சூன் 23, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

மகாகவி ந.பிச்சமூர்த்தி

இல. பிரகாசம்

Mar 25, 2017

Siragu na_pichamoorthy1

பொதுவாக நம் இந்திய இலக்கியத் துறையில் மகாகவி என்று பேசுவோமானால் 19-ம் மற்றும் 20-ம் நூற்றாண்டில் வங்கத்தில் பிறந்த கவிஞரான ரவீந்திரநாத் தாகூரைப் பற்றிப் பேசுவோம். பின் விடுதலை கவிகளைப் பாடிய பக்கிம் சந்திரசட்டர்ஜி பற்றிப் பேசுவோம். இது பொதுவான நம் இந்திய இலக்கியம் மீதான பார்வை.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மகாகவி என்று நாம் பேசுவோமானால் 19-ம் மற்றும் 20-ம் நூற்றாணடின்; முற்பகுதியில் வாழ்ந்த சுதந்திர காலத்தில் சுதந்திர வேட்கைக்கான கவிதை பாடியசுப்ரமணிய பாரதியைப் பற்றிப் பேசுவோம். அவருக்குப் பின் பல கவிஞர்களை நம் இலக்கியம் கண்டாலும் நாம் அவர்களை பாரதியை போற்றுவது போல் போற்றுவது இல்லை.

பாரதியாரின் முதல் கவிதையான “தனிமை இரக்கம்” 1904-ல் வெளிவந்தது. இக்கவிதையானது பின்னர் பாரதி பாடிய பாட்டுக்களின் வீச்சை ஆய்வு செய்ய மீண்டும் மீண்டும் படிக்கப்பட்ட கவிதை. பாரதி தான் இறப்பதற்கு சில காலத்திற்கு முன்பு எழுதி “காட்சிகள்”என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட கவிதைகள் புதுநோக்கும் புது உத்தியை கொண்டதாக இருந்தன. அவைகள் தற்போது “வசன கவிதை”என்று பெயர் போட்டு அழைக்கப்படுகின்றன.

Siragu na_pichamoorthy2

பாரதி “காட்சிகள்”தலைப்பில் எழுதிய கவிதைக்கான தாக்கம் ஷெல்லியின் “புல்லின் இதழ்கள்”என்ற தொகுப்பிலிருந்து வந்திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அதனை பிற்காலத்தில் ‘புதுக்கவிதை’எனவும் ‘வசன கவிதை’என்றும் அழைக்களாயினர். ‘காட்சி’என்னுந் தலைப்பிலமைந்த கவிதைகள் தமிழுக்குப் புதுவிதமானதாக இருந்தாலும் அதனை புதுக்கவிதை என்று கூறவது சரியா? என்பதை விட புதுக்கவிதைக்கான முந்தைய சோதனை முயற்சியாகவே கருத இடமுண்டு.

பாரதிக்குப் பிறகு கவிதை வீழ்ந்துவிட்டது என்ற கருத்து 1930-களில் முன்வைக்கப்பட்டது. இக்கருத்தினால் பாரதிதாசன், கவிமணி விநாயகம் பிள்ளை, நாமக்கள் ராமலிங்கம் பிள்ளை, சுத்தானந்த பாரதி போன்ற கவிஞர்களை புறக்கணிக்கத் துவங்கிய காலம். இதனை புதுமைப்பித்தன் இவ்வாறு எழுதினார்.

            “பாரதிக்குப் பின் பிறந்தார்

            பாடை கட்டி வச்சிட்டார்

            ஆரதட்டிச் சொல்வார்

            அவரிஷ்டம் நாரதனே”

இவ்வாறு தன் ஒரே மூச்சில் தனக்குள் ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த அதிருப்தியடைந்த எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டது தான் புதிய பரிசோதனைக் கவிதைளான 1959-ம் ஆண்டில் சி.சு.செல்லப்பா தொடங்கிய ‘எழுத்து’இதழ் புதுக்கவிதை என்று வெளியிட்டது.

பாரதியின் கண்ணன் பாட்டுக் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு 1934-ல் தனது முதல் கவிதையான ‘காதல்’ மூலம் தமிழ்க் கவிதை மரபில் புதிய வேரைப் பாய்ச்சியவர் ந.பிச்சமூர்த்தி. அவரது கவிதை உலகினை இரு கட்டங்களாக பிரிக்க வேண்டியுள்ளது. காரணம் அவர் 1934-1946 வரை எழுதியது முதல் கட்டம். பின் அவர் கவிதை எழுதியதாக தெரியவில்லை. பின் 1959 முதல் மீண்டும் எழுதத் தொடங்குகிறார். எனவே அவரது முந்தைய கவிதையின் வீச்சு மற்றும் பிந்தைய கால கவிதையின் வீச்சு ஆகியவை கால எதார்த்தத்டன் ஒத்துப் போகின்றனவா என்பதை ஆய்ந்தறிய வேண்டும்.

Siragu na_pichamoorthy4

ந.பிச்ச மூர்த்தியின் கவிதைகள் முதல் கட்டம்(1934-1946):

ந.பிச்ச மூர்த்தியின் முதல் கவிதையான ‘காதல்’ ‘மணிக்கொடி’ இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

முதல் கவிதை:

      “மாந்தோப்பு வஸந்தத்தின் பட்டாடை உடுத்திருக்கிறது

      மலர்கள் வாசம் கமழ்கிறது

      மரத்திலிருந்து ஆண்குயில் கத்துகிறது

      என்ன மதுரம! என்ன துயரம்!

      ஆண்குயில் சொல்லுகிறது

      காதற்கனல் பெருக்கெடுத்து விட்டது

      கரைகள் உடைந்து போயின

      நெஞ்சத்தின் வேர்கள் கருகுகின்றன

      குயிலி! காதல் நீரை வார்த்துத் தீயை அணைப்பாய்

      கருகிய வேர்களுக்கு உயிரை ஊட்டுவாய்

      க்காவூ…க்காவூ…“

(குறிப்பு: “ஆண்குயில் கத்துகிறது” என்று பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது பிச்சமூர்த்தியின் கவிதையில் காணக்கிடைக்கிறதா? அல்லது அச்சின் தவறுதலா? என்பதை அறியவும் வேண்டும்)

தனது முதல் கவிதையில் இயற்கையின் உணர்ச்சித் தூண்டுதல் அவருள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கம். “மாந்தோப்பு வஸந்தத்தின் பட்டாடை உடுத்திருக்கிறது” என்று தனது பார்வையில் இயற்கையின் காட்சியை பசுமையாக பதிவு செய்கிறார். ‘காதல்’கவிதையின் முதல் பகுதியானது ஒரு குயிலனின் ஏக்கம் அதனை வாட்டுகின்ற தீயினது ஜூவாலையை இதில் காணலாம்.

காதல் பிரிவின் ருசியானது தீயைக் கூட சுவைக்கச் செய்துவிடும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பிரிந்து வாடுகின்ற குயிலியும் குயிலனும் தங்கள் உள்ளத்தில் மூண்டிய கனலை “காதல் நீரை வார்த்து அணைக்க”முற்படுகின்றன என்பதை இரண்டாம் பகுதியில் நாம் உணரலாம். மற்றொரு பகுதி

      “பெண்குயில் கூவுகிறது

      என்ன சோகம்! என்ன இனிமை!

      பெண்குயில் சொல்லுகிறது

      தனிமை உயிரைத் தணலாக்கி விட்டது

      தணலால் உன்குரலால் ஜூவாலை யாகிறது

      என்நெருப்பு உன்நெருப்பை அணைக்குமா?

      காதல் தீர்வதைவிட இக்கிளர்ச்சியே போதை”

ஆண்குயில் கூவுகிறபோது ஏற்படுகிற மதுரமும் துயரமும் பெண்குயில் கூவுகிற போதும் காதலின் தீ உருவாக்கும் சோகமும் இனிமைதான் போலும். நாம் இக்கவிதைகளைப் படிக்கிற போது இனிமையும் சோக மதுரமும் இணைந்து நம்மை கிளர்ச்சியுடன் வேதனை செய்கின்ற உணர்வு தருவதை வாசிப்பாளர்கள் உணரலாம்.

இயற்கை தரிசனம்:

பிச்சமூர்த்தி அவர்கள் தம் கவிதைகளில் இயற்கையை ஒரு தீர்க்க தரிசியாகவே கண்டுணர்ந்துள்ளார். இயற்கையின் பித்தராகவும் பக்தராகவும் அவர் தன்னை கரைத்துக் கொள்கிறார்.

‘கிளிக்கூண்டு’கவிதையில் இயற்கையை அனுபவிக்கிறார்.

      “வாழ்க்கையும் காவிரி

      அதிலெங்கும் கிளிக் கூண்டு

      நானொன்று கட்டினேன்

      வார்த்தையே மணல்இ ஓசையே ஜலம்

      என் தீராத வேட்கையே குவிக்கும் விரல்கள்;

      பாட்டென்னும் கூண்டொன் றமைத்தேன்

      அழகென்னும் கிளியை அழைத்தேன்”

காலைநேர உதயத்தைப் பற்றிய அவருடைய வருணனையானது புதுமையைக் கொண்டனவையாக இருக்கின்றன.

      “சூழிருள் சிறையுற்ற

      கதிரவன் கிரணம்

      தும்பைத் தெறித்த

      மாடு போல் பாய்ந்தது”

அதேபோல ‘இருளும் ஒளியும்’கவிதையில் இதுபோன்ற வருணனை விரவிக் காணப்படுகின்றன. அவற்றில் ஒரு சிறு பகுதி

      “ஒளியும் இருளும் கலந்து கூடி

      நற்பாம்பும் சாரை போலும்

      பின்னிக் காலம் ஓடலாச்சு”

போன்ற வருணனைகள் புதிய பார்வையை தருவனவாக உள்ளன. அவை புதிய உரம் பெற்று புதுக்கவிதைக்கான வலிமையை கூட்டுவனவாக அமைந்துள்ளன.

வாழ்க்கைத் தத்துவம்:

பிச்சமூர்த்தி அவர்கள் பி.ஏ தத்துவம் படித்தவர். அவரது கவிதைகள் தத்துவச் செறிவு உள்ளவை என்பதை அவரது கவிதைகளை ஊன்றி படித்துப் பார்த்தோமானால் அறிய முடியும். எனினும் ஒரு கவிதையினுள் உள்ள தத்துவச் செறிவு ஆய்வுக்குட்படுத்தி தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. சில வரிகள் மிக ரத்தினச் சுருக்கமாய் கவிதைகளின் இடையில் அமைந்தும் காணப்படுகின்றன.

வாழ்க்கையின் தத்துவம் கவிதையில் புதைந்துள்ள போது அதனை படிக்கிற போது அதன் வீரியத்தை உணர முடியும். அப்படிப்பட்ட கவிதைகளை மீண்டும் மீண்டும் படிக்கிற போது மனதில் ஓர் தெளிவு பிறந்த உணர்வு நம்மைத் தொட்டுப் பார்க்கும். ‘ஒளியின் அழைப்பு’என்ற கவிதை அந்தவகையிலானது.

      “ரத்தம் செத்த சோணிக் கமுகு

      சோணி யாவானேன்?

      அதான் வாழ்க்கைப் போர்”

ஒரு பெருமரம் அதனடியில் ஒரு கமுகு. பெருமரம் சிறு கமுகினைச் சுரண்டுகிறது. ஏழைக் கமுகு தன் பங்கான ஒளி, வெளி, காற்று, நீர் என அனைத்தையும் பறிகொடுத்து நிற்கிறது. தனது இயலாமையை ஏற்றுக் கொண்டதா? அது, தன் இருத்தலுக்கான வாழ்க்கைப் போரை தொடர்ந்ததா? ஏன கவிதை முழுவதும் தத்துவச் செறிவோடு சோணிக் கமுகுவின் வாழ்க்கையை மனித வாழ்க்கைக்கு குறியீடாக ஆக்குகிறார். ‘ஒளியின் அழைப்பு’ன் மற்றொரு பகுதி.

      “கமுகு நோஞ்சலாகாமல் என்ன செய்யும்

      அதற்காக விதியென்று பேசி செங்குத்தாய் வளருமோ?

      தியாகம் செய்தேனென்று புண்யம் பேசுமோ?

      அட பிதற்றலே!

      விதியைப் போற்றினால் தமஸில் உழலாம்

      பிறந்த இடத்தில் வளர்வேனென்றால் சாவை உண்ணலாம்

      ஆ! கமுகறியும் வளர்ச்சியின் மந்திரம்…”

சோணிக்கமுகு இப்போது போரை எதிர்கொள்வதென தீர்க்கம் செய்து கொண்டு போரிடுகிறது. சோணிக்கமுகு குறுக்கே படருகிறது. பிறவி இருளைத் துளைத்து சூழலின் நிலையை வெறுத்து முகமுயர்த்தி விண்ணின்று வழியும் ஒளியமுதைத் தேடிப் போகிறது. ஓளியை வேண்டி சிறுகமுகு பெருமரத்துடன் போட்டியிடுகிறது. அதான் வாழ்க்கைப் போர்.

”முண்டி மோதும் துணிவே இன்பம்

  உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி”

“ஜீவா! வுழியை உயர்த்து

      சூழ்வின் இருள் என்ன செய்யும்?””

என்று வாழ்வியலின் போராட்டம் அதற்குத் தேவையான நம்பிக்கையினை ஊட்டுகிறார். இத்தகைய உத்தி பிற்கால புதுக்கவிஞர்களுக்கு ஒரு எழுச்சியை உருவாக்கியிருக்கியது.

கர்ண பரம்பரைக் கதைகள்:

ஓர் இனத்தின் வாழ்வியலோடு பிறந்து வளர்ந்து பின் வழிவழியாக தங்கள் முன்னோர்களாலும் சொல்லப்பட்டு ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்படுகின்ற செவிவழிக் கதைகள். அவற்றின் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு தனது கவித்துவத்தை பிச்சமூர்த்தி கையாண்டுள்ளார். அதற்கு சாட்சியாக ‘மலையரசி’ மற்றும் ‘சாகா மருந்து’ ஆகியவைகள்.

பிச்சமூர்த்தியின் கவிதைகள் இரண்டாம் காலகட்டம்(1960-1977):

1946-க்குப் பின் பிச்சமூர்த்தி கவிதைகளை எழுதினாரா? இல்லையா? என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவர் இவ்வளவு இடைவெளி எடுத்துக் கொள்வாரா? எழுதாமலா இருந்திருப்பார். ஆய்வாளர்கள் சிரத்தை எடுத்து களத்தை விரிவாக்க வேண்டும்.

Siragu na_pichamoorthy5

இரண்டாம் காலகட்டத்தில் பிச்சமூர்த்தி எழுதிய கவிதைகள் என்று தொகுக்கப்பட்டுள்ள கவிதைகள் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ இதழில் பிரசுரமானவைகள். 1959-ல் ‘எழுத்து’ இதழில் பிச்சமூர்த்தியின் கவிதையான ‘பெட்டிக்கடை நாரணன்’முதல் தரவாக கிடைக்கிறது. பின் ‘ஆத்தூரான் மூட்டை’போன்ற கவிதைகள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.

இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதையின் போக்கு எப்படிப் பட்டவையாக இருந்தன என்பதை ஆய்வுசெய்ய வேண்டியதும் அவசியம் என்றே கருதுகிறேன். அவைகளில் பொதுமையாக வாழ்வியலை பிரதிபலிப்புச் செய்வனவாக உள்ளன. அவைகள் அழகியல் தன்மைகளையும் பெற்றிருந்தன. இக்காரணங்களால் புதுக்கவிதையின் தாக்கம் பலருக்கு ஏற்பட்டன என்பதை யாராலும் மறுக்க முடியாது.

திறவுகோல்:

வாழ்வதற்கான திறவுகோலை இயற்கை நமக்கு அளித்துள்ளதாக ஒரு கவிதை கூறுகிறது.

      “மயக்க நெறி வேண்டாம்

      மனிதனே”

      “முரட்டிருட்டில் மூழ்கி

      முள்ளுவழி செல்லுங்கால்

      தங்கத் தமுக்காயிரம்

      தடதடக்க ஏறிவரும்

      பழம்பரிதி தானாக”

மற்றொன்று

      “ஒளி இந்தா

      விலை இல்லை

      வாடகை இல்லை

      திகைப்படைய வேண்டாம்

      வழி இதுதான்

      செல்வோம்”

என்று ‘திறவுகோல்’கவிதையில் இயற்கை காட்டும் பாதை அது கற்றுக் கொடுக்கும் பாடம் என்றெல்லாம் அக்கவிதை பாடம் கற்பி;க்கிறது.

காட்டு வாத்து:

புதுக்கவிதையில் முதல் பெரிய படைப்பு. 190 வரிகள். இக்கவிதையைப் பற்றி பேராசிரியர்.சி.கனக சபாபதி கூறியதை இங்கே தருவது சரியென்றே கருதுகிறேன். “வேடந்தாங்கல் ஊருக்கு வரும் சைபீரிய வாத்துகள் மூவாயிரம் மைல்கள் தாண்டி இங்குவந்து கூடுகண்டு வீடு கண்டு குஞ்சுபொரித்து பிறகு மீண்டும் குடும்பமாக சைபீரியாவுக்கு போகின்றன. அவற்றைப் பார்த்தாவது மனிதன் தன்னைத் தானே திருத்திக் கொள்ள வேண்டும் என்பது பொருள்”. என்று கூறுகிறார்.

வாத்துகளின் இயல்புணர்வும் மெய்யறிவும் மனிதனுக்கும் வேண்டும் என்று இதனை ஆழப் பொருள் கொண்டு படைத்துள்ளார்.

வழித்துணை:

இதுவும் நீண்ட கவிதையே. இதன் முதலிலேயே கவிஞர் “கருவுக்கும் உருவுக்கும் இடைப்பட்ட சப்த தாதுக்களும் என்னுடையவை” புராணக் கதைக் கருவை ஆதாரமாகக் கொண்டு படைத்துள்ளார்.

ஒரு தச்சன் வழித்துனையாக உதவக் கூடிய கைக்கோல் ஒன்றை எப்படித் தேர்ந்தெடுத்தான் அதற்காக அவனது உழைப்பு என்ன? என்பதை புராணக் கதையிலிருந்து கருவை வளர்க்கிறார். இதில் புதுமை நோக்குடனும் முயற்சிகளை செய்துள்ளார். இக்கவிதை ந.பிச்சமூர்த்தியை மீண்டும் ஆய்வு செய்ய படிக்கப்பட்டாக வேண்டும். இக்கவிதையில் தான் “மகாகவிஞன்” என்பதற்கு உரியவராகிறார். புகழ்வதாக எண்ண வேண்டாம். டி.எஸ்.இலியட்டின் ‘பாழ்நிலம்’ படிப்பவர்கள் படித்தவர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

“செய்வதைத் திருந்தச்

      செய்வதே வேலை

      யோகம்

      ரவி கூறும் மர்மம்

      புவி கூறும் கர்மம்

      வுயிற்றுக்காய் வேலை என்றால்

      நெஞ்சில் ஒரு பிசாசுத்தலை

      நில்லாமல் ஆடும்

      ஒதுக்க முடியாத

      உள்ளத்து உந்தலானால்

      கட்டாந் தரைகள்

      கனக மாளிகையாகும்

      கையே கடவுளாய்

      சோலைகளாய் ஆலைகளாய்

      வாழ்வின் திருவாக்கை

      வெளி எங்கம் எழுதிவிடும்”

சி.சு.செல்லப்பா மற்றும் ஞானக்கூத்தன் போன்றோர் இதற்காக பல வாதங்களை செய்துள்ளனர்.

உயிர்மகள்:

இதுவும் புராணக் கதையே. நீண்ட கவிதை. 531 வரிகள். புராணக் கதையான அகலிகை கதை. தேவலோக தலைவனான இந்திரன் கௌதம முனிவனின் மனைவியான அகலியை போலி உருக்கொண்டு வந்து அவளது கற்பை சூறையாடுகிறான். இந்திரனின் தந்திரத்தால் ஏமாற்றம் கண்ட அகலிகை பட்ட துன்பம் அவளுக்கு கௌதம முனிவனால் விடுக்கப்பட்ட சாபம். மீண்டும் ராமனால் உயிர்பெறல். இதுவே கதை.

      “காட்டு மல்லிகைப் புதரில்

      புகைபட்ட கண்ணை ஆற்ற

      அகலிகை உலவும் போது

      மின்னழகோன் அங்கு வந்து

      மடை வாயைப் போன்றிரைந்து

      உயிரினில் பள்ளம் செய்தான்

      அகலிகையே!

      உயிரின் மின்னே!

      இன்ப துன்பம் ஒராப்பெருக்கே!

      சட்ட திட்டம் ஒன்றமைத்தோன்

      சூழ்ச்சியில் சிக்கி விட்டாய்

      சொத்துரிமை போல உன்னை

      பாவிக்கும் பிடாரன் கையில்

      பல்லற்ற பாம்பாய்ச் சாவாய்!

      குரலற்ற குயிலாய் இருப்பாய்!

      புலனின்ப வைபவத்தை

      பொசிப்பின்றி உதறிவிட்டாய்!”

இதில் அகலியை ஆணால் கபளீகரம் செய்பட்ட பின் மற்றொரு ஆணால் தண்டிக்கப்படுகிறாள். பின் அவள் புனிதமடைகிறாள். அகலிகை கதைக்கு புத்துயிரூட்டியவர் ந.பிச்சமூர்த்தி.

மகாகவி: 

புதுக்கவிதையில் புதிய சோதனைகளுக்கு அடித்தளமிட்டு அவற்றின் வேர்களை வழுவாக்கி புதிய கிளைகளை ஆக்கி புதுக்கவிச் சோலையை சீர்ப்படுத்திச் சென்றவரை “மகாகவிஞன்“ என்று போற்றுவதில் உவமையில்லை.

வாசகனால், புதுக்கவிஞர்களால் போற்றப்பட்ட இன்றும் போற்றப்பட வேண்டியவரை “மகாகவிஞன்” என்றழைப்பது வெறும் புகழல்ல அவரது புதுக்கவிதை மரபினது வேரின் நீட்சியே சாட்சி.

ந.பிச்சமூர்த்தி- குறிப்புகள்:

பிறப்பு:          1900-ஆகஸ்ட்டு-15

தந்தை:         நடேச தீட்சிதர்

ஊர்:            கும்பகோணம்

பள்ளிப் படிப்பு:   கும்பகோணம் உயர்நிலைப் பள்ளி

கல்லூரி படிப்பு:  அரசினர் கல்லூரி பி.ஏ.த்துவம் (1920-22)

            சென்னையில் பளீடர்ஷிப்(வழக்கறிஞர்) பயின்றார்.(1923)

பணி:      கும்பகோணத்தில் வழக்கறிஞராக

            1938-ல் கும்பகோணம் நகரசபை கவுன்சிலர்

            1939-ல் இந்துமத அறநிலைய பாதுகாப்பு போர்டின் அதிகரி

            1951-ல் பணி ஓய்வு

சிறப்பு:

சுதந்திர போராட்டதில் காங்கிரசு சார்பில் மேடைகளில் பாரதியார் பாடல்களை பாடியது.

“1924-ல் தான் பாரதியாரின் கவிதைகளை படிக்க நேர்ந்தது. தன்னுடன் பணிபுரிந்த குமாஸ்தாவின் மூலமாக பாரதியின் கவிதைகள் படிக்கத் தொடங்கினேன்”என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழில் புதுக்கவிதையை நானும் நண்பர் கு.ப.ராவும் 1934-ல் “வசன கவிதை” என்ற பெயருடன் துவக்கி வைத்தோம்”என்று ந.பிச்சமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். அவரது புதுக்கவிதை மரபின் வேர் நீண்டு கொண்டிருக்கிறது.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மகாகவி ந.பிச்சமூர்த்தி”

அதிகம் படித்தது