நவம்பர் 21, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்களை கற்காலத்திற்கு அனுப்புவதா!?

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

May 11, 2019

siragu-pengal1

பெண்கள் இன்று பல துறைகளில் முன்னேறிக் கொண்டு வருகின்றனர். இந்தியா போன்ற மிக பிற்போக்கு கொண்ட ஒரு நாட்டில் பெண்களின் முன்னேற்றம் என்பது பல போராட்டங்களை முன்னெடுத்தே இங்கு சாத்தியப்பட்டது. ஆனால் அண்மைக்காலங்களில் மீண்டும் பெண்கள் வீடுகளுக்குள் முடங்கிவிட வேண்டும் என்று மத பாசிச சக்திகள் செயல்படுவது மிகப் பெரிய அச்சமாக உருவாகி உள்ளது. மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்கள் ஒரு சமுகத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பது மிகத் தேவை. ஆனால் அந்த மனித பங்களிப்பை மதப்பண்பாடு மொழிப்பண்பாடு என சிதைப்பது பெண்கள் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும்.

சமூக வலை தளங்களில் இயங்கும் பெண்களுக்கு தரப்படும் அச்சுறுத்தல்கள், அவர்கள் பெரியாரியல் கருத்துகளைப் பேசும் போது அந்தப் பெண்களை பாலியல் ரீதியாக வசை பாடுவது, பெண்களின் அங்கங்களை அவர்கள் அறியாது படம் எடுத்து மிரட்டுவது போன்ற கொடுஞ் செயல்களில் ஈடுபடுவது, டிக்டாக்கில் பேசும் பெண்கள் மீது மணவிலக்கு நடவடிக்கைகள் என்று பெண்களை அனைத்து மதங்களும் பாகுபாடில்லாமல் அழுத்துகின்றன.

siragu pengalukku1

அண்மையில் மகாராட்டிரத்தில் 19 வயது பெண்னை தந்தையே சாதி மறுப்பு திருமணம் செய்த காரணத்தினால் உயிரோடு எரித்துக் கொன்றுள்ளார்! பெண்ணின் திருமணம் என்பது அவள் விருப்பம் சார்ந்தது என்ற தெளிவு இங்கு வர எத்துனை நூற்றாண்டுகள் ஆகுமோ தெரியாது! குடும்ப மானம், சாதி திமிர், மதக் கட்டுப்பாடு என அனைத்தும் ஒரு பெண்ணின் திருமணத்தின் மூலம் காப்பாற்றிக்கொள்ள துடிக்கும் ஆணாதிக்கச் சமூக அமைப்பு பெண்கள் மீது வன்முறைகளை செலுத்துகின்றது. காதலிக்க மறுத்த காரணத்தினால் அமில வீச்சு, அரிவாள் வெட்டு எனப் பெண்கள் ஒரு புறம் கொல்லப்பட, மறுபுறம் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்யும் போது இந்த சாதிய சமூகமும் பெண்களை கொன்றுப்போடுகிறது.

பெண் குழந்தைகளையும் பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்யும் கொடுமையும் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாய்மாமன், சித்தப்பா, போன்ற நெருங்கிய உறவுகளே பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது. ஒவ்வொரு குழந்தை மரணிக்கும் போதும் பெரும் அலையாய் எழும் எதிர்ப்புகள் சிறிது நாட்களில் ஓய்ந்து மற்றொருமொரு கொடுஞ்செயல் நடக்கும் போது மீண்டும் எழுகிறதே தவிர இந்த கொடுமைகளுக்கு நிரந்திர தீர்வு என்ன? என்பதை இச்சமூகம் சிந்திக்க மறுக்கின்றது.

இப்படி தொடர் பாலியல் வன்முறைகள் ஒருபுறம் எனின் மறுபுறம் பெண்களை மன ரீதியாக உடல் ரீதியாக ஒரு கூட்டம் ஒடுக்கி மீண்டும் கற்காலத்திற்கே அழைத்துச் செல்லத் துடிக்கின்றது. மகட்பேறு மருத்துவமனையில் பார்க்க வேண்டாம் வீட்டிலேயே பார்த்துக்கொள்ளலாம் என பெண்களை மரணத்திற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளுக்கு மரபு என்று பெயர் வைக்கின்றனர் . 50 வருடங்களுக்கு முன்னர் என் பாட்டி வீட்டிலேயே குழந்தை பெற்றார் என்று இதற்கு வக்காலத்து வாங்கும் கூட்டம் அதிகரித்துள்ளது. 50 வருடங்களுக்கு முன் பாட்டி 10 பிள்ளைகள் பெற்றார் அதில் 2 இறக்கும், எதனால் இறந்தது என்று கூட பாட்டிக்கு தெரியாது, பிள்ளைகளை பெற்று ஆரோக்கியம் கெட்டு வீட்டை தவிர வெளி உலகமே தெரியாமல் இறந்து போன பாட்டியுடன் இன்றைய பெண்களை ஒப்பிடுவது எவ்வளவு முட்டாள் தனம்? அன்றைக்கு தாய்-சேய் மரணங்கள் எவ்வளவு? 1970 களுக்குப்பின் மருத்துவமனையில் நடக்கும் மகட்பேறில் எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பதை படித்தாலே ஒரு சராசரி அறிவு கொண்ட மனிதனுக்கு தெளிவு ஏற்படும்.

Siragu pengal2

அமெரிக்கா போன்ற நாடுகளில் மகட்பேறு வீடுகளில் நடக்கும்போது கூட அதற்கான பயிற்சி பெற்ற midwife நம் ஊர் மருத்துவச்சிகள் போன்றோர் உடன் இருப்பார்கள். ஆனால் எந்த அனுபவமும் இல்லாமல் கணவனே மகட்பேறு யூடியூப் பார்த்து செய்துவிடலாம் என்று ஒரு பெண்ணை கொன்ற நிகழ்வும் தமிழ் நாட்டில் நடந்துள்ளது. மகட்பேறு அறுவை சிகிச்சை இல்லாமல் நடக்க ஆட்டுரலும், அம்மியும், உலக்கையும் சமையல் அறைகளில் மீண்டும் வர வேண்டும் என முட்டாள் தனமாக சில மரபு வழி சித்தர்கள் உளறுவதோடு சில மருத்துவமனைகளில் அதைக் கடைப்பிடிப்பதாக செய்திகள் வருகின்றது. அறுவை சிகிச்சை நடக்க பல்வேறு காரணங்கள் உண்டு. குழந்தை பிறக்கும் போது தாய்க்கு அல்லது சேய்க்கு ஏதாவது பிரச்சனை ஏற்படின் உடனே அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற வேண்டுமே தவிர்த்து இயல்பாக அதுவே நடக்கட்டும் என விட்டுவிட்டு வேடிக்கை பார்க்க முடியாது. அறுவை சிகிச்சை இன்றி குழந்தை பெற உடற்பயிற்சிகள் உதவலாம். அதற்காக சமையலில் ஆட்டுக்கல்லையும், அம்மிக்கல்லையும் கொண்டு வந்து போட்டு மீண்டும் பெண்களை கற்காலத்திற்கு அழைத்துச் செல்வது மூடத்தனம் இல்லையா? எந்தப் பயிற்சியாக இருந்தாலும் அதற்கு பெண்களின் உடல் ஏற்கனவே பழக்கப்பட்டதாக இருந்தால் மகட்பேறில் ஒரு சிக்கலும் இல்லை.

புதிதாக ஒன்றை மகட்பேறு காலத்தில் அறுவை சிகிச்சை இன்றி குழந்தை பிறக்க பழக்குவது சிக்கல் என மருத்துவர்களே கூறுகின்றனர். பதின்ம பருவத்தில் இருந்தே உடற்பயிற்சி செய்து, மகட்பேறின் போதும் உடற்பயிற்சிகளை கைவிடாமல் செய்யும் மேற்கத்திய பெண்களுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சை இன்றித்தான் குழந்தைகள் பிறக்கின்றது. அதற்காக அவர்கள் சமையலறையில் தான் பயிற்சி பெற முடியும் என கற்காலத்திற்கு செல்வதில்லை. மரபை மீட்கிறோம் என பெண்களை மீண்டும் சமையலறையில் முடக்க, வீடுகளில் பாத்திரம் கழுவ எனப் பயன்படுத்துதல் முறையா? எனச் சிந்திக்க வேண்டும்! உடற்பயிற்சி பழகுங்கள், ஆட்டுக்கல்லில் இட்லி தோசை மாவு அரைத்தால் தான் உடல் வலுப்பெறுமா? டம்பெல்ஸ், பார்பெல்ஸ் பெண்கள் தினமும் தூக்கி உடற்பயிற்சி செய் தாலும் உடல் வலுப்பெறும்.

குகைகளுக்கு மனிதன் திரும்பவும் முடியாது தானே?

உழவுத் தொழில் என்பதே இயற்கைக்கு எதிராக மனிதன் உருவாக்கியது, அதில் இருந்து தான் பெண் அடிமையும், மனிதர்களில் ஏற்றத் தாழ்வும் கற்பிக்கப்பட்டது என்பதை மரபை மீட்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் வேட்டையாடிச் சமூகமாக மாற முடியுமா? முடியாது அல்லவா? பெண்களின் முன்னேற்றமும் அவ்வழிப்பட்டதே! பெண்கள் தான் தங்கள் உரிமைகளை வென்றைடுக்க பேச வேண்டுமே தவிர்த்து தங்களுக்காக தங்கள் கணவர்களை பேச வைத்து உரிமைகளை பெற முடியாது. அவள் உடம்பின் மீதும், கருப்பையின் மீதும் அவளின் அதிகாரமே முதன்மையாது. எல்லாவற்றையும் விட அவளின் உயிர் மிக உன்னதமானது. மரபு பெயரில், மதங்கள் பெயரில், பண்பாட்டின் பெயரில் அதை அழிக்க யாருக்கும் எவருக்கும் உரிமை இல்லை.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்களை கற்காலத்திற்கு அனுப்புவதா!?”

அதிகம் படித்தது