மார்ச் 6, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்ணியக் கட்டுரையாளர்- நீலாம்பிகை அம்மையார்

முனைவர் மு.பழனியப்பன்

Aug 26, 2017

Siragu lady writer1

தமிழ் இலக்கியப் பரப்பில் கதை, கவிதை போன்ற வகைகளில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லுகிற அளவிற்கு உள்ளது. ஆனால் கட்டுரைகளைப் பொறுத்தவரையில் அவ்வெண்ணிக்கை குறைவாகவே உள்ளது.  பெண் கட்டுரையாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். உரைநடை தமிழில் முகிழ்த்த காலம் தொட்டே இவ்வெண்ணிக்கை குறைவு இருந்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். கட்டுரைகளை எழுதுவதற்கு என்று ஒரு தகுதி இருக்கவேண்டும் என்ற எண்ணம், கட்டுரைகளை விரும்பிப்படிக்கும் வாசகர்கள் குறைவு, கட்டுரையின் கருப்பொருள் தேர்வில் ஏற்படும் சிக்கல்கள் என்று பல தடைகள் காரணமாக இவ்வெண்ணிக்கைக் குறைவு நிகழ்ந்திருக்கலாம், தொடர்ந்து வரலாம்.

தமிழில் மூத்த பெண் கட்டுரையாளர் என்று நீலாம்பிகை என்ற அம்மையாரைக் குறிப்பிடலாம். இவர் மறைமலை அடிகளாரின் மகளாகவும், மாணவியாகவும் விளங்கியவர்.  இவர் ‘‘முப்பெண்மணிகளின் வரலாறு(1928), பட்டினத்தார் போற்றிய மூவர்(1934), தனித்தமிழ்க் கட்டுரைகள், வடசொல் தமிழ் அகரவரிசை(சிற்றகராதி), ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் (1952)” ஆகிய நூல்களைப் படைத்தவராக அறியப் பெறுகிறார். அகராதித் துறையில் நுழைந்த பெண் இவர் என்றும் பெருமை கொள்ள முடிகின்றது.

இவரின் கட்டுரை நூல்கள் அனைத்தும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில் ஆசிரியையின் வெளியீடாக வெளியிடப் பெற்றுள்ளன. இவரின் சில நூல்கள் மறுபதிப்புகள் பெற்றுள்ளன.

குறிப்பாக இவரின் படைப்புகளில் ‘‘முப்பெண்மணிகளின் வரலாறு” என்ற கட்டுரை நூல்  ஆயித்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் வாழ்ந்த பெண்களின் நிலையை தன் கட்டுரைக் கருப்பொருளோடு உடன் கூட்டி உரைப்பதாக உள்ளது.

 ‘நந்தமிழ் நாட்டவர் தம் பெண்மக்கள் கல்வியில் உயர்ந்து மேன்மக்களாக வேண்டுமென்று கருதுகின்றார்களில்லை. இவர்கள் தமக்குப் பெண்மக்கள் பிறந்தவுடனே வருந்துவது மட்டுமின்றி அப்போதே அவர் தமக்குக் கணவர் யார் அமைவார்களென்று கவலை கொள்கின்றனர். இன்னும் ‘‘தீவினை செய்தவர்களே பெண்மக்களாய்ப் பிறக்கின்றனர். இவர்கள் வீட்டு வேலைகளை ஒழுங்காகக் கற்றுக் கொண்டாற் போதும். இவர்கட்குக் கல்வி எதற்கு, இவர்கள் கல்வி கற்று ஆண்மக்களைப் போல் பொருள் தேடுவார்களா இவர்கள் அங்ஙனம் கற்றுப் பேரறிவாளர்களானாலும் ஊரார்க்குப் பயன்படுகின்றவர்களேயல்லாமல் நமக்குச் சிறிதும் பயன்படார்’ என்று பலவாறாகக் கூறிப் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதில் சிறுதும் கருத்தில்லாதவர்களாக இருக்கின்றார்கள்” என்ற இந்த நூலின் முன்னுரைப் பகுதி ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னதான சிந்தனை ஆகும். ஆனாலும் இந்தச் சிந்தனையின் ஒரு சொல்லைக்கூட விலக்கமுடியாத நிலைதான் இன்னமும் இந்நாளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை எண்ணுகையில் பெண் விடுதலையின் வெற்றி பெறா நிலை புரியவரும்.

இக்காலப் பெண்கள் அதிகமாகக் கற்கிறார்கள். அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள். அவர்களின் கல்வி ஆங்கிலக் கல்வியாகச் செழிக்கிறது. இதனையும் நீலாம்பிகை அம்மையார் கணக்கில் கொண்டு அது குறித்தும் தம் கருத்தை இம்முன்னுரைப் பகுதியில் எடுத்துரைக்கின்றார்.

‘‘சிலர் மட்டுமே தம் பெண்மக்களுக்குக் கல்வி கற்பிக்க முன் வ்ருகின்றார்கள். ஆனால் இவர்கள் முயற்சியும் சிறந்த முயற்சியின் பாற் பட்டதன்று. இவர்கள் தம் பெண்மக்களை உயர்தரக் கல்லூரிகட்கு அனுப்பி ஆங்கிலக் கல்வி மட்டுங் கற்றுப் பெரும் பட்டங்கள் பெறும்படி செய்கின்றார்களே ஒழிய அவர்கள் தம் தாய்மொழிக் கல்வியிலும் பெரும் புலமை அடையுமாறு ஊக்குவிக்கின்றார்களில்லை. இவர்கள் தம் பெண்மக்கள் ஆங்கிலக் கல்வியில் உயர உயரத் தம் தாய்மொழியினிடத்தில் சிறிதும் பற்றில்லாமல் நம் நாட்டுப் பழக்க வழக்கங்களையும் அறவே மறந்து மேனாட்டவர்களைப் போல் நடக்கத் தொடங்குகின்றனர். ‘தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிவு நூற்கல்வி இல்லாத பெண்மக்கள் அறிவுடையராதல் முடியாது’ என்று இம்முன்னுரைப் பகுதி மேலும் தொடர்கிறது.

இதனுள் இவ்வம்மையார் உணர்த்த வரும் கருத்தின் ஆழம் இற்றைக் காலத்திற்கு மிகவும் பொருந்துவது. தாய்மொழியைப் பற்றிய அறிவு,தாய்மொழி இலக்கியங்கள் பற்றிய அறிவு என்பது பண்பாடு, பழக்க வழக்கங்கள் உடன் கொண்டு வளரும் அறிவு என்பதை இவ்வம்மையார் வலியுறுத்துகின்றார்.

Siragu lady writer2

இக்கட்டுரையை இவ்வம்மையார் எழுதியபோது மேனாட்டவர்கள் நம் நாட்டிலேயே ஆட்சி செலுத்தி வந்தனர். தற்போது அவர்கள் சென்றுவிட்டபோதும் மேனாட்டாரைப் போல் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளும் முறைமையிலேயே பெண்கள் கற்பது, பழகுவது போன்றன இருப்பதை எண்ணுகையில் இவ்வம்மையாரின் கருத்து நடைமுறையாக்கப்பட வேண்டும் என்ற பெருநோக்கத்தின் தேவை தெரியவருகின்றது.

இப்பழக்க வழக்கங்களை, மரபுகளை உண்டாக்குவதற்காகவே தான் கட்டுரைகளை, நூல்களை எழுதுவதாக இவ்வம்மையார் குறிப்பிடுகின்றார்.  இவர் இராயபுரம் பகுதியல் இருந்த நார்த்விக் பெண்கள் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக விளங்கியவர் என்ற நிலையும் இங்கு எண்ணத்தக்கது. பெண்கள் கல்லூரி என்ற கட்டமைப்பு முழுக்க முழுக்கப் பெண்கள் நலம் சார்ந்தது என்பது கொண்டு இவ்வகையில் அவரால் சிந்திக்க முடிந்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் ஆகிய மூன்று பெண்மணிகளின் வரலாறுகளை மேற்காட்டிய கட்டுரை நூலில் தனித்தனியாக முதலில் காட்டுகின்றார். அதன்பின் இப்பெண்கள், இவர்களின் வாழ்வு, இவர்களின் செயல்கள் குறித்த தன் ஆய்வுக் கருத்துக்களை இத்தனித்தனிக் கட்டுரைகளின் பின்பகுதியில் எடுத்துரைக்கின்றார். இதே முறை பட்டினத்தார் பாராட்டிய மூவர் என்ற நூலிலும் கடைபிடிக்கப் பெற்றுள்ளது. அதாவது எடுத்துக் கொண்ட பொருளின் அடிப்படைக் கருத்துக்களை முதலில் அறிவித்து விட்டு அதன்பின் ஆராய்ச்சி செய்திகளை அளிப்பது என்ற முறைமை இவரிடம் காணப்படுகிறது.

 இவ்வாராய்ச்சிப் பகுதிகளில் பெண்கள் கடைபிடிக்கவேண்டிய நெறிகள், தற்காலத்தில் தோன்றும் முரண்பாடுகள் போன்றன குறித்து ஆங்காங்கே எடுத்துரைக்கின்றார். இக்கருத்துக்கள் தேர்ந்த பெண்ணியவாதியின் கருத்துக்களாக இருக்கின்றன.

பெண்களுக்கு உரிய குணங்களுள் ஒன்று பேதைமை ஆகும். இப்பேதைமை என்பதை மேலோட்டமாகப் பொருள்கொள்வதானால் ‘‘அறிவின்மை’ என்று பொருள் கொண்டுவிடமுடியும். மேலும் ‘‘பேதை’ என்ற சொல் பொதுவாக அறிவற்றவர்களைக் குறிப்பதாக இருப்பினும், பெரும்பாலும் பெண்களுக்கே உரிய சொல்லாக இது நடைமுறையில் விளங்குகிறது. பெண்கள் அறிவில்லாதவர்கள் என்பதால் அவர்களைக் குறிக்கும் சிறப்புப் பெயராகவே ‘‘பேதை’ என்ற பொதுப் பெயர் மாறிவிட்டது. இவ்வம்மையார் இதற்குத் தரும் விளக்கம் புதுமையாய்ப் பொலிகிறது.

‘‘பேதைமை என்பது ‘‘கொளுத்தக் கொண்டு, கொண்டது விடாமை’ என்றார் ஆசிரியர் நக்கீரனார். இதன் பொருள் பேதைமையென்று சொல்லப்படுவது அறிவுடையோரால் அறிவுறுத்தப் பட்டவைகளை ஏற்றுக் கொண்டு அவைகளை எளிதிலே வெளியிடாது தக்க காலம் வாய்த்த பொழுது பிறர்க்கு அறிவித்து வெளிவிடுதலாம்.  அறிவுடைய பெண்மக்கள் எதனையும் ஆராய்ந்தறிந்து நேரமறிந்து சொல்லுவர். ஊழிக்காலந் தவமுயலும் தவமுடையாரும் பெறர்க்கரியதாம் இறைவனது பேரருட்டிறத்தைத் தாம் பெற்றதனை அம்மையார் தம் கணவருக்கு உடனே சொல்லாது மயங்கினார்’ என்ற இப்பகுதி காலைக்காலம்மையார் முதலிலேயே ஆண்டவன் அருளால் பழம் கிடைத்தமையை, அதாவது தனக்கு உள்ள அருள் திறத்தைக் கணவனிடம் தெரிவிக்காமல் விட்டதற்கான காரணத்தைக் காட்டுவதாகும். பேதை, பேதைமை என்ற சொல்லின் இழிபொருளை(திரிக்கப் பெற்ற பொருளை)க் களைய இப்பாடு பட வேண்டி இருக்கிறது. பெண்களும் ஆய்ந்தறியும் குணம் உடையவர்கள் என்பதைக் காட்ட இத்துணைத் துயரப்படவேண்டி இருக்கிறது.

காரைக்காலம்மையார் பேயுருவம் பெற்றார். இது எதனால் பெறப்பெற்றது என்பதற்கு இவ்வாசிரியர் கூறும் காரணம் புதுமையும் வளமையும், தற்காலச் சூழலும் சார்ந்தது.

 ‘‘அம்மையார் தாம் எழில் மிக்க உடம்போடிருந்தால் வெளியே நினைத்த இடங்கட்கெல்லாம் போய்ச் சிவ பெருமானை வணங்குவதற்கு இடையூறாகுமென்றும், உலகத்தார் தொடர்பை அறவே நீக்கவேண்டுமென்றும் பேய்வடிவு பெற்றனர்.’

இப்பகுதியில் பெண்களின் உடல் அழகு அவர்களுக்குத் தரும் இடைஞ்சலை வெளிப்படுத்துவதாக உள்ளது. பெண்களை ஆண்கள் அழகின் பொருட்டாகவே அணுகும் முறைமையைச் சாடுகிறது. பெண்கள் நினைத்த இடத்திற்குச் செல்ல இயலா நிலையை எடுத்துக்காட்டுவது.

திலகவதியார் பற்றிய ஆய்வுப் பகுதியிலும் அவரின் வரலாற்றில் உள்ள பெண் மையப் பகுதிகளை இவர் பெண்ணியத் திறனாய்வு அடிப்படையில் திறனாய்வு செய்கின்றார். திலகவதியார் தனக்கு முன்னரே நிச்சயிக்கப் பட்ட ஆண்மகன் (கலிப்பகை) இறந்தபின் தனக்கு மணவாழ்வு வேண்டாம் என்று விலக்கி தன் தம்பி வாழ்வு உளதாகவேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்தார்.

இவரின் இம்முடிவு குறித்து இக்காலச்சிந்தனையோடு இவர் சில கருத்துக்களைத் தருகின்றார். ‘‘அறிவுள்ள தாய் தந்தையரை வாய்க்கப் பெற்ற பெண்மக்கள் தம் பெற்றோர் தஹ்சொற் கிணங்கி அவர் குறித்த ஆடவரை மணஞ் செய்து கொள்வது குற்றமாகாது. அங்ஙனமாயினும் தம் மக்களுக்கு மாறான கணவன்மாரை அவர்களொடு பிணைத்துவிட்டு அதனால் அவர் துண்புறுதலை பெற்றோர் காணப் பொறுப்பரோ என வினவின்  எத்தனையோ தாய் தந்தையர் பொருள் மிகுதியாயுள்ள கிழவர்க்கும் முன்னரே மனைவியுள்ள ஆடவர்க்கும், செல்வமுடைய தீயவர்க்குந் தம் மக்களை மணஞ் செய்து கொடுத்துப் பின்னர் அதனை ஊழ்வினைப் பயன் என்கின்றனர். பிறகு தம் மக்கள் செல்வம் இழந்தோ அல்லது தம் கணவன்மார் கொடுஞ் செயலுக்கு ஆளாகியோ வருந்தும் போது கூட ஊழ்வினை யெனக்கூறுவாரே ஒழியத் தாம் செய்தது பிழை என்று உணரார். ”

இப்பகுதியில் பெண்களை மணம் செய்விக்கின்றபோது ஏற்படும் முறைமாற்றங்களை, அவதிகளை இவ்வம்மையார் தெளிவாக எடுத்துரைக்கின்றார். திலகவதியார் தாய், தந்தை தனக்குக் காட்டிய ஆண்மகனே தன் கணவன் என்று கொள்ளுவதற்கு அவரின் தாய் தந்தையர் நல்ல தேர்வைச் செய்திருந்தனர். ஆனால் தற்காலத்தில் அத்தேர்வு முறையற்றதாக இருக்கிறது என்ற செய்தி இங்கு பதியவைக்கப் பெற்றுள்ளது.

இதுபோலவே மங்கையர்க்கரசியார் பற்றிய கட்டுரையிலும் இவரின் பெண்மைத் தெரிக்கும் கருத்துக்களைக் காணமுடிகின்றது. சேக்கிழார் காட்டும் மங்கையர்க்கரசியார் பற்றிய பாடல்கள் குறைந்த அளவினவே. இக்குறைவை எடுத்துக்காட்டாது இக்கட்டுரையை மிக விரிவாக இவ்வாசிரியர் எழுதியுள்ளார். இவ்வாராய்ச்சிப்பகுதியில் மங்கையர்க்கரசியாரின் வாழ்க்கைச் சிறப்பிக்கப்படுகிறது. அதனுடன் முன்னர் சுட்டியதுபோலவே பல தற்காலக் கருத்துக்களும் எடுத்தாளப் பெறுகின்றன.

‘தையல்சொல் கேளேல்’ என்ற வாக்கு இங்கு ஆய்வுப் பொருளாகின்றது. தையல் – என்னும் சொல்லுக்குப் பெண் என்று பொதுப்பட பொருள் கொண்டாலும் பெண்ணிலும் அறிவுடையாரும், அறிவிலாதவரும், தீயோரும் என மூவகையினர் இருத்தலால் ஒளவையார் கூறிய தையல் சொல் கேளேல் என்னும் இச்சொற்றொடரிலுள்ள தையல் என்னும் சொல்லுக்குத் தீய தன்மையுடைய பெண் என்றே பொருள் கொள்ளல் வேண்டும். ஒழுக்கமில்லாக் கொடிய பெண் மக்களை நம்பி அவர் சொற் கேட்டு எத்தனையோ ஆண் மக்கள் தம் அருமை மனைவி மக்களை ஊணுக்கும்  உடைக்கும் காற்றாய்ப் பறக்கவிட்டுத் தம் பெரும் பிறவியைப் பாழாக்குவது கண்டே அறிவிற் பெரிய ஒளவையார் அவர்களை நோக்கிக் கொடிய பெண்களது சொற்கேட்டு வீணாகாதே என்று கூறினார்.

பெண் கூறிய பழமொழியின் உண்மையை உணர்த்த இத்தனை பாடு படவேண்டி உள்ளது.

இவ்வாறு நீலாம்பிகை அம்மையார் தேர்ந்த பெண்ணியச் சிந்தனை உள்ளவராக இருந்து கட்டுரைகளைப் படைத்துள்ளார். பெண்கல்லூரியில் பணிபுரிதல் என்ற நிலையில் பெண்களை, பெண் உலகை எப்போதும் கண்டுகொண்டிருக்கிற இவரின் சிந்தனையில் பெண்ணியம் மிளிர்வது என்பது வியக்கத்தக்கதல்ல. குறிப்பாக பெண்களுக்கு எதிரான சொல்லாடல்களைத் தகர்ப்பது என்ற நோக்கில் இவரின் எழுத்துக்கள் அமைந்துள்ளன என்பது இவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்ற செய்தியாகும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்ணியக் கட்டுரையாளர்- நீலாம்பிகை அம்மையார்”

அதிகம் படித்தது