றோருக்குத் தருவதை இன்றும் ஆண் வீட்டாரும் இந்தச் சமூகமும் ஏற்றுக்கொள்வதில்லை. அங்கே பிரச்சனைகள் வெடிக்கின்றன. ஒரு ஆண் மட்டுமே தன் பெற்றோரைப் பார்த்துக் கொள்ள கடமைப்பட்டவன் என்று இந்தச் சமூகம் இன்றும் நினைக்கும் என்றால் அதை கேள்விக்கேட்க வேண்டிய நிலையில் இருக்கும் நீதிமன்றங்கள் இது போன்ற தீர்ப்பு வழங்கினால் அது எவ்வளவு பெரிய மடமை என்று எண்ணிப்பார்க்க வேண்டும் நீதித்துறை.

தனிக்குடித்தனம் போவது தவறு எனச் சுட்டிக்காட்டும் இந்த நீதிமன்றம் ஆண்டாண்டுகளாய் பெண் தன் பெற்றோரிடமிருந்து பிரிந்து வந்து கணவன் வீட்டாருடன் அப்படியே எந்தச் சலனமுமின்றி ஒன்றிவிட வேண்டும் என்று நினைப்பது, இந்த 21 ஆம் நூற்றாண்டில் ; 2020 இல் வல்லரசு கனவு காணும் இந்தியாவில் இது போன்ற பிற்போக்குத்தனமான தீர்ப்பு மதப்பண்பாடு என்ற பெயரில் வழங்கப்படுவது சரியா என்று அறிவு நாணயத்தோடு சிந்திக்க வேண்டும்.

மேற்கத்திய தாக்கம் எனக் கூறும் நீதியரசர்கள் உண்மையில் மேற்குலகில் பெண்ணுக்கு கணவன் வீட்டாரின் ஆதிக்கம் இன்றி இணையர்கள் இருவரும் புரிந்து கொண்டு அன்பால் அவரவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து; தனிமனித உரிமைக்கு மதிப்பு கொடுத்து தங்களின் வேலையில் கவனம் செலுத்தி வாழ்கின்றனர். அங்கே ஆண்-பெண் இரு வீட்டாரும்  விரிவுபட்ட குடும்ப உறுப்பினர்களாக நடந்து கொண்டு இணையர்களின் தனிப்பட்ட விடயங்களில் தலையிடுவதில்லை. இந்தப் பண்பாடு எந்த வகையில் குறைந்துவிட்டது?.

பண்பாடு என்பது தனிமனித உணர்வுகளை மதிப்பதாக இருக்க வேண்டுமே தவிர்த்து, பெண் எனும் காரணத்தால் அவள் இன்றும் ஆணையும் அவன் குடும்பத்தாரையும் எதிர்த்து கேள்வி கேட்காமல் மடந்தையாய் கொடுமைகள் அனுபவிக்க வேண்டும் என்பது பண்பாடு அன்று. பொதுவாகவே இந்தியச் சமூகத்தில் மருமகனுக்கு கொடுக்கப்படும் மதிப்பு மருமகளுக்கு இன்றும் மறுக்கப்பட்டே வருகின்றது. மருமகள் எவ்வளவு படித்திருந்தாலும், நல்ல நிலையில் சமுதாயத்தில் மதிக்கப்பட்டாலும் அவள் கணவன் வீட்டார் பெண்ணை எவ்வளவு துன்புறுத்துகின்றனர், பெண்கள் எப்படியெல்லாம் வலிகளைக் தாங்கிக்கொண்டு குடும்ப அமைப்பில் சிதைக்கப்படுகின்றனர் என எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை பெண் திருமணத்திற்குப் பின் பெரிய சாதனைகளைச் செய்ய முடிவதில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் விதிவிலக்குகள் எடுத்துக்காட்டாக முடியாது. பெரும்பாலும் தன் கணவன் வீட்டு உறவுகள் தரும் நெருக்குதல்களை, சமாளிக்கவே அவள் மூளையின் உயிரணுக்கள் செலவிடப்படுகின்றன என்பதே கசப்பான உண்மை.

பெண்கள் செய்யும் வீட்டுவேலைகளுக்கு அவர்களுக்கு சம்பளம் தர வேண்டும் என இதே உச்ச நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு வழங்கியது. இந்தியா போன்ற குடும்ப அமைப்பு உள்ள நாட்டில் இந்தத் தீர்ப்பு வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கான பொருளாதாரத்தை பலப்படுத்தும்; அவளின் உழைப்பு திருமண வாழ்க்கையில் அங்கீகரிக்கப்படும் எனப் பலரால் வரவேற்கப்பட்டது. அது இன்னும் சட்டமாக்கப் படவில்லை எனினும் அதுபோன்ற பெண்களுக்காக தீர்ப்புகள் வழங்கிய இந்திய உச்ச நீதிமன்றம் இன்று கற்கால தீர்ப்புகள் வழங்கி பின்னோக்கிப் பயணிக்கின்றது என்பது வருத்தமே.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பின்னோக்கிப் பயணிக்கின்றதா இந்திய உச்ச நீதிமன்றம்?”

அதிகம் படித்தது