சூன் 16, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

போக்கத்தப் பயல்களும் பொறுப்பற்ற அரசியலும் (கவிதை)

மகேந்திரன் பெரியசாமி

Feb 25, 2017

Siragu-chair

நாற்காலிப் போருக்காய்
‘நா’காலி ஆன
வீண் வெற்று
வாய்ச்சொல் வீரர்கள்-

மண்ணின் மைந்தர்களை
மன்னராக்கிய ஏழைகளை
வாழவழி ஏதுமின்றி
மாளும் விவசாயிகளை-
பொங்கிவந்த காளையரை-
போர் தொடுத்த இளைஞர்களை என
என்னடா நினைத்தீர்கள்
என்னரும் மக்களை?

ஓடு காலிகளாய்ப் பேருந்து ஏறி
தன்னறிவுச் சிந்தையுன்றி
தாய்நாடு பற்று இன்றி
அடுத்தது தாண்டும்
செம்மறி ஆடுகளாய்
அடிமையுற்று அடைபட்டீர்
நூற்றுக்கும் மேல் பட்டியிலே!

வியர்வையில் குளிக்கும்
உழைக்கும் மக்களை
மதுவுக்கும் இலவசப் பொதுவுக்கும் – எம்
வரிப்பணத்தில் அடிமையாக்கி-
வாரிச் சுழற்றி விழுங்குகிறீர்
வாரிசுரிமை கோருகின்றீர்-
தலைமுறைத் தலைமுறையாய்த்
தங்கத்தின் தங்கங்களை
இரத்தத்தின் இரத்தம் என்றே
இரத்தக் களறி ஆக்குகின்றீர்-

தான் செய்த குற்றத்திற்காய்ச்
சிறை சென்ற சூன்யங்களைத்
தலைவியென்று வெட்கமின்றி
தலையில் வைத்து ஆடுகின்றீர்!
பொறுப்பின்றி பூமியாள
பொம்மலாட்டம் காட்டுகின்றீர்-

ஏராளக் கட்சிகளும்
எள்ளளவும் மானமின்றி
மக்கள் நலப் பொறுப்பு இன்றி
நாக்குகளைச் சுழற்றி
ஏமாற்று வித்தை காட்டி
தன்குடும்பம் செழிப்பதற்கு
எம்மினத்தை ஏதேதோ
இயன்ற வரைக் கூறு போட்டீர்-
கூறுபோட்டுக் கொன்றுவிட்டீர்-

ஏய்க்கவும் எடுக்கவும்
வாலாட்டி நாதொங்கும்
நாய்களென்று எண்ணிவிட்டீர்-
நாடெங்கும் சூறையிட்டீர்-

நாங்கள் மக்களா-
இல்லை- நீங்கள்
சூதாடி விளையாடும்
சோலிக் குண்டுகளா?

சட்ட மன்ற உறுப்பினராம்-
அமைச்சர் பெருமக்களாம்-
நிரந்தரச் செயலாளராம்-
செயல் வீரத் தலைவராம்-
பொய்கூவும் விற்பன்னராம்-
பொறுப்பு ஆளுநராம்-
உலகமென்றும் சுற்றிவந்தும்
ஊர்ச் சிக்கல் அறியாதவராம்-

நம் பார’தீ’யின் முழக்கத்தைப்போல்
நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறனுமின்றி
கூட்டத்தில் கூடி நின்று
வஞ்சனைகள் பலசெய்து-
கூவிப் பிதற்றும் குண்டர்களே-
குருடர்களே- தண்டர்களே..
எங்கள் ஊர்ப் பெரியவர்கள்
பொறுப்பின்றித் திரிபவரைப்
பொதுவெளியில் சொல்வதுபோல்
“போங்கடா போக்கத்தப் பயல்களா!”

கூர்க் கொம்பு கொண்ட
காளைகள்டா நாங்கள்!
வீறு கொண்டு உருமி நிற்கும்
சிங்கங்கள்டா நாங்கள்!
பாய்ந்து உரிமை கோரும்
புலிகள்டா நாங்கள்!

காட்டுவோம் பாரடா
நாங்கள் யாரென்று!
கூட்டுவோம் பாரடா
காளைகளின் கூட்டங்களை!
மக்களுக்காய்ச் சட்டமா
சட்டத்திற்காய் மக்களா?
பொறுத்திருந்து பாரடா!
பூமி ஆள்வோம் நாமடா!


மகேந்திரன் பெரியசாமி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “போக்கத்தப் பயல்களும் பொறுப்பற்ற அரசியலும் (கவிதை)”

அதிகம் படித்தது