ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

பிள்ளைத் தமிழ் இலக்கியம்

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Dec 27, 2014

pillaiththamilதமிழ்ச் சிற்றிலக்கியங்களிலே தலையாயது பிள்ளைத் தமிழ் என்பர். பிள்ளைத் தமிழ் இலக்கியம் தமிழுக்கே உரியதென்றும், இது பிறமொழிகளில் காணப்படாத ஓர் இலக்கியவகை என்றும் இதன் தனிப்பெருமையை எடுத்துரைப்பார் அறிஞர் மு. வரதராசனார். பிற சிற்றிலக்கிய வகைகளைவிட எண்ணிக்கையிலும் இப் பிரபந்தம் மிகுதியாகவே காணப்படுகிறது. இன்று கிடைக்கக்கூடிய பிள்ளைத் தமிழ் இலக்கியங்களைக் கணக்கிட்டால் ஐநூறுக்கும் மேல் இருக்கலாம்.

பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கமும் தொல்காப்பியத் தில் காணப்படுகிறது என்பர். தொல்காப்பியத்தில் ‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ என்னும் நூற்பா இடம்பெற்றுள்ளது. இதற்குச் “சிறுபிள்ளைகளும் பாட்டுடைத் தலைவராக அமைவர்” என்பது பொருள். சிற்றிலக்கியங்களில் ‘குழமகன்’ என்னும் இலக்கியமும் ஒன்று. ‘குழமகன்’ என்றால் சிறுவன் எனப் பொருள்படும். ஆனால் அவ்விலக்கியம் பிள்ளைத் தமிழ் போல் பெருவரவாக இல்லை.

தமிழின் பல்வேறு இலக்கியங்களில் பிள்ளைத் தமிழ்க்கூறுகள் காணப்படுகின்றன என்று கூறினாலும், உண்மையில் பெரியாழ் வாரின் திருமொழியிலேதான் அதன் பூரணமான இயல்பைக் காண முடிகிறது. திருமாலின் கிருஷ்ண அவதாரத்திலே பெரிதும் ஈடுபட்ட பெரியாழ்வார், தொட்டிலில் இட்டுத் தாலாட்டுதல் முதலிய பல பருவங்களாகக் கண்ணனுடைய பிள்ளைப் பருவத்தை வகுத்து, அவனுடைய திவ்ய குணங்களைப் பாராட்டு கின்றார். பெரியாழ்வார் திருமொழி, பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாய் நிற்கிறது. செங்கீரை ஆடுதல், சப்பாணி கொட்டுதல், நீராடுதல், காப்பிடுதல் போன்ற பலவற்றையும் அவர் பாடியுள்ளார். அவருடைய திருப்பாசுரங்களில் ஒன்றைக் காண்போம்.

பூணித் தொழுவினிற் புக்குப் புழுதி யளைந்த பொன்மேனி

காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்

நாண் எத்தனையும் இலாதாய் நப்பின்னை காணிற் சிரிக்கும்

மாணிக்கமே என் மணியே மஞ்சனமாட நீ வாராய்.

இது கண்ணனை நீராட அழைக்கும் பாட்டு.

தூநிலா முற்றத்தே போந்து விளையாட

வானிலா அம்புலீ சந்திரா வாவென்று

நீநிலா நின்புகழா நின்ற ஆயர்தம்

கோநிலாவைக் கொட்டாய் சப்பாணி

குடந்தைக் கிடந்தானே சப்பாணி.

இதில் சப்பாணி கொட்டுதலன்றி நிலவை அழைத்தலும் இடம் பெறுகிறது.

இவ்வாறே ஆண்டாளும் “சிற்றில் சிதைக்காதே” என்று கண்ணனை வேண்டுவதாகப் பாடியுள்ளார்.

பெய்யு மாமுகில் போல்வண்ணா, உன்றன்

பேச்சும் செய்கையும் எங்களை

மையலேற்றி மயக்க உன்முகம்

மாய மந்திரந்தான் கொலோ

நொய்யர் பிள்ளைகள் என்பதற் குன்னை

நோவ நாங்கள் உரைக்கிலோம்

செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள்

சிற்றில் வந்து சிதையேலே.

தமிழில் முதன் முதல் எழுந்த பிள்ளைத் தமிழ் இலக்கியம், சோழர்காலப் பெரும்புலவரான ஒட்டக்கூத்தர் பாடிய குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் ஆகும். ஏறத்தாழ கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுந்த நூல் இது. இதற்குப்பின் வந்த இலக்கண நூல்களிலும் பாட்டியல் நூல்களிலும் பிள்ளைத் தமிழ் இலக்கியத்தின் இலக்கணம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ‘கடவுளரையேனும் ஆசிரியரையேனும் உபகாரிகளையேனும்’ குழந்தையாக வைத்துக் காப்பு முதலிய பத்துப்பருவங்கள் அமைத்து ஆசிரிய விருத்தம் என்னும் பாவகையால் பாடுவது பிள்ளைத் தமிழ் ஆகும். அது ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத் தமிழ் என இருவகைப்படுகிறது.

pillaiththamil1பிள்ளைத் தமிழில் காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை அல்லது வாரானை, அம்புலி ஆகிய பருவங்கள் இரு பாலார்க்கும் பொதுவானவை. ஆண்பாற் பிள்ளைத் தமிழில் இறுதியாக, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பருவங்கள் காணப்படும். பெண்பாற் பிள்ளைத் தமிழாயின், கழங்கு, அம்மானை, ஊசல் என்னும் பருவங்கள் காணப்படும். செங்கீரை, சப்பாணி போன்ற சொற்களுக்குப் பலவித அர்த்தங்கள் தரப்படுகின்றன.

ஒவ்வொரு பருவமும் குழந்தையின் எந்தக் காலப்பகுதியில் அல்லது வயதில் அமைவது என்பதற்கும் விதிகள் பலவாகச் சொல்லப்படுகின்றன. பொதுவாகக் காப்பு என்பது பிறந்தவுடனும், தால், சப்பாணி போன்று அடுத்துவரும் பருவங்கள், 3, 5, 7, 9, 11, 13 போன்ற மாதங்களுக்கும் இறுதிப்பருவங்கள் மூன்றாம், ஐந்தாம், ஏழாம் ஆண்டிற்கும் உரியவை எனக் கருதப்படுகிறது. மூன்றாம மாதமுதல் 21ஆம் மாதம்வரை பாடப்படுவது என்ற கருத்தும் உண்டு. குழந்தை ஆணாயின் திருமணமுடியும் வரையிலும், பெண்ணாயின் பூப்பெய்தும் வரையிலும் பாடலாம் என்றும் விதிகள் சொல்கின்றன.

ஒரு பருவத்திற்குப் பத்துப்பாட்டுகளாக நூறுபாக்கள் கொண்டதாக அமைப்பது மரபு. ஆனால் இந்த மரபைப் பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் பின்பற்றவில்லை. உதாரணமாக, சிவந்தெழுந்த பல்லவராயன் பிள்ளைத்தமிழ் என்ற நூலில் ஒரு பருவத்துக்கு 7 பாட்டுகளே காணப்படுகின்றன. கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழில் ஒரு பருவத்துக்கு 5 பாட்டுகள் வீதம் உள்ளன. பழனிப் பிள்ளைத் தமிழில் ஒரு பருவத்துக்கு 3 பாட்டுகள் உள்ளன. கலைஞர் பிள்ளைத் தமிழில் பருவத்துக்கு ஒரு பாட்டு வீதமே உள்ளது. ஆண்டாள் பிள்ளைத் தமிழில் ஒவ்வொரு பருவத்துக்கும் பாட்டுகள் எண்ணிக்கையில் மாறுபடுகின்றன.

பருவங்களின் எண்ணிக்கையும் பிள்ளைத் தமிழ் நூல்களில் மாறு படுகிறது. ஆண்டாள் பிள்ளைத் தமிழில் 11 பருவங்கள் உள்ளன. தில்லை சிவகாமியம்மை பிள்ளைத் தமிழில் 12 பருவங்கள். சாலை முருகன் பிள்ளைத் தமிழில் 13 பருவங்கள் காணப்படுகின்றன.

இலங்கையில் கதிர்காமத் தலத்திலுள்ள முருகன் மேல் இயற்றப்பட்ட கதிர்காமப் பிள்ளைத் தமிழ் என்ற நூல் உண்டு. அதனை இயற்றியவர் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவங். கருணாலய பாண்டியன் என்னும் புலவர். அவரது பிள்ளைத் தமிழ் நூலில் செந்தமிழ்க் காப்பு, செங்கீரை, மொழிபயில் பருவம், உண வூட்டல், தாலாட்டல், சப்பாணிகொட்டல், முத்தம் தருதல், வருகை, நிலாவழைத்தல், சிறுபறைமுழக்கல், சிற்றில் சிதைத்தல், சிறுதேர் உருட்டல், பூணணிதல், உடைவாள் செறித்தல் என 14 பருவங்கள் காணப்படுகின்றன. மேலும் காப்புப் பருவத்தில் 4 பாக்களும், பிற எல்லாப் பருவங்களிலும் மும்மூன்று பாக்களும் ஆக மொத்தம் 43 பாக்கள் உள்ளன.

பிள்ளைத் தமிழில், அம்புலிப்பருவம் இயற்றுவதே மிகக் கடினம் என்பார்கள். காரணம், பாட்டுடைத் தலைவன் அல்லது தலைவி யோடு நிலவை விளையாட வருமாறு அழைக்கும்போது சாம, பேத, தான, தண்டம் என்னும் நான்கு வகை உத்திகளையும் கொண்டு அதை அழைக்கவேண்டும். சாமம் என்பது இனிய சொற் களைக் கூறி யழைத்தல். பேதம் என்பது, “உனக்கும் இத் தலைவனுக்கும் இடையில் இவ்வளவு வேறுபாடுகள் உள்ளன, உன்னைவிட இவன் உயர்ந்தவன், ஆகவே விளையாட வா” என்பது. தானம் என்பது “இன்னின்ன பொருள்களைத் தருவான், வா என்றல். தண்டம் என்பது நீ வராவிட்டால் உன்னை இவ்விதமாகத் தண்டிப்பான், ஆகவே வந்துவிடு” என்று கூறுதல்.

குமரகுருபரர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில், அம்புலிப்பருவத்தில், “நிலவு உன்னிடம் வர நாணமும் அச்சமும் கொள்கிறது, உன் முகத்துக்கு முன் வர வெட்கப்படுகிறது, உன் கணவன் அணிந்துள்ள பாம்பினைக் கண்டு அஞ்சுகிறது” என்று தோழியர் பலவாறாக அம்புலி வராமைக்குக் காரணங்கள் கூறி சமாதானப்படுத்துவதாக அமைக்கிறார்.

“நிலவே, நீ வானத்தில் இருந்தால் பாம்பு விழுங்கிவிடும். சூரிய மண்டலத்திற்குச் சென்றால் ஒளி குன்றிப்போவாய், சிவன் சடைமுடிக்கே சென்றாலும் அங்குள்ள பாம்பு அச்சுறுத்தும், எனவே நீ உன்னைக்காத்துக்கொள்ள மீனாட்சி அம்மையிடம் வந்துவிடு” என்று தோழியர்கள் நிலவை அழைக்கின்றனர்.

இன்னும் ஒரு பாட்டில் சிலேடை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அளவறிந்து வாழத் தெரியாதவர்கள் உண்ண உணவும் உடுக்க உடையுமின்றி மண்கலத்தில் பிறர் இடும் கூழுக்கு அலையும் நிலை ஏற்படுகிறது. இதனை நிலவோடு பொருத்திப் பாடுகிறார் குமரகுருபரர். நிலவும் அளவறியாது வாழ்ந்த காரணத்தினால் தன் அமுதத்தையும் கலையையும் (ஆடையையும்) இழந்து மண் கலத்தில் (பூமியில்) இடும் கூழுக்கு (பயிர்களுக்கு) இரவுபூண்டு (இரவு நேரத்தில்) நிற்கிறது என்று சிலேடையாகக் கூறுகின்றார் குமரகுருபரர்.

பொதுவாகப் பிள்ளைத் தமிழ் நூல்கள் பாட்டுடைத் தலைவன் அல்லது தலைவி பெயரிலேயே காணப்படும். ஊர்ப்பெயர்கள் தலைவன் அல்லது தலைவி பெயருக்குமுன் காணப்படும். இதற்கும் விதிவிலக்குள் உள்ளன. ஊர்ப் பெயர்களிலும் பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் உள்ளன. உதாரணமாக அந்தகக்கவி வீரராகவர் செய்யூர் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை எழுதியுள்ளார். சிதம்பர முனிவர் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத் தமிழ் என்பதை எழுதியுள்ளார். அங்கப்ப நாவலர் என்பார் பரசமய கோளரியார் பிள்ளைத் தமிழ் என்பதை எழுதினார். பரசமய கோளரியார் என்றால், பிற சமயங்களின் கொள்கைகளை எதிர்க்கும் சிங்கம் போன்றவர் என்று பொருள். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வாகடப் பிள்ளைத் தமிழ் என்னும் நூலை எழுதினார். வாகடம் என்றால் மருத்துவ நூல். ஒரு சாதிக்கே உரிய பிள்ளைத் தமிழாக செங்குந்தர் பிள்ளைத் தமிழ் என்பது அமைந்துள்ளது.

பெருமரபுத் தெய்வங்களே அன்றி சிறுமரபு சார்ந்த நாட்டார் தெய்வங்களும் பிள்ளைத் தமிழ் பெற்றுள்ளனர். கடவுளர்களே அன்றி, சைவசமய குரவர் நால்வரும் பல பிள்ளைத் தமிழ் நூல்களுக்குப் பாட்டுடைத் தலைவர்களாகியுள்ளனர். இவர்க ளிலும் திருஞான சம்பதருக்குரிய பிள்ளைத் தமிழ் நூல்களே மிகுதி.

பேராசிரியர் அ. சீநிவாசராகவன், தமது ‘வெள்ளைப் பறவை’ என்னும் கவிதை நூலில், ‘குப்பன் பிள்ளைத் தமிழ்’ என்பதை நகைச்சுவைக்கெனச் சேர்த்துள்ளார்.

தனியொருவர் பாடுவதாக இல்லாமல், தொகுப்புப் பிள்ளைத் தமிழ் நூல்களும் இருபதாம் நூற்றாண்டில் எழுந்துள்ளன. உதாரணமாக, அ. அருணகிரி என்பவர் தொகுத்த கம்பன் பிள்ளைத் தமிழ் என்ற நூலில், பத்துப் பருவங்களையும் பத்துக் கவிஞர்கள் பாடியுள்ள னர். கம்பராமன், சித்தன், தங்க. அன்புவல்லி, தமிழவேள், பெரி. சிவனடியான், இரா. திருமுருகன், அப்துல் காதர், சொ.சொ.மீ. சுந்தரம், இளந்தேவன், மரியதாசு என்பவர் அக்கவிஞர்கள். இவ்வாறே அரு. சோமசுந்தரன் தொகுத்த திருவள்ளுவர் பிள்ளைத்தமிழ் என்ற நூலிலும் பத்துக் கவிஞர்கள் பத்துப்பருவங் களைப் பாடியுள்ளனர்.

சைவத்துக்கும் பிள்ளைத் தமிழ் இலக்கியத்துக்கும் தொடர்பு மிகுதி. ஏறத்தாழ 300 பிள்ளைத் தமிழ் நூல்களைக் குறிப்பிடும் ஓர் ஆசிரியர், அவற்றில் 218 சைவத்தைச் சேர்ந்தவை, 33 வைணவத்தைச் சேர்ந்தவை என்கிறார். சைவத்திலும் முருக னைப் பாடும் பிள்ளைத் தமிழ் நூல்களே மிகுதி. அடுத்தநிலையில் உமையம்மையைப் பாடும் நூல்கள் உள்ளன. 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே பிள்ளைத் தமிழ் நூல்கள் மிகுதியாகத் தோன்றியுள்ளன. எந்த நூற்றாண்டையும் விட இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய பிள்ளைத் தமிழ் நூல்கள் மிகுதி.

பிள்ளைத் தமிழ் என்றவுடனே தமிழறிந்த யாவர் மனத்திலும் தோன்றக்கூடியது மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ். இதனையும் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழையும் வரைந்தவர் குமரகுருபர சுவாமிகள் ஆவார். அவருடைய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் பலரும் பாராட்டுகின்ற ஓர் அழகியபாட்டு. இது. வருகைப் பருவத்தில் அமைந்துள்ளது.

தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே

நறைபழுத்த துறைத் தீம்தமிழின் ஒழுகுநறும் சுவையே

அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு ஏற்றும் விளக்கே

வளர் சிமய     இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள்ளத் தில் அழகு    ஒழுக எழுதிப்பார்த்திருக்கும் உயிரோவியமே மதுகரம் வாய்மடுக்கும் குழற்காடேந்தும் இள வஞ்சிக்கொடியே வருகவே

மலயத் துவசன் பெற்ற பெரு வாழ்வே வருக வருகவே

இதில் மீனாட்சியம்மையைப் பழம்பாடலாகிய இலக்கியத்தின் பயனாகவும், தமிழின் சுவையாகவும், தொண்டர் தமது உள்ளக் கோயில் ஏற்றுகின்ற விளக்காகவும் காணுகின்றார் கவிஞர். பிறகு இமயமலையில் விளையாடுகின்ற பெண் யானையாகவும், இறைவன் எழுதிப்பார்க்கும் உயிரோவியமாகவும், வண்டுகள் மொய்க்கும் கூந்தற் காடு கொண்ட வஞ்சிக்கொடியாகவும், மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வாகவும் கவிஞர் வருணிப்பது மிகச் சிறப்பாக உள்ளது. அருவ உருவ உருவகங்கள் மிகச் சிறப்பாக இயைபு பெற்ற கவிதை இது. ஐம்புலன்களின் நுகர்வாக இறைத் தன்மையைக் காணுகின்ற தன்மை இது. “எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப்பார்த்திருக்கும் உயிரோவியமே” – என்ன அற்புதமான வரி?

‘அப்பாட்டுக் கிப்பால் எங்கும் சமானம் ஒன்றிருந்ததில்லை’ என்று இந்தப் பாட்டினை பாரதிதாசன் பாராட்டுகின்றார். மேலும் குமர குருபரரிடம், ‘பாட்டுக்குப் பொருளாய் நின்ற பராபரச் சிறுமி (மீனாட்சியம்மை) நெஞ்சக் கூட்டுக்குக் கிளியாய்ப் போந்து கொஞ்சினாள்’ என்று பாரதிதாசன் எதிர்பாரா முத்தம் என்னும் நூலில் பாராட்டுகின்றார்.

பிள்ளைத்தமிழ் என்னும் பெயரிலேயே தமிழ் என்பது அமைந் துள்ளது. எனவே பிள்ளைத்தமிழ் பாடுகின்ற கவிஞர்கள் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தமிழின் அருமை பெருமைகளைப் போற்றியுள்ளனர். சான்றாக முத்துக்குமாரசுவாமிப் பிள்ளைத் தமிழில் முருகன் தமிழ் வாழவே தோன்றினான் என்றும் அவன் வாயில் தமிழ் மணக்கின்றது என்றும் பாடுகிறார்.

“கலைப்பால் நிறைந்த முதுக்குறைவில் கல்விச் செல்வர் கேள்வி நலம் கனியக்கனிய அமுதூறும் கடவுள் மறையும் முதற்சங்கத் தலைப்பாவலர் தீஞ்சுவைக் கனியும், தண்தேன் நறையும் வடித் தெடுத்த சாரம் கனிந்து ஊற்றிருந்த பசும் தமிழும் முருகன் வாயில் மணக்கிறது” என்கிறார்.

கலைமகள் அகம் புறமென்னும் துறைகள் நிறைந்த தமிழாகிய ஆற்றில் மூழ்கித் திளைத்தவள் என்கிறார். தமிழ் மீது கொண்ட காதலினால் திருமால் தமிழ்ப் பாடலைப் பின்தொடர்ந்து செல்கிறார். அப்படி “அவர் தமிழின் பின்னால் செல்வது முறையோ முறையோ” என்று கூக்குரலிட்டுக் கொண்டு வடமொழி வேதங்கள் அவரைப் பின்தொடர்ந்து செல்கின்றனவாம். “பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டலே” என்று மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் வருணிக்கின்றார் குமரகுருபரர்.

இதனால் குமரகுருபரர் வடமொழிமீது வெறுப்புக் கொண்டவர் என்பது பொருளன்று. வடகலையல பலகலையோடு தமிழ் வளரும் கூடல் என்று மதுரையையும் தென்கலைக்கும் பழைய வடகலைக்கும் தலைவன் என இறைவனையும் வருணிப்பவர் அவர்.

இந்நூலுக்கு ஆராய்ச்சி முன்னுரை வரைகின்ற உ. வே. சுவாமி நாதையர், “தமிழினிடத்தே இப்புலவர் தெய்வத்தன்மையைக் கண்டவர். அதனைத் தெய்வத் தமிழ் என்றே பாராட்டுகின்றார். தாம் பாராட்டுகின்ற தெய்வங்களையெல்லாம் தமிழ்த் தொடர்பும் தமிழின்பால் வேட்கையும் உடையவர்களாகக் கூறுகின்றார்” என்று குமரகுருபரர் பற்றிக் கூறுவது குறிப்பிடத்தக்கது.

பகழிக்கூத்தர் செய்த திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழும் செறிவானது. முருகனை ‘முத்தம் தா’ என அழைக்கும் பகழிக்கூத்தரின் பாடல் ஒன்றைக் கண்டுமேற்செல்வோம்.

கத்தும் தரங்கம் எடுத்தெறியக் கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள்

கரையில் தவழ்ந்து வாலுகத்தில் கான்ற மணிக்கு விலையுண்டு

தத்தும் தரடவிகடதட தந்திப் பிறைக்கூன் மருப்பில் விளை

தரளம் தனக்கு விலையுண்டு,

தழைத்துக் கழுத்து வளைந்தமணிக்கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக் குளிர்முத்தினுக்கு விலையுண்டு

கொண்டல் தருநித்திலம் தனக்குக் கூறும் தரமுண்டு

உன் கனிவாய் முத்தம் தனக்கு விலை இல்லை,

முருகா முத்தம் தருகவே

முத்தம் சொரியும் கடல் அலைவாய் முதல்வா முத்தம் தருகவே.

உலகிலுள்ள எல்லா வகை முத்துகளுக்கும் விலைமதிப்புண்டு. உன் வாய் முத்தத்திற்கு விலையேயில்லை என்கிறார் கவிஞர். மேலும் முருகன் இருக்கும் தலமே முத்தம் சொரியும் கடல் அலைவாய் (திருச்செந்தூர்) ஆக உள்ளது. அந்தக் கடல் போலவே அவனும் முத்தம் தர வேண்டியவன்தானே என்னும் குறிப்பும் தொனிக்கிறது.

சிவப்பிரகாச சுவாமிகள் தமது குருநாதர் பேரில் சிவஞான பாலைய சுவாமிகள் பிள்ளைத் தமிழ் என்ற நூலை இயற்றியுள்ளார். அதன் செங்கீரைப் பருவப் பாடல் ஒன்று-

கம்பநகர் வாழிறைவ செங்கோ செங்கீரை

கங்கை சுமவாத பர செங்கோ செங்கீரை

செம்பொன்முடி தாழ்சரண செங்கோ செங்கீரை

செங்கைமணி நேர்தலைவ செங்கோ செங்கீரை

இம்பர் வரும் ஆரமுத செங்கோ செங்கீரை

எங்கள் மலநாச ஒளி செங்கோ செங்கீரை

நம்புமடியார் துணைவ செங்கோ செங்கீரை

நங்கள் சிவஞான முனி செங்கோ செங்கீரை.

செங்கோ செங்கீரை என்னும் தொடர் ஒலிச் சிறப்போடு இருப்பதால் பிற்காலப் பிள்ளைத் தமிழ் நூல்கள் சிலவற்றில் பின்பற்றப்பட்டுள்ளது.

சிவஞான முனிவர் திருக்கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், குளத்தூர் அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழ் என்னும் இரு முக்கிய நூல்களைச் செய்துள்ளார். கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழின் ஒரு சிறந்த பாட்டு இது-

உருகும் அடியார் அள்ளூற உள்ளே ஊறும் தேன் வருக

உண்ணத் தெவிட்டாச் சிவானந்த ஒளியே வருக

புலன் வழிபோய் திருகும் உளத்தார் நினைவினிக்கும் சேயோய் வருக

எமையாண்ட செல்வா வருக

உமையீன்ற சிறுவா வருக

இணைவிழியால் பருகும் அமுதே வருக

உயிர்ப் பைங்கூழ் தழைக்கக் கருணைமழைபரப்பு முகிலே வருக நறும்பாகே வருக

வரைகிழித்த முருக வேட்கு முன் உதித்த முதல்வா

வருக வருகவே

மூரிக் கலைசைச் செங்கழுநீர் முனியே வருக வருகவே.

கச்சியப்ப முனிவர் சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ் என்னும் நூலை இயற்றியுள்ளார்.

பல பிள்ளைத்தமிழ் நூல்களில் பல பாக்களில் இடம் பெறும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற படிமங்கள் படைப்புத் திறன் குறை பாட்டைக் காட்டுவதோடு படிப்பவர்க்குச் சலிப்பையும் ஊட்டு கின்றன என்பது ஒரு முக்கியக் குறை. எதுகை மோனைக்காக அவற்றில் கடினமான சொற்களும் கடும் சந்தி விதிகளும் இடம் பெறுவது இன்னொரு குறை.

சைவவைணவக் கவிஞர்களே அன்றி முஸ்லிம்கள் கிறித்துவர்கள் போன்றோரும் பிள்ளைத் தமிழ் நூல்கள் இயற்றியுள்ளனர். மு. சண்முகம் என்பவர் நபிநாதர் பிள்ளைத் தமிழ் என்னும் நூலை இயற்றியுள்ளமை பாராட்டுக்குரியது. இவ்வாறே கவிமணி இல்லம் என்பதிலிருந்து ஏசுநாதர் பிள்ளைத் தமிழ் வெளி யிடப்பட்டுள்ளது. பண்ணை சண்முகம் என்பவர் வீரமாமுனிவர் பிள்ளைத் தமிழ் இயற்றியுள்ளார். இவை பாராட்டப்பட வேண்டிய மனப்பான்மைகள்.

சவ்வாதுப் புலவர் முகியித்தீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் இயற்றினார். பிற முஸ்லிம் புலவர்கள் இயற்றிய நூல்களாக, பாத்திமா நாயகி பிள்ளைத் தமிழ் போன்றவை உள்ளன. அப்துல்காதர் என்பார் உமரொலியுல்லா பிள்ளைத் தமிழ், காரணப் பிள்ளைத் தமிழ் ஆகியவற்றை இயற்றியுள்ளார். ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ் என்பதை கவி கா.மு. ஷெரீப் இயற்றியுள்ளார். கேசிஎம் பிள்ளைத் தமிழ் என்பதை நாஞ்சில் ஆரிது என்பவர் இயற்றியுள்ளார்.

கிறித்துவசமயநோக்கில், இம்மானுவேல் பிள்ளைத் தமிழ் (ஜே,பி. மனுவேல்), இயேசுபிரான் பிள்ளைத் தமிழ் (அருள். செல்லதுரை), மரியன்னை பிள்ளைத் தமிழ் (சூ. தாமஸ்), தொன்போஸ்கோ பிள்ளைத் தமிழ் (தில்லை எழிலன்) போன்ற நூல்கள் உள்ளன.

17ஆம் நூற்றாண்டிலேயே அமுதபாணி என்பவர் திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ் இயற்றியுள்ளார்.

இனி அண்மைக்காலத்தில் தமிழ்க்கடல் ராய. சொ. காந்தி பிள்ளைத் தமிழ் என்பதையும், திருவாசகமணி கே.எம். பாலசுப்பிரமணியம் திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ் என்பதையும் இயற்றியுள்ளனர்.

இருபதாம் நூற்றாண்டில் எழுந்த பிள்ளைத் தமிழ்கள் பல, தமிழ்ப்பற்று, அரசியல் ஆகிய இரு காரணங்களால் தூண்டப்பட்டவை. தமிழ்த்தாய் பிள்ளைத் தமிழ் என இரண்டு உள்ளன. கம்பன் பிள்ளைத் தமிழ் என மூன்று உள்ளன. மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ் என மூன்று கிடைக்கின்றன. திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ் எனக் குறைந்தது மூன்று உள்ளன. பாரதிபற்றி எழுதப்பட்ட பிள்ளைத் தமிழ் என நான்கு நூல்கள் கிடைக்கின்றன. காந்தியடிகள் பற்றி மூன்று பிள்ளைத் தமிழ் நூல்கள் உள்ளன. கிருபானந்தவாரியாரைப் பற்றி இரண்டு பிள்ளைத் தமிழ் நூல்கள் உள்ளன. பெரியார் பற்றி இரு பிள்ளைத் தமிழ் நூல்கள் உள்ளன. எம்.ஜி.ஆர். பிள்ளைத் தமிழ்கள் இரண்டு உள்ளன.

அண்ணா பிள்ளைத் தமிழ், கலைஞர் கருணாநிதி பிள்ளைத் தமிழ், காமராசர் பிள்ளைத் தமிழ், பாவேந்தர் பிள்ளைத் தமிழ், வள்ளலார் பிள்ளைத் தமிழ், பண்டிதமணி பிள்ளைத் தமிழ் என்று பிற பிள்ளைத் தமிழ் நூல்களும் உள்ளன.

சிந்துப்பாவலர் சுமாச என்பவர் சென்ற நூற்றாண்டில் 1986 வரை குறைந்தது 37 பிள்ளைத்தமிழ் நூல்களை இயற்றியுள்ளதாகத் தெரிகிறது. இவர் இயற்றிய நூல்களில் அண்ணா பிள்ளைத் தமிழ், கலைஞர் கருணாநிதி பிள்ளைத் தமிழ், எம்ஜிஆர் பிள்ளைத் தமிழ், காந்தியண்ணல் பிள்ளைத் தமிழ், காமராசர் பிள்ளைத் தமிழ், தெய்வப் புலவர் திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ் எனப் பல அடக்கம். அந்தந்தப் பிள்ளைத் தமிழின் பாட்டுடைத் தலைவர் செய்த சாதனைகள் அவ்வவற்றில் இடம் பெறுகின்றன. சான்றாக, காமராசர் பிள்ளைத் தமிழில் அவர் செய்த கல்விப்பணி விதந்து பாராட்டப் பட்டிருக்கிறது.

ஒரு கல்லூரி மறைமலையடிகள் பற்றிப் பிள்ளைத் தமிழ் எழுதவேண்டும் என ஒரு போட்டியே நடத்தியுள்ளது. அதன் வாயிலாக மட்டும் 13 பிள்ளைத் தமிழ் நூல்கள் கிடைத்துள்ளன.

இருபதாம் நூற்றாண்டுப் பிள்ளைத் தமிழ் நூல்களிலும் பிற சமயப் பிள்ளைத் தமிழ் நூல்களிலும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம், எப்படிக் காப்புப் பருவத்தை இயற்றுவது என்பது பற்றியது. சைவ, வைணவப் புலவர்கள் என்றால் அவரவர் தெய்வங்களைக் காக்க என்று கூறிப் பாடிவிடுவார்கள். மரபுமாறாத கம்பன் பிள்ளைத் தமிழ் போன்ற நூல்களிலும் இப்பிரச்சினை எழுந்துள்ளது. கம்பன் பிள்ளைத் தமிழ் பாடிய கனகராஜ ஐயர் என்பவர், விநாயகர், இராமன், சீதை, இளையபெருமாள், பரதாழ்வார், சத்ருக்கனன், வால்மீகி, நம்மாழ்வார் ஆகியவர்களைக் காப்புக்கடவுளராக வைத்துப்பாடியுள்ளார்.

முஸ்லிம்களுக்கும் கிருத்துவர்களுக்கும் பலதெய்வங்கள் இல்லை. அதனால் பிரச்சினை தீவிரமாக நேர்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற சுயமரியாதைத் தலைவர்களைப் பாடும்போது தெய்வங்களைக் காப்புக்கெனப் பாடஇயலாது. அவ்வாறாயின் என்ன செய்வது? இப்பிரச்சினையைப் பலவிதமாகத் தீர்த்துள்ளனர் கவிஞர்கள்.

பெரியார் பிள்ளைத் தமிழ் பாடிய மாவண்ணா தேவராசன் என்பவர், பெற்றவர் வாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டு வாழ்த்து, பெரியார், ஆசிரியர், சுதந்திரதேவி ஆகியோர் வாழ்த்துகள், தமிழர் இயக்கங்கள் வாழ்த்து ஆகியவற்றை முதற்கண் அமைத்துள்ளார். பின்னர் காப்புப் பருவத்தில், விஞ்ஞா னக் கலைஞர், நடுநிலையறிஞர், சமதர்மவாதிகள், அறநெறிமறத் தமிழர், நீதிக்கட்சியினர், ஏழைத் தொழிலாளர், பொதுமையச் சித்தர்கள், உண்மைக் கவிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோர் காக்க என வேண்டுவதாக உள்ளது. இடையில் பெண்ணுக்குக் காப்பு என்பது இடம்பெறுகிறது. இந்நூலின் பாக்களிலிருந்து ஒரு சிறு பகுதியைக் காண்போம்.

பார்ப்பன இதழ்கள் கொல் வலிமையினால் பாரினில் பொய்யினை மெய்யாய்ப்

பகர்ந்துநம் நீதிக் கட்சியைக் குலைத்த படிற்றினைப் பறையடித் துலகில்

தீர்ப்புற மீண்டும் உயிர்கொடுத்தினிதே தேற்றினர் நமையெலாம் பெரியார்.

இப்பிள்ளைத் தமிழில் வழக்கமான பருவங்களோடு நான்கு பருவங்கள் சேர்ந்து 14 பருவங்கள் இடம்பெற்றுள்ளன. இறுதி நான்கு பருவங்களாக வாழ்த்துப் பருவம், கூர்ந்துணர் பருவம், வினாவுறு பருவம், கதைகேள் பருவம் ஆகியவை உள்ளன. இவ்வாறே சொசொமீ சுந்தரம் இயற்றியுள்ள பண்டிதமணி பிள்ளைத் தமிழிலும் இறுதி மூன்று பருவங்களாக அவர் திருநீற்றுப்பருவம், திருவாசகப் பருவம், சன்மார்க்க சபைப் பருவம் ஆகியவற்றைச் சேர்த்துள்ளார். இவ்வாறு தக்கவிதத்தில் பருவங்களின் பெயர்களையும் இக்கால ஆசிரியர்கள் மாற்றிக் கொள்கின்றனர்.

இன்னொரு பெரியார் பிள்ளைத் தமிழைச் சிங்காரவேலன் என்பார் இயற்றியுள்ளார். அது அண்ணா வணக்கத்துடன் தொடங்குகிறது. காப்புப்பருவத்தில் தமிழ், ஞாயிறு, திங்கள், மழை, விண்மீன், வள்ளுவர், இயற்கை, மானுடம், பகுத்தறிவு ஆகியவை காக்க வேண்டும் என்று உரைக்கின்றார்.

சுமாச இயற்றிய அறிஞர் அண்ணா பிள்ளைத் தமிழில், இயற்கை, தமிழ்த்தாய், திருவள்ளுவர், பேரறிஞி ஒளவை, திருவிக, ஆகிய வர்கள் காப்பு எனப்பாடப்படுகிறது. பிள்ளைத் தமிழ் நூல்களில் பொதுவான காப்புக்கடவுள் திருமால். இங்கு காப்புக்கடவுளாக மறைமலையடிகள் இடம்பெறுகிறார்.

வருகைப் பருவத்திலிருந்து ஒரு பாடல்.

பெரியாரின் திருமணமோ பேதைமையை விதைக்க,

பெரிதான விரிவதுவோ பேரிடியாய்த் தாக்க,

எரியீட்டி உள்ளமுடன் இளைஞரினம் வதைய

எதுவழியோ என்ற நிலை எரிச்சலினை ஊட்ட

தெரிவதுவோ புரிவதுவோ தெளிவதனை உயர்த்த

தேவையதும் உறுதியதே என்றுணர்ந்து நிமிர்ந்தே

அரிதான திமுகவையே ஆரம்பித்த தலைவ

என அண்ணாவை விளிக்கிறார் இவர்.

எம்ஜிஆர் பிள்ளைத் தமிழில் காப்பாக தமிழ், நீதி, தர்மம், சத்தியம், வீரம், புகழ், நல்லோர் உள்ளம், இயற்கை ஆகியவை வேண்டப்படுகின்றன. இதனை இயற்றியவர் திரைப்படப் பாடலாசி ரியராகப் புகழ்பெற்ற புலமைப்பித்தன்.

சுமாச எழுதிய கலைஞர் கருணாநிதி பிள்ளைத் தமிழில், அண்ணா, இயற்கை, தமிழ்த்தாய், திருவள்ளுவர் ஆகியோர் காப்புக்கென வேண்டப்படுகின்றனர்.

இக்காலப் பிள்ளைத்தமிழ் நூல்களில் அரசியல் கொள்கைகள் வெளிப்படையாகவே கூறப்படுகின்றன. சான்றாக, சுமாச இயற் றிய திருவள்ளுவர் பிள்ளைத் தமிழில்,

தெளிகுறளை யாத்திட்ட வள்ளுவ மாமுனிவா

சான்றாட்சி தமிழீழம் தருகின்ற நோக்கில்

தலையெழுச்சி ஒற்றுமைக்கே சிறுபறையை முழக்கு

என்ற பகுதி இடம்பெறுகிறது. இதுபோலவே, பழ. வெள்ளியங்கிரி என்பார் இயற்றிய பாரதி பிள்ளைத் தமிழில்,

கங்கைக் கரைவிரியப் பொங்கிவருநீரை எங்கள் வளநதியாம்

காவிரி நதியுடன் கலந்திட அன்றே உரைத்தாய் என்றாலும்

எங்கள் நிலைமை எண்பதினாண்டிடை ஏங்கிட வைக்கிறதே

இன்றியமையாது எனும் குடிநீருக்கு அண்டையில்

ஏங்கிட வைக்கிறதே.

என்னும் பகுதி இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

மறைமலையடிகள் பிள்ளைத் தமிழைப் பாடியவர் தமிழண்ணல். மறைமலையடிகள் பிள்ளைத் தமிழை இயற்றிய அரு. சோமசுந்தரன், காப்புப்பருவத்தில் ஆங்கிலச் செவிலித்தாயும் காப்பு என்பது வேடிக்கையாக உள்ளது. இன்னொரு மறைமலையடிகள் பிள்ளைத் தமிழை மலேசியக் கவிஞர் அன்பானந்தம் இயற்றியுள்ளார்.

இக்காலப் பிள்ளைத் தமிழ் நூல்களில் நகைச்சுவைக்கும் குறைவில்லை. உதாரணமாக, வள்ளலார் பிள்ளைத்தமிழ் எழுதிய மா.க. காமாட்சிநாதன் என்பார், அம்புலிப்பருவத்தில், நிலவை வள்ளலாராகிய குழந்தையுடன் விளையாடக் கூப்பிடும்போது, “விண்வெளி வீரர்களெல்லாம் வந்து உன்னை மிதிப்பார்கள், அதனால் வள்ளலார் கருணையை நாடி விளையாட வருவாயாக” என்பது நல்ல நகைச்சுவை.

ஆல்டிரின் எட்வினீஸ் ஆம்ஸ்டிராங்கு மைக்கல்போல் அன்பர் பலர் உன்னிடம் பாய்ந்து

அடிகொடு மிதித்திடுவர் கொடிகொண்டு குத்திடுவர் அள்ளுவார் கல்லும் மணலும்

ஆல்தரும் ஒற்றி வடிவாம்பிகைக் கினியனுடன் அம்புலீ ஆடவாவே

ஆரருட் சோதியெம் பேரருட் கருணையனோடு அம்புலீ ஆடவாவே.

பிள்ளைத் தமிழ் போன்ற அதே அமைப்பில் முதுமைத்தமிழ் என்ற ஒன்றையும் இக்காலத்தில் உருவாக்கியுள்ளனர். மருத்துவர் மறையரசன் (வேதராசன்) என்பவர் இயற்றிய நூல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் முதுமைத்தமிழ். முதுமை வரை வாழ்பவர்களுக்கு இயற்றப்படுவது பிள்ளைத் தமிழ். இளமையிலேயே மறைந்தவர்களுக்கு இயற்றப்படுவது முதுமைத் தமிழ். இதில் காப்புப் பருவம், பிள்ளைக் கனியமுதுப் பருவம், வருகைப்பருவம், நரைமுடிப்பருவம், கண்ணாடிப்பருவம், பேரர் மகிழ் பருவம், வழுக்கைத் தலைப்பருவம், பொக்கை வாய்ப்பருவம், கைத்தடிப் பருவம், கைக்கொட்டுப் பருவம் எனப் பத்துப்பருவங்கள் புதுமையாக உள்ளன. காப்புப்பருவத்தில், இளங்கோ, வள்ளுவர், கம்பன், காளமேகம், பாரதி, பாவேந்தர், பரிதிமாற்கலைஞர், புதுமைப்பித்தன், கண்ணதாசன், தமிழ் ஒளி ஆகியோர் காப்புக் கடவுளராக உள்ளனர். பாவேந்தரும் புது மைப்பித்தனும் தாங்களும் கடவுளாவோம் என்று கருதியும் பார்த்திருக்க மாட்டார்கள்!

காலங் கடந்த உன் ஞான விழிகளில் கண்ணாடி பூண்டருளே

கண்ணின் ஒளிக்குறை எண்ணக் குறை ஆமோ கண்ணாடி பூண்டருளே

என்பது கண்ணாடிப்பருவத்தின் ஒரு சிறுபகுதி. அதுபோல,

முடியில்லை என்பதனால் உன் எண்ணக் குமுறலுக்கு முடிவில்லை என்றாகுமோ

முடியில்லாத் தலைவழுக்கை நாவழுக்கச் செய்யுமோ பா முடி கொண்டு அரசாள வா

என்பது வழுக்கைப்பருவத்தில் வருகிறது.

பிள்ளைத் தமிழ் இலக்கியம் என்பது மிகவும் இரசமானதோர் இலக்கியம். பழங்காலத்தில் கவிஞர்கள் அதன் சுவையைக்கூட்ட மிகையான கற்பனையைக் கையாண்டனர்.

ஓலைச்சுவடிகளிலும், அச்சுப்பதிப்பிலும், கையெழுத்துப்படிகளிலும் கிடைக்கின்ற அனைத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களையும் கொண்டு இதுவரை எந்த ஆய்வு நூலும் வெளிவரவில்லை. ஒருசில நூல்களைப் பார்த்தே ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. பழைய பிள்ளைத்தமிழ் நூல்களைத் தேடும்போது புதுப்புதுக் கவிஞர்கள் பலர் அறியவருகின்றனர். அவ்வாறே புதுப்புதுத் தலைப்பிலான நூல்களும் கிடைக்கின்றன. இவ்வகையான சரித்திர அறிவுக்காக வே சிற்றிலக்கிய ஆய்வில் ஈடுபடலாம்.

அண்மைக்காலக் கவிஞர்கள் மிகைக் கற்பனையைக் கையாளுவதில்லை. மாறாக, அரசியல் கருத்துகளையும் சிந்தனைகளையும் தமது பாட்டுடைத் தலைவர்கள் செய்த அரும்பணிகளையும் கொண்டு கவிதை படைக்கின்றனர். எனவே பிள்ளைத் தமிழ் இலக்கியம், காலப்போக்கிற்கேற்றவாறு புதுமைச் சிறப்புடன் தனித்தன்மையுடன் தனதுபோக்கில் வளர்ந்துவருகிறது. மரபினின்றும் வழுவாது, ஆனால் புதுமையையும் மரபுக்கேற்றவகையில் இணைத்துக்கொண்டு படைக்கும் இக்கவிஞர்களின் திறமை பாராட்டுக்குரியது. மரபில் கால்கொண்டு, புதுமைவானில் பறக் கின்ற முறையில இவை அமைகின்றன.


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிள்ளைத் தமிழ் இலக்கியம்”

அதிகம் படித்தது