ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

புதிய பாதை நோக்கி! (கவிதை)

இல. பிரகாசம்

Oct 7, 2017

puratchi kavignar14

 

பரிதி எழுந்த நல்பொழுது

பாவை யவள்துயில் கலைந்தாள்

பாரின் மிசையொளி காணப்

பாவை யவள்முகம் பூத்தாள்

அஞ்ஞன விழிக்கதிர் காயும்

அருணண் முகம்நேர தொழுதாள்

 

தந்தை தாய்முகம் கண்டு

தாள்வணங்கி பள்ளி சென்றாள்

வாழ்வுக் கின்பந் தரும்நற்

பாடம் அதனைக் கற்றாள்

வாழைக் குலைபோல் பெண்வாழ்வு

வீணாதல் நன்றோ?யென விழித்தாள்

 

எழுந்திடுஞ் சுடுகதிர் போலவள்

எழுஞாயிறு நடையினை இட்டாள்

பண்னெடுங் காலமாய் வீழ்ந்து

பயனற்றுக் கிடந்த சமுதாயம்

முன்னேற புதிய ஞாயிறுதயம்

படைத்திட நடையினை இட்டாள்

 

வீதிதோறும் வீழ்ந்தடிமை போலிருந்த

வஞ்சியர்க் கொழுந்தினை கண்டாள்

“எத்துயரம் நத்தினும் சுட்டெரிக்கும்

எழுகதிர் போலெழு பெண்ணவள்

சாதிப்பதற்கு கேடிழைக்கும் கொடிய

சடங்குகள் தடையில்லை துயிலெழு

தடைதாண்ட தடையிடும் தடைகள்

இனியொரு போதும் தடையல்ல

துயிலெழு! பரிதிநாளும் புலர்கிறது

சரித்திரம் வரையும் உன்கை

படிப்பறிவு ஒன்றே பெண்;களுக்குப்

புதிய பாதையை காட்டும்

 

தூக்கத்தில் உறைந்திருக்கும் உலகை

துயிலிலிருந் தெழும்பெண் களால்தான்

துன்பஇருள் போக்கும் வல்லமை

உண்டென”கருத்தொளி ஈந்தாள்

எழுஞாயிறு போல்வாள் புதியவள்

எழுந்திடும் புதுஉலகைக் காண்பாள்

 

நாளைய உலகம் மீண்டும்

இருள்கழிந்து துயிலெழும் ஞாயிறொடு

புதிய உலகம் புதியபாதை

நாளும் புதுப்புது வடிவெடுக்கும்

சூழ்ந்து வரும்இருள் களைந்து

பீடு நடையிடுவா ளன்றே!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புதிய பாதை நோக்கி! (கவிதை)”

அதிகம் படித்தது