ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

“புதிய வார்ப்புகள்” சிறுகதையில் பாத்திரப்படைப்புத் திறன்

ப.கார்த்திகேயன்

Feb 1, 2020

siragu puthiya vaarppugal1
நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர் ஜெயகாந்தன். அவரது படைப்புகள் மூலம் இச்சசமூகத்திற்கு ஆற்றிய பணிகள் பல. அவர் தனது படைப்புகள் மற்றும் பாத்திரங்கள் வாயிலாக பெண்ணடிமை, சாதி வேற்றுமைகள், மூடநம்பிக்கை போன்றவற்றை அவர் சாடியுள்ளார்.

ஜெயகாந்தனின் படைப்புகளில் இடம்பெறும் மாந்தர்கள் உண்மையில் நடமாடும் மக்களைப்போல காட்சியளிக்கின்றனர். உண்மை மக்களுக்காக வருந்தி கண்ணீர் விடுவது போல் அவர்களுக்காகப் படிப்பவர்கள் கண்ணீர் விடுகின்றனர். அவ்வாறே சினம் கொள்கின்றனர், வெறுக்கின்றனர், மகிழ்கின்றனர். கற்பனை மாந்தர் உயிரும் உணர்ச்சியும் மிக்க வாழ்வு பெறுமாறு ஜெயகாந்தன், தனது பாத்திரங்களை படைத்துக் காட்டியுள்ளார்.

புதிய வார்ப்புகள் எனும் சிறுகதைத் தொகுப்பு ஜெயகாந்தனின் சிறந்த சிறுகதைத் தொகுப்புகளுள் ஒன்றாகும். இக்கதைத் தொகுப்பில் அமைந்துள்ள கதைகளில் உள்ள பாத்திரங்கள் நடப்பியல் சார்ந்த மனிதர்களாகவே விளங்குகின்றனர். குறிப்பாக புதிய வார்ப்புகள் என்ற கதையில் இடம்பெறும் பாத்திரங்கள் பற்றிய செய்திகளை இக்கட்டுரை ஆராய்ந்து தருகின்றது.

இந்து

இந்து, இவள் புதியவார்ப்பு சிறுகதையின் தலைமைப்பாத்திரம் ஆவார். இவள் தன்னை புதிய வார்ப்பாய் வார்த்துக்கொள்வதால் தன் குடும்பம் மற்றும் சமூகத்தையும் புதிதாய் வார்க்கும் சிற்பியாகிறாள்.

மிகவும் கட்டுப்பாடான குடும்பத்தில் வளர்ந்து வரும் இந்து அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் தந்தையின் அலுவலகப் பணியாளர் வேணுவின் மீது காதல் கொண்டு அவனோடு ஊரைவிட்டு ஓடிவிடுகிறாள். இந்துவின் வயது பதினேழு என்பதை காரணம் காட்டி அவளது தந்தை இருவரையும் பிரித்துப்பின், தன் மகளின் நகைகளை களவாடியவன் என்று குற்றம் சுமத்தி நான்காண்டுகள் சிறைத்தண்டனையை வேணுவிற்கு வாங்கி கொடுக்கிறார் ராமபத்திரன்.

அந்த நாள் முதல் தன் வீட்டு கருப்பு பூனை, நூலகப் புத்தகம் ஆகியவற்றொடு இந்து தனிமையில் காலத்தை கழிக்கிறாள். நான்கு ஆண்டுகள் கழித்து அவள் சற்றும் எதிர்பாராத வகையில் சிறையில் இருந்து விடுதலையான வேணு அவள் வீட்டுக்கு வருகிறான். நடந்த தவறுக்கு வருந்தி அழுகிறாள் இந்து.

வேணுவைக் கட்டியணைத்து தன் மாறாக் காதலை வெளிப்படுத்துகிறாள் இந்து. இவற்றையெல்லாம் மறைவில் இருந்து பார்த்த இந்துவின் தாய் குஞ்சம்மாள் தன் மகள் நான்காண்டுகள் பட்ட துன்பம் போதும் என எண்ணுகிறாள். தன் தாயின் ஆசிர்வாதத்துடன், இந்து தன் காதலன் கைகள் பற்றிச் சென்றுவிடுகிறாள். அவ்வாறு செல்லும்போது அவளுக்கு வயது இருபத்தி ஒன்று. மேலும் தன் வீட்டில் இருந்து எந்த பொருளையும் எடுத்துச் செல்லாமல் அவள் செல்வது என்பது அவள் பாத்திரத்தின் தனித்தன்மையைக் காட்டுவதாக உள்ளது.

குஞ்சம்மாள்

குஞ்சம்மாள் இந்துவின் தாய் ஆவாள். இவள் ஒரு சாதாரண குடும்பப் பெண்ணின் தாயாகப் படைக்கப்பட்டுள்ளாள். தன் கணவர், மாமியார் மற்றும் இச்சமூகத்திற்கும் பயந்து நடப்பவளாய் முதலில் காணப்படும் குஞ்சம்மாள் பின் தன் மகளின் நிலை கண்டு மனம் மாறி அவளின் நியாயமான விருப்பத்தை நிறைவேற்ற அனைவரையும் எதிர் கொள்ளும் புரட்சி பெண்ணாகப் படைக்கப்பட்டுள்ளாள். கணவனுக்கு பயந்து நடக்கும் பெண்ணான குஞ்சம்மாள் தன் மகளின் சிறப்பான வாழ்க்கைக்காக தன் கணவனையே எதிர்த்துப் பேசும் பெண்ணாக மாறுகிறாள். பெண் தாய் பாசம் மிக்கவள் என்பதை இப்பாத்திரம் உணர்த்துகிறது.

மேலும் தன் மகள் வேறு ஒரு ஆணுடன் சென்று வந்தவள் என்ற எண்ணத்தில் அவளைச் ‘‘செத்துத் தொலைந்து போ” என்றும் கூறியவள் இவள் ஆவாள். பின்பு தனது மனதை மாற்றிக்கொண்டு தன் மகள் வேணுவோடு செல்ல அனுமதிக்கிறாள். ‘‘இந்து மறந்திடாத, ஏதாவது தெய்வ சன்னிதானத்தில் போயி இந்த மாறி ஒன்னு கட்டிக்கோடி பொண்ணுங்களுக்கு இதுதான் பெரிய நகை, என தனது தாலி சரட்டை எடுத்துக் காட்டுகிறாள்..’‘ குஞ்சம்மாளின் இச்செயலால் தன்னை புதிதாக வார்த்துக் கொள்கிறாள் இந்து.

பாட்டியம்மாள்.

பாட்டியம்மாள் இந்துவின் பாட்டி. தன் வயதுக்கும் தான் வாழ்ந்த காலத்துக்கும் அப்படியே பொருந்துகின்ற பாத்திரம். இவள் பழமையின் எந்த குணமும் மாறாதவள். பிற்ப்போக்குத் தனம் மற்றும் சாத்திர சம்பிரதாயங்களில் ஊரிய ஒரு பழைய உலோகம். தன் மகன் ராமபுத்திரன் மற்றும் குடும்பத்தின் மீது அதிக அக்கரை கொண்டவள். எப்போதும் எறும்பு போல் ஓயாது வேலை செய்து கொண்டே இருப்பவள்.

இந்து என்ற தன் பேத்தியின் பெயர்தான் பாட்டியின் வாய் முணுமுணுக்கும் பாட்டு. இந்து மீண்டும் வேணுவுடன் சென்று விட்டாள் என்று அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தாள். ஆயிரம் யோசனைக்குப் பின்னால் இம்முடிவினை சரியான முடிவென ஆமோதிக்கிறாள்.

தனது பேத்தியான இந்துவின் செயல் சரியானது என்றும் நியாயமானது என்றும் தன் மகன் ராமபுத்திரனிடம் கூறினாள். இ;ச்செயலால் பழைய உலோகமாக இருந்த பாட்டியம்மாள் தன்னை புதிய பதுமையாய் வார்த்துக் கொள்கிறாள்.

விஜயா

விஜயா இந்துவின் தங்கை. கல்லூரியில் படித்து வரும் மாணவி. இளம்கன்று பயமறியாது என்பது போல துடுக்குத் தனமாக திரிபவள். இந்துவின் நான்காண்டு கால தனிமை வாழ்வில் அவளுக்கு துணையாகப் படிக்க நூலக நூல்களைக் கொண்டு வந்து தருபவள். கல்லூரியில் இருந்து நேரம் கடந்து வருவது மற்றும் ஆண் நண்பனின் இருசக்கர வாகனத்தில் பயணிப்பது போன்ற செயல்பாடுகளின் மூலம் இச்சமூகத்தில் இவளும் புதிய வார்ப்பாய் மிளிர்கிறாள் என்ற பீடிகையுடன் இவளது பாத்திரத்தை அறிமுகம் செய்கிறார் ஆசிரியர்.

கருப்பு பூனை

கருப்பு பூனை இந்துவின் இணைப்பிரியா நட்பினைப் பெற்ற பாத்திரம். இந்துவின் மீது அதிக பற்றும், பரிவும், பாசமும் கொண்டதாக இப்பூனை பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. இந்துவைக் காணாத பூனை ‘‘ஒரு குழந்தையை போல ஓடியது’‘ என்ற ஆசிரியரின் வார்த்தைகள் வழி கடந்த நான்கு ஆண்டுகளாக தனிமையில் இருந்த இந்துவுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.

குஞ்சம்மாளுக்கு பூனையின் அங்க அசைவுகள் தன் கணவன் ராமபத்திரனின வெவ்வேறு நிகழ்வுகளை நினைவுபடுத்தவதாக வருணிக்கப்படுகிறது. பூனை தமிழ் மரபில் சகுணக் குறைவாகப் பார்க்கப்படும் ஒரு வீட்டு விலங்கு. ஆனால் ஆசிரியர் தனது சிறுகதையை தொடங்கும் போதே அறிமுகமாகும் பாத்திரமாக இக்கருப்புப் பூனை படைக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் முற்போக்கு சிந்தனையும் அதன் செயல்வடிவமும் இதன் மூலம் வெளிப்படுகிறது.

ராமபத்திரன்

இந்துவின் தந்தை ராமபத்திரன். தந்தைக்கானக் கண்டிப்பும் குடும்பத் தலைவனுக்கான கட்டுப்பாடும் கொண்டவனாகப் படைக்கப்பட்டுள்ளான்.
சீட்டாட்டம், நண்பர்கள் கூட்டம் என படாடோப வாழ்க்கை முறையி;ல் வாழ்பவன். காசு இருந்தால் எதையும் செய்துவிடலாம் என நினைப்பவன். இவன் அமைதி என்பதை அறியாதவனாய் படைக்கபட்டுள்ளான். மேலும் இவன் மாத்திரை மருந்தின் உதவியுடன் உயிர் வாழும் சராசரி பணக்காரனாய் படைக்கப்பட்டுள்ளான். ராமபத்திரன். தனது மகளை காதல் திருமணம் செய்த வேணுவின் மீது களவு வழக்குப்பதிவு செய்து அவனை நான்கு ஆண்டுகள் சிறையில் அடைத்தவன். தன் மகளின் வாழ்க்கைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாது தனது கௌரவமே பெரிதென இருப்பவன். இவன் தன் மகள் மீண்டும் வேணுவுடன் சென்றது கேட்டு மிகுந்த கோபம் கொள்கிறான். தன் மனைவி மற்றும் அம்மா ஆகியோருடன் கடுமையாக நடந்து கொள்கிறான். ராமபத்திரன் தன்னை புதிதாக வார்த்துக்கொள்ள விரும்பாமல் உடைந்து விடுகிறான்.

இவ்வாறு புதிய வார்ப்புகள் எனும் சிறுகதை வளர்ச்சிக்கு இந்து, குஞ்சம்மாள், பாட்டியம்மாள், விஜயா ஆகிய பாத்திரங்கள் தங்களை புதிய வார்ப்புகளாய் தகவமைத்து கொள்கிறார்கள். தன்னை புதுமையாய் வார்க்க விரும்பா ராமபத்திரன் உடைந்து போவதாக ஆசிரியர் காட்டுகிறார். மனிதன் காலச்சூழலுக்கு ஏற்ப தன்னைப் புதியவனாய் வார்த்துக் கொள்பவன் நிலைத்து நிற்பதும் அவ்வாறு இயலாதவன் உடைந்து விடுவதும் ‘‘புதிய வார்ப்பு’‘ சிறுகதை உணர்த்தும் செய்தி ஆகும்.


ப.கார்த்திகேயன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- ““புதிய வார்ப்புகள்” சிறுகதையில் பாத்திரப்படைப்புத் திறன்”

அதிகம் படித்தது