மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பேராசிரியர் முனைவர் க. பூரணச்சந்திரன் அவர்களின் நேர்காணல்

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Mar 18, 2017

poornachandran4

சிறகு இதழுடன் தங்களுக்குத் தொடர்பு எவ்விதம் ஏற்பட்டது?

2012ஆம் ஆண்டு. எனது மாணவரும் நண்பருமான திரு. காசிவிசுவநாதன், இந்த இதழ் பற்றியும் இதில் நான் எழுதவேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர்தான் திரு. சௌமியன், ஷாஹுல் ஹமீது, தில்லைக்குமரன் ஆகியோரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போதே எனது மொழிபெயர்ப்புப் பணிகளைப் பற்றி ஒரு நேர்காணலை என்னிடம் நிகழ்த்த சிறகு இதழ்க் குழுவினர் வந்தனர். ஆனால் எக்காரணத்தாலோ அதன் ஒளிப்படம் சரிவர வராததால் என் நேர்காணலை ஒலிப்பதிவு செய்து அதைச் சிறகு இதழில் வெளியிட்டனர். அப்போது முதல் எனது பல்வேறு பணிகளுக்கிடையில் அவ்வப்போது சிறகு இதழில் எழுதிவருகிறேன்.

தங்களுக்கு கிடைத்த மொழிபெயர்ப்பு விருதுகளின் பின்னணி என்ன?

பின்னணி என்றால் எனக்குப் புரியவில்லை. வேண்டியவர்கள், பரிந்துரையாளர்கள் இவர்களை இச்சொல் குறிக்கிறது என்றால் அப்படி எனக்கு யாரும் இல்லை. அம்மாதிரி யாரேனும் எனக்கு இருந்திருந்தால் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் முன்னரே இம்மாதிரிப் பரிசுகள் எனக்குக் கிடைத்திருக்கக்கூடும். என்னைப் பொறுத்தவரை, நான் யாரைப் பற்றியும் கவலைப்படுவதோ, முன்னேற்றுவதற்காக வேண்டி யாருடனும் தொடர்பு கொள்வதோ கிடையாது. நான் உண்டு, என் எழுத்தும், மொழிபெயர்ப்பும் உண்டு – ‘கருமமே கண்ணாயினார்’. அவ்வளவுதான்.

poornachandran-FI

இதுவரை தங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள்?

அ. ஆனந்தவிகடன் 2011ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, ஆந்திரக் கவிஞர் வரவர ராவின் சிறைப்பட்ட கற்பனை (கேப்டிவ் இமேஜினேஷன்) என்ற நூலை மொழிபெயர்த்ததற்காக.

ஆ. நாமக்கல் திரு. சின்னப்ப பாரதி இலக்கிய வட்டத்தின் 2014க்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதும் பத்தாயிரம் ரூபாய் பரிசும். சல்மான் ருஷ்தீயின் நள்ளிரவின் குழந்தைகள் (மிட்நைட்ஸ் சில்ட்ரன்) என்ற நூலை மொழிபெயர்த்ததற்காக.

இ. ஆனந்தவிகடன் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது. வெண்டி டோனிகர் எழுதிய இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு (ஹிந்துஸ்-ஆன் ஆல்டர்னேடிவ் ஹிஸ்டரி) என்ற நூலை மொழிபெயர்த்ததற்காக.

ஈ. சாகித்திய அகாதெமியின் 2016ஆம் ஆண்டுக்கான தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது – மனு ஜோசப் என்பவர் எழுதிய பொறுப்புமிக்க மனிதர்கள் (சீரியஸ் மென்) என்ற என்ற நூலை மொழிபெயர்த்ததற்காக.

தங்களுக்குக் கிடைத்த இந்த மொழிபெயர்ப்புக்கான விருதுகள் தாமதமாகக் கிடைத்திருக்கின்றன என்று எண்ணுகிறீர்களா?

ஒருவிதத்தில் அப்படித்தான். தமிழ்ப்பேராசிரியராக இருந்தபோது அவ்வப்போது மொழிபெயர்ப்புகள் செய்திருந்தாலும், 2005 முதல் தொடர்ச்சியாக அடையாளம், எதிர் வெளியீடு, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்) ஆகியவற்றுக்காக மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறேன். குறிப்பாக அடையாளம் வெளியீட்டிற்காக அறிவியல் நூல்கள், ஆக்ஸ்ஃபோர்டு மிகச் சுருக்கமான அறிமுகங்கள் என்ற பெயரில் வெளியிட்ட நூல்களில் ஆறு, மருத்துவ நூல்கள், வரலாற்று நூல்கள் எனப் பலதுறை நூல்களை மொழிபெயர்த்திருக்கிறேன். இவற்றில் எந்த ஒன்றிற்கும் சிறந்த மொழி பெயர்ப்பு விருது முன்னரே கிடைத்திருக்கலாம். ஏனெனில் எல்லா நூல்களையும் அதுஅதற்குத் தேவையான அடிப்படை நேர்மையுடனும் (சின்சியாரிடியுடனும்) கவனத்துடனும்தான் மொழிபெயர்த்து வருகிறேன்.

மொழிபெயர்ப்புகளுக்கு இவ்வாண்டு இரண்டு விருதுகள் பெற்றுள்ளீர்கள். இவை தவிர வேறு எந்த மொழிபெயர்ப்புக்கு விருது கிடைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ஆக்ஸ்ஃபோர்டு அச்சகத்தின் உலகமயமாக்கல், இசை, சமூகவியல், நீட்சே ஆகியவை பெரிதும் நண்பர்கள் பாராட்டிய நூல்கள். அதேபோல் கீழைத்தத்துவம் என்ற நூலின் மொழிபெயர்ப்பையும் நண்பர்கள் மிகவும் பாராட்டினார்கள். அருந்ததி ராயின் நொறுங்கிய குடியரசு எனக்கு மிகவும் பிடித்த நூல். இவற்றில் எதற்கு வேண்டுமானாலும் விருது கிடைத்திருக்கலாம்.

இதுவரை எத்தனை நூல்களை மொழிபெயர்த்துள்ளீர்கள்? அவை என்ன என்ன?

இதுவரை பல்வேறு துறைகளிலும் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை மொழி பெயர்த்துள்ளேன். ஏறத்தாழ அவற்றில் முக்கியமானவற்றை மேலே பெயர் சுட்டியுள்ளேன். இங்கு அத்தனை பெயர்களையும் கொடுப்பது நன்றாக இருக்காது என்று கருதுகிறேன். மொத்த நூல்களின் பட்டியலையும் பார்க்க விரும்புபவர்கள் எனது இணையதளத்தில் அதைக் காணலாம்.

poornachandran1

மொழிபெயர்ப்பில் தங்களுக்குக் கிடைத்த அனுபவம் என்ன?

முதலில் மிகப் பரந்த பல துறை அறிவு. டாக்டர்கள் இல்லாத இடத்தில், செவிலியர் கையேடு போன்ற நூல்களை மொழிபெயர்த்தபோது நல்ல மருத்துவ அறிவு தேவையாக இருந்தது. அதுபோல்தான் ஒவ்வொரு துறை பற்றிய நூலும்.
அடுத்ததாக இலக்கிய ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் சரியான சொற்களைச் சரியான அர்த்தச் சாயையுடன் பெய்து மொழிபெயர்க்க வேண்டும் என்பதால் கிடைத்த இருமொழிவளம்.

மூன்றாவதாக, மிக வேகமாக ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் இலக்கண ரீதியாகத் தவறின்றி எழுதக்கூடிய தன்மை.

நான்காவதாக, மொழி என்பது மனிதனின் அனுபவத்தையும் சிந்தனையையும் தேக்கிவைத்திருக்கும் ஒரு களஞ்சியம். அது கைக்குக் கிட்டினால் நமக்குப் பெரியதொரு உலகமே கண்முன் திறக்கிறது. அதுவும் இரண்டு மூன்று மொழிகளில் என்னும்போது நமது அனுபவம் மிகுந்த விரிவு பெறுகிறது. சகிப்புத்தன்மை வளர்கிறது. ஏனெனில் தமிழர்களாகிய நாம் சிந்திப்பதுபோல ஓர் ஆங்கிலேயனோ, ஜெர்மானியனோ, இந்திக்காரனோ சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. அவரவர்களுடைய அனுபவக் களங்கள் முற்றிலும் வேறாக இருக்கின்றன. அதுபோல்தான் ஒவ்வொரு மதத்தின் அனுபவக்களமும். இதனால் மனிதர்களை, எந்த நாட்டவராயினும், இனத்தவராயினும், மொழியினராயினும், மதத்தவராயினும் மிக நன்றாகப் புரிந்துகொள்ளமுடிகிறது, அவர்களை மதிக்க முடிகிறது. அவர்கள் கலாச்சாரத்தைப் போற்ற முடிகிறது. இதைவிட வேறென்ன வேண்டும்? உண்மையில் மனிதர்களிடையே நல்லுறவை வளர்க்க இதைவிடச் சிறந்த துறை வேறில்லை.

தாங்கள் மொழிபெயர்த்த நூல்களில் தங்களை மிகவும் ஈர்த்த மொழிபெயர்ப்பு நூல்கள் எவை? காரணம்?

எல்லா நூல்களுமே ஏறத்தாழ என்னை ஈர்த்தவைதான். காரணம் எத்துறையாயினும் நன்கு புரிந்துகொள்ள வைப்பதே எனது தலையாய நோக்கம். எனினும் இலக்கிய மொழி பெயர்ப்புகள் என்ற முறையில் சிறைப்பட்ட கற்பனை, ஊரடங்கு இரவு, நள்ளிரவின் குழந்தைகள், பொறுப்புமிக்க மனிதர்கள் போன்றவை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தன.
பொதுவாகத் தத்துவத்தில் எனக்கு ஈடுபாடு அதிகம். அதனால்தான் தத்துவம் தொடர்பான நூல்களை (நீட்சே, கீழைத் தத்துவம், பின்நவீனத்துவம், இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு) ஆர்வத்துடன் மொழிபெயர்க்கிறேன்.

படிக்கும் இளைஞர்களுக்கு தாங்கள் கூறும் கருத்து?

மேற்கத்தியக் கல்வி முறையில், பொதுவாகவே கல்லூரிப் படிப்பு அளவுக்குள் மூன்று அல்லது நான்கு மொழிகளைக் கற்கும் திட்டம் அமைந்துள்ளது. இத்தனைக்கும் அவை ஒற்றைமொழி நாடுகள். நம் நாட்டிலோ 22 மொழிகள் உள்ளன. தமிழ்நாட்டிலிருந்து எந்த திசையில் நானூறு கி.மீ. சென்றாலும் இன்னொரு மொழியில் உரையாட நேரிடும். ஆயிரம் கி.மீ. சென்றால், வடநாட்டு மொழிகளின்-குறிப்பாக இந்தியின் அறிவு தேவைப்படும். ஆகவே இளைஞர்கள் சிறுவயதிலேயே விளையாட்டாகவே பல மொழிகளைக் கற்க வேண்டும். இந்த அனுபவம் மிகப் பயனுள்ளதாக இருக்கும். இன்றுகூட கர்நாடகத்தில் தமிழர்களைப் பலருக்கும் பிடிக்காமல் இருப்பதற்கும், நதிநீர்ப் பிரச்சினை போன்றவற்றிற்கும் காரணம் தமிழை அவர்கள் அறியாதது, அறிய முனையாததுதான். சற்றே பிறரின் மொழிகளுக்குள் நுழைந்து பார்த்துவிட்டால், அவமதிப்பெல்லாம் மதிப்பாக மாறும். நல்லுறவு பெருகும்.

இறுதியாக சிறகு வாசகர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?

சிறகின் பணி சிறப்பானது. குறிப்பாகத் திரையுலகத்தையும் பெண்களின் உடலையும் வைத்து இணையப் பத்திரிகைகள் 99 சதவீதம் வியாபாரம் செய்துவருகின்ற நிலையில் இதுபோன்ற கவர்ச்சிகள் விளம்பரங்களை நம்பாமல் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் மெய்யான தொண்டு செய்துவரும் இதழ் இது. அந்தந்தப் பத்திரிகைகளின் தரத்துக் கேற்பவே அவற்றின் வாசகர்களும் இருப்பார்கள். ஆகவே சிறகின் வாசகர்களும் தரம் மிக்கவர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்கள் தங்களைப் போலவே, தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், அறிந்தவர்-தெரிந்தவர்கள் போன்ற பிற வாசகர்களையும் அறிவிலும் ரசனையிலும் நல்ல தரத்தினராக உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். தமிழகத்தின் எதிர்காலத்துக்கு இது இன்றியமையாதது.

சிறகுக்கு நேர்காணல் அளித்தமைக்கு மிக்க நன்றி!


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பேராசிரியர் முனைவர் க. பூரணச்சந்திரன் அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது