பிரமிப்பூட்டும் பெண்மணி – கவிதை
ஆச்சாரிMay 31, 2014
கவிதை மூலம் – மாயா ஆஞ்சலூ
மொழிபெயர்ப்பு – தேமொழி
அழகிய பெண்கள் வியக்கிறார்கள்
என் இரகசியம் என்னவென்று
நான் ஓர் அழகியுமல்ல
பேரழகிக்குரிய தோற்றமும் எனக்கில்லை
நானிதைச் சொன்னாலோ
நான் பொய்யுரைப்பதாக
அவர்கள் எண்ணுகிறார்கள்
நான் சொல்கிறேன்
எனது கைக்கெட்டும் வகையில்
எனது இடையின் அளவில்
எனது நடையின் துடிப்பில்
எனது கடைவாயிதழ் சுழிப்பில்
நானொரு பெண்
நான் பிரமிப்பூட்டுபவள்
பிரமிப்பூட்டும் பெண் என்பவள் நானே
நான் அறையில் நுழைந்தால்
பிறர் மனம் குளிரும்
மனம் மகிழும்
ஓர் ஆணிடம்
அருகே தோழர்கள் நிற்பார்கள்
அல்லது மண்டியிடுவார்கள்
பிற்பாடு தேன்கூட்டினை
மொய்க்கும் தேனீக்களாக
என்னை அவர்கள் மொய்ப்பர்
நான் சொல்கிறேன்
எனது விழிச் சுடரொளியில்
எனது புன்னகையின் மின்னலில்
எனது இடையின் அசைவில்
எனது நடையின் துள்ளலில்
நானொரு பெண்
நான் பிரமிப்பூட்டுபவள்
பிரமிப்பூட்டும் பெண் என்பவள் நானே
ஆண்களும் வியக்கிறார்கள்
என் ஈர்க்கும் சக்தியின்
காரணம் என்னவென்று
அவர்கள் என்னதான் முயன்றாலும்
என்னுள் மறைந்திருக்கும் மாயம்
அவர்களுக்குப் புரியாது
நான் விளக்கினாலும்
அவர்களுக்கு விளங்குவதில்லை
நான் சொல்கிறேன்
எனது கவர்ச்சி இருப்பது
எனது முதுகின் நிமிர்வில்
எனது புன்னகையின்ஒளிர்வில்
எனது மார்புகளின் அசைவில்
எனது இயல்பின் நளினத்தில்
நானொரு பெண்
நான் பிரமிப்பூட்டுபவள்
பிரமிப்பூட்டும் பெண் என்பள் நானே
இப்பொழுது புரிகிறதா
என் தலைவணங்க மறுப்பதன் காரணம்
நான் கத்துவதுமில்லை குதிப்பதுமில்லை
கவனத்தைக்கவர உரத்துப் பேசத் தேவையுமில்லை
நான் கடந்து செல்வதைக் காணும் பொழுதே
உங்களைப் பெருமை கொள்ள வைக்கும்
நான் சொல்கிறேன்
எனது கால்களிடும் தாளத்தில்
எனது கூந்தலின் துவளளில்
எனது கையில் எதிர்பார்ப்பது
ஓர் அன்பின் அரவணைப்பு
ஏனெனில்
நானொரு பெண்
நான் பிரமிப்பூட்டுபவள்
பிரமிப்பூட்டும் பெண் என்பவள் நானே
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிரமிப்பூட்டும் பெண்மணி – கவிதை”