ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

புதிய வார்ப்புகளில் மனிதநேயச் சிந்தனைகள்

முனைவர் கோ. அழகுராஜா

Feb 8, 2020

siragu puthiya vaarppugal1

இலக்கியங்கள் காலம் காட்டும் கண்ணாடி. இவை மனிதனை அடிப்படையாகக் கொண்டு மனிதனால் மனிதனுக்குப் படைக்கப்படுகிறது. மனிதன் தன்னலம், பொதுநலம் என இரண்டு நிலைகளில் வாழ்கிறான். தான் தனது எனும்போது அது தன்னலம். பிற மனிதனின் நலன் விரும்பும் தன்மையைப் பெறும்போது அது பொதுநலம் எனப்படுகிறது. அவ்வகையில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்புகளில் ஒன்றான ‘‘புதிய வார்ப்புகள்;’‘ சிறுகதைத் தொகுப்பில் காணப்படும் மனிதநேயச் சிந்தனைகள் பற்றி விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

மனிதநேயம்

இன்றைய காலகட்டத்தில் மனிதநேயம், பேச்சளவிலும், எழுத்தளவிலும் மட்டும் காணப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ் இலக்கியப் பயணத்தில் தொன்று தொட்டு மனிதநேயச் சிந்தனைகள் தொடர்ந்து வருகின்றன.
‘‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லால்
வேறொன்றும் அறியேன் பராபரமே’‘
எனத் தாயுமானவரும்,
‘‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’‘ என்று வள்ளலாரும்
‘‘ஏழை என்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதரென்று இந்தியாவில் இல்லையே’‘
எனப் பாரதியாரும் பாடிய பாடல்கள் மனித நேய உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

அன்பு, பாசம், பற்று, ஈவு, இரக்கம், கருணை, பண்பு, சகோதரத்துவம், தாய்மை போன்றவைகள் மூலம் மக்களிடம் மனிதநேயத்தை உணரமுடிகிறது. கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை நேசிப்பதும், சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதனோடு மனிதன் இணைந்து அன்பு செலுத்தி மகிழ்வோடும் வாழ்வதுமே மனித நேயமாகும்.

ஜெயகாந்தன் சிறுகதைகளில் மனிதநேயம்

தமிழ் இலக்கிய உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஜெயகாந்தன் தனது படைப்புகள் வாயிலாக இச்சமூகத்திற்குத் தேவையான பல நற்சிந்தனைகளை ஒளிரவிட்டுள்ளார். அவ்வகையில் அவரது படைப்புகளில் ஒன்றான ‘‘புதியவார்ப்புகளில்” மனிதநேயச் சிந்தனைகள் பற்றிய மகத்துவமான கருத்துக்களை தனக்கேயுரிய நடையில் வெளிப்படுத்தியுள்ளார்.

‘‘புதிய வார்ப்புகள்” சிறுகதையில் ராமபத்திரன் தனது மகளைக் காதலித்த வேணுவைத் திருடன் என்று கூறி அதற்குத் தன் மகளையே சாட்சி சொன்ன நிகழ்வை நினைத்து இந்துவின் தாய் வருந்தி அழுவதும், ‘‘அதனால் நாம் என்ன வாழ்ந்தோம், எனவும் என் பொண்ணுக்கு என்ன விமோசனம் ஏற்பட்டது” என்று பேசும்போதும், சிறையில் இருந்து மீண்டு வந்த தனது காதலன் வேணுவிடம் இந்து, நான் என் கோழைத்தனத்தால் உன்மீது அபாண்டமாகப் பழி சுமத்திட்டேன் என வருந்துவதும், இந்துவின் தாய் அவளை செத்துப் போயேண்டி எனத் திட்டியதை நினைத்துக் குற்ற உணர்வால் வருந்தியதுமான செயல்பாடுகள் மனித நேயத்தை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன.

“விளக்கு எரிகிறது” சிறுகதையில் மருதநாயகத்திற்குப் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டவுடன் காசிநாத பிள்ளையிடம் சென்று பழைய சாமான்கள் வைத்திருக்கும் சிறு அறையைத் தனக்கு கேட்க, பிள்ளை அவர் நிலையறிந்து “அவர் இங்கேயே இருக்கட்டுமே! வாடகை தராவிட்டால் என்ன?” என்று பரந்த மனதுடன் தனக்குள் நினைத்துக் கொள்வதும், ‘‘இந்த வீட்டிலே நீங்க எவ்வளவு காலம் வேணுமானாலும் இருங்க, வாடகை பற்றிக் கவலைப்படவேண்டாம்” என மருதநாயத்திடம் பிள்ளை கூறுவதும் மனிதநேய வெளிப்பாடுகளே ஆகும்.

‘‘எனக்கு ஒரு சேலை வாங்கிக் கொடேன்” என்று பைத்தியம் ஒன்று நிர்வாணமாய் நின்றதைப் பார்த்துக் கோபாலன் தனது மானம் போனாலும் பரவாயில்லை, பெண்ணின் மானம் காக்கப்பட வேண்டும் என்று தான் உடுத்தியிருந்த வேட்டியை அவிழ்த்து அப்பெண்ணிடம் கொடுத்துவிட்டு அவனது அறைக்கு ஓடும் காட்சியை ஆசிரியர் ‘‘போர்வை” என்னும் சிறுகதையில் வெளிப்படுத்தி இருப்பது மனித நேயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.

‘‘ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்” டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் எடுக்காமல் சென்ற பெண்ணிடம் அடுத்த ஸ்டேசனில் இறங்கச் சொல்ல, இதனை அதே பெட்டியில் பயணம் செய்த அம்மாசி கவனித்தான் உடனே பரிசோதகரிடம் ஸார் பட்டணத்துக்கு ஒரு டிக்கெட் குடுங்க என அப்பெண்ணிற்கு உதவும் காட்சி, பசியில் இருந்த தாய்க்கும், குழந்தைக்கும் பன்னும் பாலும் வாங்கிக் கொடுக்கும் காட்சியிலும் ஜெயகாந்தன் படைப்பாளுமை புலப்படுகிறது.

உடல்நிலை சரியில்லாத தாயை குழந்தை தொந்தரவு செய்யாமலிருக்க அம்மாச்சி தன் மடியில் தூக்கி வைத்து பன் ஊட்டுவதும், நீங்க எங்க போகனுமோ அங்கே கொண்டு போயி நான் சேர்க்கிறேன் என்று அத்தாய்க்கு தன்னம்பிக்கை ஊட்டும் போதும், உடல் நிலை சரியில்லாத தாய் வாந்தி எடுத்து தவிக்கையில் அவளது தலையைத் தாங்கிப் பிடித்து அருகில் இருந்த கிழவியோடு உதவும் காட்சி எல்லாமே கண்முன்னிழலாடுகிறது.

தன் தாய்க்குச் செய்யத் தவறிய ஈமக்கடனை இத்தாய்க்குச் செய்ததைப் பொக்கிசமாக அம்மாசி கருதுவதும், அப்பெண்மணி இறந்த பிறகு குழந்தையைத் தன் மார்போடு அணைத்து இனி தன்பிள்ளையாகவே வளர்க்க போகும் பிரம்மச்சாரி அம்மாசியின் மனிதநேயத்தை ஜெயகாந்தன் செதுக்கி இருக்கிறார்.

எத்தனை கோணம் எத்தனை பார்வை கதையில் எப்பவோ தனக்கு உதவி செய்தவர், அவர் உதவியால் இன்று வீடு, காரு, பணம் என்று வளர்ந்து இருக்கிறேன். ஒரு காலகட்டத்தில் உதவியவர் வருமையில் வந்து உதவி கேட்க அவருக்கு நான் வேணுங்கறதை எல்லாம் கொடுத்தேன் என்று பாடகி பிரமீளா கூறுவது ‘‘நன்றி மறப்பது நன்றன்று” என்ற குறள் நினைவுக்கு வருகிறது. தனக்கு உதவியவருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பது மனித நேயத்திற்குச் சான்றாக அமைகிறது.

‘‘தன்னுயிர் தானுறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்’‘ (குறள்-268)
எனும் வள்ளுவன் கூற்றுப்படி , மனிதன் சக மனிதனிடம் மனித நேயத்துடன் அன்புடன் வாழ வேண்டும். அப்போதுதான் தனக்கும் தன்னைச் சேர்ந்தோருக்கும் பாதுகாப்பும் அமைதியும் கிடைக்கும். மனித நேயம் குறைந்துவிட்டதால் தான் குழப்பங்கள் பாதுகாப்பற்ற தன்மை போன்றவை ஏற்படுகின்றன என்பதைத் தனது புதிய வார்ப்புகள் சிறுகதைகள் மூலம் ஆசிரியர் ஜெயகாந்தன் வெளிப்படுத்தி இருப்பது ‘‘மனிதநேயம்” இலக்கியங்களால் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது.


முனைவர் கோ. அழகுராஜா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புதிய வார்ப்புகளில் மனிதநேயச் சிந்தனைகள்”

அதிகம் படித்தது