ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

போரியல்

வே. எட்வின் ராஜா

Aug 10, 2019

siragu thalayaalangaanam1
போர் என்பது ஒரு நாட்டின் அழிவு. ஒரு இனத்தின் அழிவு. போரினால் பெற்றோர்கள் தங்களின் வாரிசுகளையும், குழந்தைகள் தங்களின் பெற்றோர்களையும் இழப்பதே உச்சகட்ட கொடுமை. அதனால்தான் இன்று உலகமெங்கும் உள்ள மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். ஆனால் இவையனைத்தும் தெரிந்தும்கூட உலகின் சில மூலைகளில் இன்றும் போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இரண்டாம் உலகப்போர் நடந்தது. இதில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நகரத்தையே அழிக்கக்கூடிய அணுகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இது மட்டுமல்லாமல் கனரகப் பீரங்கிகள் இயந்திரத் துப்பாக்கிகள், நீர்மூழ்கிகள், வான்வழிப் போர்முறைகள் போன்றவைகளும் பயன்படுத்தப்பட்டன.

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ச்சி அடையாத கால காட்டமான சங்க காலத்தில் நம் தமிழ் மன்னர்கள் போர்கள் பல புரிந்து பல நாடுகளையும் கைப்பற்றியுள்ளனர். சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் மன்னனின் போர்த்திறத்தையும் போரில் வெற்றிப்பெற்றதையும் பாடியிருக்கின்றனர். சில புலவர்கள் போரினால் ஏற்பட்ட கொடுமைகளை பாடியிருக்கிறார்கள். இன்னும் சில ரோம மன்னர்கள் பகையின்றி ஒற்றுமையுடன் வாழ பாடுபட்டிருக்கிறார்கள். சங்ககாலத்தில் நடந்த போர்களை பற்றி புலவர்கள் பாடிய சில பாடல்களைப் பற்றியும் போரை விரும்பாத சில புலவர்களை பற்றியும் விரிவாக அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க கால அரசர்கள்

siragu_Moovendar

சங்க கால தமிழகத்தை சேரர் சோழர் பாண்டியர் என்ற மூன்று பேரரசர்கள் ஆண்டனர். இம்மூவரும் மண்ணாசையினாலும் தங்களுள் யார் வலிமை மிக்கவர் என்பதை காட்டுவதற்காகவும் அடிக்கடி போர் புரிந்தனர். மன்னர்கள் தங்களுக்கு என்று ஒரு அடையாளச் சின்னமாக ஒரு கொடியை வைத்திருந்தனர். சோழர்கள் புலிக்கொடியையும், பாண்டியர்கள் மீன் கொடியையும், சேரர்கள் வில்கொடியையும் வைத்திருந்தனர். சங்க கால மன்னர்கள் தங்கள் நாட்டை பகைவர்கள் கைப்பற்றாமல் இருக்க கோட்டையை எழுப்பியும் அந்த கோட்டையைச் சுற்றி அகழிகளையும் அமைத்தனர். அந்த கோட்டையின் வாயிலில் தங்களின் கொடியை பறக்க விட்டிருந்தனர். குறுநில மன்னர்களும் தங்களுக்கென ஒரு கொடியை வைத்திருந்தனர். இவர்கள் தாங்கள் சார்ந்த பேரரசுகளுக்கு கப்பம் கட்டி ஆட்சி புரிந்தனர். இந்த பேரரசுகளின் போர்களின் போது குறுநில மன்னர்களும் தாங்கள் சார்ந்த பேரரசுகளுக்கு ஆதரவாக போர் புரிந்தனர்.

அறவழிப்போரை குறிக்கும் பாடல்

சங்க காலத்தில் தமிழ் மன்னர்களின் போர்முறைகள் அறப்போர் முறை ஆகும். அதாவதுஅவர்களின் போர்களில் வஞ்சகம் சூழ்ச்சி என்று எதுவும் இல்லாமல் நேர்மையாக இருந்துள்ளது. காலையில் சூரிய உதயத்தின் போது முரசறைந்து போர் தொடங்கி மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் போது முரசறைந்து போர் நிறுத்தப்படும். முழு இரவு ஓய்வுக்குப் பிறகு மறு நாள் மீண்டும் போர் தொடங்கும். இன்று போய் போர்க்கு நாளை வா என்று இராவணனை அனுப்பிய இராமனின் உள்ளம் தமிழரின் போர்ப் பண்பாட்டில் கடைப்பிடிக்கப்பட்டது. மேலும் போரில் தோல்விகண்டு ஓடும் பகைவனின் மேல் ஈட்டிகளையும் வேல்களையும் செலுத்தாத அறநெறி இருந்தது. போரில் காயமடைந்தவன் பகைவனே ஆனாலும் அவனிடம் இரக்கம் காட்டும் பண்பு இருந்தது.

குடுமி என்ற இயற்பெயரை கொண்ட பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னன் தான் போருக்கு போகும்போது முதலில் போரில் பங்குகொள்ளதாவர்களை விலகச் செய்த பின்புதான் அறப்போர் செய்யத் துவங்குவான். நெட்டிமையார் எனும் புலவர்புறநானூற்றில் ஒன்பதாவது பாடலாக இந்த மன்னனை பற்றி இவ்வாறு பாடியிருக்கிறார்.
“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நுன்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி!” – புறநானூறு: 09
அதாவது பசுக்களும், பசுவை போன்ற குணமுடைய அந்தணர்களும், பெண்களும், நோயுற்றவர்களும், பிதிர்க்கடன் ஆற்ற ஆண்குழந்தை இல்லாதவர்களும் கேளுங்கள் என்னுடைய அம்புகள் விரைவாக பாய உள்ளன. அதனால் பாதுகாப்பான இடத்துக்கு போய்விடுங்கள் என்று அறிவுறுத்திப் போர் புரியும் அறநெறியாளனாம் எம்முடைய வேந்தனாகிய குடுமி என்று பொருள் படுகிறது இப்பாடல்.

siragu por Iyal1

போரின் அழிவை குறிக்கும் பாடல்

இப்படி புகழ்ந்து பாடிய இதே புலவர் இந்த மன்னன் சிற்றூர்களின் மேல் பெரும்படை கொண்டு தாக்கியதானால் ஏற்பட்ட பேரழிவுகளைப் பார்த்து மனம் வருந்தி புறநானூற்றில் பதின்னைந்தாவது பாடலாக பாடியுள்ளார்.

“கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்

பாழ்செய்தனை அவர் நனந்தலை நல்லெயில்

புள்ளினமிமிழும் புகழ்சால் விளைவயல்

வெள்ளுளைக் கலிமான் கவிகுளம் புகளத்

தேர் வழங்கினை நின்தெவ்வர் தேஎத்துத்

துளங்கியலாற் பணையெருத்திற்

பாவடியாற் செறல் நோக்கின்

ஒளிறு மருப்பின் களிறு அவர

காப்புடைய கயம் படியினை ………….” புறநானூறு:

பெருமானே! பகைவருடைய நல்ல கோட்டைகள் சூழ்ந்த அகன்ற தெருக்களை கழுதை ஏர் பூட்டி உழுது பாழ் செய்தாய். நெற்பயிர்கள் விளைந்துள்ள வயல்களில் தேர்களைச் செலுத்தி அழித்தாய். அவர்களின் காவல் மிகுந்த நீர்த்துறைகளில் உனது யானைகளை நீராட்டி அழித்தாய் என்று அம்மன்னன் சிற்றூர்களில் போர் நிகழ்த்திய கொடுஞ்செயல்கள் குறித்து வருந்திக் கூறினார்.

siragu por Iyal2போரின் வெற்றியை குறிக்கும் பாடல்

சோழ நாட்டை ஆண்ட சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் எனும் நீண்ட பெயருடைய கிள்ளி வளவன் முதலில் கொங்கு நாட்டை வெற்றி கொண்டான். பிறகு சேரர்கள் ஆண்டு வந்த குட நாட்டை தாக்கி வெற்றி கொண்டான். கோவூர் கிழார் என்னும் புலவர் இந்த போர்க்களத்தை நேரில் கண்டு இம்மன்னனை புகழ்ந்து பாடி பரிசுகளைப் பெற்றார். இந்த பாடல் புறநானூற்றில் முன்னூற்றி எழுபத்தி மூன்றாவது பாடலாக உள்ளது.

“உருமிசை முழக்கென முரசம் இசைப்பச்

கணைக்காற் றெடுத்த கண்ணகன் பாசறை

இழிதரு குருதியோடு ஏந்திய ஒள்வாள்- (புறநானூறு: 373)

அதாவது உன்னுடைய இடமகன்ற பாசறையில் இடியின் ஓசையை போல் முரசு ஒலித்தது. போரில் பயிற்சி பெற்ற யானைகள் மேகங்கள் போல் காட்சி அளித்தன. தேர் குதிரைகள் அழிந்ததால் அவற்றிலிறிந்து சிதைந்த தூள்கள் மழைத்துளிகள் போல் விழுந்தன. போர்க்களத்தில் எய்யப்பட்ட அச்சம்தரும் அம்புகள் காற்றுப் போல் பறந்தன. சொறியும் குருதியோடு கையிலேந்திய ஒளிபொருந்திய வாள்களால் உடலைப் பிழிந்து எடுப்பதற்கு பிளந்ததுபோல் பகைவரைப் பிளந்ததால் உன் படைவீரர்கள் மகிழ்ந்தனர். போர் செய்வதை விரும்பி திரண்ட பெரும்படையால் கொங்கு நாட்டவரைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்த வெற்றியையுடைய வேந்தனே! என்று கிள்ளி வளவனை போர்க்களத்தில் கண்டு அவனைப் பற்றி இப்பாடலை பாடி பரிசில்களை பெற்றார்.

siragu_pulavar1

மன்னர்கள் பகையின்றி ஒற்றுமையுடன் வாழ பாடுபட்ட புலவர்கள்

சோழ அரசர்களான நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்டது. சோழர் குலத்தில் தோன்றிய நீங்கள் இருவரும் போரிட்டு யாற் தோற்றாலும் அது சோழ குலத்துக்கு தோல்வியே ஆகும் என்று அவர்களுக்கு சோவூர் கிழார் எடுத்துரைத்த பாடல் தான் இந்த பாடல்.
“இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்

கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்

நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே – புறநானூறு: 45

இங்கு போர் செய்பவர்களில் யாரும் பனந்தோட்டால் ஆன மாலையை (சேரர்களுக்கான மாலை) யாரும் அணியவில்லை. கரிய வேப்பம்பூ மாலையை (பாண்டியர்களுக்கான மாலை) யாரும் அணியவில்லை. உன்னுடைய மாலை அத்திப்பூவால் தொடுக்கப்பட்டது. உன்னோடு போர் புரிபவனின் மாலையும் அத்திப்பூவால் தொடுக்கப்பட்டது தான். உங்கள் இருவரில் ஒருவர் தோற்றாலும் தோற்பது சோழனின் குடி தான். இப்போரில் நீங்கள் வெற்றி பெறுவது என்பது முடியாத காரியம். ஆதலால் உங்கள் செயல் உங்கள் குடிப்பெருமைக்குத் தான் இழுக்கு. இந்தப் போரைப்பார்த்து மற்றவர்கள் ஏளனமாகச் சிரிப்பார்கள் என்று இந்த பாடலின் மூலம் சோவூர் கிழார் அறிவுரை வழங்கினார். இதனைக் கேட்ட நெடுங்கிள்ளி நலங்கிள்ளிக்கு விட்டுக்கொடுத்தான் என்று தெரியவருகிறது.

தகடூர் மன்னன் அதியமான் அஞ்சி மீது தொண்டைநாட்டு மன்னன் தொண்டைமான் இளந்திரையன் போர் புரிவதற்காக படைகளை பேருக்கும் வேளையில் ஈடுபட்டிருந்தான். ஒற்றர்கள் மூலம் தெரிந்துக்கொண்ட அதியமான் இந்த போரை நிறுத்துவதற்காக அவ்வையாரை தூது அனுப்பினான். தன் படைபலத்தை அவ்வையிடம் காட்டி அதன் மூலம் அதியமானை எச்சரிக்க நினைத்து அவ்வையை தன் படைக்கலத்தை காட்டினான் தொண்டைமான். அவ்வைக்கு அவனுடைய கர்வம் புரிந்தது. அவனுடைய கர்வத்தை அடக்குவதற்காக வஞ்சப்புகழ்ச்சியில் ஒரு பாடலை பாடினார்.

“இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
பகைவர் குத்திக் கொடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில்!” – புறநானூறு: 93
அதாவது இங்கே ஆயுதங்கள் எல்லாம் பூவாலும் மயில் இரகாலும் அலங்கரிக்கப்பட்டு நெய் தடவி புதிதாக இருக்கிறது. ஆனால் அதியமானின் படைக்கலத்தில் இந்த மாதிரி எல்லாம் காட்சி இல்லை. அவன் ஆயுதங்கள் எல்லாம் பகைவர்களின் ரத்தம் தோய்ந்து அவர்கள் உடம்பிலிருந்த சதைகள் எல்லாம் ஆயுதங்களில் ஒட்டி கூர் மங்கி போய் கொல்லனிடத்தில் சரி செய்யவைக்கப்பட்டுள்ளன.

இப்படி அதியமானின் படைபலத்தையும் போர்களில் அவன் செய்த வீரத்தையும் வஞ்சப்புகழ்ச்சியின் மூலமாக தொண்டைமானுக்கு தெரிவித்தார் அவ்வையார். இந்த வஞ்சப்புகழ்ச்சியை தெரிந்துக்கொண்ட தொண்டைமான் அதியமானுடன் போரிடும் எண்ணத்தை விட்டுவிட்டு நட்பு பாராட்டினான்.

முடிவுரை

சங்க காலத்தில் புலவர்கள் மன்னனை பாராட்டி பாடல்களை பாடி பரிசுகள் பெற்றிருந்தாலும் மன்னனுக்கே அறிவுரைகள் கூறும் அளவிற்கு அவர்கள் புகழ் உயர்ந்திருந்தது. மன்னர்களும் அவர்களின் அறிவுரைகளை கேட்டு பல போர்களை தவிர்த்திருக்கின்றனர். இக்கட்டுரையில் அவ்வாறு இரண்டு உதாரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இன்று அந்த மாதிரி புலவர்கள் இருந்து நாட்டை ஆள்பவர்களும் அவர்களின் அறிவுரைகளை கேட்டு நடந்தால் இன்றைய உலகம் ஒரு அமைதிப் பூங்காவாக திகழும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.


வே. எட்வின் ராஜா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “போரியல்”

அதிகம் படித்தது