போதை
T.K.அகிலன்May 23, 2015
போதை, உண்மையான துறவிகளைத் தவிர, பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்தது. சுயத்தை இழந்து கிளர்ச்சியடைந்த நிலையில் இருப்பதே போதை. செய்யும் செயலில் போதை, எண்ணும் எண்ணங்களில் போதை, எழுதும் எழுத்துகளில் போதை, படிக்கும் வார்த்தைகளில் போதை, அனுபவிக்கும் கலைகளில் போதை, இவை ஒன்றும் இல்லாவிட்டால், அருந்தும் மதுவின் போதை! மதுவின் போதை அளிக்கும் செயலற்ற தன்மை, செயலூக்கம் இல்லாதவர்களுக்கு, உழைப்பை வேண்டும் மற்ற போதைகளுக்கு மாற்றாக கிடைத்த வரப்பிரசாதம்! இன்று ஒரு மாநிலமே செயலூக்கம் இல்லாத இந்த மனிதர்கள் அருந்தும் மதுவின் மூலம் அடையும் வருமானத்தில் ஆட்சியை நிகழ்த்துகிறது.
தமழ்நாட்டில் வாழும் நல்லூழ் பெற்றவர்களுக்கு, கடந்த சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக, போதை என்றாலும் TASMAC என செல்லமாக அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் (Taminadu State MArketing Corporation) என்னும் தமிழக அரசு நிறுவனம் என்றாலும் ஒன்றுதான். நாகரீகத்தில் செழித்திருந்த தமிழினத்தை மதுப்போதையில் ஆழ்த்தி, அவர்கள் சம்பாத்தியத்தையும் ஆரோக்கியத்தையும் பறித்தெடுத்து, வரும் வருமானத்தில் அவர்களை இலவசம் என்னும் போதையில் அமிழ்த்தி நாட்டையும் பரிபாலனம் செய்யும் அரசுகளின் செயல்பாடுகள் அளிக்கும் போதையில் வாழுமாறும் செய்யும் பெருந்தொண்டாற்றி வரும் நிறுவனம் இந்த TASMAC. ஒருவேளை தமிழர்களாகிய நாம், ஒரு சமூகமாக, இதை உள்ளூர விரும்புகிறோமாக இருக்கும். இல்லையெனில், அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து மதுவுக்கான கட்டுப்பாடுகளை கொண்டுவந்திருப்போம். அல்லது நம் அறிவுஜீவிகள் இதனை அறிவுத்தளத்தில் எடுத்துச்சென்று, போதுமான களப்பணியாளர்களை உருவாக்கி இருக்க மாட்டார்கள் – அந்த செயலின்மைக்குக் காரணம் எதுவாக இருக்கும்? அரசாங்கங்களை அண்டிப்பிழைக்கும் அறிவுஜீவிகள் அல்லது தம் அறிவை அடகு வைத்தவர்கள்!
மூளையின் நரம்பு மண்டலம் பொதுவாக மந்தமடைவது, மூளையின் சில செயல்பாடுகளை முடக்குவது (Inhibition), மற்றும் நரம்புமண்டலத்தின் சில பகுதிகளை ஊக்குவிப்பது ஆகியவற்றில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டவை இணைந்தோ வரும் நிலையை போதை எனலாம். இது மூளையினுள் சுரக்கும் வேதிப்பொருட்களினாலோ அல்லது ஆல்கஹால் போன்ற வேதிப்பொருட்களை உட்கொள்ளுவதன் மூலமாகவோ நிகழ்கிறது. உதாரணமாக, நாம் அடையும் சில உணர்வு நிலைகள், மூளையினுள் அந்த குறிப்பிட்ட வேதிப்பொருட்களை உருவாக்கிப் போதை உணர்வை அளிக்கின்றன. செயலின் போதை, அறிவின் போதை, கலையின் போதை போன்றவை இந்த வகையில் அடங்கும். இதனை நேர்மறை போதை எனவும் கூறலாம். இத்தகைய போதை பெரும்பாலும் செயலூக்கத்தை வேண்டுகிறது, அளிக்கிறது.
டோபமைன் (Dophamine) என்னும் மூளையினுள் உருவாகும் வேதிப்பொருள், இந்த நேர்மறை போதைக்கான காராணம் (அல்லது காரணங்களில் ஒன்று). மூளையின் விருப்பம் மற்றும் மகிழ்ச்சி போன்றவற்றை தூண்டும் பகுதிகளில் டோபமைன் உள்ளது அல்லது சுரக்கப்படுகிறது. அதாவது மகிழ்ச்சியான நிகழ்வை எதிர்நோக்கியிருக்கும் நேரத்திலும், அத்தகைய நிகழ்வுகளின்போதும் டோபமைன் மூளையில் சுரக்கப்படுகிறது. இதன் மூலம் மகிழ்ச்சி என்னும் உணர்வை அடைகிறோம். போதைபொருட்களை உட்கொள்ளும்போதும், அவற்றின் எதிர்மறை விளைவுகளுடன், டோபமைனும் மூளையில் சிறிதளவு சுரக்கிறது. இது மது அளிக்கும் மூளையின் மந்த நிலையுடன் சேரும்போது, மனிதர்கள் அந்த போதைக்கு அடிமையாகி விடுகிறார்கள்.
விசும்பு என்னும் ஜெயமோகன் அவர்களின் அறிவியல் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள ‘உற்று நோக்கும் பறவைகள்’ (http://www.jeyamohan.in/57) என்னும் சிறுகதையில், டோபமைன் மூலம் மனித மனதில் அடையப்படும் மாறுதல்கள், ஒரு புனைவாக கூறப்பட்டுள்ளன. இந்த சிறுகதை, டோபமைனை மூளையில் உருவாக்கி, அதன்மூலம் ஒருவகையான மனப்பிழவை உருவாக்கி, அதை ஆன்மீக அனுபவமாக கருதிய ஒரு குழுவினரை விவரிக்கும் கதை.
ஆனந்தமைட் என்பதும் மூளையில் உருவாகும் ஒரு வேதிப்பொருள். இதன் பெயர்தான் இந்த வேதிப்பொருளை குறித்து மேலதிக விபரங்களை திரட்டுவதற்கான ஆர்வத்தைத் தூண்டியது. இந்த வேதிப்பொருள், ஹெர்ப்ரூ ஜெருசலேம் பல்கலைகழகத்தில், மருத்துவ வேதியல் துறையின் ஆராய்ச்சியாளர் Dr. ரஃபேல் மெகோவுலம் (Dr. Raphael Mechoulam) குழுவினரால் 1992-ம் ஆண்டு, கஞ்சா என்னும் போதைப்பொருளில் உள்ள மூளையை தூண்டும் வேதிப்பொருளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக கண்டு பிடிக்கப்பட்டது. ஆனந்த்தமைட் மூளையின் ஆனந்த நிலையை (Bliss) அளிப்பதில் தொடர்புடையதாக கருதப்பட்டதால் அந்நிலையை குறிக்கும் ‘ஆனந்த’ என்னும் சமஸ்கிருத வார்த்தையை கொண்டு ஆனந்த்தமைட் எனப்பெயரிடப்பட்டது.
கஞ்சாவை எந்த வகையிலாவது உட்கொள்ளும்போது, அதில் உள்ள THC என சுருக்கமாக அழைக்கப்படும் டெட்ராஹைட்ரோகேனாபினல் (TetraHydroCannobinol) என்னும் வேதிப்பொருள், மூளையிலுள்ள கேனாபினாய்ட் என்னும் ஏற்பிகள் (Receptors) வழியாக மூளை மண்டலங்களில் அதன் வினையை தொடங்குகிறது. கேனாபினாய்ட் ஏற்பிகள், மூளையில், மற்ற எந்த வகை ஏற்பிகளையும் விட அதிக அளவில் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதுவும் உணர்ச்சி, நினைவு, வலி நிவாரணம், அசைவு ஒருங்கிணைப்பு ஆகிய இயக்கங்களுக்கான மூளையின் பகுதிகளில் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆனந்த்தமைட் மருத்துவத்துறையில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் வலிமையுடையது எனக்கருதப்படுகிறது. எனினும் அது கண்டுபிடிக்கப்பட்டு இருபது வருடங்களுக்குப் பின்னும், இன்னும் குறிப்பிடத்தக்க மருத்துவ பயன்பாடுகளை அடையவில்லை. போதைப்பொருள் குறித்து உலகெங்கும் இருக்கும் தடைகள் அதற்குக் காரணமாக இருக்கக்கூடும். எனினும் இதற்கான ஆராய்ச்சிகள் முன்னெடுத்து செல்லப்படுவதாகவே தோன்றுகிறது.
கஞ்சாவில் உள்ள THC என்னும் வேதிப்பொருளை மூளை உட்கிரகிக்கும் அதே ஏற்பிகள் வழியாகவே ஆனந்த்தமைட் – ம் மூளையால் உட்கிரகிக்கப்படுகிறது. ஏதோ சிலரால் உபயோகப்படுத்தப்படும் கஞ்சாவுக்காக மூளை அத்தனை ஏற்பிகளை தயாராக வைத்திருக்கிறதா? இந்த கேள்வியே ஆனந்த்தமைட் என்னும் வேதிப்பொருளை கண்டடைய அடிப்படையாக இருந்த கேள்வி. அதாவது, நம் உடலில் இயற்கையாகவே THC அல்லது அதற்கு சமமான பொருள் இருந்தாக வேண்டும் என்னும் ஊகத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் ஆனந்த்தமைட் கண்டடையப்பட்டது. ஆனந்த்தமைட் பொதுவாக டோப்பமைனையும் மூளையினுள் பெருமளவு உருவாக்குகிறது.
காசி-யில் கஞ்சா மிக எளிதாக கிடைக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். அது தடை செய்யப்பட்ட போதைப்பொருளாக இருந்தாலும், மகாசிவராத்திரி அன்று, காசியில் அரசாங்கத்தாலே விற்பனை செய்யப்படுமாம். கஞ்சாச் செடிக்கு மற்றொரு பெயர் ‘சிவமூலிகை’. ஆனந்தமைட் பற்றிய தகவல்கள் தெரியும்வரை இவை ஆச்சரியமான முரண்பாடுகளாகத் தோன்றியது.
LSD என்னும் மற்றொரு போதைப்பொருள், 1960-களில் ஆன்மீக அனுபவங்கள் எனக்கூறப்பட்டவைகளுக்காக, மிகப்பரவலாக உபயோகப்படுத்தப்பட்ட ஒன்று. LSD உபயோகித்ததில் பெற்ற அனுபவத்தை பிடித்துக்கொண்டு ஆன்மீக பாதைக்கு, அந்த காலகட்டத்தில், பலர் திரும்பியதாக கூறப்படுகிறது. அந்த காலத்தின் பரவலாக அறியப்பட்ட ஆன்மீகவாதிகளான ஜெ. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் இத்தகைய போதைபொருட்களால் கிடைப்பவை ஆன்மீக அனுபவம் இல்லை, வெறும் மனமயக்கம்(Hallucination) மட்டுமே என திரும்ப திரும்ப கூறியிருப்பதிலிருந்து, இந்த போதைப்பொருட்களின் அனுபவங்கள் ஆன்மீக அனுபவங்களுடன், குத்துமதிப்பாக ஒத்திருந்ததையும், அவை ஆன்மீக அனுவத்தை தேடுபவர்களிடையே ஏற்படுத்தியிருந்த தாக்கத்தையும் ஓரளவு அனுமானிக்கலாம்.
சிலோசைபின் (Psilocybin) என்னும் போதைப்பொருளும் LSD போல் 1960-களில் மாயத்தோற்ற ஊக்கியாக (Hallucinogen) உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த பொருள் சில வகை காளான்களிலிருந்து பெறப்படுகிறது. சுமார் 200 வகையான காளான்கள் சிலோசைபின்-ஐ கொண்டிருக்கிறது. இவற்றில் பெரும்பான்மையானவை மெக்ஸிகோவிலும், மற்றவை மற்ற உலகநாடுகளில் ஆங்காங்கு வளர்வதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது.
LSD, சிலோசைபின் போன்ற மாயத்தோற்ற ஊக்கிகள் 1950 களில் கண்டுபிடிக்கப்பட்டு, 1960-களில் அவற்றின் அனுபவங்கள் ஆன்மீக அனபவங்களை ஒத்திருப்பதாக பரவலாக அறியப்பட்டு, மிகப்பரவலாக இந்த தளத்தில் ஆரய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆரய்ச்சிகளின் விளைவாக கிடைக்கப்பெற்ற இவற்றைப்பற்றிய தகவல்களின் பரவலாக்கத்தின் காரணமாக அன்றைய காலகட்ட இளைஞர்களால் இவை பயன்படுத்தப்பட்டு, பின் சமூகங்களில் ஏற்பட்ட எதிர்மறைவிளைவுகளால் இவை பெரும்பாலும் தடைசெய்யப்பட்டன. ஆராய்ச்சிகளும் முடக்கப்பட்டது.
சுமார் 30 வருடங்களாக முடக்கப்பட்ட மாயத்தோற்ற ஊக்கிகள் குறித்தான ஆராய்ச்சிகள், சில தனிப்பட்ட மனிதர்களின் ஆர்வத்தால், முறையான அனுமதிகளுடன் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலோட்டமாக கிடைக்கப்பெறும் தகவல்களின் படி, புற்றுநோய் போன்ற வலி மிகந்த, மரணத்துக்கு அருகிலுள்ள நோய்களை அடைந்தவர்களுக்கு இவற்றின் மூலம் கிடைக்க சாத்தியமான நிவராணம் அல்லது மகிழ்ச்சி மனநிலையிலான மரணம் போன்ற காரணங்களுக்காகவும், ஆன்மீக அனுபவங்களை எளிமையாக பெறச்செய்வது என்ற காரணங்களுக்காகவும் இந்த ஆராய்ச்சிகள் செய்யப்படுவதாக தெரிகிறது.
வலியுடன் மரணிப்பவர்களை, அமைதியாக மரணிக்க செய்வது என்னும் திசையில், இது ஒரு ஊக்குவிக்கப்படவேண்டிய ஆராய்ச்சியாக இருக்கலாம். ஆனால் ஆன்மீக அனுபவங்களுக்காக என்னும் திசையில் நடந்தால், இது தவறான திசையில் செல்வதற்கே சாத்தியங்கள் அதிகம். எந்த காரணத்துக்காகவும் இத்தகைய ஊக்கிகள் தடைகள் முற்றிலும் விலக்கப்பட்டால் அதன் உபயோகங்கள் 1960-களைப் போல மாறிவிடக்கூடும். தற்போது பிரபலமாக இருக்கும் ஆன்மீக குரு ஒருவர், அல்ஸீமர் நோய் குறித்த தம் கருத்தை கூறும்போது, இந்த போதைபொருட்கள் பற்றி குறிப்பிட்டவற்றையும் இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கலாம். ”1960-களிலும் 1970-களிலும் கல்லூரிகளில் படித்தவர்கள் ஏதேனும் போதை பொருட்களை உட்கொண்டிருப்பதற்கான சாத்தியம் மிக அதிகம். தற்போது அல்ஸீமர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், இந்த காலகட்டத்தை சார்ந்தவர்களே. இந்த போதைபொருட்கள் எந்த காரணங்களுக்காக, ஒரு முறை மட்டுமே கூட, எடுக்கப்பட்டிருந்தாலும் அது மூளையில் மாற்ற முடியாத பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்” இதுவே அவர் கூறியிருந்ததன் சாரம்.
* * * *
போதைப்பொருட்களுடனான என் அனுபவம் வெறும் ஆல்கஹாலுடன் நின்று விட்டது. சரியான வாய்ப்புகள் அமையாதது அதற்கான காரணமாக இருக்கலாம் – மனதின் ஓரத்தில் அதற்கான ஒரு மெல்லிய சபலம் இருந்திருந்தாலும்! ஒருவரின் மனப்பாங்கு, சாதாரணமாக, நல்லவை அல்லது தீயவை என சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றை நோக்கி இருக்கலாம். அந்த மனப்பாங்கிற்கேற்ற வாய்ப்புகள் அவர் வாழ்க்கையில் திறந்து கொண்டே இருக்கும். வெகு சில நேரங்களில் அந்த மனப்பாங்கிற்கு எதிர்திசையில் உள்ள வாய்ப்புகளும் அவர் முன் தோன்றலாம். அத்தகைய தருணங்களில், அவற்றிற்கான சபலம் மனதில் எதோ மூலையில் சற்றே இருந்தாலும், அந்த வாய்ப்புகளை கடந்துச் செல்ல அதீதமான மன உறுதி தேவைப்படும். நான் அத்தகைய மனஉறுதி உடையவன் இல்லை. என் சாதாரண இயல்புக்கு எதிரான வாய்ப்புகள் என்முன் திறக்க நேர்ந்தால், அவற்றை நோக்கி சபலங்கள் என்மனதில் எங்காவது இருந்தால், அத்தகைய வாய்ப்புகளை உபயோகிக்கும் நிலையிலேயே பெரும்பாலும் இருப்பேன்.
முதன்முதல் மதுவின் சுவை அறிந்தது, 12-ம் வகுப்பு படிக்கும்போது கிட்டத்தட்ட ஆண்டின் இறுதியில். பள்ளியில் நடைபெற்ற ஒரு விழா சார்ந்து, ஒரு இரவு பள்ளியில் தங்க நேரிட்டது. அன்று, நாங்கள் நான்குபேர் சேர்ந்து ஒரு ‘குவாட்டர்’ அளவு (விஸ்கி-யா பிரான்டி-யா என ஞாபகம் இல்லை) எடுத்துக்கொண்டோம். அப்போது குடிப்பது என்னும் மனக்கிளர்ச்சியை தவிர வேறு போதை என எதுவும் வந்ததாகவும் ஞாபகம் இல்லை.
அதன் பின் கல்லூரியில் அறிவியல் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும்போதுதான் மதுவின் போதையை உண்மையில் அறிந்தது. மாணவர்களுக்கிடையேயான ஒரு சிறிய பிரச்சினை, நிர்வாகத்துக்கும் அரசியல் பின்புலம் உள்ள சில மாணவர்களுக்குமான பிரச்சினையாக பரிணாம வளர்ச்சியடைய, அவ்வருட முதல் பருவத்தின் நடுவில் (செமஸ்டர்) சுமார் 2 மாதங்களும், இரண்டாம் பருவத்தின் நடுவிலும் கிட்டத்தட்ட இதே கால அளவிற்கும், கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.
பாவம், படிப்பதில் ஆர்வம்(!) உள்ள நாங்கள் என்ன செய்வோம்? தினம் தோறும் கல்லூரியின் முன் கூடி, சில மணிநேரங்களை வெட்டியாகச் செலவழித்து, பெரும்பாலான நாட்களில் போனஸாக அருகிலுள்ள தியேட்டரில் ஒரு சினிமாவும் பார்த்து விட்டு வீட்டுக்குச் செல்வோம். அத்தகைய ஒரு பின் காலைப்போழுதில், கிறிஸ்தவ சமூகத்தில் மதிக்கத்தக்க பின்னணியை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த நண்பனொருவன் ‘தண்ணி அடிக்கலாமா’ என வினவ, அன்று தொடங்கியது என் மதுவின் போதை! நண்பனின் பின்னணியை கருத்தில் கொண்டு, அவன் நிச்சயமாக அங்கெல்லாம் வரமாட்டான் என்னும் உறுதியில் நானும் ‘அடிக்கலாமே’ என கூற, அவன் உண்மையிலேயே அதற்கு தயார் ஆகி விட்டான். அதன் பின் அந்த விடுமுறைகளில் வாரம் ஒருநாள் போதையுடன் இருக்க வேண்டி வந்தது. விடுமுறை முடிந்த பின்பும் வாய்ப்புடன் கையில் காசும் இருக்கும் நாட்களிலும்! கையில் காசுக்காக, போகாத ‘டியூஷன்’-ம் போக வேண்டி வந்தது!
ஆனால் அதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு முறை நான் போதையை அடையும்போதும், வாழ்க்கையில் அதன் எதிர்மறை விளைவை ஈடு செய்யும் விதமாக, நேர்மறை செயலான படிப்பு என்னும் செயலில் அதிகப்படியான ஊக்கத்தை அளித்து வந்தேன். அன்று நான் ஈடுபட்ட எதிர்மறை இயக்கங்களுக்கு எதிர்வினையாக என்னால் அளிக்கமுடிந்த அந்த நேர்மறை ஊக்கமே, இன்று நான் பொருளாதார தன்னிறைவுடன் இருப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று.
இன்று எனக்கு மதுவால் அடையும் போதை ஒரு பொருட்டே இல்லை. அதில் ஆர்வமும் இல்லை. சில சந்தர்ப்பங்களில் தேவைப்பட்டால் ‘குடிப்பதற்கு’ ஒவ்வாமையும் இல்லை. சுதந்திரமான மனம்! வேறு பல போதைகளில் ஆழ்ந்து விட்டேன். ஒருவேளை டோபமைன்-ம் ஆனந்தமைட்-ம், போதைப்பொருட்களின் தேவை இல்லாமலே என் மூளையில் சற்றே சுரக்கின்றனவாக இருக்கலாம்!
T.K.அகிலன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “போதை”