மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிரிக்காமல் படிக்கப்படும் கடிதங்கள்

தேமொழி

Apr 10, 2021

siragu virtual unfolding

பிரெஞ்சுக்காரர் ஒருவர் 300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கடிதத்தைப் பிரிக்காமல் படித்துள்ளார்கள் ஆய்வாளர்கள். கடிதத்தை எழுதி, பல மடிப்புகளாக மடித்து கடிதத்தின் பெறுநர் மட்டுமே பிரித்துப் படிக்கும் வகையில் பூட்டி அனுப்பும் முறையில் அனுப்பப்பட்ட கடிதம் அது. அது பெறுநருக்குச் சென்று சேர்க்கப்படாமல் நெதர்லாந்தில் ஓர் அஞ்சலகத்தில் ‘சைமன் டி பிரையன்’ (Simon de Brienne) என்ற அஞ்சல் அலுவலரின் மரப்பேழை சேமிப்பில் இருந்த சேர்ப்பிக்கப்படாத பல கடிதங்களுடன் ஒன்றாக இதுவும் தங்கிப் போனது. பற்பல காரணங்களால் பெறுநரிடம் சேர்ப்பிக்க முடியாமல் போன கடிதங்கள் இவை என்பது பொதுவான கணிப்பு. இதை ‘பிரையன் சேகரிப்பு’ (the Brienne Collection) எனக் குறிப்பிடுகிறார்கள். ‘பிரையன் சேகரிப்பு’ தொகுப்பில் இருந்த பிரிக்கப்படாத 577 கடிதங்களில் ஒரு கடிதத்தைத்தான் ‘மெய்நிகர் கடிதவிரிப்பும் படிப்பும்’ என்ற முறையில் பிரிக்காமல் அறிவியல் துணைகொண்டு தொழில் நுட்ப முறையில் படித்துள்ளார்கள்.

அதைப் பிரித்துப் படித்தால்தான் என்ன என்று வியப்புடன் வைக்கப்படும் கேள்விக்கு வரலாற்று ஆய்வாளர்களின் இரு கோணங்கள் நல்ல விளக்கம் தரும். ஒன்று மிகப் பழமையான ஆவணம் மேலும் சிதைந்து விடும் அதைத் தவிர்க்க வேண்டும். மற்றொன்று, அவ்வாறு மடிக்கப்பட்ட முறைகள் வரலாற்றுச் சிறப்பு கொண்டவை அதை இழக்கக்கூடாது.

கடிதத்தை உறையிலிட்டு அரக்கு அல்லது மெழுகு ஊற்றி முத்திரை இட்டு கடிதம் அனுப்பப்பட்ட முறைக்கு சில நூற்றாண்டுகள் முன்வரை உறை என்பது வழக்கத்திற்கு வந்திருக்கவில்லை. 1830ஆம் ஆண்டில்தான் வணிகமுறையில் கடித உறைகள் பெரும் அளவில் தயாரிக்கப்பட்டு வழக்கத்திற்கு வந்தது. அதற்கு முன் எழுதப்பட்ட கடிதங்கள் நேர்த்தியாக மடிக்கப்பட்டு கடிதத்தின் தாளினையே ஆங்காங்கு வெட்டி மடிப்பில் செருகி மூடி அனுப்புவார்கள். இது காகிதக் கப்பல் செய்யும் முறையையும் ஆரிகாமி முறையைப் போன்று காகிதத்தை மடித்து பொம்மை செய்வதை ஒத்தது. மற்றொரு வகையில் கடிதம் எழுதிய தாளின் ஒரு பகுதியையே நாடாவாக வெட்டி தாளின் மடிப்புகள் வழியே துளையிட்டுத் தைத்து அனுப்பும் முறை எனப் பல்வேறு முறைகள் வழக்கத்தில் இருந்தன. இவற்றில் இதுவரை 12 வகை கடிதம் மடித்துப் பூட்டும் முறை கண்டறியப்பட்டுள்ளது. இந்த முறைகளில் 64 வகை மடிப்புகள் வரை கடிதம் மடிக்கப்பட்டுள்ளது. தாளை வெட்டியோ, துளையிட்டோ, தைத்தோ பூட்டும் முறையில்தான் பலநூற்றாண்டுகள் கடிதங்கள் அனுப்புவது வழக்கத்தில் இருந்தது.

இதை “கடிதப் பூட்டு” (“லெட்டர்லாக்”/Letterlock) என்றும் அக்கடிதங்களை “பூட்டிய கடிதங்கள்” (Locked Letters) என்றும் கூறுவார்கள். இது கடிதத்தைப் பூட்டுவது (“லெட்டர்லாக்கிங்” /Letterlocking) என்று அறியப்படுகிறது. இவை பூட்டிய கடிதங்கள். கடிதத்தில் என்ன எழுதியுள்ளது என அறிய விரும்புவர் அதை விரித்துப் படித்தால் அதன் சிதைவு கடிதம் முன்னரே யாராலோ திறந்து படிக்கப்பட்டுவிட்டது எனக் காட்டிக் கொடுத்துவிடும்.

தனது மரணதண்டனை நிறைவேற்றப்படும் சிலமணி நேரங்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்து அரசி மேரி (பிப்ரவரி 8, 1587) அன்று, பிரான்ஸ் நாட்டின் அரசரும் தனது மைத்துனருமான மூன்றாம் ஹென்றி மன்னருக்கு ஒரு கடிதம் எழுதி, அதை இவ்வாறு பூட்டி அனுப்பினார். அது பூட்டப்பட்ட முறை ஒரு செயல்முறை காணொளி விளக்கமாக இணையத்தில் கிடைக்கிறது. இவ்வாறு பூட்டிய முறையில் உள்ள கடிதங்களைப் பிரித்தால் வரலாற்றுக் கருவூலமான அவற்றின் மடிப்பு முறைகள் விரிந்து நிரந்தரமாகப் பூட்டு சிதைந்துவிடும். இதுநாள் வரையில் பூட்டப்பட்ட கடிதங்கள் தேவையின் அடிப்படையில் மட்டுமே முத்திரைகள் வெட்டப்பட்டு, ஓரங்கள் பிரிக்கப்பட்டு படிக்கப்பட்டுள்ளது.

‘மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை’ என்பது போன்றோ அல்லது ‘கேக் சாப்பிடவும் வேண்டும், அது அப்படியே அளவு குறையாமல் இருக்கவும் வேண்டும்’ (You can’t have your cake and eat it) என்ற விருப்பம் போன்றோ இது தோன்றலாம். ஆனால், அறிவியல் முறையில் வென்று காட்டியுள்ளது மாசசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலை (எம். ஐ. டி. / MIT) அறிவியலாளர்கள் மற்றும் சிலரும் கொண்ட 11 ஆய்வாளர்கள் கொண்ட குழு ஒன்று. அண்மையில் இந்த ஆய்வாளர்கள் ‘பிரையன் சேகரிப்பு’ தொகுப்பில் இருந்த பிரிக்கப்படாத கடிதங்களில், 1680-1706 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட நான்கு கடிதங்களைத் தேர்வு செய்து ‘எக்ஸ்ரே மைக்ரோடோமோகிராபி ஸ்கேன் (X-ray microtomography / XMT) முறையில் படித்து, அவ்வாறு பிரிக்காமல் கடிதத்தைப் படிக்கும் முறையை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ், (Nature Communications) இதழில் வெளியிட்டுள்ளார்கள்.

பொதுவாக எக்ஸ் கதிர்கள் கொண்டு காப்பகங்களில் உள்ள ஆவணச் சுருள்கள், ஓரிரு மடிப்புகள் கொண்ட சுவடிகள் போன்றவற்றைப் பிரிக்காமல் ஓரளவு படிக்கும் முறை உள்ளது. ஆனால் பல மடிப்புகள் கொண்ட பொட்டலமாகக் கட்டப்பட்ட கடிதங்களை இம்முறையில் படிக்க முடியாமல் அது ஒரு பெரிய சவாலாகவே இருந்து வந்தது. பல் மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே ஸ்கேன் முறையில் கடிதப் பொட்டலத்தை முப்பரிமாணப் படம் எடுத்து, நிரல் எழுதி, மடிப்புகளைக் குறிப்பெடுத்து, அதன் அடிப்படையில்

படத்தைப் பலதுண்டுகளாகப் பிரித்து, மீண்டும் அவற்றை இணைத்து, இரு பரிமாணம் கொண்ட தாள் போன்று படத்தை விரித்துப் படிக்க இந்தத் தொழில் நுட்பமுறை உதவியுள்ளது.

ஜாக் சென்னாக்ஸ் (Jacques Sennacques) என்பவர் ஜூலை 31, 1697 அன்று, ஹேக் நகரில் வாழ்ந்த தனது உறவினரான பிரெஞ்சு வணிகர் ‘பியர் லு பெர்ஸ்’ (Pierre Le Pers) என்பவரிடம் ‘டேனியல் லு பெர்ஸ்’ என்பவரின் மரணச் சான்றிதழை அனுப்பி வைக்குமாறு அனுப்பிய செய்தி உள்ள கடிதம், உலக வரலாற்றில் முதன்முறையாக, பிரிக்கப்படாமல் படிக்கப்பட்டுள்ளது.

siragu unfoldinganimation

அடுத்தவர் கடிதங்களைப் படிப்பது தவறு என்ற கொள்கை உள்ளவர்களுக்கு பிரிக்காமல் பிறர் கடிதத்தைப் படிக்கும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் எதற்குப் பயன்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது அதன் தனித்தன்மையும் சிறப்பும்.

“ரஷ்யர்களே, நீங்கள் இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருப்பீர்கள் என்றால் கவனியுங்கள், ஹில்லாரி கிளிண்டன் தரப்பிலிருந்து மறைந்துவிட்ட 30,000 மின்னஞ்சல்களை உங்களால் கண்டுபிடிக்க முடியும் என்று நம்புகிறேன். கண்டுபிடித்துக் கொடுத்தால் உங்களுக்கு நல்ல வெகுமதி கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று முதன்முறை தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பொழுது, தேர்தல் காலத்தில் அயல்நாட்டு மக்களிடம் அறைகூவல் விடுத்த அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் டிரம்ப் போன்றவர்களும் வாழும் உலகில், இந்தத் தொழில்நுட்பம் தவறான நோக்கம் கொண்டவரிடம் சிக்கினால் என்னவாகும்? நம் அஞ்சல் பெட்டிக்கு வந்து சேரும் கடிதங்கள் பிரிக்கப்படாமல் இருந்தாலும் படிக்கப்படாமல் இருந்ததா என்பது ஐயத்திற்கு உரிய நிலைதான் இனிமேல்.

இன்று மின்னஞ்சல்களுக்கு நவீன எண்ணிம குறியாக்கவியல் (digital cryptography) பாதுகாப்பு உள்ளது போல காலம் முழுவதும் செய்தியைப் படிக்க வேண்டியவர் மட்டும் தெரிந்து கொள்ளும் வகையில் அனுப்புவதற்குப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் அவை செயலிழந்து போகும் வகையில் தொழில்நுட்பமும் மற்றொரு பக்கம் வளர்ந்து வருகிறது.

_______________________

**“Russia, if you’re listening, I hope you’re able to find the 30,000 emails that are missing, I think you will probably be rewarded mightily by our press,” Trump said in a July 27, 2016 news conference (https://www.youtube.com/watch?v=-b71f2eYdTc&t=22s)

References:

Research Article:

Unlocking history through automated virtual unfolding of sealed documents imaged by X-ray microtomography. Dambrogio, J., Ghassaei, A., Smith, D.S. et al. Nat Commun 12, 1184 (Published: 02 March 2021). DOI: https://doi.org/10.1038/s41467-021-21326-w

Download: https://www.nature.com/articles/s41467-021-21326-w.epdf?

News:

New Technique Reveals Centuries of Secrets in Locked Letters, William J. Broad, March 2, 2021, NY Times.

https://www.nytimes.com/2021/03/02/science/locked-letters-unfolding.html

Video:

Letterlocking: Mary Queen of Scots’ last letter, a spiral lock, England (1587)

https://youtu.be/dzPE1MCgXxo

Website:

LETTERLOCKING-The technology of folding & securing an epistolary writing substrate to function as its own envelope

https://letterlocking.org/

Code:

Virtual Unfolding – https://github.com/UnlockingHistory/virtual-unfolding

Research:

A Postal Treasure Trove – http://brienne.org/unlockedbriennearchive

Virtual Unfolding – https://brienne.org/unfolding

_____________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிரிக்காமல் படிக்கப்படும் கடிதங்கள்”

அதிகம் படித்தது