பிப்ரவரி 27, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

மகளிர்தினக் கொண்டாட்டங்கள், மகளிரின் சிறப்பை உணர்த்துகின்றனவா …!

சுசிலா

Mar 10, 2018

Siragu penniyam1

கடந்த சில ஆண்டுகளாகவே, நம் நாட்டில், நம் சமூகத்தில், பெண்கள் பாதுகாப்பின்றி வாழ்கிறார்கள் என்று தான் நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. பாலியல் ரீதியாக பல வன்கொடுமைகளை, வன்புணர்வுகளை நம் சமூகப் பெண்கள் சந்தித்தவண்ணம் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. மேலைநாடுகளில் மகளிர்தினம் என்ற ஒன்றை கொண்டாடுகிறார்கள் என்றால், அவர்கள் அவர்களுக்கான முழு உரிமைகளை, போராடி பெற்றெடுத்திருக்கிறார்கள். நாம் இன்னமும் அந்தளவிற்கு உரிமைகளை பெற்று இருக்கிறோமா என்ற கேள்விக்கு, பதில் இல்லை என்பது தானே உண்மை.!

ஆண்டுதோறும் மார்ச் 8 -ந் தேதி உலக மகளிர்தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் நம் நாட்டிலோ, பெண்களுக்கெதிரான வன்முறைகள், கொடுமைகள் குறைந்தபாடில்லை. இன்னும் சொல்லப்போனால், அதிகரித்திருக்கிறது என்பதுதான் வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை. இங்கு கொண்டாடப்படும் கொண்டாட்டங்கள் அனைத்தும், நாம் பெறவேண்டிய உரிமைகளை சொல்வதில்லை. இந்த சமூகத்தில் நமக்கான இடத்தை எப்படி பெற வேண்டும், அதனை எப்படி இன்னும் பல வழிகளில் முன்னேற்றப்பட வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதில்லை என்பது தான் காரணமாக இருக்கிறது. இந்த செய்திகள் ஆண்பிள்ளைகளுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் சரியாக சென்றடைவதில்லை. இந்த ஆண்டு, மகளிர்தினத்தின் முதல்நாள், திருச்சி, துவாக்குடி ஊரை சேர்ந்த உஷா என்ற கர்ப்பிணிப் பெண் காவல்துறை ஆய்வாளர் ஒருவராலேயே, எட்டி உதைக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார் என்பது சகித்துக்கொள்ளக்கூடிய ஒன்றா? இந்த நிகழ்வு நூறு விழுக்காடு ஆண்கள் சம்பந்தப்பட்ட ஒன்று. அதிலும், ஆய்வாளர் தவறு தான் மிக முக்கிய குற்றமாக இருக்கிறது. ஆனால், உயிரிழந்தது ஒரு பெண். அடுத்து பார்த்தீர்களென்றால், மகளிர்தினத்தின் மறுநாள், 19 வயதே நிரம்பிய இளந்தளிர் அஸ்வினி என்ற கல்லூரி மாணவி, காதலன் என்று சொல்லப்படும் ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு இறந்திருக்கிறார். தன்னை காதலிக்கவில்லையென்றால், ஆசிட் ஊற்றுவது, கத்தியால் குத்தி கொல்வது, எரித்து கொல்வது என்ற வன்முறைகள் எல்லாம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் தான் நம் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், ஆண்களின் உடைமைகளாக பார்க்கப்படுகின்றனர் என்பது தான்.!

Siragu aanavakkolai2

சில மாதங்களுக்கு முன்னால், வீடு புகுந்து, தன்னை காதலிக்கவில்லை என்ற காரணத்தால், இந்துஜா என்ற பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றான் ஒரு இளைஞன். ஏழு வயதே நிரம்பிய ரித்திகா என்ற குழந்தை, கரூர் நந்தினி, சாலியமங்கலம் கலைச்செல்வி போன்றவர்கள் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவைகளைத் தவிர, வெளியில் தெரியாத பல நிகழ்வுகள், கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பேருந்துகளிலும், ரயில்களும், பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் என பல வகைகளில், பல பாலியல் சீண்டல்கள் பெண்களைச் சுற்றி அன்றாடம் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன என்பது தான் மிகப்பெரிய கொடுமை.!

இதைப்பற்றி பல ஆண்டுகளாக நாமும் பேசிக்கொண்டுதானிருக்கிறோம். இதற்கான தீர்வுதான் இன்னமும் கிடைத்தபாடில்லை. ஒவ்வொரு சீர்திருத்தமும் வீட்டிலிருந்து துவக்கப்படுவது தான் சிறப்பாக அமையும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதனை நாம் தெளிவாக தெரிந்திருந்தும் நாம் ஏன் செயல்படுத்த தயங்குகிறோம் என்பது தான் நம் முன் வைக்கப்படும் முதன்மை கேள்வி. ஆணாதிக்கமும், ஆணாதிக்க சிந்தனையுள்ள பெண்களும் தான் இதற்கு தடையாக உள்ளனர். பெண் என்பவள், ஆண்களுக்கான உடைமையாக, ஒரு காமப் பொருளாக பார்க்கப்படுவதின் விளைவுதான் இவ்வளவு குற்றங்களும் காரணியாக அமைந்துவிடுகிறது. மனிதர்களில், ஆண் என்ன.. பெண் என்ன.. இருவருமே சமமாக மதிக்கப்பட வேண்டியவர்கள்.

சக மனுசியாக, தோழியாக, மதிக்கப்படும் தானே, அங்கே சமத்துவமும், தோழமையும், நல்லதொரு புரிதலும், நேசமும், அன்பும் வியாபித்திருப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்த அடிப்படை புரிதலை ஏற்படுத்துவதுதான் தற்போதைய காலத்தின் கட்டாயம். இதனை நம் குழந்தைகளிடம் சிறு வயதிலிருந்தே, பெண்ணியம் சார்ந்த அறிவை மனதில் ஆணிபோன்று பதியுமாறு கற்பிக்க வேண்டும். மனிதர்களில், ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும், உணர்வுகளை தெளிவாக புரிந்துகொண்டு அதற்கான மரியாதையை கொடுக்க வேண்டும். மேலும் நாம் நினைத்து நடவாமல் போனால், ஏற்படும் ஏமாற்றம், தோல்வி, நிராகரிப்பு, முதலிய எதிர்பாரா சமயங்களில், அவைகளை அனுபவங்களாக எடுத்துக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் மிகவும் அவசியம் என்பதை உணரவைக்க வேண்டும்.

ஆண்குழந்தைகள் சரியாக வளர்க்கப்பட்டால், பெண்களுக்கான பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்பட்டுவிடும். மேலும் பெண்மையைப் போற்றுவோம் என்று ஊடகங்களில் சொல்லப்படுகிறது. போற்றுவது என்பது தேவையில்லாத ஒன்று. மதிக்கப்பட வேண்டும் என்பது தான் மிக முக்கியம். மனிதத்தை மதிப்போம். மனிதர்களின் உணர்வுகளை மதிப்போம் என்பதைத்தான் நாம் கற்பிக்க வேண்டும்.

Siragu Akilaavin poem6

போதாதகுறைக்கு, இந்த நுகர்வு கலாச்சாரம் என்பது பெண்களை மிகவும் முடக்கிப்போட்டு தானுள்ளது. மகளிர்தின சிறப்பு என்ற பெயரில், பல சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. நகைக்கடைகளிலும், துணிக்கடைகளிலும், அழகு நிலையங்களிலும், இன்னும் பிற வழிகளில் பெண்களை இன்னும் இந்த மோகத்திற்கு அடிமைகளாகவே வைத்திருக்கின்றன. கல்லூரிகளையும், அலுவலகங்களிலும், இந்த மகளிர்தின கொண்டாட்டங்கள் கோலப்போட்டிகள், சமையல்போட்டிகள், அழகுப்போட்டிகள், என்ற அளவில் மட்டுமே இருப்பது தான் வேதனையான ஒன்று. தற்காப்பு கலைகள், விளையாட்டுப்போட்டிகள், அறிவுசார்ந்த போட்டிகள் என்று நடத்தலாமே. பெண்களின் உரிமைகளை எடுத்துச் சொல்லலாமே. ஆண்களிடம் பெண்ணியம் சார்ந்த புரிதலை ஏற்படுத்தலாமே. படித்த பெண்களுக்கே இந்த நிலைமை என்றால், படிக்காத, ஏழை, கூலிவேலை செய்யும் பெண்களுக்கு, கிராமப்புறபெண்களுக்கு எவ்வளவு இன்னல்கள் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கையில், சொல்லொண்ணாத் துயராக இருக்கிறது.!

நாம் விலங்குகள் வாழும் காட்டில் வாழவில்லை. மனிதர்கள் வாழும் நாட்டில் தான் வாழுகிறோம். பெண்கள் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றப்பாதையில், தத்தி, தவழ்ந்து முன்னே செல்வதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற அச்சுறுத்தல்கள் அவர்களின் முன்னேற்றத்தை தடுத்துவிடும் பேராபத்து உண்டாக வாய்ப்பிருக்கிறது. அதனை உணர்ந்து, இப்போதே சரி செய்வதற்கு முயலவில்லையென்றால், மீண்டும் பெண்கள் முன்னேற்றம் படுபாதாளத்தில் சென்று விடும். இதனை உணர்ந்து நாம் எல்லோரும், நம்முடைய அத்தியாவசிய கடமையாக எண்ணி செயல்படுவோம். இதில் எவ்வித பாகுபாடுமின்றி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊடகங்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திடுவோம்.. இந்த நிலைமை முழுவதும் நீக்கப்பட்டுவிட்டால், நாமும், மகிழ்ச்சியாக அர்த்தமுள்ள மகளிர்தினம் கொண்டாடலாம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மகளிர்தினக் கொண்டாட்டங்கள், மகளிரின் சிறப்பை உணர்த்துகின்றனவா …!”

அதிகம் படித்தது