மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புறநானூற்றுப் பாடல்

பேரா. ருக்மணி

Nov 1, 2014

puranaanooru2இன்பமும் துன்பமும் உலகின் இயற்கை என்பதை நன்குணர்ந்தவர்கள் நம் முன்னோர். அதனால், அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதையும் இயல்பாகப் பேசினார்கள். நம்மை நல்லாற்றுப்படுத்தினார்கள்.

சங்கச் சான்றோரின் அப்பாடல்களைப் பார்க்கின்றபோது ஆச்சரியம் மேலிடுகிறது. மயிர்கூச்செறிகிறது. இந்தப் பாடல்கள் எழுதப்பட்ட காலம் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பிருக்கலாம் என்பதை அறிகின்றபோது, தமிழ் மண்ணின் பண்பட்ட மனத்தையுடைய சான்றோர்களை எண்ணி உள்ளபடியே அகம் மகிழ்கிறோம். இதோ ஒரு புறநானூற்றுப் பாடல். இந்தப் பாடலை எழுதியவர் பக்குடுக்கை நன்கணியார் என்ற புலவர்.

ஒரு வீட்டிலே சாவுப்பறை கேட்கிறது, மற்றொரு வீட்டிலே மண நிகழ்வுக்கான மங்கல ஓசை கேட்கிறது. இப்படி இந்த உலகமானது இன்பமும் துன்பமும் சேர்ந்து படைக்கப்பட்டுவிட்டது. அதன் இயல்பை உணர்ந்து இனியவற்றை மட்டுமே கண்டுணர்ந்து வாழ்வோம் என்கின்றார் புலவர். படைக்கப்பட்ட உலகத்தை மாற்றமுடியாது. ஆனால் அந்த உலகில் இன்னாதவற்றை நீக்கி இனிமையோடு வாழலாமே? என்பதுதான் அவரின் கருத்து. இதோ பாடல்…

ஓர்இல் நெய்தல் கறங்க, ஓர்இல்

ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்

புணர்ந்தோர் பூவணி அணிய பிரிந்தோர்

பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்

படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்

இன்னாது அம்ம இவ்உலகம்

இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே.(புறநானூறு.194)

கருத்துரை

ஒரு வீட்டில் இழவுப்பறை கொட்டுகிறது. மற்றொரு வீட்டிலோ மகிழ்ச்சியான முழவின் ஓசை மிகுந்து ஒலிக்கிறது.

மணவீட்டிலோ, மணம் முடித்துத் தலைவனோடு கூடிய பெண்ணோ, பூவும் அணிகலன்களும் அணிந்து இன்புற்றிருந்தாள். இறப்பு நிகழ்ந்த வீட்டிலோ, தலைவனைப் பிரிந்த தலைவியின் மையுண்ட கண்களிலிருந்து நீர்த் துளிகள் சொரிய, துன்புற்றிருந்தாள். இவ்உலகத்தைப் படைத்த பண்பில்லாதவனாகிய இறைவன், இவ்வாறு இன்பமும் துன்பமுமாக படைத்துவிட்டான். இந்த உலகமானது கொடியது, துன்பமானது. ஆகவே, இந்த உலகத்தின் தன்மை உணர்ந்தவர்கள், இனியவற்றைக் கண்டுணர்க என்கின்றார்.

puranaanooru3பொழிப்புரை

ஓர்இல் – ஒரு வீட்டில், நெய்தல்- சாவுப்பறை, கறங்க- ஒலிக்க, ஓர்இல்- ஒரு வீட்டில், ஈர்ந்தண் – இனிய மகிழ்வான, முழவின்- முழவினுடைய, பாணி – ஓசை, ததும்ப- நிரம்ப,மிகுதியாக, புணர்ந்தோர்-கூடினோர், பூவணி- பூவும் அணிகலன்களும், அணிய- அணிந்து, பிரிந்தோர்-(தலைவனை) இழந்தவர், பைதல்- துன்பம், உண்கண் – மையிட்ட கண்கள், பனிவார்பு- நீர் வார்த்து, உறைப்ப- சொரிய, உதிர்க்க, படைத்தோன் – படைத்த இறைவன், மன்ற- அசைச்சொல், அப்பண்பிலாளன்- அப்பண்பில்லாதவன், இன்னாது- இனிமையில்லாதது, கொடியது, துன்பமானது, அம்ம – அசைச்சொல், இவ்உலகம்-இந்த உலகம், இனிய காண்க – இனிவற்றைக் கண்டு கொள்க, இதன் இயல்பு – உலகின் இயல்பு, உணர்ந்தோரே- உணர்ந்தவர்களே.

“இன்னாது அம்ம உலகம்” என்று நினைத்து, துன்பத்தை மேலும் மிகுவிப்பதை விட்டு உயர்ந்தவற்றை மட்டுமே நினைக்க வேண்டும் என்ற அவரின் விருப்பம், அவரின் உள்ளத்து உயர்வையே காட்டுகின்றது. இவர்களெல்லாம் புலவர் மட்டுமா? வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று நமக்குக் கற்றுக்கொடுத்த, அனுபவமுடைய ஆன்றோர்களும்கூட!

துன்பம் கண்டு தளரும்வேளையில், நமக்கு அருமருந்தும் ஆற்றலுடை மருந்தும் இதுதானே?


பேரா. ருக்மணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புறநானூற்றுப் பாடல்”

அதிகம் படித்தது