பிப்ரவரி 16, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

பேருந்து கட்டண உயர்வும், அவதிப்படும் மக்களும்.!

சுசிலா

Feb 3, 2018

Siragu perundhu4

தமிழகமக்களின் தற்போதைய மிகப்பெரிய சுமை, இந்த பேருந்து கட்டண உயர்வு என்பது நம்மில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. அந்த அளவிற்கு மக்களை மிகவும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும் துயரம் இந்த பேருந்து கட்டண உயர்வு. இது சரியான நிர்வாக அமைப்பு இல்லாததையே காட்டுகிறது. நிதி பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் என்ற ஒரு நொண்டி சாக்கை கூறிக்கொண்டிருக்கிறது. இந்த நிர்வாக திறமையற்ற அதிமுக அரசு.!

எல்லாவற்றிக்கும் முதன்மை காரணம் என்னவென்றால், போக்குவரத்து ஊழியர்களின் பிடிக்கப்பட்ட தொகையை வைப்பு கணக்கில் வைக்காமல், வேறு செலவினத்திற்காக திருப்பிவிட்ட காரணத்தினால் ஏற்பட்ட ஒரு மோசமான விளைவு தான், இந்த நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் தான் அவர்கள் கேட்கும் நேரத்தில் கொடுக்க முடியாமல் போனது. இதனால் போராட்டம், வேலை நிறுத்தம். அதனைத் தொடர்ந்து பேருந்து கட்டண உயர்வு என அனைத்தும் நடக்க காரணமாக இருந்திருக்கிறது.

ஆனால், இந்த உயர்வு என்பது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. 60 முதல் 100, 110 விழுக்காடு வரை ஏற்றி இருக்கிறார்கள் என்றால், சாமானிய மக்களால் சமாளிக்க முடியுமா.? பயணச்சீட்டு வாங்குவதற்கு கையில் போதுமான பணமில்லாதவர்கள், பாதி வழியிலேயே இறக்கிவிடும் அவலமும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. பொது மக்கள் அனைவரும் சொல்லொண்ணா சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. அவர்களின் வாழ்வாதாரத்தையே தலைக்கீழாக புரட்டிபோடுமளவிற்கு இந்த உயர்வு அவர்களின் நடைமுறை வாழ்க்கையை பாதித்து இருக்கிறது. பொது மக்களிடமும், எதிர்கட்சிகளிடமும் பலத்த எதிர்ப்பு கிளம்பவே, தற்போது குறைக்கிறோமென்று கூறி, கண் துடைப்பாக ஒரு ரூபாய், மற்றும் 10 சதவிகிதம் என்று குறைத்து பம்மாத்து வேலையை செய்திருக்கிறது மாநில அரசு. இந்த குறைப்பு என்பது எந்த அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தாது. மக்களின் சுமையைக் குறைத்து விடாது. அரசின் நிர்வாகத்திறமையின்மையால், பாதிக்கப்படுவது பொது மக்கள்தான் என்பதை அரசு உணர வேண்டாமா. தன்னுடைய தவற்றை உணர்ந்து திருத்திக் கொள்ளாமல், போராட்டம் நடத்துபவர்களைக் குறை கூறி என்ன பயன்.!

Siragu perundhu1

தமிழகமெங்கும் மாணவர்கள் இந்த பேருந்து கட்டணத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது தடியடி நடத்துவதும், கைது செய்வதும் என்று மக்கள் விரோதப் போக்கை கையாளுகிறது தமிழக அரசு. தனியார் பேருந்து நிறுவனங்கள் லாபம் பார்க்கும் போது, அரசால் சரியாக இயங்க முடியாதா. மேலும் பேருந்துகளெல்லாம் மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கின்றன. போதிய பராமரிப்பும் கிடையாது. டீசல், பெட்ரோல் ஏற்றத்தின் போதுகூட, திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. இது மக்களுக்காக அரசு ஏற்படுத்திய ஒரு சேவை நிறுவனம். அதில் லாப, நஷ்ட கணக்கு பார்த்து பொது மக்கள் தலையில் ஏற்ற முடியமா. ஜிஎஸ்டி வரி சுமை, விலைவாசி உயர்வு என்று மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கும் சூழலில், பேருந்து கட்டணம் உயர்வு என்பது குருவியின் தலையில் பனங்காயை வைத்தது போல் ஆகாதா. அரசிடம் நிதி இல்லையென்றால், அது முற்றிலும் நிர்வாகத் திறமையின்மையே. அதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர, மக்களை வாட்டி வதைக்கக் கூடாது.

பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் அனைவரும் இந்த அரசின் நிர்வாத்திறனை வசைபாடிக்கொண்டே தான் பயணிக்கிறார்கள்.

Siragu perundhu3

‘அரசிடம் நிதி இல்லையென்று சொல்கிறீர்களே. எம்எல்ஏ- க்களின் ஊதியத்தை மட்டும் உயர்த்த பணம் இருக்கிறதா.’ என்று கேட்டு கொதித்தெழுகிறார்கள். பேருந்துகளில் பயணிப்பவர்கள் என்ன பரம்பரை பணம் படைத்தவர்களா. அன்றாடம் உணவிற்கு உழைக்கும் அடித்தட்டு மக்களும், பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் தானே. மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம், மக்களின் மீது மேலும் மேலும் சுமையை ஏற்றினால், அவர்கள் என்ன செய்வார்கள். போராட்டமும், புரட்சியும் தானே வெடிக்கும். ஆங்காங்கே வேலூர், மதுரை, தஞ்சை, என பல மாவட்டங்களில் மாணவர்கள் தொடர்ந்து இன்று வரை போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை ஒடுக்க நினைத்து கைது செய்தாலோ, தடியடி நடத்தினாலோ போராட்டம் வலு பெறுமே ஒழிய அடங்கிவிடாது என்பதை அரசு உணர வேண்டும். உடனடியாக இந்த பேருந்து கட்டண உயர்வை முழுதும் குறைக்க ஆவண செய்ய வேண்டும்..

எல்லா வகையிலும் மக்களின் கழுத்தை நெருக்கினால், அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை அரசு நினைத்து செயல்பட வேண்டும். நேர்மையான அணுகுமுறையில் நிர்வகித்தாலே, இந்த பிரச்சினையை சரி செய்துவிட முடியும். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையையும், கோரிக்கையையும் நிறைவேற்றி, கட்டண குறைப்பையும் பரிசீலனை செய்யுமாறு, தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். இந்த பிரச்சினைக்கு அரசே முழு பொறுப்பெடுத்து, உணர்ந்து, உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். இல்லையென்றால், மக்கள் பொறுமையிழந்து பெரும் புரட்சியை ஏற்படுத்துவார்கள் என்பது உறுதி.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பேருந்து கட்டண உயர்வும், அவதிப்படும் மக்களும்.!”

அதிகம் படித்தது