மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்ணியமும் பெண்களின் எழுத்தும்

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Nov 8, 2014

penniyam1நமது கலாச்சாரச் செயல்பாடுகள் அனைத்திலும் பெண் இரண்டாந்தர இடம் பெற்றிருக்கிறாள், ஆணுக்கு அடிமையாக இருக்கிறாள் என்பது பெண்ணியக் கொள்கையின் அடிப்படையான கருத்து. பெண்களின் ஒடுக்குமுறையை இல்லாமல் ஆக்குவதும் ஆண்களின் பார்வையில் கட்டப்பட்டுள்ள இன்றைய கலாச்சாரத்தைஅதாவது ஆணாதிக்கத்தை, தந்தையாதிக்க முறையை, இவற்றின் அடிப்படையிலான கருத்துகளை இல்லாமல் போக்கி, பெண்களின் விழைவுகள், நோக்கங்கள் ஆகியவற்றை முழுமையாக ஏற்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவது பெண்ணியத்தின் நோக்கம். பெண்ணியத்திற்குள் எத்தனையோ பிரிவுகள் இருப்பினும் மேற்கண்ட இலக்கு எல்லாவற்றிற்கும் பொதுவானது. புதிதாக உருவாகும் அப்படிப்பட்ட ஒரு சமூகம் எப்படியிருக்கும் என்பதன் கற்பனையிலும், அதனை உரு வாக்கக்கையாள வேண்டிய நடைமுறைச் செயல்பாடுகள் யாவை என நிர்ணயிப்பதிலும்தான் பல்வேறு பெண்ணியக் கொள்கைகளும் வேறுபடுகின்றன.

முதன்முதல் பெண்ணியச் சிந்தனைக்கான சான்றாக நமக்குக் கிடைப்பது 1792இல் மேரி உல்ஸ்டன்கிராஃப்ட் எழுதிய ‘தி விண்டிகேஷன் ஆஃப் தி ரைட்ஸ் ஆஃப் விமன்’ என்ற நூல். ஓர் அரசியல் செயல்பாட்டு முறையை அதில் அவர் முன்வைக்கிறார். மேற்கத்தியப் பெண்ணியத்தின் மையமாக அவர் சிந்தனை ஏற்கப்பட்டுள்ளது.

உலகமுழுவதுமே பெண்ணடிமைத்தனம் நிலவுகிறது. அதிலும் சாதியமைப்புடைய இந்தியச் சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் மிகமிக அதிகமாகவே இருந்தது, இருக்கிறது. தொடக்கத்தில் ஆண்களுக்கு நிகரான பொருளாதார, அரசியல் சமத்துவத்தைப் பெறுவதாகவே பெண்களின் இயக்கங்கள் அமைந்தன. பாலியல் சமமின்மை பற்றி 19ஆம் நூற்றாண்டில் வெளியான சில நூல்களால் பெண்ணியத்தின் வேகம் அதிகமாகியது. சான்றுக்கு ஜே.எஸ். மில், ஹாரியட் டெய்லர் மில் இணைந்து எழுதிய தி சப்ஜெக்ஷன் ஆஃப் விமன் என்ற நூலைச் சொல்லலாம். பெண்கள் குழுக்கள் பலவும் சமத்துவப் போராட்டத்தில் இறங்கினர். இருபதாம் நூற்றாண்டில் சிவில் உரிமைக் குழுக்களால் பெண்களுக்கு வாக்குரிமை, பொருளாதார சமத்துவம் போன்றவை ஓரளவேனும் கிடைத்துள்ளன. மேலும் சமமான கல்வி, தாய்சேய்நலம், சம ஊதியம் போன்ற நிலைகளும் ஏற்பட்டன. பெண்களின் மேம்பாட்டுக்குச் சமமான கல்வி, பொருளாதார நிலை, அரசியல் சமத்துவம் ஆகியவை அடிப்படை என்பது எங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை. இவற்றிற்காகப் போராடுவதையும் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் எனக் கருதுபவர்கள் பலர் உண்டு. பெண்ணியத்தின் முதல் நிலை இது.

penniyam2பெண்ணியத்தின் இரண்டாம் நிலையாக, பெண்ணாக இருக்கும் (ஒடுக்கப்படும்) நிலை என்பது இயற்கையான ஒன்றல்ல என்ற விஷயத்தை ஏற்றுக்கொள்வதும் புரிய வைப்பதும் அமைந்தன. உலகில் எந்த ஒன்றின் மேலாண்மையும் இயல்பானதல்ல. ஆணாதிக்கமும் இயல்பான ஒன்றல்ல. எனவே அதை மாற்ற முடியும், மாற்ற வேண்டும் என்ற உறுதி ஏற்படுகிறது. பாலியல் அடையாளங்களும் அவற்றிற்கான கலாச்சாரச் செயல்பாடுகளும் மொழி, கலாச்சார அமைப்புகளால் உருவானவை. சான்றாக, பெண் பூப்படைவது ஒரு பாலியல் அடையாளம். அதற்கான கலாச்சாரச் செயல்பாடுகளாக நீராட்டு விழா எடுத்தல், தனியே அமரச் செய்தல், மாமன்மார் சீர் செய்தல் போன்றவை நமது கலாச்சார அமைப்பினால் உருவான விஷயங்கள். இது உலகப் பொதுவானதல்ல. சான்றாக, ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய நிலை கிடையாது.

ஆண்மை, பெண்மை என்பவற்றிற்கான அடையாளங்கள், இப்படி நடந்து கொள்ளவேண்டும், பழக வேண்டும் என்பன போன்ற கட்டளைகள் கலாச்சாரத்தினால்தான் அளிக்கப்படுகின்றன. இப்புனைவுகள் ஆதிக்கம் சார்ந்த உத்தியாக மாறும் போது தகர்ப்பமைப்பும், எதிர்ப்புனைவுகளும் தேவைப்படுகின்றன. ஆணாதிக்கம் மட்டுமல்ல, எந்த வகை ஆதிக்கமாயினும், படைப்பிற்கும் புனைவுக்கும் கற்பனைக்கும் எதிரானவை. உயிர்ப்புள்ள கவிதை, கலைப்படைப்புகள் எவ்வித அதிகாரத்தையும் மையமாகக் கொள்வதில்லை.

இந்தியாவில் பெண்ணியம்:

penniyam51030-களிலேயே பெண்களின் மேம்பாடு என்ற சொல்லாடல் பிறந்துவிட்டது. என்றாலும் அது பெண்ணியச் சிந்தனை குறித்ததல்ல. ஆயினும் எந்த ஒரு கருத்தமைவும் ஒரு நாட்டிற்கே உரியதல்ல என்பதால், மேற்கத்திய நாடுகளின் பெண்ணியக் கருத்துகள் விரைவில் இங்குப் பரவலாயின. இந்தியாவில் முதலில் சீர்திருத்த இயக்கங்கள் தான் தோன்றின. உதாரணமாக, சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என்ற வழக்கத்தைக் கைவிட வேண்டி இராஜாராம் மோகன்ராய் போராடி அதற்கான சட்டத்தைக் கொண்டுவந்தார். பலதார மண எதிர்ப்பு, பெண் கல்வி, பெண்களுக்குச் சொத்துரிமை ஆகியவை குறித்தும் அவர் போராடியிருக்கிறார்.

மக்களின் உரிமைகள் பற்றியும், மக்களில் சரிபாதித் தொகையினரான பெண்களின் உரிமையற்ற நிலை பற்றியும் விழிப்புணர்ச்சி தோன்றியபோது, பெண்ணியமும் எளிய வடிவில் தோன்றிவிட்டது. தேசியப் போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் பெண்கள் சார்ந்த விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டது. விதவை மறுமணம், பலதார மணத் தடை, சரி ஒழிப்பு, குழந்தை மண எதிர்ப்பு, முகத்திரை ஒழிப்பு, பெண் கல்வி, சட்ட ரீதியான சமத்துவம் போன்றவை நிகழ்வதற்கான சாத்தியப்பாடுகள் பற்றிப் பெரிதும் அக்காலத்தில் பேசப்பட்டது. விதவை மறுமணத்திற்காகப் பாடுபட்டவர்களில் முக்கியமானவர் ஈசுவர சந்திர வித்தியாசாகர். குழந்தைத் திருமணத்திற்கு எதிராகப் போராடியவர்களில் முக்கியமானவர் கேசவ சந்திரசேன். இப்படிப் பெண்களுக்கான போராட்டங்களில் முதன்முதலில் ஆண்களே ஈடுபட வேண்டியதாயிற்று.

penniyam11சுதந்திரப் போராட்ட காலத்தில் பெண்கள் ஏராளமாக அதில் பங்கேற்றனர். மராட்டியத்தில் ஜோதிராவ் பூலே பிராமண எதிர்ப்பையும் பெண் விடுதலையையும் ஒன்றிணைத்துப் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் ஈ.வே.ரா. 1920 முதலாகவே பெண்கள் அடிமைத்தனத்தை நீக்கவேண்டுமென்று குரலெழுப்பிப் போராடிவந்தார். பாரதியாரும் பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்திருப்பதை அனைவரும் அறிவர். இந்தியா சுதந்திரம் பெற்ற பின் ஆங்காங்கு பெண்கள் அமைப்புகள்- மஹிளா மண்டலிகள்- தோன்றின. 1960களின் நடுப்பகுதிவரை இந்த அமைப்புகள் எந்தவிதப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை. ஆந்திரம், பிஹார், மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் பண்ணையார்களை எதிர்த்துப் போராட்டங்கள் உருவாகியபோது பெண்கள் அவற்றில் இணைந்தனர். 1980க்குப் பின் தோன்றிய மகளிர் அமைப்புகளைப் பின்வருமாறு பகுக்கலாம்.

1. தன்னுரிமை அமைப்புகள்

2. வெகுஜன அமைப்புகள்

3. பெண்களுக்கு உதவி புரிய என ஏற்பட்ட அமைப்புகள்

4. தொழில் முறைச் சங்கங்கள்

5. அரசியல் கட்சிகளின் மகளிர் பிரிவுகள்

6. பெண்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்கின்ற குழுக்கள்

புதிய மார்க்சிய இயக்கங்கள் உருவாக்கிய பெண் குழுக்கள் பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராகப் போராடி வருகின்றன. பெண்களின் முற்போக்கு அமைப்பு, சமத்துவத்திற்கான பெண் போராளிகள் குழு போன்றவை இப்படிப்பட்டவை. சில சமயங்களில் தொழிலாளர்கள், பழங்குடி மக்கள், சாதி எதிர்ப்பு அமைப்புகள் இவற்றோடும் பெண்கள் இணைந்து போராடியுள்ளனர். பெண்கள்மீது நடத்தப்படும் கொடுமைக்கு எதிரான இயக்கங்களாக, தஹேஜ் விரோதி சேத்னா மஞ்ச், சிப்கோ இயக்கம், ஷகாதா இயக்கம் போன்றவற்றைக் கூறலாம். 1984இல் தமிழகத்தில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. உலக மகளிர் தசாப்தத்தின் இறுதியில் 1985இல் மும்பையில் நடந்த கருத்தரங்கு மகளிர் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதாக அமைந்தது. மேற்கண்டது போன்ற அமைப்புகள் பல இருப்பினும், தன்னுரிமை அமைப்புகளே சிறப்பாகச் செயல்படுவதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

சோஷலிச ஆட்சி அமையும்போது சாதிப் பிரிவினைகள் மறைந்துபோகும் என்று மார்க்சியவாதிகள் கருதினார்கள். அதுபோலவே பெண்கள் உரிமைகளும் தானாகக் கிடைத்துவிடும் என்று நினைத்தார்கள். இந்திய மார்க்சியவாதிகளின் குறைபாடு இது. வர்க்கப் போராட்டம் ஒன்றைத் தவிர பிற சமூக வேறுபாடுகள் குறித்து அவர்கள் அதிகம் கவனம் செலுத்தியதில்லை. சாதியத்தைப் போலவே, இந்தியாவில் பெண்கள் சந்திக்க வேண்டிய பிரச்சினைகளும் வேறுபட்டவை. இங்குப் பெரும்பாலான பெண்களுக்குப் படிப்பறிவு இல்லை என்பது முதல் குறை. ஆனால் படித்த பெண்களும், வேலை கிடைத்துப் பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற பெண்களும் கூட ஆணாதிக்கத்துக்கு உட்பட்டே இயங்குகிறார்கள். போராடுவதில் விருப்ப மற்றவர்களாக உள்ளனர்.

penniyam4பிற எந்த இயக்கத்தினை விடவும், பெண்ணியம் சார்ந்து போராட்டங்களை நடத்துவது கடினம். காரணம், பெண்கள் குடும்பத்தின் இன்றியமையா அங்கமாக உள்ளனர். தந்தை, கணவன், மாமனார், மாமியார், பிற உறவினர்கள், மகன் போன்றோருக்குக் கட்டுப்பட்ட நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். நம் நாட்டில் அறிவியல் சிந்தனை இல்லாததால், குழந்தை பிறக்கவில்லை என்றாலும் பெண்தான் குற்றம் சாட்டப்படுகிறாள்.

மேலும், இந்தியப் பெண்கள், பணியிடத்திலும், வீட்டிலும் என இரண்டு இடங்களிலும் வேலைசெய்ய வேண்டியிருக்கிறது. எனவே அவர்களுக்கு ஓய்வு என்பதும் இல்லை. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு பார்க்கும்போது, இந்தியாவில் பெண்கள் விழிப்புணர்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மிகுதி என்பதாகவே மதிப்பிடலாம்.

இந்திய நூல்களில் பெண்கள் நிலை:

penniyam7இந்திய அளவில் மகாபாரதம் பெண்கள் நோக்கில் ஆய்வு செய்யப்பட வேண்டிய சிறப்பான நூல் என்று இராஜம் கிருஷ்ணன் கருதுகிறார். வியாசபாரதத்தில் பாஞ்சாலி, சூதாட்டம் நடக்கும்போது எதிர்க்குரல் கொடுக்கிறாள். தருமன் தன்னை வைத்து இழந்தபின், அவளை வைத்துச் சூதாட என்ன உரிமை என்ற கேள்வி எழுப்புகிறாள். ஆனால் வில்லிபாரதத்தில் இச்சம்பவம் சொல்லப்படவில்லை. கம்பராமாயணத்திலோ சீதை இராவணனிடம் சிறையிருந்ததற்கு இராமனால் பழி கூறப்படுகிறாள். இராமன் அகலிகையிடம் கடைப்பிடிக்கும் நியாயம் வேறு, சீதையிடம் கடைப்பிடிக்கும் நியாயம் வேறு. புதுமைப்பித்தன் இதைச் சாபவிமோசனம் என்னும் கதையில் சிறப்பாகக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். பாகவதம் போன்ற நூல்கள், பெண்கள் கேளிக்கைக்குரிய போகப்பொருள்கள் என்னும் எண்ணத்தையே மிகுதியாக விதைக்கின்றன. மனுநீதி போன்ற நூல்களோ, பெண்கள் இளமையில் தந்தைக்கும், நடுவயதில் கணவனுக்கும், முதுமையில் மகனுக்கும் அடிமை என்று பேசுகின்றன. இதன் தொடர்ச்சியாகவே பெண்களால் பயனில்லை, ஆண் குழந்தைகள் மட்டுமே பெற்றோரைப் புத் என்னும் நரகத்திலிருந்து காக்கமுடியும் என்னும் கருத்துகள் உருவாகியுள்ளன. மேலும் பெண்கள் சூத்திரர்களை ஒத்தவர்கள், அவர்களுக்கு வேதம் படிப்பிக்கக் கூடாது என்றும் பிராமணர் கருதிவந்துள்ளனர்.

பெண்களை வரதட்சிணை முதலியன கொடுத்துத் திருமணம் செய்வதற்குச் செலவு பிடிக்கிறது போன்ற எண்ணங்களால் பெண்சிசுக் கொலை என்பது இந்தியாவில் சகஜமாக இருக்கிறது. எல்லா உழைப்புக்கும் நாம் ஊதியம் தருவதாக வைத்துக் கொண்டால், உண்மையில் வாழ்க்கை முழுவதும் உழைப்பவர்கள் என்ற அடிப்படையில், பெண்கள் ஈட்டும் ஊதியப் பொருளே மிகுதியாக இருக்கும்.

தமிழ் இலக்கியங்களில் பெண்கள்:

உலகிலுள்ள பிற எல்லா இலக்கியங்களையும் போலவே தமிழ் இலக்கியங்களும் பெண்ணை அடிமைப்படுத்தியே நோக்கியுள்ளன. சங்ககாலத்திலும் பெண்ணடிமைத் தனம் வேரூன்றியிருந்ததை “வினையே ஆடவர்க்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” போன்ற பாக்கள் தெளிவுறுத்துகின்றன. ஆனால் பிறமொழி இலக்கியங்களோடும், தமிழின் பிற்கால இலக்கியங்களோடும் ஒப்பீட்டு நிலையில் பார்க்கும்போது, சங்ககாலத்தில் பெண்கள் மிகுதியாகவே கல்வி கற்றிருந்தனர், புலவர்களாகவும் பாடினிகளாகவும் விறலியராகவும் விளங்கினர் என்பதை அறியமுடிகிறது. சங்கக் கவிதையில் பெண்குரலின் பதிவுகள் ஆழமாக இருக்கின்றன. ஒளவை என்ற ஓர் மகா ஆளுமையை அதில் நாம் காண்கிறோம். இன்னும்-ஆதிமந்தி, வெள்ளிவீதி, இப்படிப்-பலபேர் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.

திருக்குறளிலும், “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய் பெயனப் பெய்யும் மழை” என்பன போன்ற பெண்ணடிமைத்தனக் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பெண்வழிச் சேறல் (செல்லுதல்) கூடாது என்று தனியாக ஓர் அதிகாரமே அமைந்துள்ளது.

தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டில் மட்டுமே பெண்களை ஓரளவு மதித்துப் போற்றும் போக்கு காணப்படுகிறது. சிலப்பதிகாரம் பெண்ணை மேம்படுத்தி நோக்கினாலும், கற்பு என்னும் கூண்டிற்குள் அடைத்து அவளை தெய்வமாக்கிவிடுகிறது. மணிமேகலையில் மட்டும்தான் மிகக் கீழ்நிலைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஆசிரியர் உயர்த்திக் காட்டியிருக்கிறார். பிற எல்லா நூல்களும் பெண்களை நுகர்பொருள் என்னும் அளவிற்கு மேல் நோக்கவில்லை. இதனால்தான் பாதாதிகேச வருணனை போன்ற வருணனை மரபுகள் எழுந்தன.

சங்கக் கவிதையை விட்டால், பெண்குரல் பதிவுகள் ஆழமாக இடம்பெறுவது ஆண்டாள் வழியாகவே. ஆண்டாளுக்கு முன்னதாகவே காரைக்காலம்மையார் வாழ்ந்திருக்கிறார் என்றாலும் அவரது குரல் பெண்ணின் தனித்த குரலாகப் பதிவாக வில்லை. சிவபெருமானோடு அவரது உறவு தந்தை-மகள் உறவாகவும், தாய்-மகன் உறவாகவும் இருக்கிறது. ஆனால் அதன் பதிவு ஆண்டாள் போல் ஆழமாக இல்லை. காரைக்காலம்மை வாயிலாக ஒலிப்பது காலங்காலமாகப் பின்னர் பக்திக்காலத்தில் நாம் கேட்கப்போகும் ஆண் குரல்களே. ஆண்டாளுக்குப் பின் நீண்ட மௌனம்.

தமிழில் ஒளவையார் பெண் கவிஞர்களில் மிகச் சிறந்தவர். ஆனால் குறைந்தது ஆறு ஒளவையார்களேனும் வரலாற்றில் இருந்திருக்க வேண்டும் என்பர் அறிஞர். ஓர் ஒளவையின் நோக்கிற்கும் மற்றொரு ஒளவையின் நோக்கிற்கும் வேறுபாட்டை நாம் நன்றாகக் காணமுடியும். பாரியின் பெண்களோடு தொடர்பு கொண்டிருந்த ஒளவைக்கும், பெண் சற்றே ஏறுமாறாக நடந்தாலும் கூறாமல் சந்நியாசம் கொள் என்று போதிக்கும் ஒளவைக்கும்தான் எவ்வளவு வேறுபாடு?

பக்தி இலக்கியங்களும் பிற இலக்கியங்களும் பெண் இறுதிநிலையில் வெறுத்து ஒதுக்கப்படவேண்டியவள் என்றும், அப்போதுதான் முக்தியடைய இயலும் என்றும் போதிக்கின்றன. இந்த நோக்குதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை கோலோச்சியிருந்தது. பெண்கள் உடல்களாகவே நோக்கப்பட்டனர். பெண் உடலின் சமூக அடையாளம் என்பது மறு உற்பத்தியில் அவள் ஈடுபடக்கூடியவள் (ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே), குடும்ப அடையாளம் ஆகியவற்றைச் சார்ந்து அமைந்திருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டு இறுதியில் பெண்கள் எழுத்து:

penniyam10இக்காலப் பெண்கவிஞர் ஒருவர் உடல் உறுப்புகளைக் கவிதையில் சொன்னதற்காக ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு நேர்முக, எதிர்மறை இரு வித விளைவுகளும் இருந்தன. (நேர்முக விளைவுக்கு உதாரணமாக ‘ஷி ரைட்’ என்ற பெயரில் மாண்டீரோ, ஜெய்சங்கர் இருவரும் இணைந்து எடுத்த டாகுமெண்டரிப் படம் போன்றவற்றைச் சொல்லலாம்.) இன்னொரு முனையில் கற்புடைய ஆண்கவிகள் கூட்டம்போட்டு இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று பெண்கவிகளை எழுத்துக்கடத்தினார்கள். இதுபோன்ற செயல்களும் தமிழகத்தில் மிகைநவிற்சிச் செயல்களாகவே அமைந்திருந்தன. தமிழில உடல் சம்பந்தமான எந்த நிகழ்ச்சியும் மிகைப்படுத்தப்படுவதே வழக்கம். ஆனால் ஆண்கள்தான் உடலைப் பற்றிப் பேசவேண்டுமா என்ன? பெண்கள் பேசக்கூடாதா? காலங்காலமாக ஆண்கள், சிற்றிடை, பெரிய மார்பு, அல்குல் என்று வருணித்துவந்தால், பெண்கள் வருணிப்பதிலும் எந்தத் தவறும் இல்லை.

பெண்கள் தங்கள் உடலில் உணர்வுகளையும் காதலையும் வெளிப்படுத்துவது ஒன்றும் புதியதும் அல்ல. பழங்காலத்தில் தொல்காப்பியர், “தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணுங்காலை கிழத்திக்கில்லை” என்கிறார். ஆனால் சங்க காலத்திலும், “காமம் பெரிதே களைஞரோ இலரே” என்றும் “நும்மும் பெறேஎம் இறீஇயர் என் உயிரே” என்று பாடிய பெண்கவிஞர்கள் இல்லையா?

எப்போது திரைப்படம் என்ற ஊடகம் வந்ததோ அப்போதே காதல் பாடல்களாகிய இருவர்ப்பாட்டுகளும் (டூயட்டுகளும்) உருவாகிவிட்டன. டூயட்டுகளில் ஆண்களுக்கு எதிராகப் பெண்கள் தங்கள் உண்ர்வுகளை வெளிப்படுத்திப் பாடுவதும் (தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளத்தல்) உருவாகிவிட்டது. ஒருவேளை இதற்குமுன் நமது நாடகப் பாரம்பரியத்தில் (தெருக்கூத்தில்), ஆண்களும் பெண்களும் தங்கள் உள்ள உணர்ச்சிகளை வெளிப்படையாகச் சொல்லும் டூயட்டுகள் இருந்தனவா என்று தெரியவில்லை. தன் கணவன்/காதலன் முன் பெண் தன் காதலுணர்வை வெளிப்படையாகப் பேசக்கூடாது என்ற நமது மரபை இந்த டூயட் பாட்டு அமைப்பு முற்றிலும் தகர்த்துவிட்டது. இவை வெளிப்படையான நிலையில் பெண்களின் உடல்சார்ந்த உணர்ச்சிகளைத்தான் பேசுகின்றன. எனவே ஏதோ இன்றைய பெண்கவிஞர்கள்-குறிப்பாகக் குட்டி ரேவதி போன்றோர் வந்துதான் பெண்களின் உடல்சார்ந்த உணர்வுகளைச் சமூகக் களத்தில் பேசத் தொடங்கினார்கள் என்பது சரியல்ல.

பிரதாப முதலியார் சரித்திரத்தில் ஞானாம்பாளை மிகுந்த அறிவோடு படைக்கும் வேதநாயகரும், இறுதியில் ஆண்களுக்குப் பெண்கள் அடங்கிநடப்பதே விவேகம் என அறிவுரைக்கிறார். பத்மாவதி சரித்திரம் போன்ற நாவல்கள்தான் முதன் முதலாகப் பெண்கள் நிலையை எடுத்துக்காட்டுவதிலும், சீர்திருத்தக் கருத்துகளை முன் வைப்பதிலும் ஈடுபட்டன.

இருபதாம் நூற்றாண்டில் நாவல்களில் பெரும்பாலும் பெண் பாதுகாக்கப்படுபவள், சுகத்தைத் தருபவள், தீர்மானங்களைக் கேட்டுக் கொள்பவள், அடக்கமானவள், அழகு சாதனங்களுக்கானவள், வீட்டைப் பேணுபவள், தெய்வம் போன்றவள் என்றுதான் படைக்கப்பட்டிருக்கிறாள். இதில் பாரதிதாசனும் வேறுபடவில்லை. அவரது கருத்துகளும் பெண்ணடிமைத்தனத்திற்கு ஒத்துச் செல்வனவாகவே அமைந்துள்ளன. குடும்ப விளக்கு, இருண்ட வீடு போன்ற அவரது கவிதைகள் இதை உணர்த்துகின்றன. ஒருசிலரே இந்த நோக்கிற்கு மாறான புனைவுகளைப் படைத்தவர்கள்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அம்பை என்னும் எழுத்தாளர், மிகத் தீவிரமான பெண்ணியநிலைப்பாடு கொண்டு சிறுகதைகளை எழுதியுள்ளார். வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, கருப்புக் குதிரைச் சதுக்கம் போன்ற அவரது சிறுகதைகள், பெண்ணின் விடுதலைக்கான வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன. பெண்கள் சார்பாக எழுதுபவர்கள் என நோக்கும்போது, ப.சிவகாமி, பாமா போன்ற ஓரிருவரே நினைவுக்கு வருகின்றனர். இராஜம் கிருஷ்ணன், திலகவதி, சூடா மணி போன்ற சிலர் இருவித நோக்குகளிலும் எழுதியுள்ளனர். பிற பெண் எழுத்தாளர்கள் யாவரும் ஆண்நோக்கிலிருந்தே எழுதிவந்துள்ளனர். இதற்கு மிகச் சரியான உதாரணமாக, 1930களிலேயே எழுதவந்த வை.மு. கோதைநாயகி அம்மாளைக் கூறலாம். இந்தப் பாரம்பரியத்தை இன்றுவரை பெண் எழுத்தாளர்கள் காப்பாற்றி வருகின்றனர்.

இருப்பினும் 1920-30களில் ஒரு சில பெண் எழுத்தாளர்களேனும் பிரக்ஞை பூர்வமாகப் பெண்கள் நோக்கில் எழுதியுள்ளனர். உதாரணமாக, இராமாமிர்தத்தம்மாள் அக்காலத்து தாசிகளின் வாழ்க்கை முறை பற்றி எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழப் பதினைந்தாண்டுகள் முன்பு வெளிவந்த கவலை என்னும் நாவலும் ஒருதலைச் சார்பான நோக்கில் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு பெண் குடும்பத்தில் எவ்வளவு பாடுபடவேண்டிவருகிறது என்பதை விவரிக்கும் போக்கில் முக்கியத்துவம் பெறுகிறது.

தொண்ணூறுகளில் மிகுதியாகப் பெண் கவிஞர்கள் தமிழில் தோன்றினார்கள் என்பது ஒரு முக்கிய நிகழ்வு. இவர்கள் மிக ஊக்கத்தோடு பெண்ணடிமைத்தனத்திற்கு எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். ஏராளமான பெண் குரல்கள் இன்று கேட்கின்றன. ஆனால் எல்லா ஆண்களுமே பெண்களுக்கு எதிரிகள் போலச் சித்திரித்து எழுதுகிறார்கள். அதனால் புதிய சில சலனங்களைத்தான் இவர்களால் பதிவு செய்ய முடிந்திருக்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் வார்த்தைகளில் சொன்னால், “பெண் குரலின் பதிவுகளே இல்லாத தமிழ்ப் பாரம்பரியத்தில் சில சலனங்கள் தொடங்கியுள்ள சூழல் இது.”

பெண்கவிஞர் சல்மா ஒருமுறை கூறினார்: “தமிழில் எழுதும் பெண் படைப்பாளிகள் தொட வேண்டிய பரிமாணங்கள் எவ்வளவோ இருந்தாலும், தம் படைப்பின் எல்லைகளை முன்கூட்டியே திட்டமாக வரையறுத்துக்கொண்டு அதே இலக்குகளைத் திரும்பத்திரும்ப அடைந்து கொண்டிருப்பது படைப்பின் வீழ்ச்சியைக் குறிப்பதாக இருக்கிறது. அநேகப் பெண்கவிஞர்களின் கவிதைகள் கவிதையை அதன் பழக்கப்பட்டுப்போன சுற்றுப்பாதையிலிருந்து வெளிக்கொண்டு வரக்கூடியதாக இருப்பதில்லை.”

பெண்விடுதலை, பெண்ணியம் என்னும்போது, அண்மைக்காலத்தில் குடும்பச் சிதைப்பும், ஓரினப் புணர்ச்சியும் முதன்மைப்படுத்தப்படுகின்றன. சிறுபத்திரிகைகளில் இவை அதிகம் விவாதிக்கப்பட்டும், பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் பேசப்பட்டும் உள்ளன. பெண் மொழி, உடல் சார்ந்த , ஓரினப் புணர்ச்சி உறவுகள், குடும்ப உடைப்பு அல்லது சிதைப்பு, தாய்மை மறுப்பு போன்றவை அனைத்தும் மேற்கத்திய உயர் நடுத்தர வர்க்கக் கருத்தியலின் இறக்குமதிகள். இவற்றிற்கு நமது சூழலில் எந்த அர்த்தமும் இல்லை என்பது என் கருத்து. இயற்கையின் ஒத்திசைவுடன் தங்கள் உடலையும் இனம் கண்டு, உடலை, காமத்தை, பாலியல்பைப் போன்றவற்றையெல்லாம் கொண்டாடும் கவிதையியக்கத்தில் குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சுகிர்த ராணி ஆகிய மூவரும் முக்கியமான பிரதிநிதித்துவக் குரல்களாகக் காணப்பட்டுள்ளனர். ஆனால் நமது பாரம்பரியம், மிக வலுவானது, சுமையானது, எழவிடாமல் அழுத்தக்கூடியது. நமது பாரம்பரியத்தை மீறுதல் எளிய காரியமல்ல.

ஆர். மீனாட்சி, சுகந்தி சுப்பிரமணியன், பொன்மணி, ஆண்டாள் பிரியதர்ஷினி, சுபத்ரா, சல்மா, வத்சலா, கிருஷாங்கினி, கனிமொழி, குட்டி ரேவதி, தாமரை, உமா மகேஸ்வரி, சுகிர்தராணி, வெண்ணிலா, வைகைச் செல்வி, மாலதி மைத்ரி, இளம் பிறை, விஜய பத்மா, திலகபாமா என எத்தனை எத்தனையோ பெண் கவிஞர்களின் குரல்கள் இன்று கேட்கின்றன. சங்ககாலத்திற்குப் பிறகு பெண்கவிஞர் இத்தனை பேரின் பெயர்களை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் கேள்விப்பட்டோம்.

வாழ்க்கையின் சில சிறு சம்பவங்கள் கூட, ஆண்களின் பார்வையில் முக்கியத்துவம் அற்றவையாக இருப்பவைகூட, பெண்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன என்பதை சுகந்தி சுப்பிரமணியன் மட்டுமே சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். எல்லையற்ற வெளியில், சுதந்திர உலகில் தாவித் திரிய விரும்பும் பெண்மனத்தின் வெளிப்பாடுகளாக அவரது கவிதைகள் உள்ளன. பெண்ணியக் கவிஞர்களுக்கு அவரது எழுத்துகள் நல்ல முன்னுதாரணமாக அமையக்கூடியவை. சல்மாவின் கவிதைகள் சிலவற்றிலும் தனிப்பட்ட வெளிப்பாடுகள் சிறப்பாக உள்ளன. ஆண்பெண் உறவுகளைப் பற்றிய அவநம்பிக்கையையும், அவற்றைச் சீர்படுத்த இயலாத நிலையையும் கவிதைகளில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். பெண் கவிதைகள் பொதுவான பிரச்சினைகளைப் பேசும்போதுதான் உயிர்பெறுகின்றன. தங்களைப் பற்றி எழுதும்போது செத்துவிடுகின்றன. உதாரணமாக எத்தனை எத்தனையோ கவிதைகளை எடுத்துக்காட்டலாம்.

இறுதியாகப் பார்க்கும்போது, ஆற்றலுடைய பெண்கவிதைகள் தமிழில் இன்னும் தோன்றவில்லை என்றேபடுகிறது. இப்போதிருக்கும் பெண்கவிஞர்கள் பலரும் ஒரு வித்தியாசமான, புதிய மொழிநடையில் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்னும் மோகத்தில் ஒரு அந்நியமான மொழிநடையில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் படிக்கும் உணர்வே பெரும்பாலான பெண் கவிஞர்களின் கவிதைகளைப் படிக்கும்பொழுதும் ஏற்படுகிறது.

ஊடகங்களில்-குறிப்பாகத் திரைப்படம், தொலைக்காட்சி இரண்டிலும்-பெண்கள் மிக மோசமாக, போகப் பொருளாக மட்டுமே சித்திரிக்கப்படும் நிலை தொண்ணூறுகளில்தான் தொடங்கியது. தமிழ் ஊடகங்கள் என்றுமே பெண்களுக்குப் பெருமையளித்தது கிடையாது. ஆனால் இப்போதைய நிலை மிகமிக மோசமானது என்பதில் சற்றும் ஐயமில்லை. உண்மையில் பெண்ணிய இயக்கம் என்பது, தமிழ்நாட்டில் ஊடகங்களுக்கு (ஜனரஞ்சகப் பத்திரிகைகள் உட்பட) எதிராகத்தான் உருவாக வேண்டும்.


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்ணியமும் பெண்களின் எழுத்தும்”

அதிகம் படித்தது