ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

புறநானூறு வழியே தமிழ்ச் சமுதாயத்தைக் காணல் – (பகுதி -2)

இராமியா

Feb 1, 2020

நெருப்பு

siragu neruppu1

மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு நெருப்பு ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. அக்காலத்தில் நெருப்பை உண்டாக்க ஞெலிகோல் (தீக்கடைக்கோல்) பயன்படுத்தப்பட்டது. நிரந்தரமான வீடுகளில் வாழும் மருத நில மக்கள் இதை எந்நேரத்திலும் எளிதில் எடுக்கக் கூடிய வகையிலும் தாழ்வாரத்தின் முன்கூரையில் செருகிவைத்து இருந்தார்கள் (பாடல் 315) குறிஞ்சி, முல்லை நில மக்களும் வேட்டைக்குச் செல்பவர்களும் எப்பொழுதும் கையிலேயே வைத்து இருந்தனர் (பாடல் 247,33,1501).

சடங்குகளும் பழக்க வழக்கங்களும்

பிறப்பு முதல் இறப்பு வரையிலும் சடங்குகள் வாழ்க்கையின் பிரிக்க முடியாத கூறுகளாக இருந்தாலும் புறநானூறில், பிறப்பின் போதும், திருமணத்தின் போதும் பின்பற்றப்படும் சடங்குகளைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை.

போருக்குப் புறப்படும் முன்னே அரசர்கள் வீரர்களுக்குக் கள் வழங்கும் பழக்கம் 258,262,286,290,292-வது பாடல்களில் காணப்படுகிறது.

மன்னர்கள் இறக்கும் பொழுது அவர்களுடைய உடல்களை எரிக்கும் வழக்கமும் (பாடல்கள் 231,239,240,245) முதுமக்கள் தாழியில் இட்டுக் கவிழ்த்துப் புதைக்கும் வழக்கமும் (பாடல்கள் 228,238,239) இருந்தன என்று தெரிகிறது. எரித்தாலும், புதைத்தாலும், அதன்பின் பிண்டம் இடுதலும் (பாடல் 234) நடுகல் நட்டலும் (பாடல்கள் 221,223,232) ஆகிய சடங்குகளும் பின்பற்றப்பட்டுள்ளன.

போர்வெறிக்கு எதிரான குரல்

பழந்தமிழர்கள் போர் புரிவதையும், போரில் வெல்வதையும், வெல்ல முடியாவிடத்துப் புறங்காட்டாமல் மடிவதையும் பெரும் புகழுக்குரியனவாக நினைத்தனர். ஆளும் வகுப்பாரின் இக்கருத்தைப் பெரும்பான்மையான புலவர்களின் பாடல்கள் எதிரொலித்தாலும், போரைவிட வேளாண்மையையும், பிற தொழில்களையும் ஊக்குவிப்பதே சிறப்பு என நல்லறிவுரை கூறும் போர் வெறிக்கு எதிரான குரலும் இல்லாமல் போய்விடவில்லை.

குடபுலவியனார் எனும் புலவர், உலகம் முழுவதும் வெல்ல நினைத்தால் நீரையும் நிலத்தையும் ஒருங்கு கூட்டி வேளாண்மைக்கு உதவுக (பாடல் 18) என்றும் வேளாண்மையின் மூலம் பெறும்புகழே போரில் கிடைக்கும் புகழைவிடச் சிறந்தது என்று அறிவுறுத்துகிறார்.

வெள்ளைக்குடி நாகனார் எனும் புலவர் படைவீரர்கள் போர் முகத்தில் காணும் வெற்றிக்கு கொழுமுனை கிழித்த விளை வயலின் நெல்லின் பயன்தான் என்றும், உழவர் குடியினரை முதற் கண்பாது காத்து, அதனால் ஏனயை குடிமக்களையும் காப்பாற்றினால், படைவலிமைக்கு அடங்காதவர்களும் அடங்கி நடப்பார்கள் (பாடல் 35) என்று அறிவுரை கூறுகிறார்.

புலவர்கள்

siragu pulavar1

பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையைத் தெரிவிக்கும் முக்கியமான ஆதாரம் அக்காலப் புலவர்களின் படைப்புகளே. அக்கால அரசர்களின் வாழ்நிலையை ஆவணப்படுத்திய அப்புலவர்களின் வாழ்க்கையோமிவும் இரங்கத்தக்கதாக இருந்திருக்கிறது. வறுமை நிலையின் காரணமாகப் பால் குடிக்கும் வயதுள்ள தன் மகன் தன்னைப் பழித்துக் காட்டுவதைப் பெருஞ்சித்திரனார் எனும் புலவர் குமணனிடம் எடுத்துக் கூறுவதில் (பாடல் 160) இருந்தும், பிற புலவர்களின் வேறு பாடல்களிலிருந்தும், அக்காலத்தில் புலவர்கள் கற்பனைக்கும் எட்டாத வறுமையில் வாழ்ந்திருந்தனர் எனத் தெரிந்துகொள்ள முடிகிறது.

இவ்வாறு வறுமையில் வாடும் புலவர்கள், அரசர்களின் பரிசிலைப் பெறும் பொருட்டு அரசர்களின் எண்ணம்போலவே நடந்து கொள்வது இயல்பு. ஆனால் அந்த வறுமை நிலையிலும் தவறு செய்யும் அரசர்களை இடித்துரைக்கத் தயங்காத புலவர்களும் இருந்திருக்கின்றனர்.

பேரரசர்களே ஆயினும் தங்களை மதியாதோரைத் தாங்களும் மதிப்பதில்லை என்றும் (நெல்லஞ்சோறு தரும் அளவிற்குச் செல்வம் படைக்காத) சிற்றரசர்கள் அன்புடன் வரகஞ்சோறு தரினும் அதை உவப்புடன் ஏற்றுக்கொண்டு பாராட்டுவோம் (பாடல் 197) என்று மாடலன் மதுரைக் குமரனார் எனும் புலவர் பாடியுள்ளார்.

மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்பேகன், தன் மனைவியை விடுத்து வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தகாலை, அரிசில் கிழார், பரணர், கபிலர் ஆகிய புலவர்கள் அச்செயலைக் கண்டித்து, அவன் தன் மனைவியுடன் வாழ்வதே தாங்கள் விரும்பும் பரிசில் என்றும் வேறுபரிசில் வேண்டாம் என்றும் (பாடல்கள் 143-147) இடித்துரைத்து இருக்கின்றனர்.

வள்ளன்மை

siragu kurinji nilam3

வேளாண்மையே முக்கியத் தொழிலாகவும் அடுத்து நெசவும், பிற துணைத் தொழில்களும் அக்காலத்து மக்களிடையே இருந்தன. இத்தொழில்கள் மக்களை ஓரிடத்தில் பிணைத்து வைத்திருந்தன. இந்நிலையில் நாடுகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு உடலாகவும் உயிராகவும் விளங்கியவர்கள் புலவர்கள், பாணர்கள், விறலியர்கள், கூத்தர்கள் ஆகியோரே. அவர்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளும் கடமை அரசர்களுக்கு இருந்ததால் வள்ளன்மையைத் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் அனைவருமே மனமுவந்த வள்ளலாக இருக்கவில்லை.

சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை பெருங்குன்றூர் கிழாருக்குப் பரிசில் அளிப்பது போலப் போக்கு காட்டி, காலத்தை நீட்டியதும், அதனால் பரிசில் பெறாமலே புலவர் திரும்ப நேர்ந்ததும் (பாடல் 210,211) இதே போன்ற அனுபவம் மூவன் என்னும் சிற்றரசனிடம் பெருந்தலைச் சாத்தனாருக்கு (பாடல் 209) ஏற்பட்டதும் புறநானூறில் காணக்கிடக்கிறது.

ஆனால் பொதுவாக மன்னர்கள், புலவர்கள் முதலிய இரவலர்களுக்குப் பரிசில்களை அளித்து, அவர்களை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டுதான் இருந்தனர். அவர்களிலும் சிலர் தங்கள் தேவைகளையும் குறைத்துக் கொண்டு ஈவதில் தயங்கவில்லை. ஆய்அண்டிரன் எனும் வள்ளல் தன்னிடம் உள்ளதை எல்லாம் கொடுத்து, ஒரு நிலையில் அவனுடைய மனைவியின் மங்கல நாண்மட்டுமே மிஞ்சி இருந்ததாக (பாடல் 127) உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் கூறியுள்ளார்.

வள்ளல்கள்

பாரி, ஓரி, காரி, பேகன், எழினி, நள்ளி, ஆய் அண்டிரன் என எழுவரை வள்ளல்கள் என்று தான் பெருஞ்சித்திரனார் (பாடல் 158) குறிப்பிடுகிறார். கடைஏழு வள்ளல்கள் என்று குறிப்பிடவில்லை. கடைஏழு வள்ளல்கள் என்று கூறுவது ஆரியத் தொல் கலைஞர்களின் மோசடி வேலை என்று மொழியியல் வல்லுநர் தேவநேயப் பாவாணர் கூறுகிறார்.

siragu vallalgal1

சேர, சோழ, பாண்டியர்கள் உள்ளிட்ட பேரரசர்கள் ஆரியர்களுக்கு அடிபணிந்து கிடக்கையில், குறிஞ்சி, முல்லைநில மன்னர்கள் அவர்களுக்கு அடிபணிய மறுத்ததும் தமிழ்க்கலை வளர்ச்சிக்கு ஊக்கம் ஊட்டிவந்ததும், மக்களிடையே அவர்களுக்கு நல்ல பெயர் இருந்ததும் ஆரியர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவர்களைச் சிறுமைப்படுத்த விழைந்த ஆரியர்கள், அவர்களுள் வள்ளல்கள் என்று பெயர் எடுத்தவர்களின் சிறப்பைக் குறைத்துக்காட்ட முற்பட்டனர். புறாவைக் காப்பாற்றும் பொருட்டு, செம்பியன் தன் உடலைக் கழுகு உண்ணக் கொடுத்த கற்பனைக் கதையைத் திணித்தும், அவன் போன்ற எழுவரை வரையாது கொடுத்ததலை ஏழுவள்ளல்கள் என்றும், கர்ணன் முதலிய எழுவரைக் கேட்கக் கொடுத்த இடை ஏழுவள்ளல்கள் என்றும், பாரி முதலிய எழுவரைப் புகழக்கொடுத்த கடை ஏழு வள்ளல்கள் என்றும் பெயரிட்டனர்.

அதியமான் நெடுமான் அஞ்சியும், குமணனும் அப்படிப் பெயரிடப்பட்ட கடை ஏழு வள்ளல்களில் அடங்குவர் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அவ்வள்ளல்கள் இப்பட்டியலில் இல்லை என்பது தமிழ் மக்கள் அறிய வேண்டிய அரிய செய்தி.

வள்ளலின் இடறல்.

ஒரு முறை அதியமான் நெடுமான் அஞ்சி, பரிசிலைக் காலத்தே தராததால், சினந்த ஔவையார் வாயில் காப்போனிடம் அஞ்சி தன் தரமறியானோ? அன்றி என்தரமறியானோ?’ என்று கூறி, தான் எங்கும் சென்று பரிசில் பெறமுடியும் என்பதை வேந்தனுக்கு அறிவிக்கும்படி (பாடல் 206) கூறிச் சென்றார்.

அதேபோல் பெருஞ்சித்திரனார் அதியமானைக் காணச்சென்ற போது, அவன் அவரைக் காணாமல் பரிசிலை வழங்க, அவரோ, தான் வணிகப் பரிசிலன் அல்லன் என்றும் தன் தரம் அறியாமல் கொடுக்கப்பட்ட பரிசைப் பெற்றுக் கொள்ள மாட்டேன் (பாடல் 208) என்றும் கூறித் திரும்பிவிட்டார். வரையாது கொடுத்த வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி பெரும் புலவர்களின் கண்டனத்திற்கு ஆளானது ஓர் அரிய செய்தியாகும்.

முடிவுரை

பழந்தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிய இக்கட்டுரை புறநானூற்றுப் பாடல்களில் உள்ள செய்திகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டு உள்ளது. தமிழ் மக்களிடையே பழங்காலத் தமிழர் வரலாற்றைப் பற்றி உலவி வரும் செவிவழிச் செய்திகள் புறநானூற்றுப் பாடல்களுடன் ஒத்துப்போவதானது தமிழர்கள் தங்கள் வரலாற்றை உயிர்ப்புடன் வைத்துக் கொள்பவர்கள் என்று தெரிவிக்கிறது.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புறநானூறு வழியே தமிழ்ச் சமுதாயத்தைக் காணல் – (பகுதி -2)”

அதிகம் படித்தது