மார்ச் 6, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்ணுக்கு எதிரான வன்முறைகள் – ஓர் அலசல் !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Sep 10, 2016

siragu-pennukku-edhiraana1சோனாலி, பிரான்சினா எனத் தொடர்ந்து ஒரே நாளில் பெண்கள் ஒருதலைக் காதலால் கொல்லப்பட்டனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றது. முதலில், ஒருதலைக் காதல் என்ற வாக்கியமே தவறு. காதல் என்றால் அன்பு, நட்பு தவிர வேறொன்றுமில்லை. அன்பும், நட்பும் ஒரு பெண் தன்  காதலை நிராகரித்தால் அந்தப் பெண்ணை கொலை செய்யத் தூண்டுகிறது என்பது அயோக்கியத்தனம். இங்கே பெண்ணுக்கு எதிரான வன்முறைகள், கொலைகள் நடக்கக் காரணம் ஒரு பெண் என்பவள் ஆணின் உடைமையாக, காம பிண்டமாக, தனக்குக் கிடைக்காத அந்தப் பெண் வேறு எவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற மனப்பிறழ்வால் நடக்கிறதே தவிர்த்து, அந்த ஆணின் அன்பால், காதலால்  கொலை நடைபெற்றது என்பதுபோல் நாம் செய்தி போடுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுகிறது.

உண்மையில் இன்றைய இளைய தலைமுறையினருக்கு காதல் பற்றிய புரிந்துணர்வு இருக்கின்றதா?

அன்றைய திரைப்படங்களில் ‘ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா?’ என்று அறிவியலுக்கு எதிராக, கற்பனையாகக் கட்டப்பட்ட நிலைப்பாட்டினால், அன்றைய இளைய சமூகம் காதல் என்றால் ஒரு முறை தான் வரும் என்று கருதிக்கொண்டு, அந்த ஒரு காதல் நிறைவேறவில்லை என்றால் தற்கொலை செய்து கொண்டு இறந்து போயிருக்கின்றனர். ஆனால் அந்தக் கட்டத்தைக் கடந்து காதல் என்பது ஒரு முறைதான் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை, எத்துணை முறை வேண்டுமானாலும், எந்த வயதிலும் வரலாம் என்ற புரிதல் இன்று இருந்த போதிலும், அண்மைக் காலங்களில் வெளிவரும் பல திரைப்படங்களில் பெண்கள் மிகவும் ஏமாற்றுக்காரர்கள் என்பது போலவும், அவர்கள் ஒருவரை விரும்பும்போது உண்மையாக இருக்க மாட்டார்கள், ஒன்றை விட மற்றொன்று சிறந்தது என்ற எண்ணம் கொண்டவர்கள் என்றும் தொடர்ந்து சித்தரிக்கப்பட்டு வந்திருப்பதன் விளைவுகளைத்தான் பெண்களுக்கு எதிரான கொலைகளாக நாம் இன்று அறுவடை செய்கின்றோம்.

siragu-pennukku-edhiraana7மேலும் ஒரு பெண் ஒருவரை காதலிக்க மறுத்தால், அல்லது ஒருவரை காதலித்து விட்டு அவரை நிராகரித்து வேறு ஒருவரோடு காதல் செய்தால், ஒருவரை காதலித்து விட்டு மற்றவரை திருமணம் செய்தால், திருமணமான பின் வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டால் இவை அத்துணையும்  பெண் தவறான நடத்தை உள்ளவள், எனவே அவள் உயிர்வாழ தகுதியற்றவள், அவளை கொலை செய்வது தவறு இல்லை, அந்தக்  கொலை அவளின் தவறுக்கான தண்டனை என்று இந்த சமுதாயத்தின் பொது புத்தியில் பதிந்து போயிருக்கின்றது. மேலே சொல்லப்பட்ட அத்துணையும், ஒரு ஆண் செய்யும்போது அதனை ஒரு நிகழ்வாக இந்தச் சமுதாயம் கடந்து போய் விடுகின்றது. அதற்கும் ஒரு படி மேல் சென்று, ஒரு ஆணின் முடிவு பெண்ணின் குணத்தால்-நடத்தையால் என்று ஆணின் முடிவுகளுக்கும், தவறுகளுக்கும், கொலைகளுக்கும், பெண் மீதே இச்சமூகம் பழி போடும் அறிவின்மையை என்னவென்று சொல்வது?

“அடிடா அவள உதைடா அவள” போன்ற பாடல் வரிகள் அனைத்தும் தணிக்கை குழுவின் கத்தரிப்பில் இருந்து எப்படியும் தப்பிவிடுகின்றன. ‘என்ன மாதிரி பசங்கள பாத்த உடனே பிடிக்காது, பாக்க பாக்கத்தான் பிடிக்கும்’ போன்ற வசனங்கள், ஒரு பெண் தன் காதலை வேண்டாம் என்றாலும் அவளைப் பின் தொடர்ந்து தொந்தரவு செய்து, கட்டாயப்படுத்தி எப்படியும் ஒத்துக்கொள்ள வைத்துவிட வேண்டும் என்ற திரைப்படக் காட்சியமைப்புகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஒரு காரணியாக இருக்கின்றது என்பதை மறுக்க முடியுமா? திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு என்று தள்ளிவிட முடியாது. ஆணாதிக்கத்தின் வடிவங்களை திரைப்படங்கள் போன்ற வலிமையான காட்சி ஊடகங்கள் இளைஞர்களின் மனதில் பசுமரத்தாணி போன்று பதிய வைக்கின்றது.

siragu-pennukku-edhiraana6நம் சமுதாய அமைப்பில் இளைஞர்களுக்கு, வளர் இளம் பருவத்தினர் இருபாலருக்கும் பள்ளியில் – கல்லூரியில் பாலியல் சமத்துவதைப் பற்றி பாடம் எடுக்கப்படுகின்றதா? ஆண்-பெண்  இருவரும் பேசவே கூடாது, பழகக் கூடாது என்று சட்டம் போடும் கல்லூரிகளில் படிக்கும் இளைய சமூகம் எப்படி எதிர் பாலினத்தவரை புரிந்து கொள்ள முடியும்? ஒரு பெண்ணின் உடலை அவள் அனுமதியின்றி தொடுவது வன்முறை, கீழானச் செயல் என்று எந்தக் கல்வித்திட்டம் சொல்லிக் கொடுத்திருக்கின்றது? பாலியல் கல்வி பற்றி நம் ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு சொல்லித் தருகின்றனரா? பின் அவனின் பாலியல் எண்ணங்களுக்கான வடிகாலாக திரைப்படங்கள் சொல்லிக்கொடுக்கும் தவறான பாதையில் செல்வதை எப்படி தடுக்க முடியும்? காதலாக இருந்தாலும், நட்பாக இருந்தாலும் ஒரு பெண் ஆணின் உடைமை அல்ல, அவளுக்கான உரிமையில் தலையிட ஒரு ஆணுக்கு உரிமையில்லை என்று கற்றுத்தருகின்றோமா? குடும்பங்களில் தாயானவள் தன் தந்தையின் கட்டளைக்கு அடிபணிந்து, அடிவாங்கிக் கொண்டு செல்லும் போக்கினைப் பார்த்து வளரும் ஆண் குழந்தைக்கு எப்படி பாலினச் சமத்துவத்தை புரிய வைக்கப்போகின்றோம்?.

பெண் பிள்ளைகளிடம் நீ உன்னை அலங்கரித்துக் கொள்; பாடல் -நடனம் கற்றுக்கொள், மென்மையானவளாக இரு என்று சொல்கின்ற வரை எப்படி ஒரு பெண்ணுக்கான துணிச்சலை நாம் தர முடியும்? 15 வயது பெண்ணுக்கு 5 வயது தம்பியை துணைக்கு அனுப்பிக் கொண்டு இருக்கின்ற நாம், எப்படி ஒரு பெண்ணை உறுதியானவளாக மாற்றப்போகின்றோம் என்று சிந்திக்கின்றோமா?

siragu-pennukku-edhiraana8குடும்பங்களில் ‘அவன் ஆம்பள புள்ள அதனால ஒரு முட்டை அதிகமா வை’, ‘உனக்கென்ன நீ ஆம்பள’ என்று சொல்கின்ற வரை ஆண்களுக்கு, தாங்கள் மனித உயிரில் மேன்மையானவர்கள் என்ற கருத்தாக்கம் மறையப்போவதில்லை. ‘நீ பொம்பள புள்ள உனக்கு எதற்கு கராத்தே, மூஞ்சு உடைஞ்சிடுச்சுனா எவனும் உன்ன கட்டிக்க மாட்டான்’, என்று பெண் பிள்ளைகளை கறிக்குத் தேவைப்படும் பிராய்லர் கோழிகள் போல் வளர்த்து விடும் குடும்பங்கள் இருக்கும்வரை எந்த பாலினச் சமத்துவ புரிதலும் இங்கே சாத்தியமில்லை. சமூகச் சிந்தனையே மாற வேண்டியிருக்கின்றது. ஆணை முன் வைத்து சிந்திக்கும் நிலை மாற்றப்படவேண்டியுள்ளது. ஆணுக்கானத் தேவைகளைத் தீர்க்கும் ஒரு உயிர் மட்டுமே பெண், அவள் அவனின் இச்சைகளைத் தீர்க்கவே பிறந்தவள், அவள் பாதுகாக்கப்பட வேண்டிய பொருள், ஏனெனில் அவளில் தான் குடும்பத்தின் மானம், சமுதாய நெறிமுறைகளும் அடங்கியிருக்கின்றது என்ற எண்ணம் மாற்றப்படாதவரை இங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையப் போவதில்லை.

சட்டங்கள் இயற்றினாலும் அதைப்பற்றிய  கவலை இன்றி பெண் இங்கே கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கதையாய் தொடர்கின்றது. தன்னைத் தானே காத்துக் கொள்ள ஒரு பெண் தற்காப்புப் பயிற்சி கற்றிருக்க வேண்டும். பெண்ணுக்கான வரையறை என்று தனியே எதுவும் இல்லை, ஆணுக்குள்ள உரிமை அனைத்தும் பெண்ணுக்கும் உண்டு என்ற புரிதல் மட்டுமே பாலினச் சமத்துவ சமுதாயம் மலர வழிவகுக்கும்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்ணுக்கு எதிரான வன்முறைகள் – ஓர் அலசல் !!”

அதிகம் படித்தது