நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

பொன்மகள் வந்தாள்

தேமொழி

Jun 6, 2020

siragu ponmagal-vanthal1

கொரோனா தாக்கம்-பொதுமுடக்கக் காலத்தில் கோலிவுட் இயக்கம் இழந்து போன நிலையில், திரையரங்குகளில் வெளியிடப்படாமல் நேரடியாக ஓடிடி (Over-the-top media service) வெளியீடாக வந்திருக்கிறது “பொன்மகள் வந்தாள்” திரைப்படம். நூறாண்டுகளுக்கு முன்னர், “கீசக வதம்” என்ற ஒரு பேசாப்படத்துடன் ஆர். நடராஜ முதலியார் தயாரிப்பில் 1918ஆம் ஆண்டு துவங்கிய தமிழ்த்திரைப்பட வரலாற்றில், திரையரங்க வெளியீடு என்பதே இல்லாது வெளியாகியுள்ளது. இது தமிழ்ப்பட வரலாற்றில் ஓர் திருப்புமுனை. தொலைத்தொடர்பு தொழில்நுட்பமும் கொரோனா பொதுமுடக்கக் காலமும் மற்றொரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்து, வரலாற்றில் இப்படத்திற்குத் தனி இடத்தை அளித்துள்ளது.

பொன்மகள் வந்தாள் என்ற விஜய் தொலைக்காட்சியின் தொடர் விடைபெற்றுக்கொண்ட மிகச்சிறிய இடைவெளியில் மீண்டும் அதே தலைப்பு ஒரு அலுப்பு, ஆனாலும் பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் என்ற டி எம் எஸ் பாடிய பழைய பாடலைத் தவிர்க்க முடியாமல் நினைவில் ஒலிக்கச் செய்வது தலைப்பின் ஒரு சிறப்பு. மார்ச் 27-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடப்படத் தயாராக இருந்த இந்தப்படம் பற்பலத் தடைகளைத் தாண்டி 29 மே 2020 அன்று ஆமசான் பிரைம் வீடியோவின் வழியாக வெளியானது. தமிழகத் திரைப்படத்தை அது வெளியான அன்றே உலகின் மறுகோடியிலும் பார்க்க முடியும் வண்ணம் வெளியிடப்பட்டது என்ற நிலை தனிச்சிறப்பு. இனி திருட்டுக் காணொளிகளின் விற்பனைக்கு மூடுவிழா அதிக தொலைவில் இல்லை என்பதை இந்த திரைப்பட வெளியீட்டு முறை காட்டுகிறது. தென்னிந்தியத் திரைப்படச் சங்கமே இப்படி ஓர் வெளியீட்டு முறையை தங்கள் பொறுப்பில் ஏற்றால் திரைப்படத் துறை கலைஞர்களின் வாழ்வில் மாறுதல் கொண்டுவர அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் தேவை இருக்காது என்று தோன்றுகிறது. சட்டப்படி படத்தை நேரடியாக இணையவழியில் குறைந்த விலையில் பார்க்க முடியும் என்றால் பெரும்பாலோர் அந்த வழியைத்தான் தேர்வு செய்வார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ஃபிரெட்ரிக் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையில், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் உருவாக்கத்தில் வெளிவந்துள்ளது இப்படம். சுருக்கமாக, ஜோதிகா இல்லை என்றால் படம் இல்லை என்ற அளவிற்கு அவரது திறமைதான் படம் முழுவதும் நிரம்பியிருக்கிறது. ஜோதிகாவும் தனது உச்ச அளவு நடிப்புத் திறமையை, நடிப்பு என்றே தெரியாத வகையில் வெளிப்படுத்தியுள்ளார். கே. பாக்கியராஜ், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் என்று 1980களில் தமிழ்த் திரைப்பட உலகில் தோன்றி தங்கள் திறமைகளை நடிகர்களாகவும் இயக்குநர்களாகவும் வெளிப்படுத்தியவர்களை மீண்டும் திரையில் காண்பது ஒரு நிறைவு. குளிருக்கு இதமாகக் கணப்பு அருகில் அமர்ந்து கொண்டு ‘என் இனிய பொன் நிலாவே’ என்று பிரதாப் போத்தன் பாடும் காட்சி மூடுபனி நினைவலைகளை மீட்டி மனதுக்கும் இதமாகவே இருக்கிறது. உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டத் தெரியாது இயந்திரம் போன்ற முகபாவத்துடன் நடிக்கும் தியாகராஜனுக்குப் பொருந்தும் வகையில் அவர் ஒரு அழுத்தமான ஆள் என்று கூறி அவருக்கும் ஏற்ற வகையில் ஒரு பாத்திரத்தைக் கொடுத்த இயக்குநர் பாராட்டப்பட வேண்டியவர்தான். நீதிபதியின் நெடுநாள் நண்பராக வரும் பாண்டியராஜனுக்கு மேலும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். பார்த்திபனுக்கு ஜோதிகாவுக்கு இணையாக, எதிர்க்கட்சி வழக்கறிஞராக தனது முத்திரையைப் பதித்துப் படத்தின் தரத்தை உயர்த்தும் பொறுப்பு. அவருக்கு இது போன்ற நடிப்பு பெரிய காரியமே இல்லை என்பதை மீண்டும் காட்டியுள்ளார். பாக்கியராஜ் வழக்கறிஞர் வெண்பா என்ற பாத்திரத்தை ஏற்ற ஜோதிகாவின் வளர்ப்பு அப்பாவாக நடித்துள்ளார். அவரும் தன் பங்கைச் செவ்வனே செய்துள்ளார் என்ற நிறைவைத் தருகிறார்.

நடிப்பைப் பொருத்தவரை அனைவரும் நிறைவாகவே செய்துள்ளார்கள், வினோதினி வைத்தியநாதன் நன்றாக, மிக இயல்பாக நடித்தார் என்றாலும் அந்த இடத்தில் பாக்கியராஜுக்குத் துணைவியாக முந்தானை முடிச்சு திரைப்படப் புகழ் ஊர்வசி நடித்திருந்தால் இன்னமும் நன்றாகவே இருந்திருக்கும் என்று தோன்றாமல் இல்லை. படத்தில் மிகத் தேவையற்ற ஒரு திருப்புமுனையாக, நேர்மையான நீதிபதியாகக் காட்டிய பிரதாப் போத்தனின் பாத்திரத்தைக் குலைத்து அவரும் குற்றங்களுக்குத் துணைபோகும் வகையில் கொலைகாரனிடம் பணப்பெட்டி வாங்கும் ஆளாக மாற்றியதுதான். அதனால் எதுவும் சாதிக்கப்படவில்லை என்பது ஒரு நெருடல். தரவுகளின் அடிப்படையில் சாட்சிகளின் அடிப்படையில் நீதி சொல்ல வேண்டிய கடமைக்குள் கட்டுப்படுத்தப்படும் நீதிபதிகள் மீது நம்பிக்கை இழக்கும் வண்ணம் அந்தக் காட்சி அமைந்துவிட்டது. அதைத் தவிர்த்திருக்கலாம்.

siragu ponmagal-vanthal

பாடல் காட்சிகள் மனதைக் கவர்ந்தாலும், குறிப்பாகத் தாயும் மகளும் அன்பு பாராட்டும் பாடற்காட்சிகள் சிறப்பாக இருந்தாலும் பாடல் எதுவும் மனதில் தங்கவில்லை. இசையமைப்பு, காட்சி அமைப்பு, படத்தொகுப்பு, ஊட்டியின் இயற்கை அழகு படமாக்கப்பட்ட விதம் அனைத்தும் சிறப்பு. படம் தொய்வின்றி நகர்த்தப்படுவதில் இயக்குநரின் திறமை மிளிர்கிறது. ஓரிடத்திலும் சலிப்பு ஏற்பட்டது என்று கூறுவதற்கில்லை.

படத்தின் கதை சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதைத் தடுக்கும் நோக்கில் ஒரு விழிப்புணர்வு உருவாக்கும் நோக்கில் அமைவது என்றாலும், பெண்களின் வாழ்க்கை எந்தெந்த வகையில் பாதிக்கப்படுகிறது என்பதைப் படத்தின் கதையமைப்பு பல இடங்களில் சொல்லிச் செல்கிறது. படத்தின் கதை: காதலித்து வேற்றுக் குலத்து ஆண் ஒருவரைக் கைப்பிடிக்கும் சக்திஜோதி என்ற தமிழ்ப்பெண் ஆணவக் கொலையில் தன் கணவரை இழக்கிறார். கர்ப்பிணியான அவர் பிறக்கப் போகும் குழந்தையைக் காப்பாற்றவும், தனது உயிருக்குத் தப்பியும் வடநாட்டிற்கு ஓடுகிறார். மீண்டும் சிறுமியாக வளர்ந்துவிட்ட தனது மகளுடன் தமிழகம் திரும்பி ஊட்டியில் ஏதோ ஒரு பணியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வாழும் அந்த வாழ்விலும் அவருக்கு நிம்மதி நிலைக்கவில்லை. மகளைப் பாலியல் வன்கொடுமைக்குப் பறி கொடுக்கிறார். அந்தக் கொடியவர்கள் துரத்தும் பொழுது அவர்களை அவர் கொலை செய்யவும் நேரிடுகிறது. அரசியல்வாதியின் மகன்களான அவர்கள் பெரிய இடத்துப் பிள்ளைகள் என்பதால் அதிகார வர்க்கத்தின் சதியில் சிக்கிவிடுகிறார். அரசியல்வாதியின் தூண்டுதலால் காவல்துறையால் அவர் ஒரு வடநாட்டு சைக்கோ ஜோதி என்று முத்திரை குத்தப்பட்டு, மற்ற சிறுமிகளின் கொலைப்பழியும் அவர்மீது சுமத்தப்பட்டு என்கவுண்டரில் அவர் கதை முடிக்கப்படுகிறது. அவரைப்பற்றிய தடயங்களும் உண்மைகளும் அத்தோடு மறைக்கப்படுகிறது. இவ்வாறு சக்திஜோதியின் கதை பரபரப்பாகப் பேசப்படும் காலத்தில் அதை அறியக்கூட வழியின்றி அவரது அம்மா அவர் வீட்டிலிருந்து துரத்தப்பட்டு வேதாரண்யத்தில் ஏதோ ஒரு மடத்தில் உலகம் அறியாமல் முடங்கிய நிலையிலிருந்தார் என்று பின்னர் நீதிமன்றத்தில் அவர் சாட்சி சொல்கையில் தெரிய வருகிறது. ஆகவே முடிவு: பெண்களுக்கு எங்கும், எந்த வயதிலும், எந்த வகையிலும் வாழக்கையில் பாதுகாப்பில்லை. அவர்களுக்குத் துயர்கள் மட்டுமே தொடர்கதை.

பதினைந்து ஆண்டுகள் கழித்து வடநாட்டு சைக்கோ கொலைகாரி என்று மக்களால் வெறுக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று வழக்கை மீண்டும் துவக்குகிறார் பெட்டிஷன் பெத்துராஜாக நடிக்கும் பாக்கியராஜ். அவரது வளர்ப்பு மகள் வழக்கறிஞரான வெண்பாவின் முதல் வழக்கு அது. புகழுக்காக வழக்கு மீண்டும் திறக்கப்படுவதாகக் கொதிக்கும் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர்கள் நீதிமன்றத்தின் வாசலிலேயே வெண்பாவைத் தாக்குகிறார்கள். ஆனாலும் பொறுமையாக, உறுதியாக, நிதானமாகத் தனது தந்தை உதவியுடன் தரவுகளைத் துருவி எடுக்கிறார் வெண்பா. தான்தான் குற்றம்சாட்டப்பட்டு என்கவுண்டரில் காவல்துறையால் போட்டுத்தள்ளப்பட்ட பெண்ணின் மகள் என்று தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறுகிறார். தாய்மீது பொய்க் குற்றம் சாடப்பட்டது என்று நீதி கேட்கிறார். இதனால் விழித்துக் கொள்ளும் அரசியல்வாதி காவல்துறை நீதித்துறை என அனைத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். பெரிய வழக்கறிஞர் வெண்பாவிற்கு எதிராக அமர்த்தப்படுகிறார். தாய் சக்திஜோதி காவல்துறையிடம் சரணடைந்தார் என்ற உண்மை தெரிந்த காவல்துறை அதிகாரியும் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு வகையிலும் முடக்கப்படும் வெண்பா துவண்டு சோர்ந்து மீண்டும் மீண்டும் தந்தையின் ஆதரவினால் முயற்சியைத் தொடர்கிறார். எல்லாவகையிலும் தோல்வி என்ற நேரத்தில் அரசியல்வாதியின் பலவீனத்தைப் பயன்படுத்துகிறார். அந்தப் பெரிய மனிதர் கௌரவம் மரியாதை போன்றவற்றை எதிர்பார்ப்பவர் என்ற உண்மையை நேரடியாக ஒரு சந்திப்பின் மூலம் அறிந்திருக்கும் வெண்பா அதைச் சீண்டிவிட்டு, நடந்த உண்மையை அவர் வாயாலேயே அகங்காரத்துடன் வெளியிட வைத்துவிடுகிறார்.

இதில் இடையில் தற்கொலை செய்து கொள்ளும் அதிகாரியின் வீட்டில் துக்கம் விசாரிக்கச் செல்லும் வெண்பாவிற்கு எதிராக அதிகாரியின் கைபேசியுடன் வீட்டுக் குழந்தைகள் விளையாடுகையில் அதன் திரையை எட்டிப் பார்க்கிறார், தாயின் கொலை குறித்த செய்திகளைத் தொகுத்து வைத்திருக்கும் புல்லட்டின் போர்டில் இருந்து, வெண்பா தோல்வியில் துவண்டிருக்கையில் ஒரு செய்தித்தாள் துண்டு மட்டும் காற்றில் படபடத்துப் பறந்து கீழே வீழ்கிறது. அவற்றில் ஏதேனும் அவருக்குத் தடயங்கள் இருக்குமோ என நாம் தான் எதிர்பார்க்க நேரிடுகிறது. ஆனால் கதையில் அப்படி ஒன்றும் இல்லை. இறுதியில் வெண்பா உண்மையில் சக்தி ஜோதியின் மகள் இல்லை, அவரால் காப்பாற்றப்படும் மற்றொரு பெண்ணான ஏஞ்சல் என்பவள் என்று பார்த்திபன் எப்படியோ கண்டு பிடித்துவிடுகிறார். ஆனால் இந்தத் திருப்பத்தால் என்ன சாதிக்கப்படுகிறது என்பதும் புரியவில்லை, கதைக்கு உதவாத மேலும் சில தேவையற்ற திருப்பங்கள் என்ற வகையில் அதற்கு மேல் மேற்கொண்டு குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. வடநாட்டுக் கொலைகாரர் கொள்ளைக்காரர் என்று எளிதில் மக்களின் உணர்ச்சி தூண்டப்படுவதையும் படம் சுட்டிக் காட்டுகிறது.

படத்தின் கருத்து மீண்டும் மீண்டும் பலமுறை ஜோதிகாவின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்டோருக்கான இழப்பு என்பது ஒரு விளையாட்டல்ல, அவர்களுக்கு நீதி தேவை. பாலியல் வன்கொடுமை செய்வது ஆண்களுக்குப் பொழுது போக்காக இருக்கலாம் ஆனால் அது பாதிக்கப்பட்டவருக்கு வாழ்நாள் முழுவதும் அது ஒரு தண்டனை. வாழ்நாள் முழுவதும் அவர்களது உறக்கத்திலும் கனவுகளாகத் தொடரும் அச்சுறுத்தல். இறுதியில் வாய்மையே வெல்லும், ஆனால் அதற்கு இடையில்.. .. .. துயருற்றவர் மன உளைச்சலுக்கு என்னதான் வடிகால்?

அண்மையில் இந்துக்களையும் தஞ்சை பெரியகோயிலையும் அவமதித்தார் ஜோதிகா என்று காவி பிரிவினரால் ஒரு குற்றம் சாட்டப்பட்டது. ஜோதிகா கூறியவற்றைத் திரித்துக் கூறி அவருக்குக் குறி வைக்கப்பட்டது. அதனால் ஜோதிகா, சூரியா, நடிகர் சிவகுமார் குடும்பம் சமூக வலைத்தள அலப்பறையில் சிக்கியது. மீண்டும் இந்தப் படம் வெளியானபிறகும் கூட ஒரு கூட்டம் ஜோதிகாவையும் படத்தையும் நையாண்டி செய்து கொண்டிருக்கிறது என்பதும் யாவரும் அறிந்ததே. அவர்களின் கவனத்திற்கு.. .. .. பெண் குழந்தைகளை ஒவ்வொருமுறையும் கட்டுப்படுத்தி அவர்களைத் தொடர்ந்து கண்டித்து வளர்க்கும் பெற்றோர், ஆண் பிள்ளைகளை அவ்வாறு வளர்க்கத் தவறுவது ஏன்? இதுதான் படத்தின் இறுதியில் கவனத்திற்குக் கொண்டுவரப்படும் கருத்து. இதைத்தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் 2014 ஆகஸ்ட் 15, சுதந்திரதின சிறப்புரையில் கூறினார். பிரதமர் முன் வைத்த ஒரு கருத்தை மக்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ள ஜோதிகா உண்மையில் பாராட்டப் பட வேண்டியவர் அல்லவா? அதை அவர்கள் நினைவில் கொள்வார்களாக.

படத்தின் இறுதியில் புள்ளிவிவரங்களுடன் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்களில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருப்பதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் 3-ம் இடத்தில் இருப்பதாகத் தேசிய குற்ற ஆவண அறிக்கை சொல்கிறது என்பதுதான் அது. இந்தப் புள்ளிவிவரங்கள் உண்மைதானா என விகடன் ஆய்வு மேற்கொண்டு, “தேசிய குற்ற ஆவணக் காப்பகம்” தரவுகளின் அடிப்படையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்ற ஒரு கட்டுரை வெளியிட்டது. அது மேலும் அதிர்ச்சி தரும் தரும் தரவுகளை முன் வைக்கிறது. போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்ற வழக்குகளில் இந்தியாவில், நாளொன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற தகவலைக் கூறுகிறது விகடன் கட்டுரை. அத்துடன் இந்த ஊரடங்கு காலத்தில் குற்றங்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளதாகவும் தெரிகிறது. உலக அளவில், ஆபாசப் படங்கள் அதிகம் பார்ப்பதில் இந்தியாதான் முதல் இடம் வகிக்கிறது என்பதும் இதற்குக் காரணம் என்று தெரியவருகிறது.

ஆண்களுக்கு உடன் வாழும் பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுக்கும் மனப்பான்மையைப் பெற்றோர் முதன்மையாகக் கொள்ள வேண்டும். அந்த நிலை ஏற்படாவிட்டால் ள் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைய வாய்ப்பே இல்லை. பெற்றோர் அனைவரும் குழந்தை வளர்ப்பு குறித்துப் பாடம் கற்க வேண்டிய ஒரு படம் பொன்மகள் வந்தாள்.

மேலும் தகவலுக்கு, பார்க்க:

Take responsibility for sons: PM Narendra Modi on rising rape cases, PTI, Aug 15, 2014.

https://m.economictimes.com/news/politics-and-nation/take-responsibility-for-sons-pm-narendra-modi-on-rising-rape-cases/articleshow/40305367.cms

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்… `பொன்மகள் வந்தாள்’ படம் சொல்லும் தரவுகள் உண்மைதானா?! விகடன், ஜூன் 1, 2020.

https://www.vikatan.com/social-affairs/crime/is-the-data-on-crimes-against-children-that-showed-in-ponmagal-vandhal-movie-is-true


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பொன்மகள் வந்தாள்”

அதிகம் படித்தது