மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புதிய கல்விக்கொள்கை

சுசிலா

Dec 3, 2016

siragu-new-education4

மத்திய பா.ஜ.க அரசு செயல்முறைப்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் புதிய கல்விக்கொள்கை பற்றி நான் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறோம்… இது முதலில் புதிய கல்விக்கொள்கையே அல்ல… பழைய குலக்கல்வித் திட்டத்தைத்தான் தூசு தட்டி புதியது என்ற பெயரில் நம்மீது திணிக்கப் பார்க்கிறது மத்திய அரசு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை ஆரம்பத்திலேயே எதிர்க்கவில்லை என்றால், நாம் மீண்டும் பழைய நிலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடும் ஆபத்து இருக்கிறது… அப்படி என்ன அதில் இருக்கிறது என்று கேட்போருக்கு நம்முடைய தெளிவான விளக்கங்கள்.!

1. முதலில், இக்கல்வித்திட்டம் இந்தி, சமற்கிருதத்தை முன்னிறுத்தும் நோக்கில் வரையப்பட்டுள்ளது… இதன் வரைவுக் கொள்கை முகவுரையில், வேதக்கல்வி அடிப்படையில் அமைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் குரு – மாணவன் உன்னத உறவை வலியுறுத்துகிறது.

வேத காலத்தில் சூத்திரர்கள் கல்வி கற்கக்கூடாது.. மீறிக் கற்றால் நாக்கை அறுக்க வேண்டும். வேதத்தைக் காதால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை அமல் செய்யப் போகிறதா மத்திய அரசு..? அதுமட்டுமல்லாமல் சமற்கிருத மொழியில் என்ன அறிவியல் செய்திகள், கண்டுபிடிப்புகள் இருக்கின்றனவா… அத்தனையும் மதம்சார்ந்த, வர்ணாசிரமம் சார்ந்த விடயங்கள் தானே சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த அறிவியல் யுகத்தில் இவைகள் எந்த வகையில் பயன்படப் போகின்றன.

siragu-new-education3

மேலும் சாதி என்ற ஒன்று இருக்கக்கூடாது என்று சொல்லும் காலத்தில் நாம் இருக்கிறோம். மேலும் மகாபாரதத்தையும், மனுவையும் நம் வருங்கால தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் என்ன இருக்கிறது? அடுத்து, குருகுலக்கல்வி இக்காலத்தில் என்ன பயன்தரப் போகிறது… ஆசிரியர், மாணவர்களிடையே நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டுமே தவிர, ஒரு தாழ்வு மனப்பான்மையையும், மூடநம்பிக்கைகள் வளரவும் இடம் தரக் கூடாது. ஏற்கனவே குரு பாத பூசை என்று பல பள்ளிகளில் நடைமுறைப்படுத்துகிறார்கள். ஆசிரியர்கள் கடவுள்கள் போலவும், மாணவர்கள் பக்தர்கள் போலவும் பூசை செய்தல் என்பது எப்படி சரியாக இருக்க முடியும்.!
இதனை மென்மேலும் மெருகேற்றப் போகிறது என்பது தானே இதன் சாராம்சம்.

2. இரண்டாவது, இதில் சமூகநீதிக்கு வாய்ப்பேயில்லை.. ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் என்று சொல்லப்படுவோர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. அறக்கட்டளை மூலம் இயங்கும் பள்ளிகளின் உரிமம் விலக்கப்படும் என்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒரே மதம், ஒரே பண்பாடு, என்ற பெயரில் சிறுபான்மையினர் உரிமைகளை பறிப்பதற்கான ஒரு திட்டம்.

3.அடுத்து, ஐந்தாம் வகுப்பு வரை தேர்வு இல்லை என்றும், அதற்குப்பிறகு இரண்டு முறை தேர்வு வைக்க வேண்டும், அதில் தேர்ச்சி பெறாதவர்கள் தொழிற்கல்வி கற்க வேண்டும் என்பதுவும் ஒன்று. இதில் நாம் சற்று உற்று நோக்கினோமானால், அதிலுள்ள சூட்சமம் விளங்கும். தேர்வு எழுதாமல் திடிரென்று எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்வு பெறுவது என்பது சற்று சிரமம் தான். இரண்டு முறைக்கு மேல் தேர்ச்சிப்பெறாதவர்கள், அவர்கள் படிப்பை முழுக்க நிறுத்திவிட்டு தொழற்கல்வி கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அவர்களால் தங்களின் குலக்கல்வியைத் தான் கற்றுக்கொள்ள முடியுமே தவிர, அந்த வயதில் அவர்களுக்கு எந்த அளவிற்கு மனப்பக்குவம் இருக்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும். மேலும் அவர்களின் அதிகப்பட்ச படிப்பே ஐந்தாம் வகுப்பு வரைதான் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.

4. மேலும் பார்த்தோமானால், மாநில அரசின் கல்விக்கொள்கையில் தலையிடுவது என்பது மிகப்பெரிய ஆபத்து.. ஆரம்பத்தில் தலையிடுவது என்பது போய், கடைசியில் அதற்கான உரிமை மாநில அரசிற்குக் கிடையாது என்ற நிலை வந்துவிடும். அந்தந்த மாநில அரசிற்கு என்று கல்விக்கொள்கை, திட்டங்கள் இருக்கின்றன. அதை எப்படி மாநில அரசுகள் தங்கள் உரிமையினை விட்டுக் கொடுக்கமுடியும்.? மாநிலங்கள் தங்களின் இனம் சார்ந்த வரலாறு கூட தெரியாமல் மறைக்கப்பட்டு விடும் அபாயம் இருக்கிறது.

siragu-new-education1

5. அடுத்தது பார்த்தோமானால், கல்வியை பன்னாட்டு அளவில் வர்த்தகமாக்கும் தன்மை. இதனால் நம் கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்பது மட்டுமல்லாமல், ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பெறுவது என்பது எட்டாக்கனியாகத் தான் போய் முடியும்.!

6. இத்திட்டம் நடைமுறைப்படுத்தினால், எதிர்காலத்தில் நமக்கு ஏதாவது சில பிரச்சனைகள் ஏற்படும் பட்சத்தில், நாம் நீதிமன்றத்தை அணுக முடியாது. அதற்கென அமைக்கப்பட்ட நடுவர் மன்றங்களைத் தான் அணுக வேண்டும். அங்கே நமக்கு நீதி கிடைக்கும் என்பதில் என்ன உத்திரவாதம் இருக்கிறது. நீதிமன்றங்களிலேயே சிலநேரம் நமக்கு சாதகமாக இல்லையெனும்போது நடுவர் மன்றங்கள் என்னசெய்து விடப்போகிறது.

7. பதினான்கு வயது வரை அனைவருக்கும் கட்டாயக்கல்வி என்பதே இன்னும் அமுலாக்கப்படவில்லை என்றபோது உலக மயமாக்கல் என்பது எப்படி சாத்தியப்பட முடியும்?

8. மழலையர் முதல் உயர்கல்வி வரை ஒரே பாடத் திட்டம் நிர்ணயிக்கப்படும் என்பது முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையைப் பரப்பும் திட்டமே தவிர வேறு ஒன்றுமில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மை அழிக்கப்பட்டு ஒரே மதம், ஒரே பண்பாடு என்று இந்துத்துவத்தைப் பரப்பும் நோக்கம் என்பது தான் இதன் பொருள்.

siragu-new-education5

9. மேலே கூறிய கருத்தின் படியுள்ள சான்று தான், இப்போது அமலாக்கப்பட்டிருக்கும் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு என்பது. சி.பி.எஸ்.இ. மாணவர்கள் மட்டுமே இந்த நுழைவுத் தேர்வினை எழுதி, தேர்ச்சிப் பெற முடியும் என்ற நிலை உருவாகிறது… ஒடுக்கப்பட்ட, ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் தங்களின் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மருத்துவம் படிக்க முடியாது. இனி அவர்கள் மருத்துவம் படிப்பது என்பது வெறும் கனவாகப் போய் விடும் என்ற நிலை தான் ஏற்படப்போகிறது.!

10. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் கொள்கையை கல்வியாளர்கள் வகுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது… ஆர்.எஸ்.எஸ்.காரரான ஜெ.எஸ். ராஜ்புத் என்பவர் தான் இக்குழுவில் இடம் பெற்றிருக்கிறார்.!

அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, நாம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் பாதைகள் அனைத்தும் மூடப்படுகின்றன என்பது தான் உண்மை.!

இடஒதுக்கீடு, உயர்கல்வி ஆகிய நம் உரிமைகள் அனைத்தும் பறிக்கும் விதமாகத் தான் இந்த புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் நம் மொழி, இனம், பண்பாடு, வாழ்வியல் சார்ந்த அனைத்தையும் அழிக்கக் கூடிய ஒரு சதி முயற்சி தான் இந்தப் புதிய கல்விக்கொள்கை என்று நம் மீது திணிக்கப்படும் நவீன குலக்கல்வித் திட்டம்.!

நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராடி, இத்திட்டத்தை செயல்படுத்த விடாமல் செய்வது என்பது இப்போதைக்கு நம் முன் வைக்கப்பட்டிருக்கும் சவால். !

எனவே, அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இவ்விடயத்தில் எல்லோரும் கைகோர்ப்போம் தோழர்களே.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புதிய கல்விக்கொள்கை”

அதிகம் படித்தது