மே 30, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

புறநானூறு வழியே தமிழ்ச் சமுதாயத்தைக் காணல்.

இராமியா

Jan 25, 2020

siragu purananooru1முன்னுரை

புறநானூறு பழந்தமிழர்களின் வாழ்நிலையைத் தெரிவிக்கும் மிகச்சிறந்த நூல். உ.வே.சாமிநாதய்யர் புறநானூறு ஓலைச்சுவடிகளைத் தொகுத்த பொழுது 267வது, 268வது பாடல்கள் முழுவதுமாகச் செல்லரித்து இருப்பதைக் கண்டார். 244வது, 355வது பாடல்கள் பெரும்பகுதி சிதைந்த நிலையிலும் மேலும் 32 பாடல்கள் சிறிது சிதைந்த நிலையிலும் கிடைத்து, 398 பாடல்களும் அச்சில் ஏறி, அக்காலத் தமிழர்களின் வாழ்க்கையை விவரிக்கும் அரிய கருவூலங்களாக நமக்குக் கிடைத்துள்ளன.

சமூக அமைப்பு

நடோடிச் சமுதாயமாக இருந்த மனித இனம் நாகரிக சமூகமாக வளர்ச்சி அடைந்த பொழுது ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் உலகின் மற்ற பகுதிகளில் ஒரு விதமாகவும், ஆரியர்கள் குடியேறிய இந்தியாவில் வேறு விதமாகவும் ஏற்பட்டன. ஆரியர்கள் திணித்த வர்ணாசிரம முறையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான போராட்டமே இந்திய வரலாறாக உள்ளது. ஆரியர்களின் ஆதிக்கம் தமிழ்நாட்டிலும் பரவி  இருந்தது. ஆரியர்களின் சூழ்ச்சித் திறனை எதிர்த்து வெல்ல முடியாதவர்களில், அடிபணிந்தவர்கள் மருத நிலத்திலும் நெய்தல் நிலத்திலும் நாகரிக சமூகமாக வளர்ச்சி அடைந்தனர். மற்றவர்கள் குறிஞ்சி, முல்லை நிலங்களில் குறுநில மன்னர்களாக இருந்தனர்.

 மறையோர் வாழ்த்தும்பொழுது தலை தாழ வேண்டும் (பாடல் 6)என்று காரி கிழார் பாண்டிய மன்னனிடம், கூறுவதும், தாமப்பல் கண்ணனார் எனும் பார்ப்பனப் புலவரும் சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானும் விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது, மாவளத்தான் விட்டெறிந்தவட்டில் புலவர் மேல்பட்டதற்காக அவன் மேல் சினந்து அவனது முன்னோர்கள் பார்ப்பனர்கள் ‌நோவுமாறு நடந்து‌கொள்ள மாட்டார்கள் என்பதால் அவன் ‌சோழர்குடியில் பிறந்தவன்தானா என்று ஐயம் அடைவதாகக் கூறி பணிய ‌வைக்கும் காட்சியும் (பாடல் 43), ஔவையார் பூவையும் பொன்னையும் பார்ப்பனர்களுக்கு அள்ளித்தருமாறு கூறி அதுவே வாழ்வின் இலக்கணம் என்று மூவேந்தர்களிடம் கூறுவதும் (பாடல் 367), பேரரசர்கள் ஆரியப் பண்பாட்டிற்கு அடிபணிந்து இருந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றன. ஆனால் வேள்பாரி, முதலிய குறிஞ்சி/முல்லை நில அரசர்களைப் பற்றிய பாடல்களில் இதுபோன்ற ஆரிய ஆதிக்கச் செய்திகள் இல்லை. இது நாடோடிச் சமுதாயம் உடைந்து நாகரிக சமூகமாக வளர்ச்சி அடைந்தபொழுது, நாகரிக வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் வலிமை இல்லாமலும், அதே சமயம் ஏற்றத்தாழ்வுகளை ஏற்க முடியாமலும் போன மக்கள் திரளினர் குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளில் பழங்குடியினராக வாழ்ந்தனர்/வாழ்கின்றனர் என்ற அறிவியல் உண்மையை உணர்த்துகிறது.

பழந்தமிழர் மதம்

புறநானூறில் மத நம்பிக்கைகளைப் பற்றி விரிவான விளக்கங்கள் காணக்கிடைக்காவிட்டாலும் அவற்றைப் பற்றிய குறிப்புகள் இருக்கவே செய்கின்றன. சிவன் வழிபாடும் (பாடல் 6)திருமால் வழிபாடும் (பாடல் 56,58)இருந்தது என்பது சிவன் கோவிலைப் பற்றியும் அரசர்களைத் திருமாலுக்கு நிகராக உவமித்தும் பாடிய பாடல்களில் இருந்தும் தெரிந்து கொள்ளமுடிகிறது. மேலும் நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் இல்லை என்பாரோடு சேராது இருப்பாயாக (பாடல்29) என்று அறிவுறுத்துவதன் மூலம் நாத்திகக்கருத்து இருந்ததும், ஆட்சி புரிவோர் நாத்திகத்திற்கு எதிராகவும், மதக்கருத்துகளுக்கு ஆதரவாகவும் இருந்தது தெரியவருகிறது.

உணவுப் பழக்கம்

siragu purananooru3

மனிதன் இயற்கையில் கிடைக்கும் காய், கனிகளையும் விலங்கு, பறவை, மீன் போன்ற உயிரினங்களையும் உண்டு உயிர் வாழ்ந்தான். காலப்போக்கில் வேளாண்மையைக் கற்றுக்கொண்டு அரிசி, கோதுமை போன்ற தானியங்களையும் விளைவித்து உண்டான். பொதுவாக மனிதனுடைய உணவில் மரக்கறியும், புலாலும் சேர்ந்தே இருந்தன. ஆனால் அப்படி புலால் உண்பதில் தமிழர்களுக்கும் ஆரியர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தன. ஆரியர்கள் ஆதிசங்கரரின் காலத்திற்குப்பிறகு புலால் உண்பதை, அதிலும் குறிப்பாக மாட்டிறைச்சி உண்ணும் வழக்கத்தைக் கைவிட்டனர். அதற்குமுன் ஆரியர்களுடைய உவப்பான உணவு உழவுக்குப் பயன்படும் மாட்டின் இறைச்சியும் பயணங்களுக்குப் பயன்படும் குதிரையின் இறைச்சியுமே ஆகும். கையிருப்பில் ஆயத்தமாக இருக்கும் அவற்றைக் கொன்று சாப்பிடுவதினால் உழவுக்கும் பயணத்திற்கும் ஏற்படும் கேடுகளைப் பற்றிய அக்கறை இன்றி ஆரியர்கள் அவற்றை உண்டனர். உழைத்துப் (வேட்டையாடி) பெற வேண்டிய வேலைகளைத் தவிர்த்தனர்.

ஆனால் தமிழர்கள் உணவிற்காகத் தங்கள் உழைப்பை ஈந்து அதன் மூலம் பெற்றவற்றையும், பிற தொழில்களுக்குத் தேவைப்படாத ஆட்டையும் தான் உண்டனர் என்பதைப் புறநானூற்றுப் பாடல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மக்கள் உடும்பு (பாடல் 325), முயல் (பாடல்கள் 33, 319, 395, 396), மீன் (பாடல்கள் 61, 320, 395, 399), மான் (பாடல்கள் 150, 152, 168, 398), பன்றி (பாடல் 177), ஆமை (பாடல் 212), ஆடு (பாடல்கள் 96, 113, 261, 262, 364), புறா (பாடல் 319), ஈசல் (பாடல் 119)ஆகியவற்றின் இறைச்சியை உண்டனர். உழவுக்கும் தொழிலுக்கும் ஊறு விளைவிக்கக்கூடாது என்ற சமூக அக்கறையுடன் உணவுப் பழக்கத்தை வைத்துக் கொண்ட தமிழர்கள் அவற்றைச் சுவையோடு சமைத்துச் சாப்பிடும் பழக்கத்தையும் கொண்டிருந்தனர். சூடான முயற்கறியையும், வாளை மீனையும் பல வகைகளில் பக்குவப்படுத்திய கறிகளையும் சோற்றுடன் உண்டனர். (பாடல் 395). மேலும் உணவிற்குச் சுவை கூட்டும்படி கடுகு, கறிவேப்பிலை முதலியன தூவி எண்ணெய் அல்லது நெய்யில் காய்ச்சித் தாழிதம் செய்தனர்(பாடல் 127). உணவிற்குச் சுவை கூட்டும் தாழித்தலைக் கண்டவர்கள் தமிழர்களே.

பழந்தமிழர்களும் போரும்

siragu purananooru4

புறநானூறிலும் மற்ற புறத்திணை நூல்களிலும் பழந்தமிழர்களின் போர் ஆர்வம் வெகுவாகப் பாடப்பட்டு உள்ளது. ஆனால் அப்போருக்குக் காரணமாக விளங்கிய சமூக முரண்பாடுகள் பற்றிய செய்திகள் இல்லை. மன்னனும் போர் வீரர்களும் போர் புரிவதைத்தவிர வேறு எண்ணமே இல்லாமல் இருந்தனர் (பாடல் 31). புலவர்களும் தங்களுக்குப் பரிசில் அளித்த அரசர்களின் போர்த் திறமையைப் புகழ்ந்து மேலும் மேலும் வெற்றிபெற வேண்டும் என்றே வாழ்த்தினர். இவ்வாறு நடக்கும் போர்களில், மனிதர்கள் மட்டுமன்றி, ஒன்றும் அறியாத விலங்குகள் வதைக்கப்பட்டது மனித இனத்திற்குப் பெருமை சேர்ப்பதாகக் கொள்ள முடியவில்லை. குதிரையின் முகக்கருவி உராய்ந்து உதிரம் சிந்திச் சிவந்தவாய், உதிரம் குடித்த புலி வாயை ஒத்தது; மதிற் கதவுகளைக் குத்தி உடைத்து மழுங்கிய தந்தங்களோடு வரும் யானைகள் கூற்றை ஒத்தன என்ற பரணரின் வர்ணனையில் (பாடல் 4)போரில் புகுத்தப்பட்ட குதிரைகளும் யானைகளும் அடைந்த துன்பங்பளைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. அக்கால மக்கள் போர் வெறியில் பிற உயிர்களுக்கு நேரும் துன்பங்களைக் காணும் தன்மையைப் பெற்று இருக்கவில்லை எனத் தெரிகிறது.

போருக்குப் பிந்தைய அநாகரிகம்

போரின் போதுதான் கொடுமைகள் நிகழ்ந்தன என்றால், போருக்குப்பின் நடந்த கொடுமைகள் அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டன எனலாம். தோற்றவர் நாட்டிலே வென்ற மன்னன் ஊரை எரிப்பதும், நல்ல பொருட்கள் எதுவும் மிஞ்சி இராமல் அழிப்பதும், நீர்ப்பெருக்கை அடைப்பதும் (பாடல் 7), நெல் விளையும் கழனியைக் கொள்ளையிட்டும், வீடுகளை எரியூட்டியும், காவற் குளங்களில் யானைகளை இறக்கி அழித்தும் (பாடல் 16), தேரோடும் தெருக்களில் கழுதைகளைப் பூட்டி உழுது, சாலைகளை அழித்தும், வயல்களில் குதிரைகள் பூட்டிய தேர்களைச் செலுத்தி அழித்தும் (பாடல் 15), விளைநிலங்களில் புகுந்து கொள்ளையடித்தும் (பாடல் 23), பகைவர்களின் தலைகளைக் கொய்து அடுப்பாக்கிக் குருதியைப் புனலாகப் பெய்து, பகைவர் தசையையும் மூளையையும் அதனுள் இட்டு, வெட்டிய தோள்களைத் துடுப்பாகக்கொண்டு, வேள்வி செய்தும் (பாடல் 26), இதுபோன்ற மனதாலும் நினைக்க வொண்ணாத கொடுஞ்செயல்களைச் சாதாரண மக்கள் மீது ஏவிய அநாகரிகம் அக்காலத்தே இருந்திருக்கிறது. இதைப் புலவர்கள் வீரம் என்று புகழ்ந்து இருக்கின்றனர்.

தொலைநாடுகளுடன் தொடர்பும் அறிவியல் வளர்ச்சியும்

போரில் அநாகரிகம் மிகுந்திருந்த போதிலும், பொதுவாழ்வில் பல துறைகளிலும் முன்னேற்றத்தைக் கண்டிருந்தனர். யவனர்களுடன் வணிகம் செய்து கொண்டு (பாடல் 56)இருந்த தமிழர்கள், காற்று உரியதிசையில் வீசாததால் கப்பல்கள் ஓடாத போது பொறிகளைக் கையாண்டு அவற்றை இயக்கும் அளவிற்கு அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் திறன் பெற்றிருந்தனர். அதியமானின் முன்னோர்கள் சீனத்தில் இருந்து கரும்புப் பயிரைக் கொண்டு வந்து பயிரிட்டனர் (பாடல் 99)என்றால் பதியனவற்றைக் கற்றுக் கொள்ளும் அறிவியல் அறிவைக் கொண்டிருந்தனர் எனத் தெரிகிறது.

ஆனால் புவியை/அண்டத்தை அறிவதில் வானத்தை நிலம் சுமந்து இருப்பதாகவும் (பாடல் 2), வானம் எந்த ஆதாரமும் இன்றி நிற்பதாகவும் (பாடல் 30)வெவ்வேறு வழிகளில் புரிந்து கொண்டு இருந்தனர். இது தொழில் செய்யும் மக்கள் அறிவியலில் சிறந்து விளங்கிய அளவிற்குக் கற்றோர் கூட்டம் சிறந்து விளங்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

பண்டமாற்று

siragu kadaliyal3

புறநானூற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள் நாகரிக சமூகமாக வாழ்ந்தனர். நாகரிக சமூகத்தில் பண்ட உற்பத்தி பிரிக்க முடியாத கூறு ஆகும். மருத நிலத்து மக்கள் தங்களுக்கு இடையே உணவுதானியங்கள், ஆடைகள், கருவிகளின் பரிவர்த்தனையில் நாணயங்கள் புழங்கிய செய்திகள் புறநானூற்றில் கிடைக்கவில்லை; ஆனால் குறிஞ்சி முல்லை நில மக்களான வேடர்களும் ஆய்மகளிரும்மான் இறைச்சியையும், தயிரையும் உழவர் வீட்டிலே கொடுத்து வயல்களில் விளைந்த நெல்லுக்குப் பண்டமாற்று செய்து கொண்டனர் (பாடல் 33)என்ற ‌‌செய்தி உள்ளது.

(தொடரும்)


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புறநானூறு வழியே தமிழ்ச் சமுதாயத்தைக் காணல்.”

அதிகம் படித்தது