சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெரியார் என்னும் அறிவியக்கப் பேராற்றல்

தேமொழி

Dec 24, 2022

siragu periyar(1)

சென்னை புத்தகக்காட்சியில் அதிகம் விற்றுச் சாதனை செய்துள்ள நூல்களாக பெரியார் குறித்து எழுதப்பட்ட நூல்களும் அவரது கருத்துகள் தொகுக்கப்பட்ட நூல்களும் இடம் பெறுவது கடந்த சில ஆண்டுகளில் வாடிக்கையாகிவிட்டது.

2017ஆம் ஆண்டு நடந்த சென்னை 40ஆவது புத்தகக்காட்சியில் அதிகம் விற்றுச் சாதனை படைத்த நூல், அதிலும் ஒரே புத்தகக்காட்சியில் இரண்டு பதிப்புகளும் விற்றுச் சாதனை படைத்த நூல் விடியல் பதிப்பகம் வெளியிட்ட ‘பெரியார் இன்றும் என்றும்’ என்ற நூல்தான். மதம், சமுதாயம், கடவுள், சாதி, தத்துவம், பெண், பகுத்தறிவு, பண்டிகைகள், திருமணம், பண்பாடு, கலைகள், கல்வி, தேசியம், இயக்கங்கள், பொருளாதாரம், சமதர்மம், பொது நலம், தன் விளக்கம், ஆதி திராவிடர், நீதி கெட்டது, புராணங்கள் என 21 தலைப்புகளில் பெரியாரின் எழுத்தும் பேச்சும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மறு ஆண்டின் புத்தகக் காட்சியிலும் இந்த நூல் வந்த வேகத்தில் விற்றுத் தீர, மீண்டும் அச்சடித்துக் கொண்டு வரும் நிலை என்று இந்து நாளிதழின் செய்தி கூறுகிறது.

தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு என்ற கருத்தாக்கங்களை, அன்றைய நாட்களில் பொதுவாகக் கட்டமைக்கப்பட்டிருந்த சிந்தனை வட்டத்திற்குள்ளேயே சிந்தித்துக் கொண்டிருக்காமல், பழகிய வட்டத்திற்கு வெளியே வந்து ஏன், எதற்கு என்று கேள்விகளாக எழுப்பி புதிய வழியில் சிந்திக்கத் துவங்கியவர் பெரியார். தனது சிந்தனையில் உருவான கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு இதழாளராகவும் உரையாளராகவும் அரை நூற்றாண்டிற்கு மேல் சமூக அக்கறையுடன் உழைத்தவர் பெரியார். அவர் மறைந்து அரை நூற்றாண்டை எட்டிவிடப் போகும் நிலையிலும், அவர் பெயரை நூல்களில் மட்டுமே படித்து வளர்ந்த ஒரு தலைமுறையில் பல இளம் ஆர்வலர்களைத் தனது அரை நூற்றாண்டு எழுத்துப் பணியால் கவர்ந்துவிட்டிருக்கிறார் என்பதற்குப் பெரியார் குறித்துத் துவக்கப்பட்டுள்ள எண்ணற்ற யூடியூப் அலைவரிசைகளே சான்று.

இந்தப் புதிய தலைமுறை, ஒரு முறையான கட்சி கட்டமைப்பிற்குள் இயங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் அல்லர். பற்பல நாடுகளிலும் பரவியுள்ள பல பெரியார் கருத்துப் பற்றாளர்கள் என்பது மட்டுமே ஒரு பொது புது அடையாளம். பெரியார் குறித்து சுயமரியாதை இயக்கம் சார்ந்த பெற்றோர்களாலும், குடும்ப முன் மாதிரிகளாலும் உருவாக்கப்பட்ட பற்றாளர்களையும்விட, இவ்வாறாகப் பெரியார் குறித்துப் பல உரையாடல்களைக் கேட்டும் அறிந்தும் அவரது சிந்தனை வீச்சு தந்த வியப்பால் பற்றாளர்களாக தங்களை மாற்றிக் கொண்டு, தங்களால் இயன்றவகையில் அவரது கருத்துகளை இணையத்தில் பரப்பிவிட ஏதாவது சிறு பங்காற்றிவிட வேண்டும் துடிப்புடன் செயலாற்றும் ஆர்வலர்கள் பலர். பெரியாரின் மனித நேயம் மற்றும் சமநீதிக் கருத்துகள் காலங்கடந்தும் நாம் சிந்தனைக்கு உரியவையாகவே இருப்பதுதான் அவற்றின் சிறப்பு. பெரியார் துவங்கிய அறிவியக்கம் வளரும் இந்த புதியமுறையின் செயல்பாடுகளை அவரே கூட எண்ணியிருப்பாரா எனத் தெரியவில்லை.

பெரியார் எழுதியவையும், பெரியார் குறித்து பிறர் எழுதியவையும்:

  • புனிதம் என்று போற்றப்பட்டவற்றைக் கட்டுடைத்து பெரியாரே எழுதியவை,
  • சுயமரியாதை, பகுத்தறிவு குறித்து பெரியாரும் அவர் இயக்கத்தினரும் எழுதியவை,
  • சுயமரியாதை இயக்க வரலாறு, போராட்டங்கள் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் எழுதியவை,
  • பெரியாரால் மாறிய தமிழக அரசியல் சூழல்கள், சமூகச் சூழல்கள் குறித்து மானுடவியல் ஆய்வாளர்கள் எழுதியவை,
  • பெண்கள் முன்னேற்றத்தில் பெரியாரும் அவர் இயக்கமும் செய்த சீர்திருத்தங்கள் குறித்து பெண்ணிய எழுத்தாளர்கள் எழுதியவை,
  • பெரியாரியல் குறித்து பல்கலைக்கழகங்களில் தொடர்ச்சியாகச் சமர்ப்பிக்கப்பட்டு வரும் ஆய்வேடுகள் என,

பல்வேறு கோணங்களில், பன்முகநோக்கில் பெரியார் குறிப்பிட்டவை, பெரியாரின் சமூகப் பங்களிப்பு குறித்து பிறர் குறிப்பிடுபவை என எண்ணிறைந்த படைப்புகள் நாளும் வளர்ந்த வண்ணமே உள்ளன.

siragu women readers

இத்தகைய சிந்தனை அறிவியக்க வீச்சைக் காணுகையில்,

“நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க….” எனப் பேரரசரான இராஜராஜ சோழர், தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் வியப்பிற்குரிய வகையில் தஞ்சை பெரிய கோவிலின் முதல் கல்வெட்டில் ஆவணப்படுத்தி இருப்பதே நினைவிற்கு வருகிறது.

அந்த வழியில், பெரியார் கொடுத்தனவும், அவர் வளர்த்த திராவிட இயக்கத்தில் அவரது வழியில் பகுத்தறிவுப் பாசறையின் பயிற்சியில் உருவாகிய அண்ணா, கலைஞர், பாரதிதாசன், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், ஆசிரியர் வீரமணி துவங்கி இன்றுவரை பகுத்தறிவுச் சுடரை ஏந்திச் சென்று கொண்டிருக்கும் எண்ணற்ற இளைய தலைமுறையினர் வரை பற்பலர் கொடுத்தனவும் கொடுப்பனவும், என்று பெரியார் என்ற அறிவியக்கப் பேராற்றல் தரும் அறிவொளி இன்றுவரை மனித நேயத்தையும், சமத்துவம், சமூகநீதி போன்ற கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

தான் யார் தன் பணியின் நோக்கமென்ன என்பதைப் பின்வருமாறு அறிவித்தவர் பெரியார்.

“ஈ. வெ. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு ‘யோக்கியதை‘ இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.”

என்றார் பெரியார். அவர் ஏற்றிவைத்த அறிவுச் சுடர் ஒலிம்பிக் சுடர் போல தொடர்ந்து பலர் கைகளுக்கு மாற்றப்பட்டு மக்கள் வாழ்வில் ஒளிவீசி வருகிறது.

பெரியார் என்ற தனி ஒரு மனிதரின் சிந்தனையின் வீச்சு ஒரு நூற்றாண்டுக்குள் விரைந்து பரவியுள்ளதை எவராலும் மறுக்க முடியாது. பெரியாரின் அறிவியக்கத்தின் வீச்சு தமிழர் வாழ்வைத் தொடர்ந்து இருளில் விழாமல் வழி நடத்தும் என்பது உறுதி.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெரியார் என்னும் அறிவியக்கப் பேராற்றல்”

அதிகம் படித்தது