மார்ச் 6, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

பொருளாதாரம்

செல்வக்குமார் சங்கரநாராயணன்

May 21, 2016

porulaadhaaram1ஒரு நாடு எதில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்படுமானால், முதலில் மக்கள் நலம் தான் சிறந்த பதிலாக பெறப்படும். மக்கள் நலத்திற்குள் கல்வி, மருத்துவம், அனைவருக்கும் உணவு, வசிப்பிடம், நல்ல குடிநீர் மற்றும் இன்ன பிற பொதுவான அடிப்படை வசதிகள்  என அனைத்தும் அடக்கம். ஆனால் பெரும்பாலான நாடுகளில் தன்னிறைவு என்றவுடன், “நாட்டு வளர்ச்சியை அதாவது பண மதிப்பை மட்டுமே வானளவு உயர்த்துவது” என தவறான மனக்கணக்கு போக்கு நடைமுறையில் இருந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சி என்பதே அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில்தான் இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

நம் நாடு ஒரு வளர்ந்து வரும் நாடு, அதே போல் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி விகிதம் தொழில்துறையின் மூலமும், அந்நிய செலாவணி மூலமும் நிலைநிறுத்தப்பட்டு வளர்ந்துகொண்டே வருகிறது. இம்மாதிரியான காரணத்தால் தொழில்துறையிலும், தொழில்நுட்பத்திலும் ஆராய்ச்சி அரங்கேறுகிறது. இது பாராட்டத்தக்க விடயம் தான். ஆனால் வேளாண் துறை சார்ந்த விளை நிலங்கள் அவைகளுக்கு இரையாக்கப்படுவது தான் மாபெரும் துயரம்.

porulaadhaaram3விவசாய நிலங்கள் அரசால் அடித்துப்பறிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்குத் தாரை வார்க்கப்பட்டு, விவசாயம் சார்ந்த திட்டங்கள் பல அறிவிப்பதில் என்ன இருக்கின்றது!  ‘காலை கட்டிப்போட்டுவிட்டு ஓடிவா’ என்று அழைப்பதற்குச் சமானமாய் இருக்கிறது அரசின் இந்தச்செயல். கேட்டால் தொழில்+ புரட்சி+ மக்கள் வாழ்க்கைத்தரம் மேம்பாடு என்று மேல்தட்டுக்களின் கூச்சல்கள் வேறு. எல்லாரும் ஒரு கேள்வியை உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள், வேலையோ தொழிலோ செய்து சம்பாதிப்பது எதற்கு?. முதலில் வயிற்றுப் பசியைப் போக்கும் உணவிற்காக! பிறகு தான் ஆடம்பர இத்யாதி இத்யாதிகள்.

இது தான் உண்மை, உயிர் வாழத் தேவையான விவசாயத்தை வேரறுத்துவிட்டு பணமெனும் அச்சடித்த காகிதத்தை அள்ளி உண்பீர்களா!? அது ஏன் புரிய மறுக்கிறது மக்களுக்கு. இப்பொழுது கூட உணவில் தன்னிறைவு என்று சொல்லக்கூடாது நாம், ஏனென்றால் ஒவ்வொரு இரவும் நம் இந்தியாவில் 40 கோடி மக்கள் இரவுணவு இன்றி உறங்கச் செல்கின்றனர். ஆனால் இதே இந்தியாவில் தான்  ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட அரசுக் கிடங்குகளில் சேமிக்கப்படும் உணவுப் பொருட்களில்  4 மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் தரம் கெட்டு வீணாகின்றன.

porulaadhaaram4லலித் மோடி விவகாரமே இன்னும் ஓய்ந்தபாடில்லை, இதில் விஜய் மல்லையா விவகாரம் விண்ணை முட்டுகிறது. கடன் மேலும் மேலும் வாங்கி உல்லாசத்தில் ஊறித் திளைத்து கடனை முடிந்தபொழுது திருப்பித்தருகிறேன் என்று ஊரைவிட்டு ஓடி மீண்டும் ஒரு புதிய உல்லாச வாழ்வில் நீந்திக்கொண்டு இருக்கிறார் அந்த இந்தியக் (இங்கிலாந்திலும்) குடிமகன். இதையே சாமானியர் ஒருவர் செய்ய முடியுமா?(யாரும் செய்தல் தவறுதான் நடைமுறையைச் சுட்டுவதற்கு இதை பாவிக்கிறேன்) செய்தால் என்னவாகும்? சட்டமே புதிதாய் உருவாக்கப்படும், தண்டனையும் தாமதமின்றி வழங்கப்படும். அவருக்குக் கொடுத்த கடனை எத்தனை விவசாயிகளுக்குக் கொடுத்திருக்கலாம்?!  ஆனால் இங்கே எங்கு விவசாயி மதிக்கப்படுகிறான். பத்து ஆயிரம் கடன் வாங்கியவனை பாடையில் தூங்க வைக்கத்தான் பார்க்கிறார்கள். அவனிடம் கடவுச்சீட்டு (Passport)  இல்லையே தப்பிச் செல்ல? இல்லை உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடிட்டு வழக்கையே தள்ளுபடிதான் செய்துவிடுவானா?! இந்தியாவில் அரசு கொடுத்த மொத்தக்கடனில் படிப்பிற்காக இந்தியா முழுவதும் மாணவர் வாங்கியிருக்கும் கடன் வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவு தான்.

ஆயிரக்கணக்கில் கடன் கொடுத்தவர்களை கழுத்தைப் பிடித்து வசூல் செய்து விட்டு, கோடிகளில் வாங்கியவர்களை கண்டுகொள்வதில்லை. இதில் சாமானியர்கள் பணம்  சேர்க்கும் சிறுசேமிப்புத் திட்டத்தில் அரசு வட்டிகுறைப்பு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கும் செயலாக இருக்கிறது.

மீண்டும் ஒரு முறை மேலிருந்து  படித்தால் கூட பொருளாதாரத்தை இதில் சுவைக்கமுடியாது. ஏனென்றால் மக்களின் வாழ்வாதாரம் உயர்வைப் பற்றித்தான் நாம் முதலில் சிந்திக்க வேண்டும். அப்பொழுது தான் பொருள்- ஆதாரம் மேம்படும்!!


செல்வக்குமார் சங்கரநாராயணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பொருளாதாரம்”

அதிகம் படித்தது