ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்களுக்கான அறிவுரைகள்

தேமொழி

Mar 17, 2018

Siragu pengalukkaana2

யுனிசெஃப் (United Nations Children’s Fund or UNICEF) அல்லது “ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்” எனப்படும் பன்னாட்டுச் சிறுவர்களின் நலவாழ்வில் அக்கறை கொண்ட அமைப்பானது, இணையவெளியில் ஒவ்வொரு நாளும் 175,000 சிறுவர்கள் பயனர்களாக நுழைகிறார்கள், அவர்களுக்குப் பாதுகாப்பான நடவடிக்கையில் மக்கள் செயல்பட வேண்டும் என்னும் நோக்கில் “பகிரும் முன் சிந்தியுங்கள்” (Think before you send – https://youtu.be/ObHyjhS4BZw) என்ற ஒரு காணொளி தயாரித்துச் சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் (டிசம்பர் 11, 2017 அன்று) யூடியூப் வழியாக வெளியிட்டது. இது நாள் வரை அதைப் பார்த்தோரின் எண்ணிக்கை சுமார் 3,000 சொச்சம். அதாவது மாதமொன்றுக்குச் சராசரியாக 1,000 பார்வையாளர்கள் என்ற நிலையில் அது பரவியுள்ளது என்று தெரிகிறது.

“காலா” என்ற ரஜினிகாந்த் நடித்து வரவிருக்கும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான விளம்பரக் காணொளி 10 நாட்களுக்குள் 2 கோடி (20 million) தமிழர்களால் மட்டுமே பார்க்கப்பட்டுவிட்ட சாதனையின் அருகே, உலக அளவு பார்வையாளர்களை சென்றடைய விரும்பும் யுனிசெஃப் காணொளியின் சாதனை கிட்டே கூட நிற்கத் தகுதியில்லை. அந்த அளவு இணையத்தைப் பயன்படுத்துவோர் பொறுப்புணர்வு கொண்டவராக உள்ளனர். உலகில் இதுநாள் வரை வாழ்ந்துவரும் மக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவராக இக்கால இளையதலைமுறையினர் உள்ளனர். அவர்களுக்கு இணையம் பல அறிவார்ந்த செய்திகளைத் தருவதுடன் ஆபத்தான வாழ்க்கையையும் அவர்கள் அறியாமலே எதிர்நோக்க வைக்கிறது என்ற அக்கறையில் தயாரிக்கப்பட்ட யுனிசெஃப்  காணொளி, ஒரு செய்தியைப் பகிரும்முன் அதன் விளைவைச் சிந்திக்கச் சொல்கிறது. ஒருவரைப் பற்றி உண்மையா பொய்யா எனத் தெரியாத தகவலை அதே நொடிப்பொழுதில் முடிவெடுத்துப் பரப்பிவிட்டால் பாதிக்கப்படுபவர் உயிரையும் இழக்க நேரும் என்று காட்ட முற்படுகிறது.

Siragu pengalukkaana1

இது போன்றே சில படங்களும் செய்திகளும் மனிதநேய முறையில் சமூகவலைத்தளங்கள், குழுமங்கள், புலனம் வழியாகவும் பகிரப்படுவதுண்டு.

T.H.I.N.K. b4 U Send

  1. is it ‘TRUE’?
  2. is it ‘HURTFUL’?
  3. is it ‘ILLEGAL’?
  4. is it ‘NECESSARY’?
  5. is it ‘KIND’?

பொய்யான, பிறரை வருத்தும், சட்டத்தின் முன் குற்றம் எனக்கருதப்படும், தேவையற்ற, அன்பற்ற செய்திகளை பகிரும்முன் சிந்திக்கவும் என அறிவுறுத்தும் இந்தச் செய்தி.

ஒரு செய்தியை அனுப்பும் முழுக் கட்டுப்பாடும் அனுப்புபவர் கையில் இருக்கும் பொழுது பொய்யான செய்திகளையும் தீங்கு விளைவிக்கக்கூடிய செய்திகளையும் பரவச் செய்வது அறியாமை மட்டுமல்ல அது மனிதக் குலத்திற்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் நன்னெறியற்ற ஒரு செயலும் ஆகும். அது தன்னையே வேறுவகையில் திரும்பி வந்து தாக்கினால்தான் விழிப்புணர்வு வரும் என்ற நிலையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பது பொறுப்புணர்வு இல்லாத செயல். பொய்ச் செய்தி என்று தெரிந்தும் மனசாட்சியின்றி உருவாக்கிப் பரப்புபவர் ஒருபுறம் இருக்க,  அவை உண்மையா என ஆராயாமல் மேலும் மேலும் பரப்பிக் கொண்டிருக்கும் மக்களின் அறியாமை மறுபுறம். எந்த ஒரு செய்தியையும் கிடைத்தவுடன் பலருக்குப் பகிரவேண்டும் என்ற ஆர்வக்கோளாறு பல தேவையற்ற சச்சரவுகளைத்தான் தந்து வருகிறது. பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உண்மை அறியும் ஆர்வம், ஒரு செய்தி பரப்பப்படுவதன் உள்நோக்கம் ஆகியவற்றை அறிவதற்கு எந்தப் பயிற்சியும் தேவையில்லை. செய்தி குறித்து கேட்கப்படும் ஒரு சில கேள்விகளே போதும்.

அடுத்து, பரப்பப்படும் செய்திகளின் “உள்நோக்கம்” குறித்து ஒரு பார்வை. குறிப்பாகப் பாலின வேறுபாடு, இனவேறுபாடு ஆகியவற்றைக் கடந்து சமத்துவத்தை நோக்கிச் செல்ல விரும்பும் இக்காலத்தில் சில செய்திகளில் பெண்களின் முன்னேற்றத்தை விரும்பாத பழமை வாதங்களும், சமுதாயநீதிக்கான நடவடிக்கைகளைச் செய்யும் ஏளனங்களும் நீதிநெறிக் கதைகள் என்ற சாயலில் பரப்பப்படுகின்றன. அவ்வாறு  பரப்பப்படும் உள்ளுறை செய்தியை மக்கள் அறியாதவாறு கசப்பு மாத்திரையில் இனிப்பு தடவி தருவது போல பகிரப்படுகின்றன. அவற்றைக் கேளிக்கைக் கதைகள் என்றும் நன்னெறி போதிப்பவை என்றும் மயங்கி மக்கள் பரப்பி வரும் அளவிற்கு ஆராயும் தன்மை மக்களிடம் குறைந்துள்ளது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய நிலைமை.

Siragu pengalukkaana3

சில கதைகள் பெண்கள் வாழ்க்கை முறை, சமநீதி இவற்றில் குறிவைக்கின்றன. கீழுள்ளது சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் உலவிய ஒரு “நன்னெறி கதை” இதில் ஒரு தந்தை தனது மகளிடம்  கண்டிப்பானவராக இருக்கிறார். இது குறித்து கேள்வி கேட்கும் மகளிடம் அவர்கள் பட்டம் விடும்பொழுது நூல் என்ற கட்டுப்பாடு இருப்பதால்தான் பட்டத்தால் சுதந்திரமாகப் பறக்க முடிகிறது என்ற வாழ்க்கைப் பாடம் நடத்துவார். இக்கதை பல வேறுபாடுகளுடன் பரப்பப்படுகிறது. உண்மைக்கதை என்றும் கூட சிலசமயம் குறிப்பு இணைக்கப்பட்டிருக்கும், ஒரு பெண்ணே இந்தக் கதையை சொல்லும் காணொளி ஒளிப்பதிவும் உண்டு. கீழுள்ளது ஒரு வகை…

ஒரு அப்பா தன் மகளை அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள். “ஏம்பா என்னை இப்படிக் கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்? என்னைக் கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே” என்று. ஆனால், இதைக்கேட்ட அந்த அப்பா சற்று வருந்தினார். காரணத்தைத் தனது மகளுக்கு எப்படிச் சொல்லிக்கொடுப்பது என யோசித்தார். ஒரு நாள் மகள் தன் அப்பாவிடம், “அப்பா நான் பட்டம் விட்டு விளையாடப்போகிறேன், நீங்களும் வாங்க,” என அழைத்துக்கொண்டு அவர்கள்  வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றாள். பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள். அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் அப்பா மகளிடம் கேட்டார். “பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது. ஆனால், அதன் விருப்பம்போல சுதந்திரமாக பறக்க முடியவில்லை. அதற்குத் தடையாய் இருப்பது என்னம்மா?” எனக் கேட்டார். மகள் பட்டென பதில் சொன்னாள். “இந்த நூல் தான் அப்பா அதை தன் விருப்பப்படி விடாமல் கட்டி வைத்திருக்கிறது” என்று சொன்னாள்.

அப்படியா எனக் கேட்டுவிட்டு அந்த நூலை அப்பா அறுத்து விட்டார்.  பட்டமும் தன் விருப்பப்படி பறந்து சென்றது. முடிவில் மரக்கிளையில் சிக்கி கிழிந்து  போனது. அப்பொழுது அப்பா சொன்னார், “மகளே, இந்தப் பட்டத்தை தன் விருப்பப்படி பறக்கவிடாமல் நான் தடுக்கவில்லை. நேரான வழியில் இந்தப் பட்டம் பறந்து உயரங்களைச் சென்றடைய இந்த நூல் உதவியாய் இருந்தது. கட்டுப்பாடு அதைச் சிறப்பான உயரத்தில் பறக்க வைத்தது. ஆனால் நூலென்ற கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாகப் பறந்த அது மரக்கிளையில் மாட்டிக் கிழிந்து போனது. நூலின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் நடந்து கொள்கிறேன். நானும் பட்டம் என்ற உன்னை ஆபத்தில்லாமல் உயரே பறக்க வைக்கும் ஒரு நூல்தான். நீ என்னுடைய பேச்சைக் கேட்டு அதன்படி சென்றால் உயரே உயரே செல்லலாம்.

உன் விருப்பப்படி சுதந்திரமாக வாழ நினைத்தால் அந்தப் பட்டம் ஆபத்தில் சிக்கியது போல நீயும் ஆபத்தில் சிக்கி உன் வாழ்க்கையும் சீரழிய நேரலாம். அதனால்தான் நான் கண்டிக்கிறேன். இப்போது புரிந்திருக்கும் நான் ஏன் உன்னைக் கண்டித்தேன் என்று. பாட்டமாகிய நீ மேலே பறக்க நூலாகிய நான் தேவை” என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவைக் கட்டி அணைத்துக் கொண்டாள். ஆம், உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம், ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானதாகவும் இருக்கலாம் என்று கதை முடியும். அப்பாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகளின் வாழ்வு இனிமையாக அமையும்.  பெற்றோர்கள் கண்டிப்பில் வளரவேண்டியவர்கள் பிள்ளைகள்தான் என்பதில் ஐயமில்லை. அதே போல பிள்ளைகளின் நலத்தில் அக்கறை கொண்டவர் பெற்றோரைத் தவிர வேறு யாரும் இருக்கவும் வழியில்லை.

ஆனால் இந்தக் கதை மகனுக்கும் தந்தைக்கும் இடையில் ஏன் நடந்ததாக எழுதப்படவில்லை? இதை எத்தனைப்பேர் யோசித்திருப்பார்கள்?

மற்றொரு கதை,  வாழும் நாள் கொஞ்சமே, கணவன் மனைவி ஒருவரிடம் ஒருவர் அன்பு செலுத்தி வாழவேண்டும் என்று துவங்கும். கணவன் மனைவியிடம் சண்டைகள் வருவது இயல்பு. இப்பொழுது தேவையில்லாத சிறு சிறு மனக்கசப்புக்கெல்லாம் நீதிமன்றம் வரை செல்கிறார்கள்.  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் இவை சுலபமாக நீங்கிவிடும் என நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்கும் தம்பதிகளிடம் நீதிபதி சொல்லுவார். உடனே பெண் அவரிடம் பெண்களே விட்டுக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள், விட்டுக் கொடுக்க வேண்டுமென்றால் யார் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்பாள். நீதிபதி யார் புத்திசாலியோ அறிவாளியோ அவர்தான் விட்டுக் கொடுப்பார் என்பார்.  இதன் பிறகு யார் விட்டுக் கொடுக்க வேண்டும், விட்டுக் கொடுக்காவிட்டால் தனது அறிவு எத்தகையது என்று அந்தப் பெண்ணிற்கு தானே தெரிந்திருக்கும். இக்கதையில் பெண்தான் யார் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்பார். இந்தக் கேள்வியை ஆண் அல்லது கணவன் ஒருவன் அந்த நீதிபதியிடம் கேட்பதாக ஏன் கதை எழுதப்படவில்லை? இதே கதையை நீதிபதிக்குப் பதிலாக ஒரு ஒரு அறிவுரையாளர் அல்லது ஆன்மீக வழிகாட்டி போன்றவர் அறிவுரை கூறுவதாகவும் மற்றொரு வகை உண்டு. அக்கதையிலும் பெண்தான் கேள்வி கேட்பார்.

யார் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி கணவனுக்கு எழவே எழாது. அதாவது கதை எழுதியவருக்கு எழவே எழாது. இது ஏன் என  எத்தனைப்பேர் யோசித்திருப்பார்கள்?

Siragu pengalukkaana4

வேறொரு கதையில், ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒரு இளம்மனைவிக்கும் கணவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கும். இதை ஒரு மூதாட்டி கவனித்தவாறு இருப்பார். பின்னர் அந்தப் பெண்ணிடம் உனக்கும் உன் கணவருக்கும் என்ன சண்டை எனக் கேட்பார் (இது போன்ற ஒரு மூன்றாமவர் அடுத்தவர் குடும்ப விவகாரத்தில் தலையிடலாமா என்பதெல்லாம் மற்றொருமுறை அலச வேண்டிய செய்தி). அந்த இளம்பெண் தனது கணவருக்கு, அவர் அக்குடும்பத்தின் ஒரே மகனாக இருந்தும் குடும்பத்தில் அவருக்கு மதிப்பில்லை. இந்த அழகில் அன்று நடக்கும் கணவனின் தங்கை திருமணத்தில் இவள் சடங்குகளில் பங்கு பெறவேண்டும் என்று அவர் அழைக்கிறார். ஆனால் தனக்கு அவ்வாறு செய்ய விருப்பமுமில்லை உடல் நலமுமில்லை, சொன்னால் அவள் கணவருக்கும் புரிவதில்லை என்று மனக்குறையைக் கூறி சலித்துக் கொள்வாள்.  அந்த மூதாட்டி அவளுக்கு அறிவுரை கூறும் நோக்கில் தனது வாழ்க்கைக் கதையை பின்வருமாறு சொல்வார்.

எனது மகளும் மகனும் திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். நானும் என் கணவரும்தான் தனியே ஒருவருக்கு ஒருவர் துணை என்று வாழ்ந்தோம்.  சிலநாட்களுக்கு முன் எனது கணவரும் மறைந்துவிட்டார். இப்பொழுது அவர் இல்லாத தனிமை என்னை வாட்டுகிறது. அவருடைய பொருட்கள் அவர் நினைவை எனக்குக் கொணர்ந்து என்னை வதைக்கிறது. அவர் எனக்காகச் செய்த உதவிகளை, என்னை அன்புடன் நடத்தியதை, என் மீது அக்கறை காட்டிய நாட்களை நினைத்துக் கொள்வேன். நாம் வாழும் நாள் கொஞ்சம். இறுதி வரை நம்முடன் வருபவர் நம் வாழ்க்கைத்துணை மட்டுமே என்பார். இவ்வாறு அவர் கூறிய அறிவுரையைக் கேட்ட அந்த இளம்பெண் தனது கணவனைத் தேடிச் செல்வாள். இக்கதையில்  அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்களே.

ஆனால், உறுத்தலைத் தருவது,  இது போல கணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கதைகளோ, மனைவிக்கு ஆதரவாக அனுசரித்துப் போகும்படி கணவர்களுக்கு அறிவுரை சொல்லும் கதைகளோ யாருக்கும் எழுதவும் பரப்பவும் தோன்றாது இருக்கும் நிலையே. இந்தக் கோணத்தில்  எத்தனைப்பேர் யோசித்திருப்பார்கள்?

இன்னமும் இரண்டே அடியில் குறள் எழுதிய வள்ளுவர் நான்கு அடிகளில் ஒரு உயிருக்காக, அதாவது அவர் தனது மனைவிக்காகப் பாடல் எழுதினார் என, வாசுகியின் பெருமையை குறளின் பெருமையைவிடப் போற்றி சொல்லும் கதைகளும் குழுமங்களில் வலம் வரும். இது போன்ற நீதிநெறிக் கதைகளைப் படித்து அதைப் பகிரும்பொழுது, மீண்டும் மீண்டும் அவற்றைப் பெண்களே பெண்களுக்குப் பகிருவதன் நோக்கில்தான் எழுதியவர் வெற்றி இருக்கிறது. இந்த அளவு பெண்களுக்கு அறிவுரை கூற, பெண்களுக்கு அறிவுரை கூறுவதையே தனது கடமையாகக் கொண்ட கதைகள் எழுதுவோர் இருப்பதும், அதைப் பெண்களே எழுதுவதும் பகிருவதும் காலம் காலமாக நமது நாட்டு மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் பெண்களின் வாழ்வைக் கட்டுப்படுத்தும் மனப்பாங்குதான் தெளிவாக வெளிப்படுகிறது.

puratchi kavignar9

ஒழுக்கம் பெண்களுக்கு மட்டுமே உணர்த்தப்பட வேண்டியதா? குடும்பம் சிறப்பாக நடத்துவது பெண்கள் கையில் மட்டுமே இருக்கிறதா?  அதற்காக அனைவரையும் அனுசரித்துப் போவதும் பெண்களின் பொறுப்பு மட்டுமா?  எந்த ஒரு பிரச்சினை என்றாலும் நியாயம் யார் பக்கம் உள்ளது என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஆனால் கதைகள் யாவும் பெண்கள் எவ்வாறு கட்டுப்பாட்டுடன் வளர வேண்டும், பெண்கள் எவ்வாறு ஒத்துப் போக வேண்டும் என்று மட்டுமே எழுதப்படுகின்றன. எழுதுபவர்கள்  எவரும் ஆண் பிள்ளைகளை எப்படிப் பொறுப்புடன் வளர்க்க வேண்டும், ஆண்கள் பெண்களை தங்களுக்காகப் படைக்கப்பட்டவர்கள் என்பது போல நடத்தக் கூடாது போன்ற அறிவுரைகளை அள்ளி வழங்கும் கதைகளை எழுதினார்கள் என்றால் ஆண்கள் பெண்கள் முகத்தில் திராவகம் ஊற்றுவது, பெண்களுக்கெதிரான வன்முறைகள், காதலிக்கச் சொல்லி திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துவது குறையுமே. காலம் முழுவதும் துணையாக உடன் வரும் மனைவியிடம் குறைகள் இருந்தால் அவள் அனுசரிப்பதைப் போல இவர்களும் அனுசரித்துப் போக வேண்டும் என்று அறிவுரை சொல்லும் கதைகளை எழுதலாமே. ஏன் யாருக்கும் அவ்வாறு கதைகள் எழுதத் தோன்றுவதில்லை? பெண் எழுத்தாளர்கள் உட்பட யாருக்கும் அந்தக் கோணம் ஏன் தெரிவதில்லை?.

இன்னமும் எத்தனைக் காலம் “புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சி கண்ணே” என்ற பாடல் சாயலில் பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரைகள் சொல்லி நீதிநெறிக்கதைகள் பரப்பப்படும்.  ஒரு நீதிநெறிக் கதை என வந்தால் அது உணர்த்த விரும்பும் கருத்து  (moral of the story) என்ன? யாரைக் குறிவைத்து எழுதப்படுகிறது?  அதைக் கதையில்  யார் யாரிடம் சொல்வதாகக் காட்டுகிறார்கள்? பொதுவான நன்னெறி என்றால் இந்த இடத்தில் ஒரு ஆண் பாத்திரத்தை ஏன் காட்டவில்லை? எதற்காகப் பெண் குறிக்கப்படுகிறாள்? அவள் குறியீடாகக் காட்டப்படுவதால் யார் பலன் பெறுவார்? ஏன் நீதி பொதுவாக இல்லை? ஏன் பெண்களுக்கான அறிவுரைகள் பெண்கள் வாயிலாகவே சொல்லப்படுவது போலக் காட்டப்படுகிறது? அதன் அடிப்படை உளவியல் என்ன? அதைப் பகிரும் பெண்களின் மனப்பான்மை என்ன? என  இவ்வாறு ஒரு கதையைப் படித்து விட்டு உடனே பகிராமல் அது குறித்து கேள்விகள் கேட்கத் தொடங்கினால் கதைகளின் உள்நோக்கம் வெளிப்படும்.

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு. (குறள்: 424)

என்ற குறள் பிறர் வாயில் கேட்கும் சொற்களில் நுணுக்கமான பொருள்களைக் கண்டறிய வல்லது அறிவாகும் என்று கூறுகிறது.

அடுத்தவர் சொல்வதன் உள்நோக்கத்தை ஆராய்வதும் தேவை.  அதன் மூலம் அவர் தனது விருப்பத்திற்கேற்ப தனது சூழலை மாற்றிக் கொள்ள விரும்புகிறாரா? அதைத் தனது உரையாக, கதையாக, கவிதையாக வடிக்கிறாரா என்பது ஆராய்வது எளிது. இக்கட்டுரையின் நோக்கம், இதுநாள் வரை பெண்கள் வாழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சொல்லப்படும் அறிவுரைகளினால் யார் பயன்பெறுகிறார் என்பதைச் சுட்டும் நோக்கமாக இருப்பது போல,ஒவ்வொருவர் எழுத்தும், கருத்தும் ஒரு நோக்குடன்தான் வெளிப்படும். அதை அவ்வாறே ஏற்றுப் பரப்ப வேண்டும் என்பது யாருடைய கடமையும் அல்ல. அது ஏற்கத்தக்கதுதானா?  என ஆராய்ந்து, ஏதேனும் மறைமுக நோக்கம் என்றால் நமக்கு வந்ததைப் பரப்பாமல் இருப்பதும் ஒரு சமூக சேவையே.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்களுக்கான அறிவுரைகள்”

அதிகம் படித்தது